வெள்ளி, 16 ஜூன், 2017

அமைதியாக்கு

அமைதியாக்கு. 




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

ஒருவன் எந்தெந்தப் பொருள்களின் மீது தன் ஆசையை விலக்குகிறானோ, அப்பொருள்களால் அவனுக்குத் துன்பம் இல்லை.


உலகமயமாக்குதல், சந்தைப்பொருளாதாரம், கலாச்சாரம் சார்ந்த அழுத்தங்கள் 
பாதுகாப்பின்மை, ஒடுக்கப்படுதல், உரிமை மறுக்கப்படுதல், மதம், மொழி மற்றும் கலாச்சாரத்  திணிப்பு போன்ற வெளிப்புற அழுத்தங்கள் மன அமைதியைக் கடுமையாக பாதிக்கின்றன.

ஒரு தனி மனிதருக்கு இப்படிப்பட்ட காரணிகளை மாற்றி அமைக்கவோ, தனி நபராக எதிர்த்துப் போராடவோ, மறுக்கவோ நிச்சயம் முடியாது.  எதிர் கொள்ளத்தான் வேண்டும்.

இந்தப் பகிர்வு இப்படிப்பட்ட நம் ஆளுமைக்கு உட்படாதப் புறக்காரணிகள் பற்றியது அல்ல.

நம்மால் செயல்படுத்தக்கூடிய, மனதை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய சில அகக் காரணிகள் பற்றிய அடிப்படைச் சிந்தனை மட்டுமே. 

மன அமைதி  என்பது அகநிலையில் அனுபவிக்கும் திருப்தியான உணர்வுநிலையின் புற வெளிப்பாடு.

அமைதிக்கு எதிரான உணர்வுநிலை : குழப்பம், அச்சம், கொதிப்பு, படபடப்பு, கோபம், எரிச்சல், வெறுப்பு, பகையுணர்வு, பரிதவிப்பு என விரிவடையும்.

நாம் பொதுவாக வாழ்வில் போராட்டத்தையும், துயரத்தையும், மனச் சஞ்சலத்தையும் அடையும் போது மட்டுமே  அமைதியைக் கருத்தாய் தேடுகிறோம்.

மற்றபடி எல்லாம் இயல்பாக நடக்கும் போது ஆசைகள் புதிது புதிதாய் முளைக்கின்றன. கனவுகள் விரிகின்றன. தேடல்கள் தீ விரிக்கிறது. விருப்பங்கள் நிறைவேற்ற ஓடுகிறோம்.

மன அமைதி ஓர் தேடல் 


மன அமைதி இரு நிலைகளில் ஏற்படுகிறது.

முதலாவது நாம்  திட்டமிட்டச் செயல்களை சரிவரச் செய்து முடிக்கும் போது அடைகிறோம், 

இரண்டாவது  ஒரு காரியத்தில் எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு, அவ்வளவு தான் இனி கடவுள் விட்ட வழி, செய்வதற்கு ஒன்றுமில்லை  எனும் நிலைப்பாட்டை எடுக்கும் போதும் மனம் ஆசுவாசமாகிறது .

இதன் உட்பொருள் முதலாவது நமது உண்மையான யதார்த்த நிலையை உணர்ந்து,  எவை நம்மால் நிறைவேற்றக்கூடிய திட்டங்களோ அவற்றில் மாத்திரம் நாம்  ஈடுபடும் போது மட்டுமே வாழ்க்கை இலகுவாகிறது. மாறாகத் தேவைகள் கடந்து,  ஆசைகளும்  பகட்டும் பெருகும் போது வாழ்க்கை பதற்றமடைகிறது. 

இரண்டாவது "நான் " "என்னால் " என்கிற சுயம் மேலோங்கும் போது கர்வம், பெருமை, ஆணவம், மமதை தலை தூக்குகிறது. நாம்  எண்ணிய செயல்கள் தடைப்படும் போது மனதில் கடுங்கோபம், சினம் மேலோங்குகிறது. புத்தி பேதலிக்கிறது. 

பிடிவாதம் மனதை ஆக்கிரமிக்கத்  தவறான முடிவுகள் எடுக்கிறோம். இறுதியில் மனம் உடைந்து வெட்கம், அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது.

சுருக்கமாகக் கூறினால்  "சுயம் அழியும் போதெல்லாம் மனம் அமைதியை உணர்கிறது".

அகக் காரணிகள்


சில கேள்விகள் - சில சிந்தனைகள்:


எந்தச் சூழல்கள் உங்களுக்குக்  கோபம் ஏற்படுத்துகிறது?

எந்த நபர்களின் சந்திப்புகளை நீங்கள்  தவிர்க்கிறீர்கள்?

நீங்கள்   பேசுவதை  தவிர்க்க விரும்பும் நபர் யார்?

 உங்களுக்கு யாருடன் தொடர்ந்து இருக்கப் பிடிப்பதில்லை?

 உங்களுடைய  மனதில் நினைத்தாலே எரிச்சல் ஏற்படுத்துபவர் யார்?

அத்துணைக் கேள்விகளுக்கும் பொதுவானப் பதில் :

  • உங்களின் சிந்தனை, எண்ணங்கள்,  கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
  • அவற்றை   நிராகரிப்பவர்கள்.
  • மாற்றுக் கருத்தை முன் வைப்பவர்கள்.
  •  பல சமயங்களில் உங்கள்  குறைகளைக்  கூறிக் குற்றப்படுத்துபவர்கள். 
  • ஏமாற்றி துரோகம் செய்தவர்கள். 

இந்த அடிப்படை புரிதல் மிக  மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மன அமைதி இழப்பின் மையக் கரு இவை தான்.


  • "நமது எண்ணங்கள், விருப்பங்கள் ஏற்க மறுக்கப்படும் போதும், நிராகரிக்கப்படும் போதும்" மன அமைதியை நாம் இழக்கிறோம்.
  • மிகுந்த ஏமாற்றத்தை, துரோகத்தை நமது  வாழ்க்கையில் ஏற்படுத்தியவர்களைச் சந்திக்கும் போதும், அந்தச் சம்பவங்களை நினைவு கூறும் போதும் அமைதி குலைகிறது.
  • நாம் அடுத்தவர்க்கு இழைக்கும்  நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், அறம் தவறிச் செய்யும் செயல்கள் மன நிம்மதியைப் பாழாக்கும்.


எப்படி விடுபடுவது?


ஒரு சிக்கலில் இருந்து முழுமையாக  விடுபட முதலில் அதன் அடிப்படையான உண்மை நிலையை நாம் புரிந்து கொள்வதில் தான் துவங்குகிறது.

வாழ்வின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வது அவசியம். 

நம் குடும்பம்,  சுற்றி வாழ்பவர்கள், உடன் பணிபுரிபவர், சமூகம் இவற்றில் நம்மால் நாம் விரும்பும்  உடனடி மாற்றத்தை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது.

அதற்கு  மாறாக சுய மாற்றங்கள் என்பது முழுமையான தனி மனித அதிகாரத்துக்கு உட்பட்டது.

நமது கருத்துக்கள், எண்ணங்கள், செயல்களில் தவறுகள் இருந்தால் அதை உணர்வதும், சரி செய்வதும் வாழ்வின் முக்கிய கடமை மற்றும் பொறுப்பு.

மனஅமைதி - உண்மை - பற்றறுத்தல்.


இந்த மூன்று வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்  பிணைந்தது

முழுமையான மனஅமைதி என்பது உண்மையைத் தேடுவதிலும், நம்மைப் பீடித்துள்ள பற்றுதலை விலக்குவதிலும் தான் ஆரம்பமாகின்றது. 

பற்று  / மனஅமைதி இரண்டுக்கும்  உள்ள தொடர்பு நேரிடையானது.

எந்த விடயமானாலும்,   தீவிரமானப் பற்று நமது உண்மையான நிலையை நாம் உணர்ந்து கொள்வதை தடுக்கும். 

ஆங்கித்தில் 3G (Gold, Girl, Glory)  அல்லது 3S (Silver, Sex, Soli) என்று சொல்வார்கள்.

தமிழில் சொல்கிறோம் அல்லவா! பொன், பெண், மண் என்று!!

இது அரசர் தொடங்கி ஆண்டி வரைப் பொருந்தும்.

குடும்பத்தின் உறவுகள் மீது வைக்கும் அளவு கடந்த பாசம் அவர்கள்  வாழ்வைப் பரிதாபமான நிலைக்குத் தள்ளி விடும். கடமைகளை நிறைவேற்றி விலகி வாழ்வது சிறப்பு. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தனித்துவமான இடம் உண்டு. அதிகத் தலையீடு, பிறர் உரிமைகளில் அத்துமீறுதல் உறவுகளில் கசப்பையும், வெறுப்பையும் உருவாக்கும். மன அமைதியை இழக்கச் செய்யும். உறவுகளில் நமது எல்லையை மீறாமல் இருந்தால் நாம் அனைவராலும் விரும்பப்படுவோம்.

