சிந்தனைத்துளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைத்துளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜனவரி, 2024

எண்ணங்களை வசப்படுத்து.

எண்ணங்கள்.


எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். (OV)

எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே, உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும். (TCV)

உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.(TAERV) - நீதிமொழிகள் 4: 23

அனைவரது மனதிலும் ஏதாவது ஒரு எண்ண ஓட்டம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். உறங்கும் போது கூட கனவுகள் வழியாக எண்ணங்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொருவரது மூச்சுக் காற்றிலும் எண்ணங்கள் பயணிக்கின்றன. இவ்வுலகில் ஒரு மனிதனது மூச்சு உள்ள வரை, அவரது எண்ணச் சுழற்சி நிற்காது. 

பொதுவாக எண்ணங்களை இருவகைப் படுத்தலாம். நல்ல சிந்தனை மற்றும் தீய சிந்தனை. நல்ல எண்ணங்கள் அனைத்து உயிரையும் தன்னைப் போல நேசிப்பதில் துவங்கி, இறுதியில் நம்மையும் மேன்மை படுத்தி, அநேகருக்குப் பயன் தரும் வாழ்க்கையாக நிறைவு பெறும். தீய சிந்தனை பிறரை விட உயர்வாகக் காணப்பட வேண்டும் எனும் பெருமையில் துவங்கி, இறுதியில் பொறாமை, சினம் எனும் தீயால் அனைத்தையும் அழித்து விடும்.

எண்ணங்களின் இயல்பு:

ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில் இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நாம் எந்த வயதில், எந்த நிலையில், எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நம் மனதின் தன்மைக்கு ஏற்றவாறு, நல்ல அல்லது தீய எண்ணங்கள் உருவாகி நம்மை ஊடுருவிக் கொண்டே இருக்கும்.

ஆக நம் மனதில் நல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் மாறி மாறி உருவாகி வெளிப்படுவது இயற்கையான இயல்பான செயல். 

நுட்பமாகச் சொல்வது எனில், மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு, அந்த எண்ணங்கள் உதயமாகும் மனிதனது விருப்பம் மட்டுமே காரணமில்லை. அவர் அறியாமலேயே, அவரது மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றி பல வகை விருப்பங்களை அவருக்குள் உருவாக்கிவிட்டு, அது அந்த விருப்பத்திற்குள் மறைந்து கொள்ளலாம்.

ஆகவே மனதில் இவ்விதம்தான் எண்ணங்கள் தோன்ற வேண்டும் என நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இவ்வாறுதான் எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியாது. எண்ணங்களை, “உதயமாகிறது” என்ற வார்த்தையில் குறிப்பிடும் போதே, அவை தானாகவே நம்மில் “தோன்றுபவை” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ''தானாக'' உருவாகும் ஒரு விசயத்தை, அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்தி வசப்படுத்த முடியாது அல்லவா?

எண்ணங்களின் தோற்றுவாய்:

நம் மனதில் பதிவாகியுள்ள பல அனுபவப் பதிவுகள்  நாம் அறியாதவை. அது ஓர் தொடர்ச்சியான தொகுப்பு. அதன் காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. அத்துடன், இப்போதும் நாம் விரும்பும், பார்த்தும், கேட்டும், சுவைத்தும், நுகர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பலவிதமான  அனுபவங்களிலிருந்தும், மனதில் நல்லதாகவோ, தீயதாகவோ தகவல்கள் உருவாகிப் பதிவாகின்றன. ஆக எண்ணங்கள் தோன்றுவதற்கு நம் மனதில் உள்ள அனுபவப் பதிவுத் தளங்களில், அன்றாடம் நாம் சேர்க்கும் தகவல்களும், ஆதியிலிருந்தே பதிவாகி, நாம்  அறியாது, நம்முள் உறைந்திருக்கும் பல கோடிக்கணக்கான தகவல்களும் காரணமாக உள்ளது. 

எண்ணங்களின் செயல்முறை:

ஒரு எண்ணம் நம் மனதில் உருவாகும் போது அதனுடன் கற்பனையில் நாம் உறவாடுகிறோம்.  நாம் அந்த எண்ணத்துடன் உறவாடவில்லை எனில் அந்த எண்ணம் தானாகவே மறைந்து விடும். எந்த எண்ணத்தோடு கற்பனையில் உறவாடுகிறோமோ, அது காட்சிகளாக விரிந்து, வார்த்தைகளாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. அப்போது அதனால் உண்டாகும் நல்ல, தீய பாதிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். அதுவும் ஒரு மனப் பதிவாகிறது. எத்தனை துயரம் தருவதாக இருந்தாலும், சில வலிமையான எண்ணங்களோடு கற்பனையில் உறவாடுவதை நம்மால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது. அது அத்தனை வீரியமானது. 

தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுதலை.

மனதில் பதிந்து இருக்கும் அனுபவப் பதிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக மனப் பதிவுகளில் பதிந்து இருக்கும், நாம் உணராத, அறியாத, எண்ணிக்கைக்கு அடங்காத பல கோடி தீய பதிவுகள் நீக்கப்பட வேண்டும். அனுதினம் பல  நல்ல பதிவுகள், மனதில் பதிவு செய்யப்படவேண்டும். அதனால் நல்ல செய்திகள் கேட்பது, நற் செயல்களில் ஈடுபடுவது, நல்ல நூல்களை வாசிப்பது, என மனதில் ஒருபுறம் பயனுள்ள அனுபவப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும். 

மனம் ஒரு நிலத்தைப் போன்றது. நிலத்தின் கரடு முரடான கற்களை அகற்றி, சரியாகக் கொத்தி, பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றி, நீர் பாய்ச்சி, உரமிட்டு, வேலியடைத்துக் காப்பாற்றினால், அந்த விதை வளர்ந்து, பெருகி, நற்பலன்களைத் தரும். இது ஒரு பெரும் பொறுமையுடன் நீண்ட காத்திருப்போடு செய்ய வேண்டிய தவம். அப்போது மனம் பக்குவப்படும். அதிலிருந்து தோன்றும் எண்ணங்களும் பயனுள்ளவையாக இருக்கும். நம் மனதில் தோன்றும் எண்ணங்களை விழிப்புடன் கண்காணிக்கும் பழக்கம் இயல்பாகிவிடும். தேவையற்ற எண்ணங்களில் கற்பனையில் உறவாடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நான் வேறு – எனக்குள் தோன்றும் இந்த தேவையற்ற சிந்தனைகள் வேறு, என்ற தெளிவான புரிதலும் ஏற்படும். இந்த தெளிவு மனதில் எந்தளவு உறுதியாக உள்ளதோ, அந்தளவிற்கு மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணமும், சிந்தனையையும் உங்களால் இலகுவாக உதறித் தள்ள முடியும். அந்த தீய எண்ண ஓட்டங்கள் உங்களைப் பாதிக்க முடியாது.

மனதில் தோன்றும் பலவகையான எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அவ்விதமாகத் தோன்றும் எண்ணங்களுக்கு எவ்விதம் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது நமது அர்ப்பணிப்பில் தான் உள்ளது. 

மனதை தன் வசப்படுத்துவதை விட மனிதருக்கு வேறு எது இந்த உலகில் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடும்?


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

சனி, 10 ஜூன், 2023

மனமுதிர்ச்சி

 மனமுதிர்ச்சி ஏன் முக்கியம்?



மனமுதிர்ச்சி என்பது அடிப்படையில் மன வளர்ச்சி அல்லது ஞானத்தின் ஒரு நிலை. இது ஒரு மனிதரின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக அவரது நடத்தை (behavior)  முதல் மற்றவர்களுடனான அவர்களது உறவு  (Relationships) வரை அனைத்திலும் பங்கு வகிக்கிறது.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சுய மதிப்பை மேம்படுத்தவும், உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.

மனமுதிர்ச்சி என்பது சிறிய விஷயங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது துவங்குகிறது.

ஊக்கம் மற்றும் சுய உதவி புத்தகங்களைப் படிப்பதால் மனமுதிர்ச்சி வருவதில்லை, மாறாக நிலைத் தன்மையையும் (Consistency), ஒழுக்கத்தையும் (Character), இடை விடாமல் பின்பற்றுவதால் நிகழ்கிறது.

மனமுதிர்ச்சி பெறும் போது, வாழ்க்கை மிகவும் நிலையானதாகவும், அதன் விளைவாகச் சிக்கல்களைக் கையாளுவது எளிதானதாகவும் மாறுகிறது.

மனமுதிர்ச்சியானது புத்திசாலித்தனமான நல்ல முடிவுகளை எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. நிதானத்துடன் முடிவுகளை எடுக்க உதவுகிறது. அதன் மூலம் ஒட்டு மொத்தமான வாழ்க்கை அதிக ஸ்திரத்தன்மை அடைகிறது.

மனமுதிர்ச்சி அடைவதால், மோசமான உறவு முறிவுகள், குழப்பமான முடிவுகள், கொந்தளிப்பான மனநிலை மற்றும் கடுமையான வேலைப்பளு போன்ற வாழ்வின் சலசலப்புகள் முடிவடைகின்றன.

