சனி, 13 ஜூன், 2020

கவனித்துப் பாருங்கள்

  தகவமைப்பு.  

 

  
வறண்ட வெறுமையான 
ஊளையிடும்
பாலை நிலத்தின்
அவாந்தர வெளியில்
அழகியதொரு சப்பாத்திக்கள்ளி  

சூழல் குறித்து 
முறுமுறுக்காது 
தன்னைத்தான் பொருத்தி
நீர் ஆவியாகாவண்ணம் 
கிளைகள் நீக்கி 
இலைகள் துறந்து  
தண்டில் பாத்திகட்டிப்
பனி நீரை 
வேருக்குப் பாய்ச்சி 
பாதுகாக்க
முட்களைச் சூடி 
வறண்ட நிலம் மகிழக்
கடுவெளி களிக்கப் 
புஷ்பம் பூத்துச் சிரிக்கிறது

வான வீதியில்
உல்லாசமாக
உலாவருகின்றன
சில பறவைகள்

அவை
விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை

அவைகளுக்குக்
களஞ்சியமுமில்லை
பண்டகசாலையுமில்லை
அதற்காக அவைக்
கவலைப்படுவதுமில்லை

கூடித் திட்டமிட்டு 
சிறகை விரித்துச்
சோர்வின்றி பறந்து 
உணவைத் தேடிக் 
கண்டடைந்து 
களிக்கின்றன

அடர் வனத்தில்
உயர்ந்ததொரு மரம்

அவை
நூல் திரிப்பதுமில்லை
ஆடை நெய்வதுமில்லை

எனினும்
மகிமை பொருந்திய
மன்னர் அணியும்
மெல்லிய ஆடையினும்
மெலிதான மலரை
அணிந்து அழகுடன்
மிளிர்ந்து, கவர்ந்து
சந்ததியைக் கடத்துகிறது

இயற்கையோடு 
இயைந்தவை
சுயமதிப்பை,  
இருப்பை, 
மகிழ்ச்சியை 
எச் சூழலிலும் இழப்பதில்லை

அவை 
தம்மைத்தாமே
தகவமைக்கின்றன. 
மறைகின்றன.
மறுரூபமாகின்றன.

அதிகாலைப் பனித்துளி 
புல்லின் முனையில் பூ
காற்றில் தொலைந்த மேகம்
வெட்டி மறையும் மின்னல்

தோற்றமும் மறைவும்
நீர்க்குமிழி எனினும் 
தத்தம் கடமையை 
நிறுத்துவதில்லை

வாழ்வின் இருப்பை 
எது இறுதி செய்கின்றன?  
உண்மையை யார் உணர்வார்?

தகவமைப்பு 
உயிர்களின் வாழ்வியல் 
ஓர் புரிபடா சுழற்சி 

தேடல்
கூர்ந்து கவனித்தல்  
இயல்பைப் புரிதல்
தெரிந்து கொள்ளுதல் 
சோர்வின்றி உழைத்தல் 
அடைதல் 
அனுபவித்தல்
உண்மை உணர்தல்
பயணித்தல் அன்றி விலகல்
தன் வினை உணர்தல் 
சீர் செய்தல் 
மீண்டும் ஓர் புதிய தேடல்

புகையாக 
வாழ்க்கை கரைகிறது 
வாசனைகள் மட்டும் 
எச்சமாகக்
காற்றோடு காற்றில் 
கண்ணுக்குப் புலப்படா
நுண் துகளாக

வாழ்வுக்கேற்ற வாசனை 
வாசத்துக்கேற்ற மீள் வாழ்வு

தகவமைப்பு : மாறுகின்ற சூழலுக்கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்கின்ற திறன்.  

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

சனி, 6 ஜூன், 2020

பண்பட்ட மனம்.

விதை - நிலம்.

(Christ's Parables - 3)


வாழ்வியல் உண்மையைக் கதை வடிவில் கேட்பது சுவாரஸ்யம். நாம் இயல்பாகப் பார்க்கும் காட்சிகள் வழியாகக் கதை சொல்லப்படும் போது மனம் இன்னும்  நெருக்கமான உணர்வை அனுபவிக்கிறது.

உவமை என்பது விளக்குவதற்குச் சிரமம் நிறைந்த ஒரு கருத்தைத் தெரிந்த உதாரணத்தின் மூலமாக விளக்கிக் கற்றுத் தருவது. கதை உவமை வழியாகச் சொல்லப்படும்போது விடுகதையாகிறது. "எதைக் குறித்து இந்தக் கதை மறைமுகமாக விளக்க முயல்கிறது?" என மனம் ஆர்வமுடன் சிந்திக்கிறது. புதிரின் முடிச்சை அவிழ்க்க உள்ளத்தில் தீவிர அலசல் நடைபெறுகிறது.

உவமை சுட்டும் பொருள் வெளிப்படும்போது உண்மை எளிதாகப் புரிகிறது. மனம் மகிழ்ச்சி அடைகிறது. அவ்விதம் கற்பது ஆழமாகப் பதிகிறது. அக்கருத்துக்கள் நினைவில் நிலைத்து நிற்கிறது.


இது ஓர் எளிய உவமை கதை :



ஒரு மனிதன் விதைப்பதற்காக வயலிற்குச் செல்கிறான். அவனிடம் நல்ல தரமான விதைகள் இருக்கின்றன. அவன் நிலத்தில் விதைகளைத் தூவினான்.

அதில் சில விதைகள் வழிப் பாதையோரத்தில் விழுந்தன. அதைப் பறவைகள் வந்து கொத்தித் தின்றன.

சில விதைகள் மண் அதிகமில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை முளைத்தது. துளிர் விட்டது. மேல் நோக்கிச் செழிப்புடன் வளர்ந்தது. ஆனால் நிலம் கடினமான பாறை நிறைந்த தரிசாக இருந்ததால் வேர் ஆழமாக ஊடுருவ முடியவில்லை. சிறிது காலத்தில் கோடைக்காலம் வந்தது. வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியது. அந்தச் செடியின் வேர் ஆழமாக இல்லாததால் வாடி வதங்கிக் காய்ந்து அழிந்தது.

இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைத்தது. நன்கு வளர்ந்தது. எனினும் முட் செடிகளும் உடன் பெரிதாக வளர்ந்து செடியை நெருக்கியதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவில் செடி விளைச்சலின்றி பலனளிக்காது போயிற்று.

மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தது. விளைச்சல் சிறப்பாக இருந்தது. அவற்றுள் சில முப்பது மடங்கு பலனளித்தது. வேறு சில அறுபது மடங்கு பலனளித்தது. இன்னும் சில நூறு மடங்கு பலனளித்தது..

உவமை சுட்டும் பொருள் :




இந்த உவமை நான்கு விதமான மனநிலை கொண்ட மனிதர்களைக் குறித்து கற்றுத் தருகிறது.

வாழ்வியல் உண்மைகள் மாறாதது. ஆனால் மனிதரின் மனப்பான்மை மாறுபட்டது.

ஒவ்வொருவர் மனதின் விருப்பங்களும் தேடல்களும் வித்தியாசமானது. எது நல்லது? எது கெட்டது? எனச் சிந்தித்துப் புரிந்து கொள்ளும் திறன் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது.

கூர்ந்து நோக்கினால் ஆழ் மனதின் விருப்பங்கள் குணமாகும். அந்த குணம் மனப்பான்மையைத் தீர்மானிக்கும். அவரவர்கள் மனப்பாங்கிற்குத் தக்க அறத்தைக் கடைப்பிடிப்பார்கள். அதற்குத்தக்க வாழ்வில் மாற்றம் நிகழும்.

இந்த உவமையில் "விதை" என்பது "வாழ்வியல் சார்ந்த அறத்தை - இறை வார்த்தைகளை" குறிக்கிறது.

மற்றும் "நிலம்" என்பது "மனம்". "பறவை" என்பது "தீயசக்தி". "சூரிய வெப்பம்" என்பது "துன்பம்". "முட்செடிகள்"  என்பது "பேராசை மற்றும் உலக மதிப்பைத் தேடுதல்".

இந்த கதையில் நான்கு வித மனப்பான்மை உடைய மனிதர்களைப் பார்ப்போம். இதில் நமது மனநிலை எங்குப் பொருந்துகிறது எனப் புரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.

1. உணர்வற்ற மனம்.




"சில விதை பாதையருகில் விழுகிறது. பறவைகள் வந்து அதைக் கொத்தித் தின்கிறது".

உணர்வற்ற மனதில் விழுந்த நல்ல கருத்துக்களால் எவ்வித பயனும் இல்லை என்பது இதன் பொருள்.

சில மனிதர்கள் நல்லக்  கருத்துக்களைக் கேட்பார்கள். வாசிப்பார்கள். விவாதிப்பார்கள். ஆனால் வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதில்  உண்மையான விருப்பம் கிடையாது. பொழுது போக்கக் கேட்பார்கள். நேரப்  போக்கிற்காக வாசிப்பார்கள். புதிது புதிதாக வாசிக்க ஆர்வம் காட்டுவார்கள். வாசித்து முடிந்தவுடன் மறந்து விடுவார்கள். மனதில் எதுவும் பதியாது.

