திங்கள், 18 டிசம்பர், 2017

ஔவியம் பேசேல்

🌸 ஔவியம் பேசேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


ஔவியம் பேசேல் :

பொறாமைப்பட்டுப்  பேசாதே என்பது இதன் பொருள்.

ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

தன்னையே அளவுகடந்து நேசிப்பதுதான் பொறாமையின் ஊற்று.

பொறாமை ஓர் எலும்புருக்கி நோய் போன்றது. உடன் இருந்து கொல்லும்.

இந்த உலகில் பொறாமையால் அழிந்த உயிர்கள் ஏராளம்.

அரசு அரியணையில் இருந்த பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றைக் கவர்ந்தான் துரியோதனன். 

ஆனால் பொறாமையால் அறமற்று கவர்ந்தவை எவையும் நிரந்தரமில்லை. 

துரியோதனன் பாண்டவர்களுடனான மகாபாரத யுத்தத்தில் தோல்வியுற்று அனைத்தையும் அவர்களிடமே இழந்தான்.

இன்றைய உலகிலும் பொறாமைத் தீயால்  தங்கள் வாழ்வை இழந்து, வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக அலைந்து திரிபவர்கள் ஏராளம்.


பொறாமை உடையவரின் இயல்புகள் :


தன்னைக் குறித்து வீண்பெருமை பேசுதல்,

சுயமோகியாக இருத்தல்,

பிறரிடம்  உள்ள உயர்ந்த குணம், கல்வி, செல்வம்.., இவை கண்டு வெறுப்படைதல்,

பிறரது முன்னேற்றத்தைக் கண்டு கோபப்படுதல்,

எளியவரிடமும் கடுஞ்சொல் பேசுதல்,

தவறுகளைச் சுட்டி காட்டுபவரை அற்பமாக விமரிசித்தல்,

மாற்றுக் கருத்துடையோரை சகிக்காது தாக்குதல்

எனக் கூறிக் கொண்டே செல்லலாம்.

வாழ்வில் வெற்றி பெற விரும்புபவர் மனதில் பொறாமையின்றி இருப்பதை ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

உலகின் நிலையாமை உணர்ந்து, எப்போதும் அடக்கத்துடன், பொறுமையுடன் வாழ்வதே சிறப்பு.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு தூசியாகத் தன்னை எப்போதும் உணர்ந்து மனதில் நிலைநிறுத்துவது நல்லது.

பிறரது திறமைகளை மதிப்பது, சிறப்பாகச் செயல்படுபவர்களை மனம் திறந்து பாராட்டுவது, அன்புடன் சக உயிர்களை நேசிப்பது  போன்ற  நல்ல பண்புகள் மனதை செழுமையாக்கும்.

போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தி நிறைந்த வாழ்வே மிகச் சிறந்தது.

பொறாமையை மனதில் இருந்து வேரோடு அகற்றச் சிந்தையை , இருதயத்தை மாசற்ற  அன்பினால் நிரப்புவதே ஒரே வழி.


6 கருத்துகள்: