வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பயணிக்காத பாதை

தடம் எங்கே போகிறது?




வாழ்க்கை என்பது அடுத்தடுத்து நாம் எடுக்கும் முடிவுகளிலானது.

Robert Frost அவர்கள் இயற்றிய இந்த புகழ் பெற்ற கவிதை வாழ்க்கையில் நீங்கள் ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு பாதையில் தான் பயணிக்க முடியும் எனும் வாழ்வியலின் அழகிய உண்மையை எடுத்துக் கூறுகிறது.

இக் கவிதையில் ஒரு கரடுமுரடான வனப் பாதை வழியாக வாசகரைக் கவிஞர் அழைத்துச் செல்கிறார்.

இரு திசைகளில் சாலை பிரிகிறது.

இதில் நாம் ஒரு வழியையோ அல்லது வேறு வழியையோ தெரிவு செய்ய வேண்டும்.

எந்த வழியில் சென்றாலும் எதிர்காலம் இப்படித்தான் அமையும் என எவரும் உறுதியாகக் கூற முடியாது.

மாற்றுப் பாதையில் பயணித்து இருந்தால் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்பதையும் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது.

நல்ல முடிவுகளை எடுக்க நம்மால் இயன்றளவு பிரயத்தனம் செய்யலாம்.

ஆனால் ஒரு மாற்றுப் பாதை எவ்வளவு மோசமாக அல்லது சிறந்ததாக இருந்திருக்கும்  என்பதை ஒருபோதும் அறிய முடியாது.

இத்தகைய குழப்பத்தில் வாழ்க்கையில் மாறி மாறி பயணிப்பது வாழ்க்கைக்கு உகந்ததல்ல, கரடு முரடு எனினும் அவ்வழி தொடர்வதே சால் சிறந்தது என்பதே கவிதையின் சாரம்.

வளமை எனக் கருதி கடினமான சூழலைத் தவிர்த்து ஒரே சமயத்தில் அங்கும் இங்கும் அலையக்கூடாது.

அதுபோல் வாழ்க்கையில் அப்படிப் போயிருக்கலாமே என்றும் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது.

ஆசிரியர் குறிப்பு :



இராபர்ட் புரொஸ்ட் (Robert Frost, மார்ச் 26, 1874 – ஜனவரி 29, 1963)  அமெரிக்காவின் சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.



பயணிக்காத பாதை

அந்த அடர் வனத்தின்
அருகே இரு திசைகளில்
சாலைகள் பிரிகின்றன

மன்னிக்கவும்.
என்னால்
ஒரே சமயத்தில்
இரு பாதைகளிலும்
பயணிக்க இயலாது

ஒரு பயணியாக
நான் நீண்ட நேரம்
அங்கேயே நின்றேன்

வளர்ச்சி எப்படி அமையுமோ
என என்னால் முடிந்தவரை
ஒரு பாதையின் வளைவு வரை
உற்று அவதானிக்க முயன்றேன்

அதேவிதமாக
மற்றதொரு பாதையையும்
கவனித்தேன்.

அவ்விதம் பார்ப்பது
சரியானதே.

ஏனெனில்
இந்த மாற்றுப் பாதையும்
மற்றதை விடசெழுமையும் அழகும்
நிறைந்ததாக இருக்கிறது.

இந்த மாற்றுப் பாதையில்
அழகான புல்வெளி
நான் விரும்பிய நிறைய வளமைகள்;
இருப்பினும் அந்தச் சாலையிலும்
கடந்து செல்வது பற்றி உண்மையில்
நிறைய யோசித்துக் கொண்டே நின்றேன்

அந்த விடியற்கால வெளிச்சத்தில்
இரு சாலைகளுமே அழகுற மின்னியது

இலைகள் வனப்புடன் இருந்தன
மங்கியோ, பழுத்தோ அவலட்சணமாக இல்லை.

ஓ..,
முதல் சாலையில் போவதா இல்லையா
என முடிவெடுக்க மேலும்  ஒருநாள் யோசித்தேன்

இந்த வழியில் சென்றால் முடிவு எவ்விதம் இருக்கும்?

ஒருவேளை நான் திரும்பி வரக்கூடுமோ?