பறவை வந்து கொத்தித் தின்னும் என்பது நல்ல சிந்தனைகள் இவர்கள் மனதில் பதியாதவாறு தீயசக்தி செயல்படுவதைக் குறிக்கிறது. உணர்வற்ற தன்மையால் தீமை இவர்களை எளிதில் மேற்கொள்ளும். இருள் சூழ்ந்த உணர்வற்ற உள்ளத்தில் எந்த நல்ல எண்ணமும் தங்காது.

என் தலைக்கு மேல் பறவைகள் பறப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அவை கூடு கட்டாமல் பாதுகாக்க முடியும்.

2. உறுதியற்ற மனம்.




"சில விதைகள் மண் அதிகமில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்துத் துளிர் விட்டது. ஆனால் நிலம் கடினமான பாறையாக இருந்ததால் வேர் ஆழமாக ஊடுருவ முடியவில்லை. வெய்யில் உக்கிரமாகக் கொளுத்தியபோது செடியின் வேர் ஆழமாக இல்லாததால் வாடி வதங்கிக் காய்ந்து அழிந்தது".

உறுதியற்ற மனதையுடையவர்கள் ஆவலுடன் நல்லக் கருத்துக்களைக் கேட்பார்கள். அதை ஏற்றுக் கொள்வார்கள். சில காலம் கருத்தாகக் கைக்கொள்வார்கள். நல்லவராக வாழ்ந்தால் துன்பம் வரும். அதை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாமல் சமரசம் செய்து கொள்வார்கள்.

வேர் ஆழமாக ஊடுருவினால்தான் செடி எந்தச் சூழலையும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியும். அதுபோல நல்ல சிந்தனையின் மேல் உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எவ்வளவு துயரங்கள் வந்தாலும் அதைக் கடைப்பிடித்து நிலை நிற்க முடியும்.

வேர் பற்றாது விரைவாக வளரும் செடி சூரியனின் வெப்பத்தைத் தாங்காது கருகுவது போல எதிர்ப்புகள் மற்றும் துன்பத்தைத் தாக்குப் பிடிக்காத உறுதியற்ற மனமுடையவர் நல்லதைச் செய்வதில் நிலைத்திருக்க மாட்டார்கள்.

உறுதியற்ற மனமுடையவரின் நல்ல தீர்மானங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.

3. ஆசையில் சிக்குண்ட மனம்.



"இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைத்தது. நன்கு வளர்ந்தது. எனினும் முட் செடிகளும் உடன் பெரிதாக வளர்ந்து செடியை நெருக்கியதால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. முடிவில் செடி விளைச்சலின்றி பலனளிக்காது போயிற்று". 

முட்செடிகள் என்பது உலக ஆசையைக் குறிக்கின்றன. மூன்று ஆசைகள் மனதை மயக்குகின்றன. அவை பணத்தாசை, பாலுறவு மோகம், பதவி அதிகார வெறி. இந்த உலகப்பற்று மனதை வீழ்த்திவிடும்.

i. பண ஆசை ஒரு முள். 

இவ்வுலகத்தில் வாழப்  பணம் அவசியமானது. ஆனால் பணத்தின் மேல் ஏற்படும் மிதமிஞ்சிய ஆசை தவறான குறுக்கு வழியில் நடக்கத் தூண்டுகிறது. இலஞ்சம் வாங்க வைக்கிறது. பிறர் சொத்தை அபகரிக்கத் தூண்டுகிறது.

மித மிஞ்சிய பண ஆசை உறவுகளில் விரிசல் ஏற்படுத்துகிறது. தேவைக்கு அதிகமான பணம் முறையற்ற வாழ்க்கை வாழும்படி தூண்டி விடுகிறது.

நாம் பயன்படுத்தாத எத்தனைப் பொருட்களால் வீடு நிறைந்துள்ளது?

தவறான முறையில் சம்பாதித்து சொத்துக்களைச் சேர்த்து வைப்பதை விடக் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி, உயர்ந்த பண்புகள் அளிப்பது முக்கியம்.

தீய வழியில் சேரும் சொத்து முடிவில் குடும்பத்தை அழிக்கும்.

பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேர். அது  நல் வாழ்வு வாழத் தடை.

ii. முறையற்ற உறவுகள்  ஓர் முள்.

முறையற்ற பாலியல் தொடர்பு வாழ்வைக் கறைப்படுத்தும். அது புத்தியீனமாக நடக்கத் தூண்டும். சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் வெட்க உணர்வு மறையும். செய்யும் செயலின் விளைவைப் பற்றிய அச்சவுணர்வு அகலும். கூச்சம் விலகும். நீதி நியாய உணர்வுகள் அழியும். மனசாட்சி செத்து விடும். நன்மதிப்பு கெட்டுக் குடும்பம் சிதையும்.

முறைதவறிய பாலியல் உறவு மதிகேடு. அது நல் வாழ்வு வாழ விடாது.

iii. பதவி அதிகார வெறி ஓர் முள்.