மனமுதிர்ச்சி என்பது வயதுடன் தொடர்புடையது அல்ல, மாறாக பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு எவ்விதம் பதிலளிக்க வேண்டும், எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படுகிறது.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை. நீங்கள் நினைப்பது போலவே, மற்ற எல்லோரும் நினைப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அதாவது, மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

மனமுதிர்ச்சி என்பது நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விட்டு விடுதல்.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, பிறரை வாதங்களில் வெற்றிபெற அனுமதித்தல்.

மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களின் விமரிசன கருத்தால் நீங்கள் பாதிக்கப் படுவதில்லை.

மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விட்டு விடுதல்.

மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்படி யாரையும் வற்புறுத்துவதில்லை. மாறாக, அவரவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய அனுமதித்தல்.

மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு நம்மைத் திருத்திக்கொள்வது.

மனமுதிர்ச்சி என்பது வாழ்க்கையில் எவ்வித  இலட்சியம் இல்லாத குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களை மகிழ்விக்க இனி நீங்கள் முயல்வதில்லை.

மனமுதிர்ச்சி என்பது உங்களது இலக்குகளை அடையத் தடையாக உள்ள தற்காலிக சுகங்களைப் புறம் தள்ளுதல்.

மனமுதிர்ச்சி என்பது காரியங்கள் திட்டமிட்ட படி நடக்காத போதும் அமைதியாக இருக்க உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.

மனமுதிர்ச்சி என்பது நான் பிறருடைய மகிழ்ச்சிக்குப் பொறுப்பல்ல என்பதை உணர்ந்து கொள்தல்.

மனமுதிர்ச்சி என்பது துயரங்கள் உங்களை அழிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அதன் வலியிலிருந்து உங்கள் வலிமையை உருவாக்குதல்.

மனமுதிர்ச்சி என்பது சரியான நேரத்துக்குக் காத்திருக்காமல் செயலில் ஈடுபடும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெறுதல்.

மனமுதிர்ச்சி என்பது வெற்றுச் செய்திகள், அரசியல், மலிவான இணையதள பொழுது போக்குகள், பிறரது அந்தரங்க நிகழ்வுகள், பயனற்ற சமூக உரையாடல்; இவை உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் முன்னேற விடாமல் திசைதிருப்பும் மிக மோசமான வஞ்சக வலை என்பதை உணரும் அளவுக்குப் புத்திசாலியாக இருத்தல்.

மனமுதிர்ச்சி என்பது உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எதையும் தனிப்பட்ட முறையில் எடுக்காமல் உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.

உங்களைப் பற்றி யாருக்கும் அதிகமாகத் தெரியாதபோது, வாழ்க்கை இலகுவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மனமுதிர்ச்சி.


படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

புதன், 19 ஏப்ரல், 2023

ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

வாழ்வு மேம்பட..,


புதிய தரிசனங்களைக் கண்டடைய, மேம்பட்ட நிலையை அடைந்திட, உதவி செய்யும் ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

1. Ikigai: வாழ்வின் நோக்கம்:

உங்கள் நோக்கம் என்ன?

''Ikigai'' எனும் ஜப்பானியச் சொல்லிற்கு, "நமது இருப்பிற்கான காரணம்" அல்லது "வாழ்க்கையில் நோக்கம்" எது; என ஆராய்ந்து பார்ப்பது என்று புரிந்து கொள்ளலாம். 

தினமும் காலையில் எழுந்தவுடன், இன்று என்ன செய்யப் போகிறோம் எனும் சரியான நோக்கத்தை அறிவது.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதைச் செய்வதில் சிறந்தவர், அதனால் இந்த உலகிற்கு என்ன பயன், அதன் வழியாக வருமானம் கிடைக்குமா என்பதன் கூட்டுச் சேர்க்கை இது.



உங்கள் ''இகிகாயை'' அடையாளம் காண்பதன் மூலம், நீங்கள் பயணிக்க வேண்டிய திசையை உங்களால் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தைக் கண்டறியவும்.
  • ஒவ்வொரு காலையிலும் நீங்கள் விழிப்பதற்கான சரியான காரணத்தை உறுதி செய்து கொள்ளவும். 
  • உங்கள் பலம், உணர்வுப்பூர்வமான ஈடுபாடு (Passion) இருக்கும் ஒரு பணியைத் தெரிவு செய்யவும்.
  • அது உலகத்தின் தேவைகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
  • அந்த பணி, வருமானத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.
  • அப்போது வாழ்க்கை அர்த்தம் அடைகிறது.

2. Shikata ga nai: மாற்ற இயலாதவை:

''Shikata ga nai'' என்பதற்கு, "அதற்கு மேல் அதை ஒன்றும் செய்ய முடியாது" அல்லது "இதற்கு எந்த மாற்று வழியும் இல்லை" என்று பொருள்.