சந்தேகத்தால் திகைத்து நின்றேன்

எங்கோ; கால காலமாக ;

இவ்விதம் நான் பெருமூச்சுடன் 
சொல்லிக் கொண்டிருப்பேன்

ஒரு காட்டின் அருகே
இரு வேறு திசைகளில் சாலைகள் பிரிந்தன

அதிகம் பேர் தேர்ந்தெடுக்காத;
குறைவாகப் பயணித்த பாதை
ஒன்றை நான் தெரிந்து கொண்டேன்

அதுவே எனது வாழ்வில்
எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது




மூல ஆக்கம் :

The Road Not Taken

(By Robert Froast)


Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;


Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

படங்கள் உதவி : இணையம் மற்றும் நட்பு.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பூவின் வாசம் உணர்ந்த வண்டு போல

திருவாசகம் - எல்லாம் இறைமையின் செயல்.


"எந்த ஓன்று தானே தோற்றுவிப்பதாக உள்ளதோ அதுவே ஆனந்த ஸ்வரூபம்." 
(யஜுர் வேதம், தைத்திரீயோபநிஷத், ப்ரஹ்மானந்த வல்லி - 7)



41. ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
42. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
43. போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் 

44. நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

45. மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
46கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
47. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
48. பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்





பொருள் :


துவக்கம், நிலைமை, முடிவு இந்த மூன்றும் இல்லாதவனே! 

அனைத்து உலகையும் படைக்கிறாய், காப்பாற்றுகிறாய், அழிக்கிறாய். 

பூவில் வாசமாக மறைந்திருந்து நுட்பமாக வெளிப்படுபவனே. 

தொலைவில் இருப்பவனே. அண்மையில் இருப்பவனே.

சொல், மனம் இவற்றைக் கடந்து வேதத்தின் பொருளாய் இருப்பவனே. 

சிறந்த அன்பர் மனதில் கறந்த பால், இனிப்பு, நெய் கூடினது போல் ஆனந்தத் தேனாக இன்பமளிப்பவனே. 

எம் பிறவித் துயரை அழித்து ஒழிக்கும் எம்பெருமானே.

எனக்கும் இரங்குவாய். எனது அறியாமையை நீக்குவாய். 

உமது அருட் பணியாளராக என்னை உருமாற்றுவாய். 






இப் பாடலில் இறைமையின் சிறப்பு :


உயிரினம் அனைத்தும் பிறக்கிறது. வளர்கிறது. மடிந்து மறைகிறது.

ஆனால் இறைமையைக் குறிப்பிடும்போது பிறத்தல், வளர்தல், மறைதல் இல்லாதவரே என்கிறார் அருளாளர் மாணிக்க வாசகர். 

பிறக்காத, இறக்காத ஒன்றின் இருப்பு எவ்விதம் சாத்தியம்?

அதற்கு உதாரணமாகப் பூவின் வாசனையைக் குறிப்பிடுகிறார். 

மலரைப் பார்க்கிறோம். ஆனால் அதன் வாசனையை உணரத்தான் முடியும். அதன் நறுமணத்தைப் பார்க்க முடியாது. அம்மலர் மறைந்தாலும் அதன் மணம் சிந்தையில் உறைகிறது.

அவ்வாறே உலகின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் இறைவன் மறைந்திருக்கிறார். 

மலர் அரும்பாக இருக்கும்போது மணம் வீசாது. மொக்கு மலர்ந்தால் மணம் வீசும்.

அதுபோல் ஆன்மா பக்குவப்படும்போது  மறைந்திருக்கும் இறைமை வெளிப்படும்.

அதைத்தான் இறைமையை உணரும் வரை  தூரத்தில் இருக்கிறான். அறிந்தவுடன் அருகில் தோற்றமளிக்கிறான் எனக் குறிப்பிடுகிறார்.

எனவே என்னை உம் பணியில் புகுத்தி பிறவித் தளை அறுப்பாய் எனச் சரணாகதி அடைகிறார்.

எல்லாம் அவன் செயல்.   

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

31. அனந்தல் ஆடேல்.

மிகுதியாகத் தூங்காதே.




