சனி, 11 நவம்பர், 2017

நினைவுகளே வாழ்க்கை

நினைவுகளே வாழ்க்கை




நல்ல நினைவுகளே வாழ்க்கையை இனிமையாக்குகிறது.

மகிழ்ச்சி  என்பது ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அந்தத் தருணத்தில் உணர்வுகளில் ஏற்படுத்தும் இனிமையான அனுபவம் மாத்திரம் அல்ல.

மாறாக நாம் அனுபவித்த சம்பவங்கள் ஏற்படுத்திய உணர்வலைகளை மீண்டும் மனத்திரையில்  நினைவு கூறும்போது அஃது ஏற்படுத்தும் மனநிறைவே உண்மையான நீங்காத ஆனந்தம்.

இளமையில் கற்றல் :


வாழ்க்கை கல்வி அனுபவங்கள் வழியாகவே நிகழ்கிறது. அனுபவங்கள் கற்றுத் தரும் சுகம், துக்கம், எச்சரிக்கை, விழிப்புணர்வு மனதில் உணரும்போது மட்டுமே வாழ்க்கையில் சரியான திசையில் பயணிக்கிறோம்.

சிறு வயதில் அடைந்த சில அனுபவங்களை இன்று நாம் நினைத்தாலும்கூட அவை மனதுக்குத் தரும் ஆனந்தத்தை அளவிட முடியாது.

அந்தப் பருவத்தில் மகிழ்ச்சி அடைவதற்கு மிகப் பெரிய மெனக்கெடுதல் தேவையில்லை. எளிய நிகழ்வுகளே போதுமானது.

இன்றும்கூட அவற்றை நினைவு கூர்ந்தால், உதட்டோரம் அரும்பும் புன்னகை மனதை இலேசாக்குகிறது.

அனுபவங்களே கற்பிக்கின்றன..,


அப்போது  கிராமப் பின்னணியில் வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கை பல இனிமையான அனுபவங்களை வாரி வழங்கியது. பெரும்பாலும் ஊரைச் சுற்றி குளம், ஏரி, வாய்க்கால், வயல் என இயற்கை வளம் சூழ்ந்திருக்கும். ஆகையால்  விடுமுறைகள் அநேகமாகத் தண்ணீருக்குள் நீச்சல் தான்.

சமூகத்தில் தன் குழந்தை மட்டும்தான் சிறந்து இருக்க வேண்டும் என்கிற இன்றைய பொதுப்புத்தி அன்று இல்லை. படிப்புதான் வாழ்க்கை என்பதும் கிடையாது.

குழுவாக, நண்பர்களாக அலைந்து, திரிந்த இனிமையான வருடங்கள் அவை.
நண்பர்கள் படைசூழ விளையாடியது, சுள்ளி பொறுக்கி மரவள்ளிக்கிழங்கு சுட்டு தின்றது, மாங்காய், புளி மரத்தில் அடித்துத் தின்றது, வாடகைக்குச் சின்ன சைக்கிள் எடுத்து ஊர் சுற்றியது, ஐயனார் கோவில் தோப்பில் மரத்தில் ஏறி, இறங்கி விளையாடியது என இனிய நினைவுகளுக்குப் பஞ்சமில்லை.

பொதுவாக மாணவப் பருவம்  சுவாரஸ்யமான வெட்டிக் கதைகள், ஆர்வமாய் படித்த கதைகள், எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம் எனும் கனவுகள், கவிதை எழுதும் ஆர்வம், எதிர் பால் நட்புகள் மீது இருந்த அதீத ஆர்வம் எனச் சொற்களுக்குள் சொல்ல இயலாத வாழ்வாகத் திரிந்த பருவம்.

வீட்டில் நிகழ்ந்த விசேஷங்கள், உறவினர்களின் பட்டாளத்தோடு செலவழித்த குதுகலமான நேரங்கள்,   சிறு சிறு சண்டைகள், பிரிவுகள் என வாழ்க்கையில் எத்தனை எத்தனைச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பாடமாக நமக்குப் போதிக்கப்பட்டது...,

நம்மையறியாது வாழ்க்கையின் மனித உறவுகளைப் பற்றிய பல மதிப்பீடுகள்  இத்தகைய அனுபவங்கள் வழியாகவே மனதில் ஆழமாக ஊடுருவிப்  பதிந்துள்ளது. 

வாழ்க்கை கல்வி :


கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நிகழ்வது. அது முடிவற்றது.

வாழ்க்கையில்  தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும்போதுதான் கற்றல் துவங்குகிறது.

முதிர்ச்சி என்பது  வயது கூடுவதால் வருவதல்ல. தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தாலும் நேர்மை பிறழாது வாழ்வைத் தொடர்ந்தால் மட்டுமே நிகழ்வது.

வாழ்க்கையின் யதார்த்தம் நமக்குப் பிடிபடும்போது அவை நம்மைக் கனவுகளில் இருந்து விடுதலையாக்குகின்றன.

இளம் வயதுக்கான அந்த Innocence, ignorance, எதையும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பேதமைத்தன்மை மறைகிறது. வாழ்க்கையின் இன்பத்திற்கான புரிதல் தொடங்குகிறது.

இங்குதான் நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்புமைப்படுத்தி வெற்றி , தோல்வி எனப் பகுத்து நிதானிக்கின்ற  தன்மை மேலோங்குகிறது. கற்றல் புதுப்பிக்கப்படுகிறது. 

அத்துடன் சமுக அங்கீகாரத்திற்கானப் புதிய அளவுகோல்கள் நமக்கு புலனாகின்றன. பேச்சு மட்டுப்படுத்தப்படுகின்றது. 

உரையாடல்களில்  எந்த ஒரு செயலுக்கும் உள்ள எதிர்வினை உணர்ந்து, நம் வார்த்தைகள் இதயத்தில் இருந்து பிறக்கின்றன.

இப்போது நாம் எந்த ஒருச் செயலைச் செய்தாலும்,  மனதின் ஒரு மூலையில்  எதிர்வினையாக நிகழப்போகும் காரியங்கள் தோன்றி நம்மை எச்சரித்துக் கட்டுப்படுத்துகிறது. பொறுப்புணர்வின் அளவு இங்கு தீர்மானிக்கப்படுகிறது.

இதுவே கீர்த்தியையும் அவமானத்தையும் நிர்ணயிக்கிறது.

மகிழ்ச்சியின் பாதை : 


வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி என்பதை அடைய எந்தக் குறுக்கு வழிகளும் இல்லை.

மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை விரும்பினால் நல்ல அனுபவங்களை அளிக்கும் செயல்களை மட்டும் செய்தல் வேண்டும்.

எவை நல்ல அனுபவங்களை அளிக்கும் செயல்கள்?

நமது இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகள், 
எளியவர்க்கு ஆற்றும் சேவை, 
தன்னலமற்ற உதவி, 
தேடுதல் நிறைந்த பயணங்கள், 
கலை சார்ந்த இரசனை, 
படைப்புகளை நேசிக்கத் தூண்டும் வாசிப்பு, 
ஆன்மீக தேடல்கள், 
பொறுப்புக்களை நிறைவேற்றுதல்,  
நல்ல  உறவுகள், 
சிறந்த நட்புவட்டம்..., 

இவை கற்றுத்தரும் அனுபவங்களே,  நினைவுகளே வாழ்க்கையை இனிமையாக்குகிறது.

தீமையின் பாதை :

தீமையின் பாதையில் நடப்பவர் இந்தக்  குணங்களை வெளிப்படுத்துவர்.
பிறரை ஏய்த்தல், அவர் உழைப்பைச் சுரண்டுதல், பொய்பேசுதல், பிறர் பொருள் இச்சித்தல், திருடுதல், குற்றத்தை நியாயப்படுத்துதல், கேளிக்கை, ஆடம்பரம், வீண் பெருமை, பிறரை இகழ்தல்..,

இப்படி வாழ்பவர்கள் தீராப் பழியும், அவமானமும், கடும் துயரத்தையும் வாழ்வின் இறுதியில் அடைவர்.

நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் :


நமது தூய்மையான இலக்குகளை அடைவதற்காகப் பயணிக்கும்  பாதையில் எதிர்ப்படும் கடினமான  தடைகள், வடிக்கும்  கண்ணீர், உழைப்பில் வெளிப்படும் வியர்வை, தோல்விக்கு அஞ்சாது செய்யும்  இடைவிடா முயற்சி இவை தரும் அனுபவங்கள் மிக மிக இனிமையானது.

ஆனால் நாம் பிறரை ஏமாற்றும்போது என்றாவது ஒரு நாள் அதின் பிரதி வினையாகத் துக்கத்தை அடைவோம்.

பிறர்க்குத் தீங்கு விளைவிக்காது நல் முயற்சியோடு வாழும்போது மிகச் சிறந்த அனுபவங்கள், நட்புகள் கிடைக்கும்.

அப்போது வாழ்க்கையில்  நமது விருப்பம், சிந்தனைக்கு இசைந்த  ஒத்த அலைவரிசையில் உள்ள நபர்கள் மட்டுமே நம்மை வந்தடைவர். 

அவர்களோடு மட்டுமே நம்மால் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

தூய்மையான வாழ்வின் முடிவில் இணையற்ற வெற்றியையும், ஆழ்ந்த அறிவையும், நிகரில்லா தன்னடக்கத்தையும், ஒழுக்கத்தின்மீது தீராத பற்றையும், எல்லையில்லா ஆனந்தமும் உறுதியாக அளிக்கும்.


இந்த உண்மையைப் புரிந்து உணர்ந்து செயலாற்றுவதே மகிழ்ச்சியும் அமைதியும்.


வாழ்க்கை என்னும் வட்டப் பாதை முடிவுக்கு வரும்போது நல் நினைவுகளின் மீட்சியே மனநிறைவையும்,  மகிழ்ச்சியையும் அளிக்கும்.