வெள்ளி, 5 ஜனவரி, 2018

இயல்பு அலாதன செய்யேல்.

🌸 இயல்பு அலாதன செய்யேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்) 


24. இயல்பு அலாதன செய்யேல் :


தீமை பயக்கும் செயல்களைச் செய்யாதே.


எது தர்மம்? 


நமக்கும் பிறர்க்கும் நன்மை தரும் செயல்கள் தர்மம்.

பிற உயிர்கட்குத் தீங்கு இழைக்காத செயல்கள் தர்மம்.

நமது மனம், உடல் மாசுபடாவண்ணம் காத்துக் கொள்வது தர்மம்.

தன்னைப்போல் பிறனைநேசிப்பது தர்மம்.

நமக்குப் பிறர் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அவற்றை மற்றவர்க்கு நாமும் செய்வது தர்மம்.

இயல்பு அலாதன செய்யேல் .


இயல்பாகவே நமக்கு நன்மை அளிப்பது ஏதுவென்று நன்றாகத் தெரிகிறது. அஃது அறிவு ; புத்தி.

ஆனால் பெரும்பாலும் மனம்  நல்லவழியில் நடக்க மறுக்கிறது. இஃது உணர்வு ; சபலம்.

ஒரு செயலை செய்யும்போது அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தாலும், பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாகவே முடிவெடுத்துச் செயலாற்றுகிறோம்.

உணர்வின் ஆதிக்கத்தால், தீமை பயக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் நம்மால் உறுதியாக சில தீய பழக்கங்களை விட்டு விலக முடியவில்லை.

நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் நம்முள் உறைந்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஏதோவொன்று இருந்துகொண்டு நன்மை தரும் செயல்களைச் செய்யவிடாமலும், தீமையான செயல்களைச்  செய்யும்படியும் தூண்டுகிறது”.

இதை மேற்கொள்வது எப்படி?


இறை நம்பிக்கையே அடிப்படை.

நன்மையின் பாதை தற்காலிகமாகத் துன்பத்தை தந்தாலும் இறுதியில் வெற்றியையே தரும் என எல்லாச் சமய வேதங்கள் சொல்வதை உணர்வுப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தீய பழக்கங்கள் தரும் அனுபவம்  இன்பமாக இருந்தாலும், பிற்காலத்தில் தவறான செயல்களின் விளைவு நிச்சயம் துன்பத்தையே விளைவிக்கும் என்பது மனதில் திடமாக பதிய வேண்டும்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது மாறாத விதி.

காரியகாரண சம்பந்தம் உடனே வெளிச்சமாகாவிட்டாலும் செயலின் விளைவிலிருந்து மனிதன் தப்ப முடியாது.

இஃது இயற்கையின் நியதி.

ஆகையால் தீவினை தவிர்க்கப்படவேண்டும். பாபச் செயல்கள் செய்ய அஞ்சவேண்டும். மாறாக அறம் செய்ய விரும்ப வேண்டும்.

தீமை பயக்கும் செயல்களைச் செய்யாதே.

கடவுளுக்குப் பயந்து நடக்கத் தீர்மானிப்பதே ஞானத்தின் துவக்கம்.

4 கருத்துகள்: