செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

முண்ட கோபநிஷத் - பகுதி 3

முண்ட கோபநிஷத் - பகுதி 3






🔸மையப் பொருள் :


இறைவன் நம் இதயத்தில் வீற்றிருக்கிறார். தோன்றுபவை அனைத்தும் வெறும் தோற்றமே. இப்படிப்பட்ட அறிவை அடைபவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்.

🔹 அறிமுகம் :


முண்டகோபநிஷத்தில் இஃது இரண்டாவது அத்தியாயம். இரண்டாம் அத்தியாயத்தில் இரு பகுதிகள் உள்ளன. இங்கு முதல் பகுதி விளக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பத்து வசனங்கள் உள்ளது. இதன் சாரமாக தொகுத்திருப்பது எனது புரிதல் அடிப்படையில் மட்டுமே. 

வசனங்களைத் திரும்ப திரும்ப வாசிப்பதன் மூலம் மேலும் தெளிவான கருத்தை அறிந்து கொள்ளலாம்.


🌺 சாரம் :


அனைத்து உயிரினங்களின் மூல ஆதாரம் இறைவன். அவை அனைத்தும் அவரிலிருந்து பரிணமித்து அவருக்குள் சங்கமிக்கின்றன. 

இறைவனின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளது. அவரிலிருந்து தோன்றியவை சில பட்டியலிடப்பட்டுள்ளன. உயிரினத்தின் உணர்வு தன்மை, அறிவு இவற்றுள் மறைந்திருக்கும் தெய்வீகம் சொல்லப்படுகிறது. 

இந்த அந்தராத்மாவை உணர்வதும், தோற்றங்களின் மாயை அறிந்து கொள்ளும்போதும் ஒருவர் அறியாமையிலிருந்து விடுதலை அடைவதாகவும் அவரின் பேதைமை அழிவதாகவும் உரைக்கிறது.

🌺 முண்ட கோபநிஷத் அத்தியாயம் 2 / பகுதி 1. வசனங்கள் :


1. இது முற்றிலும் உண்மை. பிரியமானவனே! எவ்விதம் ஒளிர்கின்ற நெருப்பினிடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபமுடைய நெருப்புப் பொறிகள் தோன்றுகின்றனவோ, அவ்விதம் அழியாதவனிடமிருந்து பலவித உயிரினங்கள் தோன்றுகின்றன. அதனிடத்திலேயே ஒடுங்குகின்றன.

2. அந்தப் புருஷர் சுயமாகப் பிரகாசிப்பது. 
உருவமற்றது. 
உள்ளும் புறம்பும் உள்ளது. 
பிறப்பற்றது. 
பிராணனற்றது. 
மனமற்றது. 
தூய்மையானது. 
மேலான மாயையைக் காட்டிலும் மேலானது.

3. இதனிடமிருந்து உயிர், மனம், அனைத்து இந்திரியங்கள் (கண், செவி, வாய், நாசி, உடல் மூலம் அறியப்படும் உணர்வுகள்), ஆகாசம், காற்று, நெருப்பு, நீர் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பூமி ஆகியவை தோன்றுகின்றன.

4. இதுவே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. 

இதன்
தலை = ஒளி
கண்கள் = சூரியன், சந்திரன்
செவிகள் = திசைகள்
வாக்கு = பிரசித்தமான வேதங்கள்
ப்ராணன் = காற்று
மனம் = உலகம்
கால்கள் = பூமி.

(இறைவன் அனைத்திலும்  நீக்கமற நிறைந்துள்ளவர் எனும் மையக் கருத்தை விளக்குவதற்காக முக்கியப் படைப்புகளை இறைவனின் உடலில் அமைந்த உறுப்புகளாக அமைத்து அவரது வியாபித்திருத்தல் இதன் வழியாக விளக்கப்பட்டுள்ளது.).

5. ஒளியினிடத்திருந்து சூரியன் தோன்றியது. நிலவிலிருந்து மேகங்கள் தோன்றின. பூமியில் தாவரங்கள் தோன்றின. ஆண் பெண்ணிற்குள் வீரியத்தைக் கொடுக்கிறான். இவ்விதம் பல உயிரினங்கள் தோன்றின.

6. அதனிடமிருந்து ரிக் வேதம், யஜும்ஷி வேதம், ஸாம வேதம், நெறிமுறைகள், அனைத்து யாகங்கள், பலி செலுத்துதல், காணிக்கைகள், வருடம், தலைவன், எந்த லோகத்தை நிலவு தூய்மைப்படுத்துகிறதோ, எந்த லோகத்தைச் சூரியன் தூய்மைப்படுத்துகிறதோ அந்த லோகங்கள் தோன்றின.

7. அதனிடமிருந்து  பலவித தேவர்கள் அசுரர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ப்ராணன், அபானன், நெல், பார்லி, தவம், நம்பிக்கை, வாய்மை, ஒழுக்கம், யாகங்களைச் செய்யும் முறை ஆகியவை தோன்றின.

8. அதனிடமிருந்து ஏழு இந்திரியங்கள், ஏழு அறியும் சக்திகள், அறியும் பொருள்கள், ஏழு விதமான அறிவுகள், எந்த இடங்களில் இருந்து கொண்டு இந்திரியங்கள் செயல்படுகின்றனவோ அந்த ஏழு இந்திரியங்களுக்கான இடங்கள் தோன்றின. இருதயத்தில் ஒடுங்குகின்ற இந்திரியங்கள் ஏழெழுவிதமாக ஒவ்வொரு உயிரிலும் வைக்கப்பட்டுள்ளன.

(இங்கு ஏழு இந்திரியங்கள் எனக் குறிப்பிடப்படுவது நம் முகத்தில் அமைந்துள்ள துவாரங்கள்.  கண்கள் இரண்டு. செவிகள் இரண்டு. நாசியில் இரண்டு. வாய். ஏழு துவாரங்களில் அமைந்துள்ள அறியக்கூடிய சக்தி, அவற்றால் அறியப்படும் பொருள், போன்றவை அதிலிருந்தே தோன்றின.)

9. அதனிடமிருந்து அனைத்துக் கடல்களும், மலைகளும் எல்லாவிதமான ஆறுகளும் தோன்றின. அதனிடமிருந்தே அனைத்துத் தாவரங்களும், அந்தத் தாவரத்தில் மறைந்திருக்கும் இந்த உடலையும், அந்தராத்மாவையும் போஷிக்கக்கூடிய சக்தியும் தோன்றின.

10. பிரியமானவனே செயல், தவம் இவற்றின் பலனாக உள்ள இந்த உலகம் இறைவனாக உள்ளது. யார் இந்த மேலான அழியாத ப்ரஹ்மனை இருதயத்தில் குடிகொண்டுள்ளதை அறிகிறானோ அவன் இங்கேயே அறியாமையின் முடிச்சை அழிக்கிறான்.
  
முண்ட கோபநிஷத் இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி நிறைவுற்றது.

துணை நின்ற நூல் :  உபநிஷத்துக்கள்  ஸ்வாமி குருபரானந்த எழுதியது.

சனி, 19 ஆகஸ்ட், 2017

🌺 வள்ளுவம் கற்றுத்தரும் வள வாழ்வு நெறி.




நாம் ஒவ்வொருவரும் மதிப்பையும், புகழையும் நிறைந்த வாழ்வை அடையவே விரும்புகிறோம்.

வாசித்த ஒரு சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. "ஒவ்வொரு மனிதரும் பொதுவெளியில் தனது பெயர் உச்சரிக்கப்படும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர் ".

மதிப்பு மற்றும் புகழ்ச்சி இவற்றை ஆசிப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முன்பாக எவை உண்மையான மதிப்பைத் தருபவை, எது நீடித்தப் புகழை அளிக்கும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

பொதுப்புத்தியில் ஆடம்பரமான வீடு, சொகுசான வாகனங்கள், விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள், நவீனமான கருவிகள் மற்றும் பொழுது போக்கும் சாதனங்கள் போன்றவற்றை வைத்திருப்பதே மதிப்பும், சமூகத்தில் செல்வாக்குடைய மனிதர்களது தொடர்புகளை புகழ்ச்சியாகவும் எண்ணுகின்றனர்.

பெரும்பான்மை மக்கள்  இவற்றை அடைவதே தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்து திரிகின்றனர்.