சோம்பேறித்தனம் :


"அனந்தல் ஆடேல்" எனின் மிகுதியாகத் தூங்காதே அல்லது "சோம்பேறியாக இருக்காதே" என்று பொருள்.

சோம்பல் என்பது ஓர் இயல்பான மனநிலை. சோம்பல் ஒருவித இனிய போதை. மனம் சும்மா வெட்டியாக இருக்கத்தான் விரும்பும். 

இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டு விட்டால் அது அசையவே அசையாது. அதை முயற்சி செலுத்தித்தான் செயலுக்குக் கொண்டு செல்லவேண்டும். 

பெரும்பாலும் இலக்கில்லாமல் இருப்பது தான் சோம்பலுக்கு அடிப்படை.. நாம் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துவிட்டால் போதும் சோம்பல் குறைந்துவிடும். 

சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு நம்மைச் சுற்றி அமைத்துக் கொள்ளும் சூழல் மிக மிக முக்கியம். 

சோம்பலிலிருந்து விடுபடக் கவனம் சிதறடிக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். 

வீண்செயல் பாடுகளுக்கு நம்மை ஒருபோதும் ஒப்புக் கொடுக்கக் கூடாது. 

தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், பலவகையான வெற்று அரட்டைக்கான இடங்கள் இவற்றைக் கவனமாக கையாள வேண்டும். இவை பணியில் ஈடுபாட்டை குறைத்துவிடும். முன்னேற்றத்தை தடுக்கும்.

வெறும் உபச்சார சந்திப்புகள், சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மன உறுதியோடுத் தவிர்த்தாக வேண்டும்.

இதற்கு மனதின் விழிப்புணர்வு நிலை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் சிறந்த படிப்பினைகள்.

தெருவில் நடந்து செல்கையில் மரங்கள் சூழ நன்கு பராமரிக்கப்படும் ஒரு வீட்டைக் கண்டால் அங்குப் பொறுப்புடன் ஒரு குடும்பம் வாழ்கிறது எனப்பொருள்.

ஒரு வகுப்பில் சிறப்பாகச் செயல்படும் மாணவருக்கு பின்னணியில் பொறுப்புடன் உழைக்கும் பெற்றோர் இருப்பர்.   அந்த மாணவரிடமும் கருத்தாக உழைக்கும் மனப்பாங்கு இயல்பாகவே அமைந்திருக்கும். 

தலை நிமிர்ந்து வாழும் ஒவ்வொரு ஆளுமைக்கு பின்பும், எடுத்த காரியத்தைக் கவனமாக நிறைவேற்றத் துடிக்கும் பொறுப்புணர்வு மிகுந்து இருக்கும்.

வெற்றி என்பது இலவசம் அல்ல. அது தொடர்ச்சியாக இலக்கை நோக்கி விடாமுயற்சியோடு உழைப்பது.

எதையும் அலட்சியமாக அணுகுதல், தள்ளிப் போடுதல், வீண் பேச்சு, கவனயீனம் இவை வாழ்வின் இறுதியில் சிறுமையைக் கொண்டு வரும். மதிப்பையும் மேன்மையையும் இழக்க நேரிடும்.

சில நல்ல செயல்கள் தனது முன்னேற்றத்துக்கு உதவும் என்று அறிந்தும், அதைக் கூடச் செய்யாது அலட்சியப்படுத்தித் தள்ளிப் போடுபவர்கள், தமக்கு இருக்கும் கொஞ்சம் மதிப்பையும் இழந்து போவார்.

அது ஒரு தனி மனிதரை மட்டும் அல்ல அவர் சார்ந்த குடும்பத்தையே அழித்து விடும். சோம்பேறி ஒரு செயல் செய்யாததற்கு அநேக சாக்குப் போக்குகளைச் சொல்லுவான். 

சோம்பல் உடனிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் ஒரு நஞ்சு. அதிக தூக்கத்தை விரும்புபவன் தரித்திரம் அடைவான். சோம்பேறியின் வீட்டை முட்புதர்கள் சூழும்.


இரண்டாவது அளவான தூக்கம் :





எவ்வளவு நேரம் தூக்கம் தேவை :


ஒருவரின் வாழ்நாளில் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அளவில் தூக்கம் மாறுபடும்

குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 14 மணிநேரம் வரை தூங்க வேண்டும். 

