ஆத்திசூடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்திசூடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2022

51 சேரிடமறிந்து சேர்.

நல்லவர்களை நாடு.



Tell me your friends are and I will tell you who you are - Proverb.

சேரிடமறிந்து சேர்:

சேரிடமறிந்து சேர்: நீ பழகும் நண்பர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து, அதற்குப் பின்பு அவர்களுடன் பழகு.

ஒரு புதிய இடத்திற்குச் செல்வதற்கு முன்பு அந்த இடத்திற்கு எந்த வகையில் செல்வது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனத் தெரிந்து, அதற்கேற்ற வகையில் பயண முறையை முடிவு செய்வோம். 

அங்குக் கிடைக்கும் உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்ற விபரங்களை அலசி ஆராய்வோம். அங்குள்ள கால சூழ்நிலை அறிந்து அதற்கு தக்கவாறு ஆயத்தப்படுவோம்.  

எல்லாவற்றிற்கும் மேலாக அங்கிருக்கும் மக்களின் மனநிலை, பாதுகாப்பு போன்ற விவரங்களைத் தெரிந்த பிறகே அங்குப் பயணப்படுவோம். 

ஒரு இடத்திற்குச் சென்று சேர வேண்டியதற்கே இத்தனை முன்னேற்பாடு செய்வீர்கள் என்றால், நாம் பழகும் நபர்கள் நல்ல குணமுடையவர்களா என ஆராய்ந்து பார்த்து அதன் பின்பு அவர்களுடன் ஆழ்ந்த நட்பு பாராட்ட வேண்டியது அதை விட எத்தனை அதிக முக்கியம் என்கிறார் ஔவையார். சேரும் இடம் அறிந்து சேர். 

திருக்குறள் நாம் பழக வேண்டிய நபர்கள், நட்பு பாராட்ட வேண்டிய விதம் குறித்து சில அதிகாரங்கள் வழியாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக 

1. பெரியாரைத் துணைக் கோடல்

2. சிற்றினம் சேராமை

3. நட்பு

4. நட்பு ஆராய்தல்

5. தீ நட்பு

6. கூடா நட்பு ஆகிய அதிகாரங்களைக் குறிப்பிடலாம்.

நட்பு சிந்தனையைப் பாதிக்கும்:

நீர் தான் சேரும் நிலத்தின் இயல்புக்கு ஏற்ப அதன் நிறம் மாறும். அதன் சுவை மாறும். அதன் தன்மை மாறும். அது போல நாம் பழகுபவர் இயல்புக்கு ஏற்ப நம் சிந்தனை மாறும். அவர்களது இயல்பு நம்மையறியாது நம்முடன்  வந்து ஒட்டிக் கொள்ளும். நம் குணம் மாறும். நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களைப் பிரதிபலிப்போம். நமது உணவு, உடை, பேச்சு, பாவனை, செயல் என அனைத்திலும் அது வெளிப்படும். 

ஆதலால், நல்லவர் சேர்க்கையிலும் சிறந்த துணை இவ்வுலகில் வேறு இல்லை. தீயவருடன் பழகுவதால் ஏற்படும் துன்பம் தரும் கொடிய பகை போல வேறு எதுவும் இல்லை. 

ஆகவே, சிறந்த அறிவுடையவர்கள் நட்பை எவ்விதம் பெறுவது என ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பும் செயல்கள் அறிந்து, அதைச் செய்தால், அவர்களோடு இணைந்து கொள்ள முடியும். 

அவர்கள் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகக் கூடாது. உண்மையில் அவர்களது கடினமான அறிவுரைகள் பின்பற்றுபவர், வாழ்வில் எதிர் கொள்ளும் துன்பத்தால் வீழ்ந்து போக மாட்டார்கள். 

மாய மான்:

ஒருவர் பேசுவது அல்லது எழுதுவதை வைத்து அவரது குணத்தை நிதானிக்க முடியாது. அவரது செயல்களை வைத்தே அதைக் கண்டு பிடிக்க முடியும். சமூக வலைத்தள உறவுகள் கருத்துப் பகிர்வுகளுக்கு மட்டுமே உதவும். அதைக் கடந்து நேரடி பழக்கத்தில் மட்டுமே உண்மை சுபாவம் வெளிப்படும். 

வாழ்நாள் வலி:

ஒருவருடன் நட்பாகப் பழகிய பிறகு அவர் தீயவர் என உணர்ந்தாலும், அவ்வளவு எளிதாக விலகி விட முடியாது. ஆதலால் ஆராயாமல் நட்பு செய்வதைப் போல் கேடு தருவது வேறு இல்லை. எந்த மனிதராலும் நீண்ட காலம் நடித்து ஏமாற்ற முடியாது. எனினும் தீய நபர்களது குறுகிய கால உறவும் கூட வாழ்நாள் வலியைத் தந்து விடும்.

உரைகல்:

வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களினால் சில நன்மைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது,  நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் யார் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். நமது தேவையில் உதவாத வாய்ச் சொல் வீரர்களை அப்போது எளிதாக இனம் காண முடியும்.

பொருளையே குறி வைத்து ஏமாற்றிப் பழகும் நட்பு இருந்தாலும், இழந்தாலும் ஒன்று தான். அது போல ஆபத்தில் நம்மை விட்டுவிட்டு ஓடுபவர் உறவை விடத் தனிமையாக வாழ்வது மிகவும் சிறந்தது.

நமக்குத் துயரம் வரும் போது நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வரும் பத்து கோடி மடங்கு தீமை மிக நல்லது. ஆதலால் நம்மைக் கண்ட போது முகத்தால் இனிதாகச் சிரித்து. மனத்தால் துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை விட்டுவிட வேண்டும்.

விளைவு:

அறிவுடையவர் நட்பு பிறைச்சந்திரன் வளர்வது போல் நாள் தோறும் வளர்ந்து பெரும் பயன் தரும். தீயவர் நட்பு முழு நிலவு பின்னர் தேய்வது போல நாள் தோறும் தேய்ந்து முடிவில் நம்மை இல்லாது அழித்துவிடும்.


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..,

சனி, 10 டிசம்பர், 2022

50. செய்வன திருந்தச் செய்.

செய்வதை நேர்த்தியாகச் செய்.



Great works are performed not by the strength but by Perserverance - Samuel Johnson.

செய்வன திருந்தச் செய்: ஒரு செயலை செய்யும் போது அதைக் குற்றம் குறை ஏதும் இல்லாமல் முழுமையாகச் செய்து முடித்தல் வேண்டும்.

நாம் செய்யும் செயல்கள் நமது வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றது. உன்னதமான சாதனைகள் எனப் போற்றப்படுபவை அனைத்தும் ஓர் விதி முறை ஒழுங்குக்குக் கீழ்ப்படிந்து, அர்ப்பணிப்புடன் செய்த, சின்ன சின்ன செயல்களின் தொகுப்புகள் தான். 

ஒரு இசைக் கலைஞராக இருந்தாலும் சரி, விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரி, ஒரு ஒழுங்கு முறைமைக்குக் கீழ்ப்படிந்து, கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்யும் போது தான் அவர்களது படைப்பாற்றல் வெளிப்படுகிறது. எந்த அளவிற்கு அவர்கள் ஒப்புக் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு மேம்பட்டுப் பிரகாசிக்கின்றனர்.

எந்த ஒரு செயலையும் முறையாகத் தொடர்ந்து செய்யும் போது, அது  நாளடைவில் இயல்பான பழக்கமாக மாறிவிடும். அந்த அனுபவத்தைக் கருத்துடன், மனமிசைந்து, உண்மையுடன் தொடர்ந்து செய்தால் அதில் நிபுணத்துவத்தை அடைய முடியும். பின்னர் அதுவே தனித் திறமையாகி நமது அடையாளமாக மிளிரும். இத்தகைய திறமை வாழ்க்கைக்கு உயர்வை, பாதுகாப்பை, தன்னம்பிக்கையை அளிக்கும்.

எந்த வேலையைச் செய்யும் போது நமக்கு நேரம் போவதே தெரியவில்லையோ அதுவே நமது இயல்பான வேட்கை (Passion). ஆனால் அந்த பணியின் மூலமாக நமக்கு வருமானம் வர வேண்டும். அந்த வேலையில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். அது சமூகத்திற்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துறையைத் தெரிவு செய்வது நல்லது. 

அந்த துறை சார்ந்த கல்வியை முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல பயிற்சி பெறவேண்டும். அதில் ஒவ்வொரு செயலையும் திருத்தமாகச் செய்துவந்தால் அந்த செயல்களின் தொகுப்பு மொத்தமாகச் சேர்ந்து வாழ்நாள் சாதனையாக வளர்ந்து நிற்கும். அப்போது நாமும் சாதனையாளர் வரிசையில் இடம் பெறலாம். பொதுநல நோக்கோடு செயல் பட்டால் உலகமே நம் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடும்.