சிலர் தவறான வாழ்க்கை முறையைப் பின்பற்றி செல்வம் ஈட்டினும் மன அமைதியிழந்து போலி பகட்டுடன் வலம் வருகின்றனர்.

நமது அக்கறை எல்லாம் உண்மையில் நீடித்தப் புகழையும், நிலையான செல்வத்தையும், வற்றாத மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் தருவது எது?


வள்ளுவம் கற்றுத்தரும் ஒரு சில வழிமுறைகளை மட்டும் தொகுத்து பதிந்துள்ளேன்.


🔸அறம் ஒன்றே புகழையும், செல்வத்தையும் அளிக்கவல்லது. அறத்தைவிட மேலும் மேலும் உயர வழி எதுவும் இல்லை.

🔹அற வழிகளில் பெறும் இன்பம் மட்டுமே உண்மையான, தூய இன்பம். தீய வழிகளில் அடையும் பொருள் இன்பமோ, மற்றவையோ போலியான, புகழ் அளிக்காத இன்பமாகும்.

🔸மனத்தில் தீய எண்ணமில்லாதிருப்பதே அறம்.

🔹பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாத செயல்களே அறச்செயல்கள்.

🔸 இல்லற வாழ்க்கையின் இலட்சியங்கள் அன்பு என்ற பண்பும், அடுத்தவர்க்கு உதவும் அறமுமே ஆகும்.

🔹அறிவுடைய நல்ல மக்களைப் பெறுவதே, இல்வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வமாகும்.

🔸 அன்பே உயிர். ஒழுக்கம் உயிரினும் பெரிது.

🔹ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர வரவேற்று மனதார இனிய மொழிகள் பேசுவது அறம்.

🔸 ஒருவன் நன்கு தேர்ந்தெடுத்த பிறர்க்கு நன்மையளிக்கும் சொற்களை நயமாகச் சொன்னால் அவனது பாவம் விலகும். புண்ணியம் சேரும்.

🔹பகை, நட்பு பாராமல் நடுநிலையில் நின்று முடிவு சொல்வது என்பது சிறந்த அறமாகும்.

🔸அடக்கமாயிருத்தல் என்பது அறம். ஆமை தன் உறுப்புக்களை ஓட்டுக்குள் அடக்கித் தன்னைக் காத்துக்கொள்வதுபோல, ஒருவன் ஐம்பொறிகளை அடக்கினால் ஏழு தலைமுறைக்கு சிறப்பைச் சேர்ப்பான்.

🔹தீமையான, பயனற்ற சொற்களைப் பேசாதிருத்தல் அறமாகும்.

🔸பிறர் பொருள் இச்சியாது இருப்பது அறம்.

இவை போன்ற பண்புகளை கடைப்பிடிக்கும் போது அவை நமது குணங்களாக மாறுகின்றன.

இந்தக் குணங்கள் நம் சிந்தையை முழுமையாக ஆக்கிரமிக்கும்போது நமது வாழ்வு சீரும், சிறப்பும் நீடித்தப் புகழையும் அடைவது உறுதி.


🔴 திருக்குறள் வாக்கியங்கள் உரையாசிரியர் திரு. ஆர்.பி.சாரதி அவர்கள் மிக எளிய உரை நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

முண்ட கோபநிஷத் - பகுதி 2



🔶 இந்தப் பகுதி நூலின் மையக்கருத்து :


கர்மம் மற்றும் உபாசனை ஆகியவற்றின் பெருமை, சிறுமைகள் இந்தப் பகுதியில் பேசப்படுகிறது. 

இவ்விரு தன்மைகளது  உண்மையைப் புரிந்து, சாதகர் தனது ஆன்மீக வாழ்வின் எளியநிலைwயை உணர்ந்து,  இறைவனின் அருளோடு மனத்தாழ்மையாய் குருவிடம் சரணடைவதே பரம்பொருளினை அடைய உதவும் வழி என்பதே இந்தப் பகுதியில்  அழுத்தமாகப் போதிக்கப்படுகிறது.

🔶 கர்மம் - உபாசனை விளக்கம் :


🔷 கர்மம் என்பது வாக்காலும் உடலாலும் செய்யப்படுவது.
🔷 உபாசனை என்பது மனதால் செய்யப்படும் தியானம்.

இந்த நூலில் கர்மம் அதாவது கிரியைகள் மூலமாகவே மட்டும் இறைவனை அடையமுடியாது என்பதை வலியுறுத்தவே கர்மச் செயல்கள் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. கிரியைகள் மட்டுமே சார்வது சுய நீதியையும் கர்வத்தையும் உண்டு பண்ணும். மனக்கண்களைக் குருடாக்கிவிடும்.

ஞானம் என்பது அனைத்தும் உணர்வதல்ல, அதன்பின்பும் மனத்தாழ்மையுடன் பணிவுடன் இருப்பது.

🔶 கர்மம், உபாசனை    பெருமைகள் :

அதற்கான பலன் நிச்சயம்.
அதை அசட்டையாக, கவனக்குறைவுடன் செய்தால் விபரீதமான விளைவுகள் நேரிடும்.
அதைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்.


🔶 முண்டகோபநிஷத் அத்தியாயம் 1 / பகுதி 2 :


 1. இங்குச் சொல்லப்படுவது முற்றிலும் உண்மை. ரிஷிகள் எந்த யாகங்களை மந்தரங்களுக்குள் பார்த்தார்களோ, அவை மூன்று வேதங்களில் பலவிதமாக விரிந்து அமைந்துள்ளன. கர்மபலத்தில் விருப்பம் உடையவர்களே, அந்தக் கர்மங்களை முறையாக அனுஷ்டானம் செய்வீர்களாக. உங்களால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அடைவதற்கு உங்களுக்கு இதுவே மார்க்கமாக உள்ளது.

2. எப்பொழுது நன்கு தூண்டிவிடப்பட்ட நெருப்பில் சுடரானது மேல்நோக்கியுள்ளதோ, அப்பொழுது வடக்குப் பகுதிக்கும் தெற்குப்பகுதிக்கும் இடையில் யாகத்திற்கான பொருள்களை அர்ப்பணம் செய்யவேண்டும்.

3. எவருடைய அக்னிஹோத்ரமானது தர்சம் என்ற யாகம் அற்றதாகவும் பெளர்ணமாஸம் என்ற யாகம் அற்றதாகவும் ஆக்ரயணம் என்ற யாகம் அற்றதாகவும் விருந்தோம்பல் அற்றதாகவும் முறையான காலத்தில் செய்யப்படாததாகவும் வைச்வதேவம் என்ற யாகம் அற்றதாகவும் முறைப்படி செய்யப்படாதாகவும் அமைகிறதோ, அவருக்கு ஏழு உலகங்கள் வரை செல்ல உதவும் புண்யங்கள் அழிகின்றன.

(கர்மத்தை முறையாகச் செய்யவில்லை என்றால் வீபரீதபலன் ஏற்படுகிறது என்ற எச்சரிக்கை மூலம் கவனத்துடன் செய்தல் வேண்டும் என்கிற கருத்து வலியுறத்தப்படுகிறது. யாகங்களின் பெயர்களை அப்படியே தமிழ் படுத்தப்பட்டுள்ளது (Transliterated))

4. கருமையான சுடர், மிக உஷ்ணமான சுடர், மனதைப்போல் வேகமாக அசையும் சுடர், அடர்ந்த சிவப்புச் சுடர், புகையின் வர்ணத்தையுடைய சுடர், பளிச்சிடும் சுடர், பல வர்ணங்களுடன் கூடிய சுடர் என்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற நெருப்பிற்கு ஏழு நாக்குகள் உள்ளன.

(இஃது  ஓர் உருவகமாக ஆன்மா அல்லது பரம்பொருள் அல்லது பரம்பொருளை மறைக்கும் மாயை அல்லது பயணத்தின் பாதையின் தன்மையாக கூடச் சிந்திக்கலாம்)

5. யார் இந்த ஒளிர்கின்ற சுடர்களில், சரியான காலத்தில் யாகத்தைச் செய்கிறானோ, அவனை அழைத்துச் செல்கின்ற இந்தச் சுடர்கள், கதிரவனின் ஒளிக்கதிர்களாக மாறி,  தேவர்களின் தலைவன் ஆளுகின்ற அந்த இடத்திற்கு அ ழைத்துச் செல்கின்றன.

6. கதிரவனின் ஒளிக்கதிர்களாக உள்ள ஒளி பொருந்திய சுடர்கள் அவனை, உங்களுடைய நல்ல செயல்களுக்கான பலனானது இந்த ப்ரஹ்மலோகம் என்று பிரியமான வார்த்தைகளைக் கூறி அவனை வணங்கி அழைத்துச் செல்கின்றன.

7. கர்மகிரியைகள் அற்பமான பலனையே தரும். சாஸ்திரங்கள் கூறும் பதினெட்டு யஞத்திற்கான இந்த வழிமுறைகள் உறுதியற்ற படகுகள். எந்த மூடர்கள் இந்தச் கிரியைகள் தான் பரம்பொருளை அடையும் வழிமுறைகள் என நம்புகிறார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் வயோதிகத்தையும் மரணத்தையும் அடைகிறார்கள்.

8. இவர்கள் தங்களை ஞானிகள் எனக் கருதும் அறிவிலிகள். அறியாமையின் மையத்தில் மூழ்கி இருப்பவர்கள். குருடனாலேயே வழிநடத்தப்படுகின்ற குருடர்கள். வழி அறியாது துயரத்தால் தாக்கப்பட்டவர்களாய் அலைந்து திரிகிறார்கள்.

9. அறியாமையால் தங்கள் கற்பனையில் மூழ்கி, நுட்பமான அறிவை அடையாமல் நாங்கள் மெய்யறிவு அடைந்துள்ளோம் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள். தங்கள் சுய இச்சையால் மனக்குருடராகி பரம்பொருளின் மகிமையும் அறிவதில்லை. அவர்கள் அதினால் துயரப்பட்டவர்களாகி தங்களின் கர்மகிரியைகளின் பலத்தை இழந்தவர்களாகி வீழ்கிறார்கள்.

10. யாகத்தையும் ஸேவையையும் மேலானதாக நினைப்பவர் அறிவிலிகள். இவர்களால் சுவர்க்க சுக அனுபவங்களுக்கு மேலானதை அறியமாட்டார்கள். அவர்கள் தங்கள் கர்மகிரியை மூலமாக கிடைக்கும் புண்ணிய பலன்களை அனுபவித்து, திரும்பவும் இந்த உலகத்தை அல்லது கீழான உலகத்தை அடைகிறார்கள்.


( கருத்தில் பதியவேண்டியது : யாகம், சேவை, கிரியைகள் மூலமாக மட்டுமே நேரிடையாக பரம்பொருளை அடையமுடியும் என்ற கருத்தே நிராகரிக்கப்பட்டுள்ளது. தொழுகை, நற்கிரியை, சேவைகள் போன்றவை நம்மைப்  பண்படுத்த முற்றிலும் அவசியம் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரவேண்டும்.)


11. மனதைத் தியானத்தில் நிறுத்தி, கட்டுப்பாட்டை அடைந்தவர்களாகவும், யாசித்தலை மேற்கொண்டவர்களாகவும், வனத்தில் தவத்தையும், தியானத்தையும் கருத்தாய் கடைபிடிககிறார்களோ அவர்கள் தூய்மையானவர்கள். ஒளியின் வழியில் பயணப்பட்டு பரம்பொருள் தாபரிக்கும் புண்ணியத்தலம் அடைகிறார்கள்.

12. சத்துவ குணத்தை அடைந்த சாதகன், கர்மகிரியையாலும் தியானத்தாலும் தன்னுள் அடையப்பெற்ற மாற்றங்களை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்க்கிறான். அதனால் வைராக்கியம் அடைகிறான். செயலினால் உருவாகாத பரம்பொருளை செயல்கள் மூலம் அடையமுடியாது. தன் இயலாமை உணர்ந்தவனாகப்  பிச்சை எடுக்கும் ஓட்டைக் கையில் ஏந்தியது போன்று ஞானத்தை அடையும் பொருட்டு மரபு வழியில் வந்த, சர்வ வல்லமையும் மகிமையும் பொருந்திய இறைமையில் நிலைபெற்ற குருவை அடைவதுதான் வழி என உணர்கிறான்.