நடுத்தர வயதினருக்குச் சுமார் 7லிருந்து 9 மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது.

அதற்கு குறைவாகத் தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்

முறையான தூக்கமின்மை பின்னால் மிகப் பெரும் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

சரியான தூக்கம் என்பது படுத்தவுடன் 30 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவான நேரத்துக்குள் உறக்க நிலைக்குச் செல்வதாகும்.

இடையில் ஒரு ஒரு முறை எழுந்து பின் பதினைந்து நிமிடத்துக்குள் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்தின் அடையாளம் என ஆய்வுகள் சொல்கிறது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

சுறுசுறுப்புடன் பணியாற்றச் சரியான அளவு ஓய்வும் தூக்கமும் இன்றியமையாதது.


தூக்கத்தின் வேதியியல் :


உடலில் சுரக்கும் மெலோடனின் என்ற ஹார்மோன் சுரப்பி  தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இரவில் மட்டுமே சுரக்கும்.

சாயங்காலத்திலிருந்து இரவு நேரத்திற்கு செல்லச் செல்ல, உடலில் மெலடோனின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, நாம் தூக்கத்தை உணருகிறோம்.
நள்ளிரவில் மெலடோனின் அளவு உச்சத்தை அடைவதால், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம். இதே போன்று, காலைப் பொழுது வரவர, உடலில் மெலடோனின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, நாம் தூக்கம் கலைந்து விழிக்கிறோம். தூக்கத்தின் வேதியியல் இதுதான்.

வெளிச்சத்தின் அளவை கண்கள் மூளைக்குச் சொல்கிறது. பகல் அல்லது செயற்கை வெளிச்சம் இருந்தால் மெலடோனின் சுரக்கும் அளவு குறையும்.

ஆகையால் இரவு  வெகு நேரம் கண் விழிப்பது உடலுக்கு கேடு. தேக ஆரோக்கியத்தை அது வெகுவாகப் பாதிக்கும். 

தூக்கத்தின் நான்கு நிலைகள் :




நிலை 1: NREM 1(Non Rapid Eye Movement)


முதலாம் நிலை தூக்கம் என்பது குறிப்பிட்ட  உடலின் சுழற்சி நேரம், வெளிச்சம், ஒளி நிலை இவற்றால் ஏற்படுவது. குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்லும் பழக்கவழக்கம் தூக்க உணர்வை முறைப்படுத்தும்.

இந்த நிலையில் விழிப்புணர்வு நிலையில் ஒரு மாற்றம்  ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. மூளை பீட்டா அலைவரிசையிலிருந்து ஆல்ஃபா நிலைக்கு மாறுகிறது. இந்த தூக்க நிலையிலிருந்து எழும் நபர் தான் இன்னும் தூங்கவே இல்லை என நம்புவார். 

நிலை 2 : NREM 2


இரண்டாம் நிலை தூக்கத்தின் போது மனதிற்குப் புறச் சூழலைப் பற்றிய கவனம் குறைகிறது. உடல் வெப்பநிலை குறைகிறது. மூச்சு மற்றும் இதய துடிப்பு வழக்கத்திலிருந்து மெதுவாக  இயங்குகிறது.
இந்த தூக்க நிலை சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும். மொத்த தூக்கக் கால அளவில் பாதி நேரம் இந்த அனுபவத்திலேயே கடந்து செல்கிறது என ஆய்வு முடிவுகள் சொல்கிறது.


நிலை 3 : NREM 3


மூன்றாம் நிலை தூக்கத்தின் போது:தசைகள் ஓய்வெடுக்கின்றன. இரத்த அழுத்தம் மற்றும் சுவாசம் குறைகிறது. ஆழ்ந்த தூக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் டெல்டா அலைகளை மூளை வெளியிடுகிறது. இவை ஆழமான மெதுவான மூளை அலைகள். இந்த நிலையில் மனதிற்கு சப்தம், ஒளி இவற்றை உணர முடியாது. 


நிலை 4 : ஆழ்ந்த உறக்கம் (Rapid Eye Movement) 

தூக்கத்தின் நான்காவது கட்டத்தில் விரைவான கண் இயக்கம் (REM) தூக்கம் என அழைக்கப்படுகிறது.


