திங்கள், 12 மார்ச், 2018

அரவம் ஆட்டேல்.

🌸 அரவம் ஆட்டேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வர்க்கம்.)


25. அரவம் ஆட்டேல் : "பாம்புடன் விளையாடாதே".


அரவம் என்றால் பாம்பு என்று பொருள்.

தீயமனிதருடன் உறவு கலந்து நெருக்கமாகப் பழகாதே என்பது இதன் பொருள்.

தனது சுயபெருமை, இன்பம், அதிகாரம், இச்சை இவற்றைச் சுகிக்க பிறர்க்கு எத்தகைய தீங்கையும் இழைக்கத் தயங்காதவர்களே தீயவர் ஆவார்.

இந்தச் சுயநலவாதிகள் தங்களது அநீதியான நடவடிக்கைகள் மூலமாகப் பிறரது வாழ்வில் தீராத வேதனையை ஏற்படுத்தத் தயங்கமாட்டார்கள்.

பிறரது மனக் காயங்கள்,  துன்பம், வலி, வேதனை இவர்கட்கு ஒரு பொருட்டே அல்ல.

இத்தகைய தீய சுபாவம் உடைய மனிதரைக் கண்டால் பாம்பைக் கண்டு பதறி விலகுவதுபோல் விலகி ஓட வேண்டும்.

வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றங்களே மனிதர்களை அடையாளம் காண கற்றுக் கொடுக்கும்.

ஏமாற்றங்கள், துரோகங்கள் மனதில் ஆழமான வெறுப்பை, தீராத வலியை, எரிச்சலை, கோபத்தை பொங்கச் செய்யும்.

எனினும்  இது மனதுக்கும், உடலுக்கும் நல்லதல்ல.

மன்னிப்பதே சிறந்த அறம்.

"தீமை செய்பவருக்கும் நன்மை செய்யுங்கள்" என்பது மிக ஆழமான சத்தியம்.

தீமைக்கு நன்மை செய்ய வேண்டும் எனும் சிந்தனையை நம்பி ஏற்றுச் செயல்படும்போது மனதில் ஆழமாக ஊடுருவி குத்தப்பட்ட காயங்கள் ஆறத் துவங்குகிறது.

மன்னிக்கும் பண்பு மன வலிமையை, ஞானத்தை, அமைதியை அளிக்கிறது.

தீங்கு இழைத்தவரை மன்னித்து மறந்து விடுங்கள்; ஆனால் அவர் கற்றுக் கொடுத்தப் பாடத்தை ஒரு போதும் மறக்காது நினைவில் நிலை நிறுத்துங்கள்.

பாம்புகளுடன் தோழமை கொள்ளாதீர்.