13. அந்த ஞானியானவர், முறையாக அணுகிய இந்திரிய ஒழுக்கத்தையுடைய, மனத்தூய்மையுடைய அவனுக்கு எந்த அறிவால் அழியாத, உண்மையான, ப்ரஹ்மனை குருவானவர் அறிவாரோ, அந்த ப்ரஹ்மனைப் பற்றி அறிவைத் தெளிவாக உபதேசிக்க வேண்டும்.


 ⚫ முதல் அத்தியாயம் / இரண்டாவது பிரிவு நிறைவுற்றது.


🔴 🔵 துணை நின்ற நூல் : ஸ்வாமி குருபரானந்தா அவர்கள் எழுதிய உபநிஷத்துக்கள்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

முண்ட கோபநிஷத் - பகுதி 1

முண்ட கோபநிஷத் - பகுதி 1


அறிமுகம் 

இன்று சுதந்திரதினம். பலரின் தியாகம், அர்ப்பணிப்பு இவற்றை நினைவுபடுத்தும் திருநாள். சுதந்திரத்திற்கு எதிர்ப்பதம் அடிமைத்தனம் அல்ல. பயம்.

எல்லாவிதமான அச்சத்திலிருந்தும் பரிபூரணமாக அடையும் விடுதலையே முக்தி.

அக விடுதலையே மெய்யான விடுதலை. உலக வாழ்வில் உண்மையாக விடுதலை அடைதல் என்பது எது?

1. தன்னுடைய உள்ளத்தில்  குடிகொண்டிருக்கும் தெய்வத்தன்மையுடைய ஆத்மாவிற்குத் தீங்கு நேரிடாமல் தூய்மையாக வைத்துப் பாதுகாப்பது.

2. சுகத்திற்கும், துக்கத்திற்கும் மேலாக ஆத்மாவை நிறுத்தி வைப்பது. இந்த இரு நிலைகளையும் வருத்தமின்றி முழுநிறைவுடன் ஏற்றுக்கொள்வது.

3. பயனில்லாச் சொல், கபடம், காமம், மோகம், பெருமை, பேராசை, சுயநலம், ஆணவம் இவற்றை நீக்குதல்.

4. சாந்த சித்தத்துடன் மரணத்தை எதிர்கொள்வது.

இதை அடைவதே ஞானம். இந்த ஞானத்தை அடையும் வழியை உபதேசிப்பது உபநிஷத்.

முண்ட கோபநிஷத்


இந்த உபநிஷத் அதர்வண வேதத்தில் அமைந்துள்ளது. முண்டகம் என்ற சொல்லிற்கு இரண்டு பொருள்கள் உள்ளன.

1. தலை (சீர்ஷம்)
2. முக்கியம் (ப்ரதானம்)

இந்நூலில் மூன்று அத்தியாயங்கள் அடங்கியது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தநூலை  ஆறு பகுதிகளாக பிரித்துக் கற்றுக் கொள்வது எளிது. ஆறு பகுதியை முடிக்கும்போது ஓர் உபநிஷத் நமக்கு அறிமுகமாகிவிடும். 

இதைக் கற்பது மனதைத் தூய்மையை நோக்கி நகர்த்துவதை உணரலாம். சில இடங்களை வாசிக்கும்போது அதன் பொருள் எளிதில் பிடிபடாது. சில விளக்கங்கள் தெளிவற்றதாக தோற்றமளிக்கும். திரும்பத் திரும்ப வாசிப்பதே புரிவதற்கு உதவும். உபநிஷத்தின் சாரத்தை மாத்திரமே இங்குப் பகிர்ந்துள்ளேன்.

அத்தியாயம் 1 / பகுதி 1


இந்தப் பகுதி ஞானத்தின் பெருமையை கூறித் துவங்குகிறது. எல்லாப் புத்திக்கும் ஞானமே ஆதாரம். ஞானத்தின் தன்மை, அது வாழ்வில் தரும் நிறைவு இதுவே இந்தப் பகுதியின் மையப் பொருள்.

சீடன் குருவிடம் கேட்கும் வினா 


"இறைவா, எதை அறிவதனால் இவை அனைத்தும் அறிந்தது ஆகும்? "


ஒன்றைப்  பற்றி புரிந்து கொள்வதன் மூலம் மற்ற அனைத்தும் எப்படிப் புரிந்ததாகும் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா?