செயல்கள் செய்யப் பட வேண்டிய வழி வகைகள் குறித்து வள்ளுவர் ஒன்பது அதிகாரங்களில் குறிப்பிடுகிறார்.

1. தெரிந்து செயல்வகை
2. வலியறிதல்
3. காலம் அறிதல்
4. இடனறிதல்
5. தெரிந்து தெளிதல்
6. தெரிந்து வினையாடல்
7. வினைத் தூய்மை
8. வினைத் திட்பம்
9. வினைச் செயல் வகை.

1. தெரிந்து செயல்வகை:

எந்தச் செயலையும் ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். ஒருவருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும் கூட அவரவர் தரம் அறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும் என இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"

எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் முன்பாக நன்கு ஆராய்ந்து பார்த்துத் தொடங்க வேண்டும். அதைச் செய்யத் தொடங்கிய பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பது துயரத்தைத் தரும்.
 
2. வலியறிதல்:
 
தமது வலிமையின் அளவை அறியாமல் மன எழுச்சியால் உந்தப்பட்டு எந்தவொரு செயலையும் செய்தல் கூடாது என இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் "

மென்மையான மயில் தோகை ஏற்றப்பட்ட வண்டியும் கூட, அளவுக்கு அதிகமாக மயில் தோகையை ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.

3. காலம் அறிதல்:

ஒருவர் ஏற்ற காலமறிந்து செயலைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் காரியம் கைகூடும் என இந்த அதிகாரம் குறிப்பிடுகிறது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்.

4. இடனறிதல்:

ஒருவர் தீர ஆராய்ந்து, தமக்கு ஏற்ற பொருத்தமான இடத்திலிருந்து மன உறுதியுடன் செயல்பட்டால் மட்டும் போதும், அவர்கள் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பார்கள். வேறு எந்த துணையும் முக்கியமில்லை என இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

அச்சம் அறியாததும், வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த தந்தங்களை உடைய யானை, கால் அழுந்தும் சேற்றில் சிக்கி விட்டால் அதனை அற்ப நரிகள் கூடக் கொன்று விடும்.

5. தெரிந்து தெளிதல்:

எவரையும் ஆராய்ந்து பார்க்காமல் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது. ஒருவரை ஆராயாமல் நம்புவதும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவரைச் சந்தேகப்படுவதும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.

அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

அறவழியில் உறுதியானவர், பொருளுக்கு ஆசைப்படாது உண்மையுள்ளவர், பாலியல் இன்பம் தேடி மயங்காதவர், தன்னுயிருக்கு அஞ்சாதவர் அப்படிப்பட்ட குணம் இருப்பவரையே ஆராய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

6. தெரிந்து வினையாடல்:

இவர் இந்த வேலைக்குத் தகுந்தவர் என ஆராய்ந்து, இடையூறுகளைத் தாங்கிச் செய்பவரிடம் பணியை ஒப்படைக்க வேண்டும். தெரிந்தவர் என்று யாருக்கும் வேலை தரக் கூடாது என இந்த அதிகாரம் குறிப்பிடுகிறது.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கு பண்புகளையும் நிலையாக உடையவரை, செயல்கள் ஆற்றுமாறு ஒப்படைக்கலாம்.

7. வினைத் தூய்மை:

வினைத் தூய்மை அதிகாரம் எந்த சூழ்நிலையிலும் இழிவான செயல்களைச் செய்யக் கூடாது என வலியுறுத்துகிறது. அறம் சார்ந்த நன்மை பயக்கும் செயலை செய்ய வேண்டும். அது புகழைத் தருவதாக இருக்க வேண்டும் என இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.  

ஒருவர் தான் பெற்ற தாய் பசியோடு இருப்பதைக் கண்டாலும், அறிவுடையோர் பழிக்கக் கூடிய தூய்மையற்ற செயல்களைச் செய்யக் கூடாது.

8. வினைத் திட்பம்:

வினைத் திட்பம் அதிகாரம் ஒரு திட்டத்தை முழுமையாகச் செய்து முடிக்க மன உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

ஒரு செயலை செய்யத் துவங்கும் முன்பாக இடையூறுகளை நீக்குதல், ஒரு வேளை தடைகள் ஏற்பட்டாலும் மனம் தளராது அதைச் செய்து முடித்தல் என்பதே சிறந்த கொள்கை வழி.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

9. வினைச் செயல் வகை:

ஒரு செயலைச் செய்ய முற்படும்போது, முயற்சியின் அளவு, இடையூறுகள், அதனால் வரும் பயன் இவற்றை நன்கு ஆராய்ந்து, பயன் பெரிதாயின் ஆச் செயலைச் செய்ய வேண்டும் என இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குறிப்புகளையும் கருத்தாக மனதில் பதிய வைப்போம். நமக்குக் கொடுக்கப் பட்ட பொறுப்புகளை செவ்வன செய்து முடிப்போம்.


படம். இணையத்திலிருந்து நன்றியுடன்..,

சனி, 26 நவம்பர், 2022

49. சூது விரும்பேல்.

கள்ளம் கபடின்றி வாழ்.


சூது என்றால் தீயது, வஞ்சனை எனப் பொருள்படும். பிறரின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய செயல் சூது. சூது என்பது சூதாட்டத்தையும் குறிக்கும் 

சூது விரும்பேல் என ஔவை குறிப்பிடுவது, சூழ்ச்சி எண்ணத்துடன் செயல்புரிய விரும்பாதே. 

பிறர் வாழ்வைச் சீர் குலைக்கும் சதி எண்ணங்கள் மனதில் எழுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

தகாத ஒன்றை விரும்புவது, அதை அடையத் தீர்மானிப்பது, அதற்காகத் தூர் ஆலோசனை செய்வது, திட்டம் தீட்டுவது, தீய வழியில் அதை அடைய முயல்வது இவை யாவும் சூது நிறைந்த மனதில் நிகழும் ஆசைகளின் (விருப்பங்கள்) விளைவுகள். 

இராவணன் சீதையை அடைய முயல்வது, துரியோதனன் நாட்டை அபகரிப்பது; சூதின் விளைவுகளைப் பற்றித் தான் இந்தியாவின் இரு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

தவறான விருப்பத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் அது ஆசைப்பட்டவரையே அழித்துவிடும். 

சுயநலன், காமம், பிறர் பொருள் மீது இச்சை, பெருமை, ஆணவம், அகங்காரம், பழி வாங்குதல் போன்ற தீய உணர்வுகள் மேலோங்கும் போது மனதில் சூது பிறக்கிறது. அது உட் புகுந்தவர் மனதை ஆட்டிப் படைக்கும். 

சூது மனதில் புகுந்தால்

1. பொய் பேசுவர் (அல்லது உண்மையை மறைப்பார்கள்).

2. ஏமாற்றுவது, நடிப்பது இயல்பான நடத்தையாக இருக்கும்.

3. மன சாட்சி செத்து விடும். (தர்மம், அதர்மம் எனப் பிரித்துப் பார்த்து செயல் புரியும் உணர்வு மழுங்கிவிடும். தீமை செய்கிறோம் எனும் குற்ற உணர்வு, பயம் இருக்காது.)

4. நல்லோர் நட்பு விலகிவிடும். தீயோர் உறவு உருவாகும்.

5. தான் செய்யும் தீயசெயல் குறித்த வெட்கம், கூச்சம், அவமானம் போன்ற உணர்வுகள் ஏற்படாது.

6. நல்லறிவு முற்றிலும் இயங்காது.

7.  மிகுந்த சினம், தீய சொற்கள் பேசுவது, தீய நடத்தை இயல்பான வாழ்க்கை முறையாக இருக்கும்.  

ஆகவே ஔவை அறிவுறுத்துகிறார் - சூது விரும்பேல். 

பிறன் மனைவியை (கணவரை), சொத்தை, நிலத்தை, உடைமைகளை, வெற்றியை, அதிகாரத்தை, ..,  சதி, சூழ்ச்சி செய்து எப்படியாவது குறுக்கு வழியில் அடைந்திட வேண்டும் என ஒரு போதும் விரும்பாதே.

 ''தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். எனினும் மீண்டும் தர்மம் வெல்லும்'' என்பது அறத்தின் வலிமையை உணர்த்திடும் அற்புத வைர வரிகள்.

உலக சரித்திரத்தின் பல பக்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பின்னப்பட்ட சதி வலைகளால் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கொடும் குற்றச் சம்பவங்களுக்குப் பின்பாகவும் ஒரு சூழ்ச்சி மறைந்துள்ளது. 