REMதூக்கம் போது கண்கள் விரைவாக நகரும். மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.உடல் தளர்வு மற்றும் உறுதியற்ற நிலைக்கு மாறுகிறது. 

இந்நிலையில் கனவு ஏற்படுகிறது.
சராசரியாக, REM கட்டத்தில் சுமார் 90 நிமிடங்கள் தூங்குவோம். REM தூக்கம் முடிந்தவுடன், உடல் வழக்கமாக நிலை 2 தூக்கத்திற்குத் திரும்புகிறது. இரவு முழுவதும் இந்த கட்டங்களில் நான்கு அல்லது ஐந்து முறை தூங்கும் சுழற்சிகள் ஏற்படும்.

அமைதியான உறக்கத்துக்கு :




தூங்குவதற்கு முன் அமைதியை ஏற்படுத்தும் செயல்கள் (தியானம், மென்மையான இசை, நல்ல நூல்கள், படுக்கை அறையின் தூய்மை, வாசனை)  ஒழுங்குபடுத்தவும்.
படுக்கை அறையில் தொலைப்பேசி, மின்னணு பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதையும், எழுவதையும் பழக்கமாகக் கொள்ளுங்கள்.
தூக்கம் வரும் போதும் மட்டும் படுக்கச் செல்லுங்கள். இயல்பாக வரும் தூக்கத்திற்கு ஏற்ப தூக்க நேரத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

எழுந்தவுடன் சுமார் 30 நிமிடம் சூரிய வெளிச்சத்தைப் பெறவும். எளிமையான உடற்பயிற்சி செய்வது நல்லது.

வாழ்க்கை என்பது ஒரு அரிய வாய்ப்பு. 

காலம் மிகக் குறுகியது. 

கிடைக்கும் வாய்ப்புகளை, அளிக்கப்பட்ட நேரத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவோம்.

அதுவே உண்மையான மகிழ்ச்சி. 


வியாழன், 22 ஆகஸ்ட், 2019

இறைவன் குருவாகி

திருவாசகம் - இறைவன் குருவாகி வந்து அருளுதல்.




36. வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
37. பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
38. மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
39. எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
40. அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே


பதப் பொருள்:


இயமானன் - ஆன்மாவாக
விமலா - மாசற்றவன்
பொய்யாவின - நிலையற்றப் பொருள்

சாரம்:


இறைவன் தீயின் சுடரைப் போல் நின்று பாவத்தைச் சுட்டெரிப்பவன். குளிர்ந்த நீராக இருந்து ஆன்மாவை நல்வழி நடத்தும் தூய்மையானவன். 

நிலையற்றப் பொருட்கள் (உறவுகள்) ஏற்படுத்தும் பற்றுதலை என்னை விட்டு ஒழியும்படி, குருவாக எழுந்தருளியவன்.

மெய்யுணர்வு வடிவமாக விளங்குகின்ற உண்மை ஜோதி.

எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு ஆனந்தத்தை அருள்பவர்.

ஒளி பிரகாசித்தால் இருள் அகலுவது போல், எனது அறியாமை நீக்குகின்ற நல்ல ஞானத்தின் உறைவிடம்.

இவ்விதம் ஆன்மாவில் ஒளியாகச் சுடர்விடும் இறைமை, 

குருவாக எழுந்தருளி நல்லறிவு புகட்டுவதாகவும், 

தன்னையோ அறிவற்றவராகத் தாழ்த்தியும்,  

மாணிக்க வாசகர் இப்பாடலில் மனமுருகி வேண்டுதல் செய்கிறார்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

இதற்காகவே...









Desiderata 




இந்த புகழ்பெற்ற உரையாடல் வடிவிலான வசனக் கவிதை மேக்ஸ் எர்ஹ்மன் (Max Ehrmann) என்பவரால் 1927 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.

Desiderata என்னும் இலத்தீன் வார்த்தையின் பொருள் விரும்பிய விஷயங்கள். (Desierd things). 

இவ்வசன கவிதை ஒரு வாழ்க்கை கையேடு போன்றது. 

வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது. எனினும் உங்கள் தனித்துவத்தை இழக்காது வாழ்க்கையை நேர்மையோடும், காருண்ணியத்தோடும் பயணியுங்கள். அதுவே உறுதியான வழி. இதுவே இவ் வசனக் கவிதையின் சாரம்.

உறவுகள், தொழில், மனநலம், முதுமை, கடவுள், இயற்கை, ஆன்மா, அமைதி என வாழ்வின் பல கூறுகள் இக் கவிதையினுள் அடங்கியுள்ளன.







இதற்காகவே ..,


அவசரம், அமளி, இரைச்சல் இவற்றிற்கு இடையில் இவ்வுலகில் எவ்விதம் அமைதியோடு வாழ்வது? 

உங்கள் ஆன்மாவின் மெல்லிய சப்தத்தைக் கேட்பதில் மட்டும் மிகவும் கவனமாக விழிப்புணர்வுடன் இருங்கள். எப்போதும் உங்கள் நினைவில் இது இருக்கட்டும்.

உங்களால் கூடுமானவரை சக மனிதர்களுடன் சரணடையாது இயன்றவரை நல்லதொரு நட்புறவைப் பேணுங்கள். 

உண்மையை அமைதியாகவும் தெளிவாகவும் பேசுங்கள் ; மற்றவர்களின் பேச்சுக்கும் செவிமடுங்கள். நீங்கள் கேட்பதற்குத் தயாராக இருப்பின், மந்தமானவர்கள், அறியாமை நிறைந்தவர்களிடமும் கூடச் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.

மூர்க்கமாக உரத்துப் பேசும் நபர்களைத் தவிர்க்கவும். அவர்கள் ஆவியை விசனப் படுத்துகிறார்கள்.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஒப்பீடு வீணானது. கசப்பானது. ஏனென்றால் எப்போதும் உங்களைவிட உயர்ந்த மற்றும் குறைந்த நபர்கள் இந்த  உலகில் உண்டு

உங்கள் சாதனைகளையும் திட்டங்களையும் அனுபவித்து மகிழுங்கள். உங்கள் வாழ்வு எவ்வளவு எளிமையாக இருப்பினும் அதையே ஆர்வமுடன் தொடருங்கள். ஏனெனில் மகிழ்ச்சி என்பது இறுதி இலக்கை அடைவது மட்டும் அல்ல. 

அந்தப் பயணத்தின்போது எதிர் கொள்ளும் அனுபவங்களை இரசித்து மகிழ்வதிலும் அடங்கியிருக்கிறது. மாறிவரும் பருவத்தினூடே இதுவே உண்மையான அதிர்ஷடம் நிறைந்த சொத்து.

உங்கள் வணிக விவகாரங்களில் எச்சரிக்கையாக இருங்கள். உலகம் தந்திரமானது. எனினும் பல நபர்கள் உயர்ந்த இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உள்ளது. எல்லா இடத்திலும் வெற்றிகரமான வாழ்க்கை வீரத்தால் நிறைந்துள்ளது. 

ஆனாலும் உங்கள் நல்லொழுக்கத்தை விடாது பின்பற்றவும். நீங்கள் நீங்களாக இருங்கள். உங்கள் தனித்துவத்தை ஒருபோதும் இழக்க வேண்டாம்.

அன்பே வாழ்க்கை. அன்பற்ற இழிநிலை வேண்டாம். ஏமாற்றம் மற்றும் வாடிய முகத்திற்கு அன்பு குளிர்ச்சியான பனிபடர்ந்த பசும் புல்லைப் போன்றது. அன்பைப் பகிருங்கள்.

இளமையின் வீரியத்தை நம்புவதைவிட   முதியவர்களின் ஆலோசனைகளைச் சரணடைந்து மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். அனுபவம் சிறந்த ஆசான்.

திடீர் துரதிருஷ்டம் எதிர்பாராத தருணத்தில் உங்களைத் தாக்கக் கூடும். அதின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆவியின் மன வலிமையை வளர்த்துக் கொள்ள விழிப்பாக இருங்கள். 

இருண்ட கற்பனைகள் உங்களைத் துன்பப் படுத்த அனுமதிக்க வேண்டாம். பல அச்சங்கள், மனச் சோர்வு தனிமையில்தான் பிறக்கின்றன.

பரிபூரணமான நன்னடத்தை விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நீங்கள் உங்கள் ஆன்மாவை மென்மையாக நேசியுங்கள்.  

நீங்கள் இப் பிரபஞ்சத்தின் குழந்தை. மரங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சற்றும் குறைவானவர்கள். அல்ல. நீங்கள் பாவி கிடையாது. குற்றவுணர்வு தேவையில்லை. இங்கே வாழ உங்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு.

உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் இதுவே பிரபஞ்சத்தின் மாறாத உண்மை.

ஆகையால் நீங்கள் எதைக் கடவுளாகக் கருதுகிறீர்களோ அந்த உணர்வுத் தளத்தில் உள்ளம் அமைதியால் நிரம்பட்டும்

உங்கள் உழைப்பு, விருப்பங்கள் எதுவாக இருப்பினும், முதலில் ஆன்மாவில் அமைதியைக் காத்துக் கொள்ளுங்கள்.  சந்தடி, சச்சரவு , குழப்பத்திற்கு முக்கியத்துவம் தேவையில்லை.

சில சமயங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியற்றது; உடைந்த கனவுகளுடன் சோர்வும் நிறைந்தது: வேதனையாகவும் இருக்கலாம்.  

எனினும் இப்போதும் இது ஒரு அழகான உலகம் தான்.

மகிழ்ச்சியாக இருங்கள்.

மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.



மூலக்கவிதை

    Desiderata 

    Max Ehrmann
    Go placidly amid the noise and haste,
    and remember what peace there may be in silence.
    As far as possible without surrender
    be on good terms with all persons.
    Speak your truth quietly and clearly;
    and listen to others,
    even the dull and the ignorant;
    they too have their story.

    Avoid loud and aggressive persons,
    they are vexations to the spirit.

    If you compare yourself with others,
    you may become vain and bitter;
    for always there will be greater and lesser persons than yourself.

    Enjoy your achievements as well as your plans.
    Keep interested in your own career, however humble;
    it is a real possession in the changing fortunes of time.

    Exercise caution in your business affairs;
    for the world is full of trickery.
    But let this not blind you to what virtue there is;
    many persons strive for high ideals;
    and everywhere life is full of heroism.
    Be yourself.

    Especially, do not feign affection.
    Neither be cynical about love;
    for in the face of all aridity and disenchantment
    it is as perennial as the grass.

    Take kindly the counsel of the years,
    gracefully surrendering the things of youth.

    Nurture strength of spirit to shield you in sudden misfortune.
    But do not distress yourself with dark imaginings.
    Many fears are born of fatigue and loneliness.

    Beyond a wholesome discipline,
    be gentle with yourself.

    You are a child of the universe,
    no less than the trees and the stars;
    you have a right to be here.

    And whether or not it is clear to you,
    no doubt the universe is unfolding as it should.

    Therefore be at peace with God,
    whatever you conceive Him to be,

    and whatever your labors and aspirations,
    in the noisy confusion of life keep peace with your soul.

    With all its sham, drudgery, and broken dreams,
    it is still a beautiful world.

    Be cheerful.

    Strive to be happy. 

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

30. அறனை மறவேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)




t


தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.



"தருமம்" என்பதன் வேர்ச்சொல் "த்ரஸ்". த்ரஸ் என்றால் தாங்குதல் எனும் பொருள்படும். 

மனிதரைத் தாங்கிப்பிடித்து, அவரை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மேல் நிலைக்கு உயர்த்தும் செயல்கள் தர்மம் எனப்படும்.

எந்தச் செயல்கள் செய்யப்படுவதால் உயிர்களுக்கு நன்மை நிகழ்கிறதோ அவை தர்மம் என்றும் குறிப்பிடலாம். 

தர்மம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்ப்பாரது செய்யும் நற்செயல் எனவும் குறிப்பிடலாம். 

ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு இயல்புத் தன்மை உள்ளது. அது அந்தப் படைப்பின் தர்மம். மிளகாய் என்றால் காரம் என்பது அதன் குணம். அதன் தர்மம். வன உயிரினங்களுக்கென ஒரு தர்மம் உள்ளது.