இது நம்மால் மாற்ற முடியாத துன்பங்களை எதிர்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 

ஆனால், இது பொறுப்புகளைத் துறந்து தப்பி ஓடுவது அல்ல. 

சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்வது. 

அத்துடன், அதை ஏற்றுக் கொண்டு, அச் சூழலைக் கடந்து, முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது.

  • உங்களால் மாற்றமுடியாத மனிதர்கள், விஷயங்களை விட்டு விடுங்கள்.
  • சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 
  • அதனால் குறையொன்றுமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.
  • உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதைத் திறம்பட நிர்வகியுங்கள். 
  • உங்களால் எதைச் சிறப்பாக மாற்றி அமைக்க முடியுமோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள்.

3. Wabi-Sabi: குறைகளில் வசீகரம்:


இந்த கருத்து, முழுமை அற்றதில் உள்ள அழகியல் (beauty of imperfection), நிலையற்ற தன்மை (transience) மற்றும் இயற்கை உலகின் படைப்புகள், ஆகியவற்றை அவை இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை (attitude)  குறிப்பிடுகிறது.

இது, ஆபூரண (imperfect), முழுமையற்ற (incomplete) மற்றும் கடந்து செல்லும் நிலையற்றவற்றில்  (transience)  உள்ள அழகைக் கண்டறிவது.

வாழ்க்கையின் எளிமையான, அலங்காரமற்ற மற்றும் இயற்கையான கூறுகளை மதித்து, அவற்றைப் பாராட்ட ''வாபி-சபி'' நம்மை ஊக்குவிக்கிறது.


Wabi Sabi

  • அபூரணத்தில் அமைதியைக் கண்டறியவும்.
  • வாழ்க்கையில் எதுவுமே பரிபூரணமானதல்ல என்பதை உணருங்கள். இதில் நாம் அனைவரும் அடக்கம்.
  • எதுவும் நிலையற்றது; நிரந்தரமற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • குறையற்ற தன்மை அடைய வேண்டும் எனப் பாடுபடுவதற்குப் பதிலாக, வாழ்க்கையைத் தனித்துவமாக்கும் குறைபாடுகளில் மகிழ்ச்சியைக் காணவும்.

4. Gaman: எதிர்வினை: 


"காமன்'' என்பது கடினமான சூழ்நிலைகளிலும் கூட விட்டுக்கொடுக்காமல் வலுவாக இருப்பது. 

சகிக்க முடியாத சூழலில், அதைப் பொறுமையுடன் கண்ணியத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர் கொள்வது என்றும் புரிந்து கொள்ளலாம். 

“Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth and our freedom."  - Viktor E. Frankl. (in his book Man's Search for Meaning).

"பிறர் தூண்டுதல் மற்றும் அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை இவற்றிற்கு இடையே ஒரு சிறு கால இடைவெளி உள்ளது. அந்த நேரத்தில், நமது மிகச் சிறந்த பதிலைத் தேர்ந்தெடுப்பதுவே சக்தி. அந்தப் பதிலில் தான் நமது வளர்ச்சியும் சுதந்திரமும் இருக்கிறது." - Viktor E. Frankl.

இந்த கோட்பாடு, கஷ்டங்கள் அல்லது துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வுறாது, விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என கற்றுத் தருகிறது. 

அத்துடன் பின்னடைவை வலிமையாக எதிர் கொள்வது மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், உங்களை வழி நடத்தும் மன வலிமை மற்றும் தைரிய உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
  • கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதைக் கவனித்து, தேவையெனில் கட்டுப்படுத்தவும்.
  • நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, பொறுமையுடனும் அணுகவும்.
  • உங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்கவும்.
  • வெட்கத்தை எதிர்கொண்டாலும், உணர்ச்சிவசப்படாமல், முதிர்ச்சியையும், சுயக்கட்டுப்பாட்டையும் உங்கள் நடத்தையில் வெளிப்படுத்தவும்.
  • நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் அணுகுமுறையையும், நீங்கள் பதில் சொல்லும் விதத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
  • பொறுமை, மீண்டு எழும் உத்வேகம், புரிந்து கொள்ளும் திறன், இவற்றை எப்போதும் விட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. Oubaitori: தனித்துவம்:


இது ஒரு ஜப்பானிய பழமொழியாகும். வசந்த கால மரங்களில் பூக்கும் செர்ரி, பிளம், ஆப்ரிகாட் மற்றும் பீச் ஆகிய நான்கு மரங்களின் வேறுபட்ட தன்மையிலிருந்து உருவான கருத்தாக்கம். 