எனினும், என்னதான் சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், இறுதியில் சதி செய்து அடைந்தவை அழ அழ வைத்து வேடிக்கை காட்டும் எனக் குறள் கூறுகிறது.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்'' "சூதும் வாதும் வேதனை செய்யும்" என முதுமொழி பகிர்கிறது. 

கால ஓட்டத்தில் தான் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். வாழ்க்கை மாறி மாறி நிகழ்கிறது. எனினும் தர்மம் எனும் நியதி என்றும் மாறாதது. 

எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவராயினும், எந்த குலத்தில் பிறந்திருந்தாலும், எந்த மொழி பேசியவராயினும், எந்த நாட்டில் வசித்தவராயினும், எந்த சமய நம்பிக்கை பின்பற்றுபவராயினும் அறம் சார்ந்து வாழ்க்கை வாழ்ந்த மானுடமே கால வெளியைக் கடந்து நினைவு கூறப்படுகிறது. போற்றப்படுகிறது.

சூது என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அதன் உச்சக் கட்டத் தீமைகளை விளக்குகிறார்.

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் 
அடையாவாம் ஆயம் கொளின் 

ஒருவன் சூது களத்தில் செயல்பட்டால் புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும்.  (ஆயம் என்பது உருளாயம் - சூதாடும் களம்).

கள்ளம் கபடற்ற குழந்தைகள் போல மனம் உடையவரே இறைவனுடைய அரசில் இடம் பெறுவர் என்பது இறை வாக்கு.

மனதில் மாசில்லாமல் இருப்பதே அறம் என்கிறது குறள்.

அக எல்லா விருப்பங்களையும் இறைவனிடம் ஒப்புவித்துவிட்டு, '' என் விருப்பமல்ல, உன் விருப்பம் எனது வாழ்வில் நடக்கட்டும். எது நல்லதோ அதை உணர்த்தும். அதை மட்டும் செய்யத் தேவையான சக்தி தா'' என்று சொல்லி இறைவனிடம் சரணடைவது உத்தமம். அப்போது இவ்வுலகில் நாம் செய்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளைச் செம்மையாகச் செய்து நிறைவேற்றுவோம்.



படம். இணையத்திலிருந்து நன்றியுடன்..,

சனி, 19 நவம்பர், 2022

48. சுளிக்கச் சொல்லேல்.

கேட்பவர் முகம் மலர பேசுவோம்.



சுளிக்கச் சொல்லேல்: 

- மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைப் பேசக்கூடாது. 

- பிறர் மனம் நோகப் பேசாதே.

- கேட்பவருக்கு கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

- சிலரது பேச்சைக் கேட்கும் போது கோபம் வரும். சிலர் செய்யும் செயல்கள் வெறுப்பைத் தரும். அப்போது எழும் எரிச்சல் தரும் உணர்வால் நாம் முகத்தைச் சுளித்துக் கொள்வது உண்டு. அவ்வாறு பிறர் முகம் சுளிக்கும் விதமாக நாம் எந்தச் சொல்லையும் பேசக்கூடாது. அப்படிப் பட்ட செயலைச் செய்யவும் கூடாது.

வார்த்தைகள் மனதைக் கிழிக்கும்:

சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தைச்  செய்தித்தாளில் வாசித்தேன். அது மனதைக் கலங்க வைத்தது. தனது சகாக்களால் அவர்கள் அவமதிக்கப்பட்டார்கள். ஆடைகள் நீக்கப்பட்டது. திகிலூட்டும் கேலிக்குரிய செயல்களைச் செய்திட வற்புறுத்தப்பட்டனர். இது மிகக் கொடூரமானது. துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க, முகம் சுளிக்கச் செய்திடும் பல செய்திகளை அனுதினம் வாசிக்க நேரிடுகிறது. பார்க்கவும் நேரிடுகிறது. 

ஒருவரைக் கேலி செய்வது எளிது. வார்த்தைகளால் காயப்படுத்துவது எளிது. ஆழ்ந்த  சிந்தனை இல்லாமல் சமூக வலைத் தளங்களில் ஒரு கருத்தை இடுகையிடுவது மிகவும் எளிதானது. ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப சில வினாடிகள் மட்டுமே போதுமானது. ஆனால் அந்த செய்தியினால் பாதிக்கப்படுபவரது உள்ளத்தில் ஏற்படுத்தும் ஆறாத காயத்தை ஆற்றுப்படுத்துவது, அவரை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

வார்த்தைகள் கொல்லும். வார்த்தைகள் உருவாக்கவும் செய்யும். ஒருவரை உடல் ரீதியாக அடித்துக் காயப்படுத்துவது மட்டுமே தீங்கு விளைவிக்கக் கூடியவை என மட்டுப்படுத்தி விடக் கூடாது. அவற்றை விடக் கேலியாகப் பேசப்படும் சில வார்த்தைகள் ஒருவரது சுயமரியாதையை ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அவை மனதில் ஏற்படுத்தும் காயம் பல ஆண்டுகள் கூட நீடிக்கும். அவை நினைவில் எழும்பும் பொழுதெல்லாம் அவருக்கு அது தீராத வலியை ஏற்படுத்தும்.

வார்த்தைகள் அழிவதில்லை:

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல காயப்படுத்தும் வார்த்தைகள் சொன்ன பிறகு அல்லது மனதை நோகடிக்கும் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு அதை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது. அதைப் பெறுபவரின் எண்ணங்களிலும், மனதிலும், நினைவிலும் தொடர்ந்து ஆறாத ரணமாக அழியாமல் அந்த செய்தி நிலைத்து நிற்கும். ஆகவே அலட்சியமாகப் பேசக் கூடாது. உதாசீனப்படுத்திப் பேசவும் கூடாது. நகைச்சுவையாகக் கூட யாரையாவது பார்த்துக் கிண்டலான கருத்துக்களைச் சொல்வதற்கு முன்பாக நிறுத்தி நிதானமாக யோசித்துப் பேசுங்கள்.  

மன்னிப்பின் மாண்பு:

ஒருவேளை பிறர் மனதை வருத்தப்படுத்தும் வார்த்தைகளைப் பேசியிருந்தால், நம்மால் செய்யக்கூடிய சிறந்த விஷயம் அதற்காக மன்னிப்பு கேட்பது. அதற்குத் தைரியம் தேவை. மன்னிப்பைக் கேட்பதற்குக் கடினமாக இருக்கலாம். 

ஆனால் நாம் காயப்படுத்தியவர்களைச் சீர் செய்ய வேண்டியது நமது கடமை. அதுபோல மீண்டும் பேசாதபடி கவனமாக இருக்க வேண்டும். மேலும் அந்த மாதிரியான வார்த்தைகள் நம்மிடமிருந்து வெளிவராத அளவுக்கு மனம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்:

ஒருபோதும் பிறரைப் புண்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பேசாதீர்கள். ஒருவர் பாதுகாப்பற்றதாக அல்லது ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடிய சூழலை உருவாக்காதீர். 

எந்த சூழ்நிலையிலும் தீங்கு விளைவிக்கும் வார்த்தைகளைச் சொல்லவோ, அனுப்பவோ கூடாது. அது சரியானதல்ல.

ஒருவரைக் காயப்படுத்துவதற்கு எதிரானது என்ன? 
மகிழ்ச்சி அளிப்பது. 

விமர்சிப்பதற்கு எதிரானது என்ன? 
ஊக்கமளிப்பது. 

இது நம் வார்த்தைகளில் பிரதிபலிக்க வேண்டும். 

எதிர்மறையான வார்த்தைகளால் கிழித்தெறிபவராக இருப்பதற்குப் பதிலாக நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசுங்கள். ஒருவரது வாழ்க்கையை அழிப்பதற்கல்ல, கட்டப்படுவதற்கு உதவ வேண்டும். 

ஒருவருக்கொருவர் கருணை காட்ட வேண்டும். ஆசிர்வதிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாம் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தலாம். முன்மாதிரியாக இருங்கள். 

எதிர்வினைகளில் கவனம் செலுத்துங்கள்:

மற்றவர்களின் நடத்தைக்குப் பதிலாக உங்களிடமிருந்து வெளிப்படும் எதிர்வினைகளில் கவனம் செலுத்துங்கள். பிறரது எதிர்வினைகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய பதில்களைக்  கவனிக்கவும் (observe), மாற்றவும் (Change), மேம்படுத்தவும் (improve) கற்றுக் கொள்ள முடியும்.