பதவி அதிகாரம் ஓர் போதை. அது மெத்தப் படித்த மேதையையும் வீழ்த்திவிடுகிறது. தனது வாரிசை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் எனும் ஒரே ஆசையால் எத்தனை நாடுகள் சிக்கிச் சீரழிகிறது.

குறுக்கு வழியில் தகுதியற்ற பிள்ளையை  உயர்ந்த பதவியில் அமர்த்த துடிக்கும் பெற்றோரின் பேராசையால் எவ்வளவு அழிவு ஏற்படுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றச் சண்டையிடும் சமயத்  தலைவர்களால் தெய்வ சபைகளும், அறமும் கேலிப் பொருளாகி மான்பிழந்து நிற்கிறது.

அகந்தையால் அழிந்த தலைவர்களின் கதைகளாலே உலக வரலாற்றின் பக்கங்கள் நிரம்பியுள்ளன.

தன் எஞ்சிய வாழ்க்கை இன்னும் சில வருடங்கள் தான் எனத் தெரிந்தும் ஒற்றை ஆளாக உலகையே மாற்றத் துடிக்கும் தலைவர்களின் அதிகார வெறி மக்களைத் தத்தளிக்கச் செய்கிறது. 

அதிகாரம் வீண் பெருமையை அளிக்கிறது. அதிகார போதையில் சிக்கியவரைச் சுற்றி வெற்றுத் துதிபாடும் வீணர் சேர்கிறார்கள். புகழில் சிக்கியவர் கண்கள்  உண்மையை உணர்வதில்லை.

அழிவுக்கு முன் அகந்தை. அதிகார ஆசை நல் வாழ்வு வாழப் பெருந்தடை.

இந்தக் கொடிய முட்கள் மூன்றும்  வாழ்க்கையிலிருந்து வெட்டி அகற்றப்பட வேண்டும்.

4. பண்பட்ட மனம். 


(வினோபாவேஜி அவர்கள்)

"மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தது. விளைச்சல் சிறப்பாக இருந்தது. அவற்றுள் சில முப்பது மடங்கு பலனளித்தது. வேறு சில அறுபது மடங்கு பலனளித்தது. இன்னும் சில நூறு மடங்கு பலனளித்தது."

பண்பட்ட மனம் நல்ல நிலம். அது இறைமை வாழும் உள்ளம். அது உண்மையை விரும்புகிறது. அதன் உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கிறது. அது அன்பால் நிறைந்திருக்கிறது. அதில் பெருமை இருப்பதில்லை. அது தீய வழிகளை வெறுக்கிறது. நற்செயல்கள் இறைவனது அருளால் தான்  செய்யப்படுகிறது எனும் தெளிவு இருக்கிறது.

மனதில் தந்திர உணர்வுகள் இருப்பதில்லை. நீதி உணர்வுகள் ஆளுகை செய்கிறது. வார்த்தைகளைக் கவனமாகப் பேசுகிறது. ஒரு செயலை செய்யும்முன் விளைவுகளை யோசிக்கிறது. ஆதாயத்தைவிட விளையும் பலன்மேல் கருத்தாக இருக்கிறது.

ஒரு நல்ல நிலத்தைப் பாருங்கள். அது வேலியடைத்துப் பாதுகாப்பாக இருக்கிறது. நன்கு பராமரிக்கப்படுகிறது. ஓர் பசுமையான செழிப்பு நிறைந்த தோட்டத்திற்குப் பின்புலமாக மிகச் சிறந்த உழைப்பாளி மறைந்திருக்கிறார்.

ஓர் நல்ல மனதிற்குள் அந்தராத்மாவாக குரு செயல்படுகிறார்.

இறை வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் மூன்று விதமான அளவுகளில் (30%, 60%, 100%.) பலனளிக்கிறது. இறை வார்த்தைகளுக்கு வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதற்கேற்ப பலனும் அமைகிறது. 

சரணடைதல் அறுவடையின் அளவை நிர்ணயம் செய்கிறது.

ஓர் எளிய உவமை. எத்தனை ஆழ்ந்த பொருள்.

சான்றோர்களால் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் அருளப்படுகிறது. அதில் மறைந்திருக்கும் மறைபொருளின் உண்மைத்தன்மையால் அது காலத்தைக் கடந்தும் பேசப்படுகிறது.

நம்பிக்கை  ஒவ்வொரு வார்த்தையின் பொருளை உணர்த்துகிறது. அகக் கண் திறக்கிறது. அதை ஏற்றுக் கீழ்ப்படிந்து கடைப்பிடிக்கும்போது வாழ்க்கை மாறுகிறது.

"வாசிப்பவர் சிந்திக்ககடவர்".

*******   *******   ******* 

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.