ஒன்றைப் பற்றி அறிவால் மற்ற அனைத்தைப் பற்றிய ஞானமும் அடையவேண்டும் என்றால் அந்த ஒன்று மற்ற அனைத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக விதவிதமான உருவில் உள்ள பானைகளுக்கு களிமண் மூலகாரணமாகிறது. களிமண்ணைப் பற்றிய அறிவு மூலமாகப் பானைகளின் தன்மை அறியப்படுகிறது.

ஆகவே மூலகாரணத்தை அறிவதால், அதிலிருந்து தோன்றிய அனைத்துக் காரணங்களும் அறியப்படுகின்றன.

இரண்டுவிதமான அறிவு :

இவ் உபநிஷத் அறிவை இரண்டு நிலைகளாகப் பிரிக்கிறது.

முதலாவது அழிவற்ற பரம்பொருளை  அடையப்படுவது பற்றி அறிவது பரா வித்யா. இது காரண ஞானம், ப்ரஹ்ம ஞானம்.

இரண்டாவது அபரவித்யா. சர்வ வல்லமை உடையக் கடவுளை அடைய உதவும் சாதனங்கள். ரிக் வேதம், ஸாம வேதம், அதர்வண வேதம், உச்சாரண சாஸ்த்ரம், யாகவிதியைப்பற்றிய சாஸ்திரம், இலக்கணம், சொல்லின் தோற்றத்தை ஆராயும் சாஸ்திரம், ஜ்யோதிடம் என்பவை அபராா வித்யா. இவற்றைக் கற்பதன் மூலம் பரம்பொருள் உணரலாம்.

கடவுளின் தன்மை :

உபநிஷத் பரம்பொருளைப் இப்படியாக வர்ணிக்கிறது.


அந்த ப்ரஹ்மன் ஞானேந்திரியங்களால் (மனம்) பார்க்கப்படாதது. 


ஞானேந்திரியங்கள் ஐந்து :

சுவை

ஒளி 

ஊறு

ஓசை

நாற்றம் (வாசனை) 

கர்மந்திரியங்களால் (ஜம்புலண்களால்) அடைந்துவிட முடியாதது. 

கர்மேந்திரியங்கள்  ஐந்து

வாய்
கை
கால்
மலவாய்
கருவாய்

காரணமற்றது.

காரணங்கள் நான்கு

மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்.

குணமற்றது. 

குணங்கள் மூன்று

சத்வீகம்
ரஜஸ்
தாமஸ

கண்களும் செவிகளும் அற்றது. 
அது கைகளும் கால்களும் அற்றது. 
எப்போதும் உள்ளது. 
அனைத்துமாகத் தோற்றமளிப்பது. 
அனைத்தையும் வ்யாபிப்பது. 
மிகவும் ஸு௯ஷ்மமானது. 
அது அழிவற்றது. 
உலகத்தின் படைப்புகள் அனைத்துக்கும் மூலகாரணமானது. 

இப்படிப்பட்ட பரம்பொருளைத் தீரர்கள் எங்கும் காண்கின்றனர்.

உலகத் தோற்றம்.


எவ்விதம் சிலந்தி வலையை உற்பத்தி செய்கிறதோ, தனக்குள் மீண்டும் எடுத்தும் கொள்கிறதோ, எவ்விதம் மரங்கள் பூமியில் தோன்றுகின்றனவோ, எவ்விதம் உயிருடன் இருக்கிற மனிதரிடத்திலிருந்து தலையிலும், உடலிலும் முடிகள் தோன்றுகின்றனவோ, அவ்விதம் அழியாத  பரம்பொருளிலிருந்து இங்கு உலகம் தோன்றுகிறது.

ப்ரஹ்மன் அறிவால் ஸ்ருஷ்டிக்கும் ஆற்றலில் இருந்து படைக்கும் சக்தி உருவாகுகிறது. படைக்கும் சக்தியிலிருந்து கண்ணுக்குப் புலனாகாத (ஸு௯ஷம) ப்ரபஞ்சம் உருவாகிறது. அதிலிருந்து மனமும், காண்கிற உருவங்களும் (ஸ்தூல பூதங்கள்) , உலகங்ம்களும், செயல்களும் தோன்றுகின்றன. செயல்களிலிருந்து கர்ம பலன்கள் உதிக்கின்றன.

அத்தியாயம் 1 பகுதி 1 நிறைவுற்றது.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

உபநிஷத்துக்கள் - அறிமுகம்

 🌺 உபநிஷத்துக்கள் - அறிமுகம்



ஒரு நூலை வாசிக்கும் போது அதன் பொருளை சிறிதளவே மனம் உள் வாங்குகிறது.

கற்றுக்கொண்டதை மனதில் நிறுத்திப் பின் எழுதிப் பார்க்கும் போது பல வார்த்தைகளின் உள் அர்த்தத்தை மனம் புரிந்து கொள்கிறது.

கற்றதை மற்றவர்களுக்கு சொல்லித் தருவது, மற்றவர்களுடன் விவாதிப்பது அந்த நூலின் கருத்துக்களை பல கோணங்களில் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

அதன் அடிப்படையில் எனது கற்றலை மேம்படுத்தவும், எனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும் உபநிஷத்துக்களை வாசிக்கத் துணிந்தேன்.

மற்ற நூல்களைப் போல இந்த வாசிப்பு எளிதல்ல என்பது  நான் எதிர்பார்த்ததுதான்.

ஒரு நாளில் 3 அல்லது 4 பக்கங்கள் வாசிப்பதும் அதைப் புரிந்து கொள்வதுமே சாத்தியமாக உள்ளது.

முறையாகத் தொடர்ந்து உபநிஷத்தை வாசிக்கவும், கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வரும் காலத்தில் எனது சேமிப்பாகவும் இருக்கும் என இந்தப் பகிர்வுகளை பதிவிடுகிறேன்..


உபநிஷத் என்றால் என்ன?


குருவைத் தஞ்சமாக அடைந்து பெறப்பட்ட நிலைத்த ஞானத்தினால் எவர் ஒருவர் துயரத்தில் இருந்து விடுபடுகிறாரோ, அந்த ஞானம் உபநிஷத்.

அப்படிப்பட்ட ஞானத்தைக் கொடுக்கும் நூல் உபநிஷத்துக்கள்.

உப : குருவின் அருகில் செல்லுதல்.

நி : மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தை அடைதல்.

ஷத் : துயரத்தை நீக்குதல்.

உபநிஷத்தின் நோக்கம் :


உலகப் பொருட்கள் தரும் இன்பம் முழு நிறைவைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு இன்பத்துடன் துன்பம் கலந்தே உள்ளது. உலக இன்பங்கள் நம்மை அடிமையாக்குகின்றன. மெய் வழியைப்,  போதனையை உரையாடல் வழியாக உணர்த்தி வாழ்வின் உண்மையான பொருளையும் முழு மனநிறைவை அடையும் வழியை போதிப்பதே வேதத்தின் சாரம்.

உபநிஷத்தின் போதனைமுறை : உரையாடல்


உபநிஷத் பொதுவாக குரு - சிஷ்யனின் உரையாடலாக அமைந்திருக்கும். ஒன்று அல்லது பல உரையாடல்கள் சேர்ந்தது உபநிஷத் ஆகும்.

ஒவ்வொரு வேதத்தின் கடைசியிலும் பல உபநிஷத்துக்கள் உள்ளன.

ஏழு உபநிஷத்துக்கள் :


1. முண்ட கோபநிஷத் (அதர்வண வேதம்)

2. கேனோபநிஷத் (சாம வேதம்)

3. கடோபநிஷத் (யஜுர் வேதம்)

4. கைவல்யோபநிஷத் (அதர்வண வேதம்)

5. தைத்திரீயோபநிஷத் (யஜுர் வேதம்)

6. ஈசாவாஸ்யோபநிஷத் (சுக்ல யஜுர் வேதம்)

7. மாண்டூக்யோபநிஷத் (அதர்வண வேதம்)

முதலில் இந்த ஏழு நூல்களைத் தொடர்ந்து வாசிக்கவும்,  கற்றுக்கொள்ளவும், எளிமையான மொழி நடையில் பகிரவும் விரும்புகிறேன். வேதத்தை கற்பது பயனுள்ள வாழ்வு வாழ உதவும் என நம்புகிறேன்.

கடவுள் அருள் புரியட்டும்.