எந்த உணர்வு கேலி பேசுவதற்குத் தூண்டுகிறது எனக் கவனியுங்கள். எந்த சூழல்களில் கிண்டலான நடத்தைகள் வெளிப்படுகிறது எனக் கவனியுங்கள். 

மக்கள் உங்களை மோசமாக நடத்தும்போது, ​​உங்களை அவமரியாதை செய்யும்போது அல்லது உங்களுக்கு எதிராக வசைபாடும்போது உங்கள் உடனடி எதிர்வினையைக் கவனியுங்கள்.

இத்தகைய சூழல்களில் பதில் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடுவதற்குப் பதிலாக, பின்வாங்கவும் (Withdraw), பிரதிபலிக்கவும் (Reflect), பகுப்பாய்வு (Analyzes) செய்யவும் மற்றும் சிந்தனை மிக்க அடுத்த படியை எடுப்பதற்கும் முயலவும்.

கடந்த காலத்தில் உங்கள் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைந்த தருணத்தில் உங்களைப் புண்படுத்தியவர்கள் எப்படி உங்களை நடத்தினார்கள் என்பதை நினைவு கூறுங்கள். அப்போது நீங்கள் அடைந்த வேதனை, அவமானம், துயரம் இவற்றை மறக்க வேண்டாம். இப்போது நீங்கள் பிறரை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். ஒரு போதும் பதிலுக்குப் பதில் செய்யாதீர்கள்.

விட்டுக்கொடுங்கள்:

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்வதற்குச் சிறப்பு அழைப்பு கிடைத்தது. எனது காரை நிறுத்த சென்ற போது ஒரு குறிப்பிட்ட பகுதியில்  நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. சற்று வெகு தொலைவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும் என கூறினார். உடனடியாக எழுந்த உணர்வு கோபம். நமது இயல்பான முதல் புரிதல் என்னவென்றால், காரை வெகு தூரத்திலிருந்த இடத்தில் நிறுத்தச் சொல்வது என்பது மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக உணர்வது தான். அப்படி ஒரு பெரிய காட்சியை சுயம் மனத்திரையில் உருவாக்குகிறது.

இப்போது என் எதிர்வினை சண்டையிடுவது, வாகன நிறுத்துமிட விதி முறைமைகளை அவருக்கு எதிராகச் சுட்டிக்காட்டுவது அல்லது மேலாளரிடம் புகார் சொல்வது. 

ஆனால் இவற்றுள் எந்த எதிர்வினையும் செய்யாது அந்த நபரைக் கவனித்தேன். அந்த நபர் ஒரு தன்னார்வ பேட்ஜ் அணிந்திருந்ததைப் பார்த்தேன். அவரது முகத்தில் பெருமிதத்துடன் அதிக ஈடுபாட்டுடன் செயல் புரிவதையும் பார்க்க முடிந்தது. எனது இயல்புநிலை எதிர்வினை நடத்தையைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதற்குப் பதிலாக நேர்மறையான புரிதலைத் தேர்ந்தெடுத்தேன். 

அவர் இந்த  வெற்றிகரமான நிகழ்வுக்கு தன்னால் இயன்றதைச் செய்கிறார். இந்த நபர் செய்வது தவறாக இருந்தாலும் சரி, அநியாயமாக இருந்தாலும் சரி, அவருடைய மன அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்து அவருக்கு இந்த நாளை இனிமையான நாளாக மாற்ற என்னால் உதவ முடியும். மற்றவர்களுக்குச் சேவை செய்ய தங்களால் இயன்றவரை முயற்சிக்கும் ஒருவருடன் வாதிடுவதை, வார்த்தைகளால் காயப்படுத்தாது என்னால் தவிர்க்க முடியும். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் வாகனத்தை நிறுத்தினேன். அவர் மிக மகிழ்வுடன் தனது பணியைத் தொடர்ந்தார். இந்த எதிர்வினை இப்போது நினைத்தாலும் மகிழ்வைத் தருகிறது.

அன்பின் ஒளியைப் பரப்புங்கள்:

நாம் மற்றவர்களை எப்படி நடத்துவது என்பது நமது கையில் உள்ளது. அது சவாலான மனிதர்களாக இருக்கலாம். அல்லது கசப்பான இருள் சூழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவராக இருக்கலாம்.  நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு நம் வசம் உள்ளது என்பதை மறக்கக்கூடாது.

கொடுமை, துஷ்பிரயோகம், மோசமான நடத்தை போன்ற இருள் சூழ்ந்த நிலையில், பெற்றவர்களது கவனக்குறைவோடு வளரும் குழந்தைகளுக்குப் பிறருக்குத் தீங்கு விளைவிப்பது மற்றும் எதிர்மறையான பழக்கங்களைப் பின் பற்றுவது இயல்பாக இருக்கும். பொதுவாக இவர்களுக்கு  மற்றவர்களைத் துன்புறுத்துவது அல்லது மோசமாகப் பழிவாங்குவதைக் குறித்த குற்றவுணர்வு  இருக்காது. 

இவர்களையும் இருளிலிருந்து வெளியே கொண்டு வர முடியும். அன்பைத் தேர்ந்தெடுத்து, இரக்கம் மற்றும் புரிதலின் ஒளியைப் பரப்புவதன் மூலம் ஓர் மாற்றத்தை உருவாக்க முடியும்.

உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் வலியைக் குணப்படுத்தும் கருவியாக நீங்கள் இருக்க முடியும். நீங்கள் புண்படுத்தப்பட்ட பிறகும் மன்னிப்பு, புரிதல், அன்பு மற்றும் இரக்கம் சாத்தியம் என்பதை உங்களைக் காயப்படுத்தியவர்களுக்கும் காண்பிக்க முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மகிழ்ச்சி நிறைந்த, நம்பிக்கை அளிக்கும் இடமாக மாற்ற முடியும்.

விட்டு விலகுங்கள்:

எனினும் சில மனிதர்கள் இயல்பிலேயே மிக மிகக் கொடுமையானவர்கள். நியாயமற்ற முறையில் செயல் புரிபவர்கள். அதீத எதிர்மறை இயல்பு கொண்டவர்கள். பிறரைக் காயப்படுத்தி அதில் இன்பம் அடைபவர்கள். கடும் சுயநலவாதிகள். இத்தகைய நபர்களை விட்டு விலகி வாழுங்கள். இவர்கள் உங்களது மன அமைதியைச் சீர் குலைத்து விடுவார்கள்.  இவர்களது சகவாசம் உடலில் தீராத நோயை உருவாக்கிவிடும்.


சனி, 12 நவம்பர், 2022

47. சீர்மை மறவேல்.

 நல்ல குணங்களைக் காத்துக் கொள்.


Good Character is not formed in a week or a month. It is created by little, a day by day. Protracted and patient effort is needed to develop good character. - Heraclitus of Ephesus.

நல்ல குணம் ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் உருவாகுவது இல்லை. இது சிறிது சிறிதாக, நாளுக்கு நாள் வளர்க்கப்படுகிறது. நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ள நீண்ட மற்றும் பொறுமையான முயற்சி தேவை.

சீர்மை - வார்த்தை விளக்கம்:

சீர்மை எனும் வார்த்தைக்கு, ஒழுங்கமைப்பு (In order), சிறப்பு (excellence), புகழ் (reputation), நன்னடத்தை (Good behavior) எனப் பல அர்த்தங்கள் உள்ளது. 

''சீர்மை மறவேல்'' என்பதற்குப் புகழுக்குக் காரணமான சிறப்பைத் தரும் நல்ல குணங்களை மறந்து விடாதே எனப் பொருள் கொள்ளலாம்.

சீர் என்பதற்கு தராசு எனும் அர்த்தமும் உண்டு. சீர்மை என்றால் தராசுமுள் போன்ற நடுவுநிலைமை.  ஆக ''சீர்மை மறவேல்'' என்பதற்கு ''நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதற்கு மறந்து விடக்கூடாது'' என்பது மற்றுமொரு விளக்கம். 

நற்குணங்களை எளிதாக உருவாக்கிட முடியாது. அதை அமைதியாக அடைந்து விடவும் இயலாது. 

மனதில் உயர்ந்த இலட்சியம், சிறந்த குறிக்கோள் இவற்றை அடைய விட்டுக் கொடுக்காமல் போராடும் போது பல துயர சம்பவங்களை எதிர் கொள்ள நேரிடும். அந்த வேதனை அளிக்கும் சூழல் வலிகள் மிகுந்த அனுபவத்தைத் தரும். பெற்ற, கற்ற அனுபவங்கள் மனதை வலிமையாக்குகிறது. அந்த வலிமை பெற்ற மனதிலிருந்து நல்ல குணங்கள் பிறக்கின்றன.