குறிப்பாக  நாம் அதிகமாக நேசிக்கும் குழந்தைகள் தவறு செய்யும் போது அந்தத் தவற்றை நியாயப் படுத்தக்கூடாது. அஃது அவர்களை மேலும் தவறானப் பாதையில் செல்லத்தூண்டும். தனிமையில் கண்டித்து உணர்த்த வேண்டும். தவறினால் வாழ்நாளின் இறுதியில் கடும் துயர் அடைவோம். 

கடினமான அனுபவங்கள் வழியாக வழி நடத்தப்படும் பிள்ளைகள் தான் பிற்கால வாழ்வில் நட்சத்திரங்களாக பிரகாசிப்பார்கள்.

நிலம்,  வீடு, வாகனம், நகை,   என வளங்கள் மீது மட்டும் நாட்டம் கொண்டு எதற்காகப் படைக்கப்பட்டோம் என்கிற அடிப்படை உணர்வற்று வாழ்பவர் பலர்.

வாழ்க்கை வழங்கிய பொன்னான வாய்ப்புகளை பொன்னுக்கும், மண்ணுக்கும் ஆசைப்பட்டு வீணடித்தோரை ஒவ்வொரு வீதியிலும் காணலாம்.

சொத்து,  சுகம் என வாழ்ந்து வாழ்ந்து, வாழ்வின் இறுதியில் துக்கத்துடனும், ஏக்கத்துடனும்  மடிபவர்கள் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. 

அதிகாரம், பாலுறவு வேட்கை, புகழ்  இவற்றின் மேல் உள்ள பற்று மயக்கம் வாழ்வைத் தவறான பாதையில் வழி நடத்தி அவமானத்தில் கொண்டு முடிக்கும்.

வாழ்க்கையின் மிகக் கடுமையான சவால் "தன் குற்றம் உணர்வது, அதை ஏற்றுக் கொள்வது, அவற்றிலிருந்து விடுபடுவது". 

துறத்தல் என்பதைப் பலர் கடினமானதாகவும்  மகிழ்ச்சியற்றதாகவும் கருதுகின்றனர். துறத்தல் என்பது இழத்தல் அன்று.

"தனக்குத் தான் அதிக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்பவனே அதிக சுதந்திரமானவன் " என்கிற மகாத்மாவின் வரிகள் ஆழமான பொருள் பொதிந்தது.

எந்தெந்தப் பொருள்களின் மீது நம் ஆசையை விலக்குகிறாமோ, அப்பொருள்களினால் ஏற்படும் கட்டுகளில் இருந்து நாம்   விடுதலை அடைகிறோம்.

முழுமையான சுதந்திரம். மகிழ்ச்சி! 

உண்மையான மன அமைதி என்பது தனக்கு விதிக்கப்பட்ட வரையறையின் எல்லையை உணர்வது, வாழ்வின் நிலையற்ற தன்மையை ஏற்றுக்கொள்வது, பொறுப்புகளை நிறைவேற்ற நேர்மையானப் பாதையில் உழைப்பது மற்றும்

நிகழ்காலத்தில் வாழ்வது இவற்றில் அடங்கியுள்ளது.

இறுதியாகச் செயல்களை செய்யும் ஆற்றல் மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது ; அதின் விளைவுகள் மேல் நமக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை உணர்வது சிறந்தது. 

கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே உணர்வு பிறக்கும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

விருப்பு வெறுப்பு அற்ற இறைவனைப் பற்றியவன், பிற ஆசைகளை எளிதில் விட முடியும்.

2 கருத்துகள்:

  1. தனக்குத் தான் அதிக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்பவனே அதிக சுதந்திரமானவன் - மிக உண்மை. தன்னிலை உணர்தல், இயற்கையை உணர்தல், இறைமையை உணர்தல், நடக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுதல் எனும் மனோ பக்குவம்....நல்ல எண்ணங்களுடன் கூடிய கனவு மற்றும் முயற்சி .....

    பதிலளிநீக்கு
  2. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி.

    பதிலளிநீக்கு