சனி, 30 டிசம்பர், 2017

தந்தை தாய்ப் பேண்.

🌸 தந்தை தாய்ப் பேண்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)

20. தந்தை தாய்ப் பேண்.

உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றி காப்பாற்று .

இந்த உடல், உயிர் அனைத்தும் வெளிப்பட பெற்றோர் தான்  மூலாதாரம்.

நாம் இந்த உலகில் அவர்கள் வழியாகவே தோன்றினோம்.

உயிரைப் போன்றே, அவர்களையும் நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாது.

நம் வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களும் அங்கிருந்தே துவங்குகின்றன.

ஒவ்வொரு சமயமும் தாய், தந்தையை தெய்வத்துக்கு இணையாகவே போற்றுகின்றன.

மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசை பெற்றோரின் மகத்துவத்தை விளக்கும்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், அம்மையே அப்பா ஒப்பிலா மணியே போன்ற சிறப்பான சொற்றோடர்கள் பெற்றோரின் பெருமையை பேசுபவை.


"உன் வாழ்நாள் நீடித்திருக்கும்படி,  உன் தாயையும், தகப்பனையும் கண்ணியத்துடன், மதிப்புடனும் நடத்து" என்பது யூதர்கள் சமயத்தில் கடவுளிடமிருந்து பெற்ற பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை.

இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய நிலையில் ஏழு வார்த்தைகள் பேசினார். அவற்றுள் ஒரு வார்த்தை தனது தாயின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக தனது சீடனிடம் பேசியதாகும்.

சிலுவையில் தொங்கி உயிர் பிரியும் வேதனையான அந்த கொடுரமான கோரச் சூழலிலும், இயேசு தனது தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்து கருத்தாய் இருந்தார்.

இஸ்ஸாத்தில் இறைவன் தமக்கு அடுத்த அந்தஸ்தில் பெற்றோரை நிறுத்தி, அவர்களுக்கு உபகாரம் செய்வதை, பணிவிடை செய்வதை, பணிந்து நடப்பதைக் கடமையாக ஆக்கியுள்ளார்.

இது குறித்து திருக்குரான் இவ்விதம் சொல்கிறது :

‘‘என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக.

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக’’ (திருக்குர்ஆன் 17: 23,24)

முகமது நபி அவர்களிடம் இறையடியவர் ஒருவர் கேட்டார் :

‘செயலில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது?’ 

அதற்கு நபி அவர்கள்

‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ எனப் பதில் கூறினார்கள்.

‘அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன்.

‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ ன்றார்கள்.

இறைவனுக்கு அடுத்தபடியாக உலகில் பெற்றோருக்கு இணை வேறு எவரும் இல்லை. 

பெற்றோரை மதித்து நடப்பது, பேணிக் காப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் பொது நிகழ்வுகளுக்கு வரும்போது, நாம் நமது இடத்திலிருந்து எழுந்து, மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்பது, குடும்ப நிகழ்வுகளில் அவர்களை அவர்களுக்குரியத் தகுதியான ஆசனத்தில் அமரவைப்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் சுணக்கம் இன்றி செய்வது நமது கடமை.

ஒருபோதும் அவர்களிடம்  கோபமூட்டும் வகையில், எரிச்சலூட்டும் விதங்களில் சத்தத்தை உயர்த்திப் பேசுவது,  பரிகாசம் செய்வது கூடாது.

அவர்களின் பேச்சை புத்திக் கூர்மையுடன், செவி தாழ்த்தி, மன ஓர்மையுடன் கேட்கவேண்டும். பெற்றோர்களிடம் தேவையில்லாமல் அதிக கேள்வி கேட்கக் கூடாது.

அவர்களுடன் பேசும் போது பணிவுடன் பேச வேண்டும். பேசும்போது பேச்சை முறித்து, முதுகைத் திருப்பக்கூடாது. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.

பாவமான காரியங்களைத் தவிர்த்து மற்ற வி‌ஷயங்களில் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

இரு உலக நற்பேறுகள் கிடைத்திட ஈடில்லாத ஒரே வழி பெற்றோரை கண்ணியத்துடனும் மதிப்புடனும் நடத்துவது மட்டுமே.

பெற்றோரைப் பேணுவோம், நற்பேறுகளை பெறுவோம்.

4 கருத்துகள்:

  1. கண்ணுக்கு முதலில் தெரிந்த தெய்வங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொர்க்கம் எங்குள்ளது என்ற கேள்வி க்கு அண்ணலாரின் பதில் தாயின் காலடியில்

      நீக்கு
    2. சொர்க்கம் எங்குள்ளது என்ற கேள்வி க்கு அண்ணலாரின் பதில் தாயின் காலடியில்

      நீக்கு
    3. நன்றி ரவி.
      கருத்துரைக்கு நன்றி NB.

      நீக்கு