ஒருவர் இயல்பான நிலையில் செய்யும் செயல்கள் வழியாக அவரது உண்மையான குணத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.  

நல்ல பண்புகள் உடையவர்கள் பணம், அதிகாரம் இவற்றால் மயங்கிச் சூழலுக்குத் தக்கவாறு மாற மாட்டார்கள். இழிவான ஆதாயத்திற்காகத் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள். 

திறமைகள் மூலமாக உயர்ந்த இடத்தை அடைய முடியும். ஆனால் அந்த உயர்ந்த நிலையைத் தக்க வைக்க நல்ல குணம் அவசியம். 

குறளிருந்து சில கடைப் பிடிக்க வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் விட்டு விலக வேண்டிய தீய குணங்களை அறிந்து கொள்வோம்.

இறையச்சம்:

சிறு வயதில் அப்பாவிற்குப் பயப்படுவோம். அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம். அது தண்டனைக்கு அஞ்சுவதால் ஏற்படுவது. 

ஆனால் நாம் முதிர்ச்சி பெறும் போது தந்தையின் வார்த்தையை மிகக் கவனமாக மதித்துக் கேட்டு நடப்போம். நம்மீது அவருக்கு உள்ள உண்மையான அக்கறையை நாம் உணர்ந்து கொண்டதால் அந்த மாற்றம் நிகழ்கிறது.

அது போல, இறையச்சத்தால் நல்ல செயல்களைச் செய்கிறோம். கடவுளுக்குப் பயப்படுவதே நல்ல குணங்கள் நம்மில் உருவாகத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. நற் பண்புகள் நமக்குள் உருவாகின்றது. 

அவை நம் வாழ்வில் தரும் உயர்வு, மன நிறைவு, ஞானம், மேன்மை இவற்றால் இறைவனுக்கு நம் மீது உள்ள அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஆக நற்பண்பு மிக்கவர் இறைவனுக்கு அஞ்சி அல்ல, அவரது பெருமையை, மேன்மையை உணர்ந்து இறை வார்த்தைக்குக் கீழ்ப் படிந்து நடக்கின்றனர். 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் அவை பயனற்றவையாகும். 

அது போல எட்டுக் குணங்களை உடைய ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்கி நடக்காதவனின் தலையும் (அறிவும்) பயனற்றதாகும். 

அறம் செய்:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

நன்மை எது, தீமை எது என்பதை ஆராய்ந்து உணர்ந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொள்பவர்களே பெருமைக்குரியவர்கள்.

மனதில் தூய்மை:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அதுவே. மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை.

பழி பாவத்திற்குப் பயப்படு:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 

பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து அனைவருடன் அதைப் பகிர்ந்து செலவு செய்யும்  பண்புடையவர் வாழ்க்கை களங்கமற்றது (குறைவற்றது). 

கடமையை செய்:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் இருக்கச் செய்தலேயாகும்.

வீரத்துடன் செயல்புரி:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது எனும் உண்மை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள். 

விருந்தினரை உபசரி:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.  

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு உபசரிக்கின்றவருடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.

பயனுடைய சொற்களைப் பேசு:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

நல்ல பண்பு உடையவர் பயனில்லாத சொற்களைப் பேசுவாரெனில், அவருடைய மேன்மை அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

நன்றி மறவாது இரு:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பை ஏழேல் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

நடுநிலை தவறாதே:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

தன்னைச் சமமாகச் செய்து கொண்டு, பின்பு பொருளைச்‌ சீர்‌ தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல்‌ அமைந்து, ஒரு பக்கமாகச்‌ சாயாமல்‌ நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்‌.

அடக்கத்துடன் இரு:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின் 

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப ஒருவர் நல்வழியில் அடக்கமாக வாழ்ந்தால், அவரது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவருக்குப் பெருமையைக் கொடுக்கும். 

ஒழுக்கம் உயிரினும் பெரிது:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 

ஒழுக்கமே எப்போதும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பிறன் மனைவியை விரும்பாதே:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை விரும்பிச் செல்பவனிடமிருந்து நீங்காது.

தீமையைப் பொறுத்துக் கொள்:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்றைய ஒரு நாள் மட்டுமே இன்பம். அந்த தீமையைப் பொறுத்தவருக்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

பொறாமைப் படாதே:

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

ஒருவர் எவரிடமும் பொறாமை கொள்ளாத  பெருந்தன்மை பெற்றால், அவருக்கு அதைவிடச் சிறந்த சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.

பிறர் பொருளை விரும்பாதே:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பிறர் பொருளை விரும்பி அதனைக் கவர்ந்து கொண்டு ஒருவன் வளம் பெற விரும்பினால் அது நலம் தருவதாக இருக்காது. அதனால் பிறர் பொருளை விரும்பக் கூடாது.

முதுகுக்குப் பின் இகழ்ந்து பேசாதே:

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சிணியம் இல்லாமல் நேரில் கடுமையாகப் பேசினாலும் பேசலாம். அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் பேசக் கூடாது.

தீங்கு தரும் செயலை மறந்தும் நினைக்காதே:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் தீமையே விளையும். ஆகவே தீயச் செயல்களை நெருப்பைக் காட்டிலும் கொடுமையானவை எனப் பயந்து அவற்றை விட்டு விலகி வாழ வேண்டும்.

பகிர்ந்து கொடு:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

இரக்கம். (அருள்):

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

அருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகும். அதைத் தவிர்த்த பொருளால் வாங்கப்படும் செல்வங்கள் இழிந்த மனிதரிடமும் உள்ளன.

புலால் மறுத்தல்:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்

இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே. ஒரு உயிரைக் கொலை செய்தல் இரக்கம் இல்லாத தன்மை. அதன் இறைச்சியைத் தின்பது அறம் இல்லாதது.

தவம் - தியானம் - இறை வேண்டல்:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருப்பது ஆகிய இவையே தவம் என்பதன் இலக்கணம். 

ஏமாற்றக் கூடாது:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட கொடியவர் எவரும் இல்லை.

திருடாதே:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.  

திருடுவதால் சேர்க்கப்படும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி, முன் உள்ளதையும் சேர்த்து ஒன்றுமில்லாமல் அழித்துவிடும்.

உண்மை பேசு:

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 

பொய் சொல்லாமல் ஒருவர் உண்மையைப் பேசி நன்மையையே செய்து வாழ்ந்தால் அவர் வேறு  அறங்களைச் செய்யத் தேவை இல்லை.

சினம் அழிவு - கோபப் படாதே:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவர் துன்பம் நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தை அடக்கி ஆள வேண்டும் இல்லையேல் அக்கோபம், அவனையே அழித்துவிடும்.

மன்னிப்பு:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். 

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே ஆகும்.

துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

எங்கும், எப்போதும் துயரத்தைத் தரும் தீயச் செயல்களை மனம் அறிந்து சிறிதளவும் செய்யக்கூடாது. அதுவே சிறந்த அறம்.

கொலை செய்யாதே:

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 

அறங்களின் வரிசையில் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது ஒப்பற்றது. முதன்மையானது. அதற்கடுத்து பின் வருவது உண்மை பேசுவது.

மெய்ப் பொருள் விரும்பு:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாத மனம் உண்மையை விரும்பி தேடுவோர்க்கே உண்டாகும்‌. 


Character is not something that you buy; it is not a commodity that can be bartered for; it is not a quality suited for only the rich and famous; rather, character is built upon the foundational commitment of love, honesty, and compassion for others - Byron R. Pulsifer.

குணம் என்பது கடையில் வாங்கக் கூடிய ஓர் பொருள் இல்லை. ஒரு பொருளைக் கொடுத்து மாற்றாக இதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இது ஒரு பண்டமும் இல்லை.

பணக்காரர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் மட்டுமே இதைப் பெறக் கூடிய தகுதியும் தரமும் வாய்ந்தவர்கள் கிடையாது; 

மாறாக, பிறர் மீது நேர்மை, இரக்கம் மற்றும் அன்புடன் வாழ வேண்டும் எனும் அர்ப்பணிப்பு மிக்க  மனம் என்கிற அஸ்திவாரம் மீது குணங்கள் கட்டப்படுகின்றது - பைரன் ஆர். பல்சிஃபர்


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..,

சனி, 15 அக்டோபர், 2022

46. சித்திரம் பேசேல்

இனிமையான பொய்களைப் பேசாதே.

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலத் தோன்றும் வண்ணம் பேசாதே. 

சித்திரம் என்பது மனதில் உள் வாங்கிய ஒரு காட்சியை, கற்பனை எண்ணங்கள் கலந்து பார்ப்பவர் மனதைக் கவரும் விதத்தில் ஒரு அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்துவது. 