நீங்கள் ஒருபோதும் உங்களை வேறொருவருடன் ஒப்பிடக் கூடாது. அதற்கு அவசியம் இல்லை என்பது அதன் சாரம்சம். 

ஒவ்வொரு பூவும் அதன் சொந்த நேரத்தில் பூக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. அதுபோல, ஒவ்வொரு நபரும் தனது சொந்த பாதையைத் தீர்மானித்து, உத்வேகம் பெற்று,
தமது பயணத்தைத் தொடர வேண்டும்.

  • உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். 
  • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காலவரிசை மற்றும் தனித்துவமான பாதை உள்ளது.
  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை அளவிட முயல்வதை விட, உங்கள் சொந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, உங்களது பாதையில் பயணிப்பது முக்கியம்.

6. Kaizen: தொடர் மேம்பாடு:


"கைசென்"  என்றால், "தொடர்ந்து முன்னேறுதல்" என்று பொருள்.

இது தனிப்பட்ட வளர்ச்சி முதல் அலுவலக செயல்பாடுகள் வரை, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், நீங்கள் அடைய விரும்பும் நீண்ட கால முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், சிறு, சிறு மாற்றங்கள் அல்லது நிலையான மேம்பாடுகளைத் தொடர்ந்து செய்வதன் வழியாகச் சாதிக்க முடியும் எனும் கருத்தாக்கம்.
  • நீங்கள் மேம்படுத்த விரும்பும் பல பகுதிகளைக் கண்டறியவும்.
  • ஒரே நேரத்தில் அவற்றில் பெரிய மாற்றங்களை அடைய முயல்வதை விட, முக்கியமாக அடைய வேண்டிய ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் இலக்குகளைச் சிறிதாகவும், நிறைவேற்றக்கூடிய சிறு, சிறு செயல்களாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
  •  அவற்றில் தொடர்ந்து கவனமாக ஈடுபட்டு அச் செயல்களை முடியுங்கள். 
  • அடையும் வெற்றிகளைக் கொண்டாடி, அவற்றைத் தொடர் உந்துதலாகப்  பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் முன்னேற முயலுங்கள். 
  •  சிறிய மாற்றங்கள் கூட காலப்போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

7. Shu-Ha-Ri: கற்றுக்கொள் - பரிசோதித்து பார் - சிகரம் தொடு.

Shu-Ha-Ri என்பது தொழில், கல்வி மற்றும் தனிப்பட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தற்காப்புக் கலைக் கருத்தாகும். 

இது ஒரு நுட்பத்தை எவ்வாறு கற்றுக்கொள்வது, அதில் எவ்விதம் தேர்ச்சி அடைவது, அதன் உன்னத நிலையை அடையும் வழிமுறைகள் பற்றிய பல்வேறு  நிலைகளைக் குறிக்கிறது.

Shu-Ha-Ri மூலம், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கக் கூடும். அதே வேளையில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பான தேர்ச்சியும் பெறலாம். 

அந்த உன்னத ஞானத்தை அடைவதற்கு மூன்று அறிவு நிலைகள் உள்ளன. 

1.  Shu: Follow the Rules: விதிகளைப் பின்பற்றவும்:

முதல் நிலையில், ஒருவர் தனது சொந்த வழிமுறை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, பாரம்பரியத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். 
  • இது ஒரு குருவின் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படை உபதேசங்களைக் கற்றுக்கொள்ளுதல். 
  • மகா குருக்களைப் பிரதிபலிப்பதும் இந்த கட்டத்தில் நிகழ்கிறது.
2. HA: Break the Rules: விதிகளை உடைக்கவும்:

இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது துறையின் அடிப்படைகளை கற்று தேர்ச்சி பெறுவது. 

ஓர் உறுதியான அடித்தளத்தை பெற்றவுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் மேம்படுத்தும் யோசனைகளை பரிசோதித்து ஆராயத் தொடங்குவது. 
  • குருவிடமிருந்து கற்று தேர்ச்சி பெறுதல்.
  • அதை  ஒருங்கிணைத்து பயிற்சி செய்தல்.
  • மேம்படுத்த புதிய வழி முறைகளை ஆராய்தல்.
3. RiTranscend the Rules: உங்கள் சொந்த விதிகளை உருவாக்கவும்:

இறுதியாக, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், உங்களுடைய தனித்துவமான பாணி அல்லது அணுகுமுறையை உருவாக்குங்கள். 

இந்த நிலை, நீங்கள் கற்றதைப் பல வகைப்பட்ட மாணவர்களும், பயன் படுத்தும் விதமாக, புதிய யுக்தியை உருவாக்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர் தயாராக இருக்கும்போது ஆசிரியர் தோன்றுவார். மாணவர் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கும் போது ஆசிரியர் மறைந்து விடுவார். -Tao Te Ching.

படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

புதன், 12 ஏப்ரல், 2023

மௌனம் நல்லது.


 

நம் சிந்தைகளின் நிறைவு வார்த்தைகளில் வெளிப்படுகிறது. பேசுவதைக் குறித்த சில நீதி மொழிகள்:

அளவுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.  

வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர், 

வாழ்க்கையில் சில கடினமான சூழல்களை தவிர்க்க முடியாது. நாம் மனம் திறந்து பேசும் படி நிர்ப்பந்திக்கப்படும் அத்தகைய தருணங்களை அடையாளம் காணவும், அதைக் கவனமாக எதிர் கொள்ளவும் உதவும் சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. 

1. குழப்பமான மனநிலையில்:

உங்களுக்குத் தெளிவாகச் சிந்திப்பதில் சிக்கல் இருக்கும்போது பேசாமல் இருப்பது நலம். 

குழப்பமான மன நிலைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். சோர்வாக இருக்கக் கூடும். வேறு ஒருவர் ஆதிக்கத்தின் நிர்ப்பந்தமாக இருக்கலாம். கோபம், கவலை, பதற்றம் போன்ற காரணமாகவும் இருக்கலாம்.

இவ்வித தெளிவற்ற குழப்பமான சூழ்நிலைகளில், மனதைத் திறந்து பேசுவதற்கு முன்பாக சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லது. அவ்வாறு செய்யவில்லை என்றால், ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்பட நேரிடும்.

உங்கள் யோசனைகள் முதிர்ச்சியடைய சில காலங்கள் எடுத்துக் கொண்டு, அதன் பின்னரும், உங்கள் கருத்து மாறாதிருந்தால் அவ்விதமாகவே பேசலாம், ஆனால் நீங்கள் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது வேறு வழிகளில் சமரசம் செய்ய நிர்ப்பந்திக்கப் படும் சூழலில் மௌனமே சிறந்த பதில்.

2. பிறரை புண்படுத்தும் சூழலில்:

உங்கள் வார்த்தைகள் பிறருக்குப் பயனுள்ளதாக இருப்பதைத் தாண்டி, அவரை புண்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் பேசுவதைத் தவிர்க்கவும்.

சில சந்தர்ப்பங்களில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அப்போது அதில் சம்பந்தப்பட்ட நபர் வருத்தப்படாதவாறு பேச முடியாது தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எப்போதோ ஒரு முறை வெகு அரிதாகவே வருகின்றது.

ஆகவே, நீங்கள் பேச விரும்பும் வார்த்தைகள் பயனுள்ளதாக இருக்குமா அல்லது மற்றவரைப் புண்படுத்தும் வகையில் இருக்கப் போகிறதா எனப் பேசுவதற்கு முன்பாக சிந்தியுங்கள். ஒரு சந்திப்பு கசப்பான அனுபவத்தில் முடிவதை விட மௌனமாக இருப்பதே நலம்.

3. பொருந்தா சூழலில்:

உங்கள் கருத்து மதிப்பற்றதாக இருக்கும் இடத்தில், பொருத்தமில்லாமல் பேசாதீர். இதை ஒப்புக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் எளிதல்ல. உங்கள் சுய மதிப்பு  ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இது மிகவும் முக்கியமானது.

ஒரு சூழ்நிலையைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியாதபோது, ​​அல்லது அதைக் குறித்து அறிந்த நிபுணர்கள் அவ்விடத்தில் சூழ இருக்கும்போது, ​​அல்லது உங்கள் கருத்து மற்றவர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத போது, ​​அமைதியாக இருப்பது நல்லது. அதுவே புத்திசாலித்தனம்.

உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பற்ற இடத்தில் மௌனமே சிறந்த பதில்.

4. போதுமான சான்றுகள்  இல்லாத போது;

சில சந்தர்ப்பங்களில் நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஊகிக்கவும், பேசவும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும், இதைக் கடைப்பிடிப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும்போது அது நம்மையறியாது மற்றொரு நபருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு நபரின் உடல் மற்றும் மன நலன் குறித்த உறுதியான தகவல்களை அறியாமல் அதைப் பற்றிப் பேசக்கூடாது. சில சூழல்களில் செவிவழிச் செய்திகள் உண்மையாக இருக்கலாம், ஆனாலும் நாம் கேட்ட  செவிவழி தகவல்கள், ஒரு பெரிய முடிவை மாற்றக் கூடியதாக இருக்குமானால், அதைக் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது. 