மனிதர்களின் தர்மத்தைக் குறித்து சாஸ்திரம் இவ்வித விளக்கத்தைத் தருகிறது.


அஹிம்ஸா சத்யம் அஸ்தேயம் 
செளசம் இந்திரிய நிக்ரஹ ஏதம் 
சாமாதிகம் தர்மம் சாதுர்வர்ணே பிரதிர் மனு.

இதன் பொருள், அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், செளசம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய ஐந்து விஷயங்களையும் நியமனமாகக் கொண்ட வாழ்கையை நடத்துதலே தர்ம வாழ்க்கை எனப்படும்.


1. அஹிம்சை :


அஹிம்சை என்பது எந்தவொரு உயிருக்கும் மனவருத்தம் ஏற்படாதவாறு வாழ்வது. இது கொல்லாமை அல்லது உயிர் வதையை மட்டும் குறிப்பதல்ல. 

நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களைப் பிற உயிரினங்களை அதன் இயல்புடன் வாழவிடுவது. இது போல் வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல. 

பிற உயிர்களுக்குப் பிரச்சினை, மனவருத்தம், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில் அமைதியாக இருத்தல், அவ்விடம் விட்டு விலகி இருத்தல், துன்பத்தை சகித்தல் என்பவை அஹிம்சை வழி.


2. சத்தியம் : 


சத்தியம் என்பது உள்ளதை உள்ளவாறு உரைத்தல் ஆகும். ஒரு போதும் வஞ்சனையாகப் பொய் பேசக்கூடாது. 

கேட்பவர்களுக்குப் பிரியமாக இருக்கிறது என்பதற்காக மிகைப் படுத்திப் பேசக்கூடாது. உண்மையை திரித்துப் பேசுதல் கூடாது. 

நடக்காத ஒன்றை நடந்தது போல் சுயமாக இட்டுக்கட்டிப் பேசக் கூடாது. உண்மையை பேச இயலாத தர்ம சங்கடமான சூழலில் அமைதி காத்தல் நல்லது. 

உண்மையை மட்டுமே பேசுவதை விட மிகச் சிறந்த தவம் வேறு எதுவும் இல்லை எனத் திருக்குறள் சொல்லுகிறது.


3. அஸ்தேயம் :


அஸ்தேயம் என்பது பிறர் பொருளை விரும்பாதிருத்தல் ஆகும். அடுத்தவர் பொருளை அபகரித்தல் கூடாது.

நேர்மையான வழியில் பொருளீட்டி வாழ்தல் தர்மம் ஆகும்.  நமக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதில் திருப்தியுடன் வாாழ்தல் நல்லது.


4. சௌசம் :


சௌசம் என்பது தூய்மை. உடல் மற்றும் மனம் தூய்மையாக இருத்தல் அவசியம். 

உடல் தூய்மை நீரால் அமையும். மனம் உண்மை பேசுவதால் தூய்மையாகும். 

குழந்தையைப்  போல் களங்கமற்ற மனதுடன் இருக்கும் மனதில் இறைவன் குடியிருக்கிறார். 

மனதில் கல்மிஷம் புகுந்தால் மேல் சொன்ன மூன்று தர்மமும் அழியும்.


5. இந்திரிய நிஹ்ரஹம் :


கடைசியாக வருவது இந்திரிய நிஹ்ரஹம். 

இது ஐந்து புலன்களின் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும். இதற்கு முதல் தேவை இறைபக்தி. இரண்டாவது வைராக்கியம். 

வேத நூல்கள், சான்றோர் சொற்களை மனதில் தொடர்ந்து தியானித்து அதன் கருத்துக்களை மனதில் நிலை நிறுத்துவது மனதை ஒழுங்கு படுத்த உதவும். எனினும் மனதைக் கட்டுப்படுத்த இறைவனிடம் சரணடைவதே சிறந்த வழி. 

மனதைச் சொந்த முயற்சியால் ஒருபோதும் அடக்கமுடியாது. இறைமையை வைராக்கியமாகப் பற்றிக் கொள்பவர் மனதைத் தீய வழியில்  வீழ்ந்து விடாது இறைமை பாதுகாக்கும்.

இது எல்லா மக்களும் மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைத் தர்மங்கள் ஆகும்.