"சித்திரம் பேசேல்" என்பது அது போல ஒரு நிகழ்வோடு தன் கற்பனை எண்ணங்களைக் கூட்டி, கேட்பவர் கவரும் வகையில் உண்மை போலப் பேசுக் கூடாது எனக் கற்றுத் தருகிறது. உள்ளதை உள்ளபடியே பேச வேண்டும். கூட்டிக் குறைத்துப் பேசக்கூடாது.

துரதிர்ஷ்டவசமாக ஒருவருக்குப் பிடித்த விதமாக உண்மையைத் திரித்துப் பேசி, தனது தேவையைப் பூர்த்தி செய்து சாதித்துக் கொள்ளுவது, இன்றைக்குச் சாமர்த்தியம் என்று பாராட்டப் படுகிறது.

ஆசாரக்கோவை:

ஆசாரக்கோவை என்னும் நூல் "நல்லோர் எப்படிப் பேசுவார்கள், எப்படிப் பேச மாட்டார்கள்" என்கிற ஓர் பட்டியலைக் கொடுக்கிறது.

விரைந்துரையார் 
மேன்மேலுரையார் 
பொய்யாய பரந்துரையார் 
பாரித்துரையார் –
ஒருங்கெனைத்தும் சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால் 
சொல்லுக செவ்வியறிந்து.

பொருள்:

விரைவாகப் பேச மாட்டார்கள்.
சொன்னதையே திரும்பச் சொல்வதில்லை. 
பொய்யாகத் திரித்துப் பேசவும் மாட்டார்கள்.
மிகைப்படுத்திச் சொல்வதில்லை.

பொருள் முழுவதும் விளங்கும்படி சுருக்கமாகப் பேசுவார். காலத்திற்குப் பொருத்தமாக, எது தேவையோ அதை மட்டும் பேசுவார்.

ஏன் திரித்துப் பேசுகின்றனர்?

உண்மையைத் திரித்துப் பேசப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாகப் பணம், பதவி மற்றும் முதன்மையாக இருக்க வேண்டும் எனும் விருப்பங்கள்.

அதிகார ஆசை: தான் முதன்மையாக இருக்க விரும்பி உண்மையைத் திரித்துப் பேசுவது. 

பெருமை: முதன்மையான இடத்தை அடைந்து விட விரும்பி பிறரைத் தாழ்த்தி பேசுவது. 

பொருள் ஆதாயம்:  வசதியான வாழ்க்கை விரும்பி உண்மையை மாற்றிப் பொய் பேசுவது. மேல் அதிகாரிகளிடம் அவர்கள் விரும்பும் வகையில் மிகைப்படப் பேசி விரும்பும் காரியத்தைச் சாதித்துக் கொள்வது.

பொறாமை:  பிறர் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மையை மாற்றி அபாண்டமாகப் பழி பேசுவது.

ஆனால் பொய் வேஷம் கலைந்து உண்மை தெரிய வரும் போது அது பாதிக்கப்பட்டவர் மனதில்  ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உறவுகள் முறிந்து விடும். அந்த உறவுகள் திரும்பவும் முன்பு போல இணைவது கடினம்.

செய்ய வேண்டியவை: 

நமக்கு நன்கு உறுதிப்படத் தெரிந்த விசயங்களை மட்டும் பேச வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்பட அறியாத தகவல்களைப் பேசக் கூடாது. கவனமாகப் பார்த்துப் பேசுவது அமைதியை அளிக்கும். அதனால் பின்னர் அவசரப்பட்டுப் பேசி விட்டோமே என வருந்தத் தேவையில்லை. தேவையான பொழுது பேசுவது முதிர்ச்சி.

ஒரு செய்தியைப் பகிரும் முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வது அவசியம். ஒரு செய்தியை முதலில் பகிர வேண்டும் எனும் ஆசையில் அதை ஆராய்ந்து பார்க்காமல் பகிர்வது பல தவறான செய்திகள் பரவ ஏதுவாகிறது. பயனுள்ளது எனக் கருதினால் மட்டும் பகிர்வது நல்லது.

ஆதாயத்திற்காக ஒருவரைக் கவரும் வகையில் உண்மையைத் திரித்துப் பேசுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி அடையும் எதுவும் ஒருபோதும் மகிழ்ச்சியை தராது. கால ஓட்டத்தில் அப்படி அடைந்தவை தீராத துன்பத்தைத் தரும்.

எச்சரிக்கை தேவை:

செய்தி ஊடகங்களில் வரும் பல செய்திகள் அச்சிடப்பட்ட பொய்கள். அதை ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு செய்திக்கு பின்பும் ஒரு வியாபாரம் (Marketting - சந்தைப்படுத்துதல்) உள்ளது. காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும் இது பொருந்தும். 

கூடுமானவரை சமூக ஊடகங்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலிருந்து தள்ளி நிற்பது மனதிற்கு நன்மை தரும். மனதை நல் வழிப் படுத்தும், சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களை, கட்டுரைகள் வாசிப்பது சரியான வழியில் சுய சிந்தனையுடன் வாழ உதவும்.  

இன்றைக்கு ஆதாயம் இல்லாமல் பழகுபவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒருவர் உங்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேசும் காரியங்களில் கவனம் தேவை.

பிறர் குறித்து தவறான செய்திகளை ஒருபோதும் விரும்பி ஆவலுடன் கேட்காதீர்கள். அது ஒரு இழிச் செயல். ஒருவரை குறித்து அவர் இல்லாத போது குறை கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களைக் குறித்தும் வேறு இடத்தில் தவறாகப் பேசுவார்கள்.

இறை நூல்களிலிருந்து: 

தனக்கு வேண்டுபவை குறித்து அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் இந்தப் பாடலில் எழுதியுள்ளார்.

ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்.

மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு விதமாக இனிமையாகப் பேசும் கயவர்கள் உடன் ஒரு போதும் பழகக் கூடாது.

குறள் விளக்கம்: 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும். (விளக்கம்: மு.வரதராசனார் அவர்கள்). 

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது நம் மனமே நமக்கு வேதனை தரும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உலகத்தில் வாழும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடி இருப்பான். 

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். (விளக்கம்: சாலமன் பாப்பையா அவர்கள்)

பேசுவதைக் குறித்த மனுஸ்ம்ருதியில் எழுதப்பட்ட வரிகள் எனக்கு மிக பிடித்தமானது.

சத்யம் ப்ரூயாத் 

ப்ரியம் ப்ரூயாத் ந 

ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் 

(மனுஸ்ம்ருதி 4-138).

உண்மையைப் பேசு.

இனிமையாகப் பேசு.

கசப்பான உண்மையைச் சொல்லாதே.

கேட்பவர் விரும்பி கவனிக்க வேண்டும் என்பதற்காக இனிமையான பொய்களைப் பேசாதே.

 

படங்கள்: இணையத்தலிருந்து நன்றியுடன்..,

வெள்ளி, 7 அக்டோபர், 2022

45. சான்றோர் இனத்து இரு

அறிஞர்களின் குழுவிலே இரு.

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


45. சான்றோர் இனத்து இரு:

நற்குணங்கள் நிறைந்த பெரியோர்களுடன் இரு. 

பலவித நற்‌குணங்கள்‌ நிறைந்த வாழ்க்கை வாழ்பவர் சான்றோர். அந்த நற்குணங்கள் எதுவும் தம்மை விட்டு நீங்கி விடாமல், அறம் சார்ந்த ஒழுங்கு முறையுடன் தங்கள் மனதை அடக்கி காப்பவர்கள்.

ஒருவரது குணம் அவர் யாருடன் சேர்ந்து பழகுகிறார் என்பதைப் பொறுத்து அமையும். 

இன்றைக்குத் துரதிர்ஷ்டவசமாக, முகம் அறியாத நண்பர்கள் உடன் பழகும் போக்கு அதிகரித்து வருகிறது. உண்மை சுபாவம் தெரியாது பழகி வாழ்வை இழந்தவர்கள் அதிகம்.

ஒரு துளி விஷம் உணவில் கலந்தால் அது முழு உணவையும் பாழ் படுத்தி விடும். அது போலத் தீய மனிதர் சேர்க்கை முழு வாழ்வையும் கறை படிந்ததாக்கி விடும். கூடா நட்பு கேடாய் முடியும். எனவே யாருடனும் சேர்ந்து இருக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.

வாழ்க்கைச் சூழல்கள் எப்பொழுதும் ஒரே விதமாக இனிமையாக இருப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாராத கஷ்டங்கள் புயல் போலத் தாக்கும். அதை எதிர்த்துக் கரை சேர சான்றோர் ஆதரவு தேவை. கடினமான காலத்தை எதிர்த்துப் போராடி அதைக் கடந்து வர அது உதவும்.