உதாரணமாக, ஒரு நபர் தனக்கு உதவக்கூடிய மருந்தைப் பயன்படுத்தலாமா என்று பரிசீலித்து வருகிறார். அதே மருந்தைப் பயன்படுத்திய உங்கள் நண்பரின் நண்பரைப் பற்றிய சிகிச்சை குறித்து சில வதந்திகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அது வதந்தி அல்ல, உண்மைதான் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் எனச் சொல்லாமல் இருப்பது நல்லது.

5. பேசாதே என்று அறிவுறுத்தப்படும்போது:

சில சூழல்களில் நாம் பேச வேண்டாம், அமைதியாக இரு எனக் கட்டுப்படுத்த படுவோம். அதனால் அவமதிக்கப் பட்டதை போல உணரக்கூடும். அது கோபத்தைத் தூண்டலாம். எனினும், அந்த மன தூண்டுதலைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக ஏன் நம்மைப் பேசக்கூடாது எனச் சொல்கிறார்கள்? என ஆழ்ந்து சிந்திப்பது சிறந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கவனிப்பதும் மற்றும் நம்மை நாமே ஆராய்ந்து  கற்றுக்கொள்வதும் நல்லதாக இருக்கும்.

6. சொல்வதற்கு எதுவும் இல்லாத போது:

நாம் அனைவரும் எதையாவது ஒன்றைப் புதிதாகச் சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனாலும் அதற்காக, ஒரு அர்த்தமற்ற சிந்தனையை வலிந்து உருவாக்கிப் பேசக்கூடாது. 

சில தருணங்களில் உங்களிடம் சொல்ல எதுவும் இல்லாதிருக்கலாம். அதைச் சொல்வதற்கு வெட்கமாகக்  கூட இருக்கலாம். ஆனால் சொல்வதற்கு எதுவும் இல்லாதபோது, பேச வேண்டும் என்பதற்காக உளருவதை விட  அமைதி காப்பது சிறந்தது. அத்தகைய சூழலில் பிறர் கூறுவதைக் கவனமாகக் கேட்பதும், வேறு ஒருவர் சொல்லும் நல்ல கருத்தை ஆதரித்தும் பேசலாம். 

உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள், தவறுதலாகப் பேசி விட்டால், அவை மன்னிக்கப்படலாம், ஆனால் மறக்கப்படாது.  பல தருணங்களில் மௌனமாக இருப்பது எப்போதும் நமக்கு நன்மையைத் தரும். 

படம் இணையத்திலிருந்து நன்றியுடன்..

திங்கள், 20 செப்டம்பர், 2021

நான் மறைந்து நாமாக வேண்டும்.

 இரு பறவைகள். 




தன்னைத்தான் மோகித்துச் சேவிக்க விழைகிறது ஆணவம். 

பிறருக்குப் பணிவிடை செய்யத் துடிக்கிறது ஆன்மா. 


அங்கீகாரம் நாடி, அதைப் புறத்தில் தேடி ஆணவம் ஓடுகிறது.

உள்ளான நம்பிக்கை ஆன்மாவிற்கு உசிதம். 


ஆணவம் வாழ்க்கையைப் போட்டிகள் நிறைந்த களமாகக் காண்கிறது. 

ஆன்மாவிற்கு வாழ்க்கை கையளிக்கப்பட்ட ஓர் வெகுமதி. 


நான் எனும் இறுமாப்பு ஆணவத்தின் அஸ்திவாரம். 

அன்பில்  நிலை நிற்கிறது ஆன்மா . 


வெளியே நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆணவத்தின் வாடிக்கை. 

உள்ளத்தை உற்றுப் பார்த்து உண்மையில் உவகை அடைவது ஆன்மா. 


ஆணவம் பற்றாக்குறையைப் பறைசாற்றுகின்றன. 

ஆன்மா பொங்கி வழியும் மிகுதியைச் சுட்டிக் காட்டுகிறது. 


ஆணவம் காமத்தில் கட்டுண்டு இழுத்த இழுப்பில் அலைந்து திரிகிறது. 

ஆன்மா அன்பில் பிணைக்கப்பட்டு அடங்கிய இறைப் பறவை. 


வாழ்க்கையில் பெறப்படும் கொடைகள் கண்டு ஆணவம் குதுகலிக்கிறது. 

அதன் பயணத்தை இரசிப்பதில் திருப்தியுடன் ஆன்மா உவகை அடைகிறது. 


வாழ்வில் அடையும் வலிகளின் ஊற்றுக்கண் ஆணவம். 

ஆன்மா ஔஷதமான மருந்து. 


ஆணவம் அறிவைத் தேடுகிறது. 

ஆன்மா ஞானத்தின் உறைவிடம். 


ஆணவம் இறைமையை மறுதலிக்கிறது. 

ஆன்மா இறைவனை ஆரத் தழுவிப் பணிகிறது. 


ஆணவம் மரணத்தில் மறைகிறது. 