நல்லவர்களுடன் சேர்ந்து இரு. அவர்கள் சொற்படி நட. அப்பொழுது உனக்கும் சிறந்த வாழ்க்கை அமையும் என ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. 

நல்லவர்கள் இயல்பு மற்றும் பெருமைகள் குறித்து திருக்குறளில் உள்ள 'சான்றாண்மை' எனும் அதிகாரம்  விவரிக்கிறது. 

சான்றாண்மை என்பது 'சான்று+ஆண்மை'.

சான்று என்றால் நிறைந்து எனப் பொருள்படும். 

ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுகை செய்தல் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது பொருள். 

சான்றாண்மை என்பது நற்பண்புகள் நிறைந்த நிறைவானவர் மற்றும் முழு ஆளுமை உடையவர் எனலாம்.

சான்றோர் பற்றி குறள் விளக்கம்: 

சான்றோர் தன்மைகள் குறித்து திருக்குறளில் விவரித்து எழுதப் பட்டுள்ளது. 

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

அனைத்து நற்பண்புகளையும் கடனைப் போல ஏற்றுக் கொண்டு, அந்த கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவது போல நற்செயல்களை இயல்பாகச் செய்வது சான்றோர் குணம்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் 
எந்நலத் துள்ளதூஉம் அன்று.

கல்வி, செல்வம், பதவி போன்றவற்றால் ஒருவர் சான்றோர் ஆவதில்லை. பண்பு என்ற நிறை செல்வமே ஒருவரைச் சிறந்த மனிதராக உயர்த்துகிறது. 

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு 
ஐந்துசால் பூன்றிய தூண். 

அன்பு செய்தல், பழி பாவங்களுக்கு வெட்கப் படுதல், சேர்த்ததைப் பிறர்க்குப் பகிர்ந்தளித்தல், யாவற்றையும் ஆராய்ந்து அறிதல், உண்மை பேசுதல் எனும் ஐந்து பண்புகளும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு. 

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தவம். அடுத்தவரின் தீயச் செயல்களைப் பேசாதிருப்பது சான்றாண்மை

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை. 

திறமையாகப் பணி புரிபவர்கள் தம்முடன் வேலை செய்பவர்களிடம் பணிந்து பேசி, வேலை வாங்கி அதைத் திறம்பட முடிப்பர்; சான்றோர் தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி 
துலையல்லார் கண்ணும் கொளல். 

சான்றாண்மைக்கு வரையறை யாதெனில், தம்மை விடச் சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதே ஆகும்.  

இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு. 

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றாண்மையினால் பயன்தான் என்ன? 

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் ஒருவரிடம் இருந்தால், வறுமை அவருக்கு இழிவாக இருக்காது.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி யெனப்படு வார். 

சான்றோர் சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை போல ஆவார்கள். கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அவர்கள் குணம் எப்போதும் மாறாதது.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் 
தாங்காது மன்னோ பொறை
 
சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் இப்பேருலகம் தன் சுமையையும் தான் தாங்க மாட்டாதது ஆகிவிடும்.

நல்ல பண்புகள் உடையவரோடு நட்பு பாராட்ட ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. நற்பண்புகள் உடையவர் சொற்படி வாழ்வது சிறந்தது எனப்  போதிக்கிறது. காலத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது நமது கையில்.

சேரிடமறிந்து சேர்.


படம் இணையத்திலிருந்து நன்றியுடன்:

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

44. சக்கர நெறி நில்

தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடி 

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


சக்கர நெறி நில்: இந்த வரிகளில் ஔவையார், சக்கரத்தை அறத்திற்கு உருவகமாகக் குறிப்பிடுகிறார். 

சக்கரத்தின் மைய அச்சு ஆரங்களை இணைக்கிறது. ஒவ்வொரு ஆரமும் மையத்துடன் நன்கு பொருந்தி இருக்க வேண்டும். அப்போது தான் சக்கரம் சிறப்பாகச் சுழலும்.

அது போல மனதின் மையமாக அறம் இருக்க வேண்டும். வாழ்வின் அனைத்து செயல்பாடுகளையும் அறம் இணைக்க வேண்டும். அப்போது வாழ்க்கை சக்கரம் மிகச் சிறப்பாக இயங்கும். 

நீதியின் பாதை:

இந்த உலகில் நாம் பயணிக்க இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று மிக நெருக்கமான பாதை. மற்றொன்று விசாலமான வழி.

நெருக்கமான பாதையில் பயணிப்பது என்றால் என்ன?

அது நம் மனம் போன போக்கில் வாழாமல் அறம் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறை. நமது விருப்பங்களை விட வேத நூல்களில் உள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து நடப்பது முதன்மையானது. இதற்கு இறையருள் தேவை. 

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து மிகத் தெளிவாக, வேத நூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவைகளை அனுதினம் வாசிக்க வேண்டும். மனதில் பதிய வைக்க வேண்டும். இறை வேண்டுதல் செய்ய வேண்டும். அப்போது நம்மால் நீதியின் பாதையில் நடக்க இயலும்.

மனம் ஒரு நிலம்:

நல்ல மகசூல் பெற நிலம் நன்கு ஆழமாக உழப்பட வேண்டும். தேவையான உரம் இட வேண்டும். நல்ல தரமான விதைகள் விதைக்கப் பட வேண்டும். சரியான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். அந்த தோட்டம் பாதுகாக்கப் பட வேண்டும். 

வேத வார்த்தைகள் விதையைப் போன்றது. அதில் உயிர் இருக்கிறது. மனம் நிலத்தைப் போன்றது. மனதில் அறம் சார்ந்து கருத்துக்கள் பதியப் பட வேண்டும். மனம் நல்ல முறையில் பராமரிக்கப் பட வேண்டும். பாதுகாக்கப் பட வேண்டும். களைகள் முளைப்பதற்கு இடம் தரக் கூடாது.

அப்போது நற் பண்புகள் வாழ்வில் வெளிப்படும். நம்மைச் சுற்றி வாழ்பவர்க்கு நற்கனி தரும் மரம் போல இருப்போம். 

பொன் புடமிடப் பட வேண்டும்:

நீதியின் பாதையில் நடப்பது என்பது எளிதானதல்ல. பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டி வரும். அவமானம் சந்திக்க நேரிடும். தனிமைப் படுத்த படும் சூழல் உருவாகலாம். இவை அனைத்தும் நம்மைச் சுத்திகரிக்க நிகழ்பவை. அர்ப்பணிப்பு, விடா முயற்சியுடன் தொடர்ந்தால் சத்தியத்தின் பாதையில் நடப்பது சாத்தியமே.

பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல நமது கசடான பண்புகள் நீக்கி சுத்த தங்கம் போல மாற வாழ்வின் துயரங்கள் நமக்கு உதவுகிறது. 

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கையை  வாழ விரும்புவதில்லை. ஆதலால் இவ்வுலகில் அறம் சார்ந்து வாழ்பவர் எண்ணிக்கை எப்போதும் மிகச் சொற்பமாகவே இருக்கிறது. 

தங்கம், வைரம் போன்ற மதிப்பு மிக்கவை எளிதில் கிடைக்காது. அரிதாகக் கிடைப்பவையே இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாகக் கருதப் படுகின்றது. ஆகவே சொல்லவோ எழுதவோ தேவையில்லை.  அறம் சார்ந்து வாழ்பவர் எப்போதும் மதிப்பு மிக்கவர்களாக மிக மேன்மையுடன் இருக்கின்றனர்.


சில தொடர்புடைய மேற்கோள்கள்:

மனதில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம். - திருக்குறள்.

அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளை  துணிந்து செய்வோம். - ஆபிரகாம் லிங்கன்.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். - ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லாதீர். ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. - லியோ டால்ஸ்டாய்.

அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. - பிரான்சிஸ் பேகன்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. - மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. - ஜான் ரஸ்கின்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும். -பாஸ்கல்.

தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம். - பித்தாகோரஸ் .

கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவற்றினூடே  உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும். - எங்கல்.

உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் ஆன்மாவை தூய்மையாக  காத்துக் கொள்ளவும். -பெய்லி.


படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .

Quotes are taken from with thanks:  https://ta.wikiquote.org/s/2ic

சனி, 27 ஆகஸ்ட், 2022

43. கௌவை அகற்று

 பழிச்சொல் பேசி துன்பம் செய்யாதே.

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 

கௌவை என்பது ஊரார் வம்புப் பேசி பழித்து தூற்றிப் பேசுவதைக் குறிக்கும். 

பொதுவாக, இது இளம் காதலரது களவு ஒழுக்கம் பற்றி ஊர்மக்கள் கழ்ச்சியுடன் பேசுவதைக் குறிப்பதாகும்.

காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருக்கும் போது அவர்களது நாணம் அகன்று விடும்.  தங்களை மற்றவர்கள் பார்க்கிறார்களே எனும் கூச்ச உணர்வும் விலகிவிடும். தாங்கள் செய்வது பிறருக்குத் தெரியாது எனும் மன மயக்கத்திற்கு ஆளாவார்கள்.

அப்படி வெட்கம் துறந்தவர்களாக தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாது மதி மயங்கிச் செய்யும் செயல்களைப் பற்றி ஊரார் வம்பு பேசுவது கௌவை. 

உதாரணமாக "கௌவை" எனும் சொல் பயன்படுத்தப்பட்ட ஒரு சில திருக்குறள் பாடல்கள்:

குறள்:

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:

ஊரார் வம்பு பேசி தூற்றுவதால் தான் எங்கள் காதல் வளர்கிறது; இல்லையேல் இக் காதல் கொடி வளம் இழந்து வாடிப்போய் விடும்.

குறள்:

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

பொருள்:

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த இந்த காதல் நோய், ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும், அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

குறள்:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

பொருள்:

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.

குறள்:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

பொருள்:

நான் விரும்பியபடி ஊரார் எங்கள் காதலைப் பற்றி அவதூறாகப் பேசி தூற்றுகின்றனர். ஆதலால் இனி என் காதலரும் நான் விரும்பியவாறு என்னைத் திருமணம் செய்வார்.  

கௌவை அகற்று:

கௌவை அகற்று எனும் ஔவையார்  வரிகளை,  பழிச்சொல் பேசி துன்பம் செய்யாதே. அதை வாழ்விலிருந்து நீக்கிவிடு என்று புரிந்து கொள்ளலாம்.

பழிச்சொல் பேசப்படுகிற விதமாகக் காதல் வயப்பட்டு மதி மயங்கி துன்பப் படாதே என்பது எனக்கு மிக நெருக்கமாக உள்ளது.

எனினும் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.

வீண் வம்பு பேசாதே:

பொது வெளியில் ஒருவரது மதிப்பைக் களங்கப்படுத்தும் விதமாக ஒருபோதும் பேசக் கூடாது. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அனுமானித்துப் பேசுவதும் குற்றம்.  உண்மையை அறியாது அவசரப்பட்டுப் பேசுவது முடிவில் நமக்கே வெட்கத்தை ஏற்படுத்தும்

பலர் ஆர்வமுடன் கேட்பதால் தான் புறணி பேசும் வழக்கம் வளருகிறது.  

தாங்கள் தனிப்பட்ட வாழ்வில் அதே தவற்றைச்  செய்பவர்கள் தான் பெரும்பாலும் புறணி பேசுகிறார்கள். வீண் பேச்சுப் பேசுபவர்களின்  பேச்சை விருப்பமுடன் கேட்டால், நாம் இல்லாத போது நம்மைப் பற்றியும் அவர்கள் கட்டாயம் பழி பேசுவார்கள்.

ஒருவரில்லாத சமயம், அவரைப்பற்றிக் குறை சொல்லி பேச்சு வந்தால், உடனடியாக அவரில்லாத போது அவரைப்பற்றிப் பேசுவது முறையாகாது எனப் பேச்சைத் திசை மாற்றம் செய்வது நல்லது.

தொடர்பான சில சிந்தைகள்:

திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனைப் போல் மோசமானவன்.  அவதூறுகளைக் காது கொடுத்துக் கேட்பவனும் அப்படித்தான். (செஸ்டர் பீல்டு)

மற்றவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு நான் சிறிது கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவைகள் பொய்யாக இருந்தால் மற்றவர்களால் நான் சுலபமாக ஏமாற்றப்பட்டவனாக ஆகி விடுவேன். அவைகள் மெய்யாக இருந்தால் உபயோகமற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து என் வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும் (மான்டெஸ்கியூ).

அவதூறு, கடல்களையும், மலைகளையும்,
பாலைவனங்களையும் எளிதில் தாண்டிச் செல்லும் (கோல்டன்).

மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் அவதூறு பேசுவதற்காக வாயைத் திறந்தால், உடனே உன் காதை அடைத்துக் கொள் (குவாரல்ஸ்).

என்னைப்பற்றி தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக அவதூ
ற்றுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அது என்னை அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்தது. அத்துடன் அது என் செயல்களிலும் அதிக கவனமாய் இருக்கும்படி செய்துள்ளது (ஜான்ஸன்).


Picture Courtesy: 

Hudson Christie - The New York Times

https://www.google.com/amp/s/www.nytimes.com/2015/12/20/books/review/the-novels-evil-tongue.amp.html

புதன், 10 ஆகஸ்ட், 2022

42 கோதாட் டொழி

 கபட நாடகம் ஆடுவதை நிறுத்து. 

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 



'கோதாட்  டொழி ' என்கிறது ஔவையாரின் ஆத்திசூடி. 

இதன் வேர்ச்சொல் ' கோதல்'. அதன் பொருள் கேடு விளைவித்தல் அல்லது ஏமாற்றுதல்.

கோது என்பது "பிறரைத் துன்பப் படுத்தும் பேச்சு" என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். 

கோதாட் டொழி என்பதை "Cease to play a sinful play"- கபட நாடகம் ஆடுவதை நிறுத்து என்கிறது அகராதி. (A Dictionary of The Tamil And English Languages, Volume-1 By Johann Peter Rottler)

ஆக "தந்திரமாகப் பேசி பிறரை ஏமாற்றும் கபட ஆட்டத்தை ஆடாதே" என இதனைப் பொருள் கொள்ள முடியும். 

'கோதாட்டம்' என்பதை "பித்தலாட்டம்" எனவும் விளக்கக் கூடும். 

பித்தல் என்பது முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏமாற்றுவது. ஒன்றை  வேறொன்றாகக் காண்பித்து ஏமாற்றுவது பித்தலாட்டம். 

இச்சொல் பித்தலாடகம் என்பதின் திரிபாகும். பித்தலை + ஆடகம் = பித்தலாடகம். 

"ஆடகம்" என்பது "ஹாடகம்" எனும் சமஸ்கிருத மொழியின் திரிபு; இதன் பொருள் பொன் என்பதாகும். ஆகவே "பித்தலாடகம்" என்பதற்கு "பித்தளையைப் பொன் என ஏமாற்றுதல்" என்றாகி பிறகு அது, எல்லாவித ஏமாற்றுதலுக்கும் குறிப்பிடப்படும் ஓர் சொல்லாக மாறிப் போனது. 

"ஏமாற்றிவிட்டுப் போதல்" என்பதைச் சென்னையில் "கோதா கொடுத்தல்" எனக் கூறுவார்.

கோத்துவிடுதல், கோத்துவாங்குதல், கோத்தல் என்பவை இதன் தொடர்புடைய பிற சொற்கள். 

கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.


பின் குறிப்பு:

நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. 

1. ஔவியம் பேசேல்: ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.

2. கண்டொன்று சொல்லேல்: பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே).

3. ஞயம்பட உரை: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

4. வஞ்சகம் பேசேல்: உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே.

5. கோதாட்டு ஒழி: கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.

6. சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே.

7. சுளிக்கச் சொல்லேல்: கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

8. சையெனத் திரியேல்: பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே.

9. சொற்சோர்வு படேல்: பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.

10. தெய்வம் இகழேல்: இறைவனை இகழ்ந்து பேசாதே.

11. நொய்ய உரையேல்: அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.

12. பழிப்பன பகரேல்: பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களைப் பேசாதே.

13. பிழைபடச் சொல்லேல்: குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

14. மிகைபடச் சொல்லேல்: சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்த்தைகளால் மிகைப் படுத்திப் பேசாதே.

15. மேன்மக்கள் சொற்கேள்: நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.

16. மொழிவது அறமொழி: சொல்லுவதைச் சந்தேகமின்றி தெளிவாகத் திருத்தமுடன் பேசு.

17. வல்லமை பேசேல்: உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பெருமையாகப் பேசாதே.

18. வாதுமுற் கூறேல்: பெரியோர்கள் முன்பாக முரண் பட்டு வாதிடாதே.

19. வெட்டெனப் பேசேல்: யாருடனும் கத்தி வெட்டு போலக் கடினமாகப் பேசாதே.

20. ஓரஞ் சொல்லேல்: ஒரு சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

இவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பேசும் போது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கவனமாகப் பேசுவது மிகவும் நல்லது.