ஆன்மா அழிவதில்லை. 


ஆணவம் என்பது நான். 

ஆன்மா என்பது நாம். 


*******     *******     *******     *******    


 

Author: Unknown.

படம் இணையத்திலிருந்து நன்றியுடன். 

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பேசுவது மகிழ்ச்சியை உருவாக்கட்டும்

மனம் மகிழப் பேசுங்கள்.

 


உரையாடல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த வேண்டும். 

உள்ளம் உணர்ந்து கவனமாகப் பேசுவதன் வழியாக இதைச் சாதிக்க முடியும். 

நாம் பேசும் (எழுதும்) வார்த்தைகள் நமது குணத்தை வெளிப்படுத்துகிறது. ஆசையைச் சொல்கின்றன. விருப்பங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறது. தகுதியைப் பிரதிபலிக்கிறது. 

ஆகப் பேச்சு என்பது சுபாவத்தின் வெளிப்பாடு. தொடர்ந்து கவனமாகப் பயிற்சி செய்வதன் மூலமாக உறவுகள் மேம்படுத்தும் வகையில் பேச முடியும். 

ஒருவர் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தால் பேச்சும் தரமானதாக இருக்கும். தேவையில்லாமல் பேசிவிட்டோமே எனப் பின்னர் வருந்த நேரிடாது. 

சொற்கள் குறைவாகவும், செறிவாகவும் இருப்பது மேன்மை. 

எப்படிப் பேச வேண்டும் எனப் பல மதிப்பு மிக்க நூல்கள் கற்றுத் தருகிறது. 

அவற்றில் சிலவற்றைத் தொகுத்து அளித்துள்ளேன். முயற்சி செய்து பார்க்கலாம். 

  • தாய், தந்தையுடன் குரலைத் தாழ்த்தி மதிப்புடன் பேச வேண்டும். சப்தம் உயர்த்திப் பேசக்கூடாது. பொறுமையுடன் கேட்பது முக்கியம். பதில் வார்த்தைகள் அன்பு நிறைந்ததாக இருக்க வேண்டும். 
  • வாழ்க்கைத்துணையுடன் உண்மையை மட்டும் பேச வேண்டும். அப்பொழுது உறவு உறுதிப்படும். பொய் பேசக் கூடாது. வாழ்க்கை நாடகமாக மாறி விடும். 

  • உடன் பிறந்த சகோதரரிடம்  உள்ளார்ந்த மனதுடன் உரையாடுதல் அவசியம். 
  • உடன் பிறந்த சகோதரியுடன் நேசத்துடன் பேச வேண்டும். இனிய வார்த்தைகளில் ஆதரவு வெளிப்படட்டும். அது மன அழுத்தத்தைக் குறைக்கும். 
  • குழந்தைகள் பேசும் போது அதைக் கவனமுடன் கேட்க வேண்டும். இடை மறித்துப் பேசக்கூடாது. அவர்களது விருப்பங்கள், எண்ணங்கள், நோக்கங்களைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானது. அவை அவர்களைச்  சரியான பாதையில் வழி நடத்த உதவும். 
  • உறவினர்களிடம் கரிசனையுடன் பேச வேண்டும். உதவியை எதிர்பார்த்து வருபவர்களிடம் எந்தளவு உதவ முடியும் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கக் கூடாது. முடியாத வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. 
  • நண்பர்களுடன் இயல்பாகப் பேச வேண்டும். முகமூடி தேவையில்லை.
  • உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனமும், கண்ணியமும் தேவை. அவர்கள் நகைச்சுவை ததும்பப் பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசக் கூடாது. கேட்கப்படும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது போதும். 
  • வியாபாரங்களில் கண்டிப்புடன் பேச வேண்டும். வெளிப்படையாகத் தேவைகளைச் சொல்ல வேண்டும். உரையாடலில் நேர்மை முக்கியமானது. தெளிவான புரிதல் மிக முக்கியம். எச் சூழ்நிலைகளிலும் சொன்ன சொல்லை மாற்றிப் பேசக்கூடாது. 
  • கீழ் பணிபுரிபவர்களிடம் பரிவுடன் பேச வேண்டும். அவர்கள் தவறிழைக்கும் போது தனித்து அழைத்துக் கண்டித்து  உணர்த்தவும். மதிப்புடனும், மரியாதையுடன் நடத்த வேண்டும்.
  • எந்த உறவாக இருப்பினும் போலித்தனமான உணர்வு, மிகைப்படுத்திப் பேசுவது நீண்ட காலம் செல்லுபடியாகாது. அவை எப்படியும் வெளிப்பட்டு விடும். அது அவநம்பிக்கை ஏற்படுத்தும். உறவை, நட்பைக் கொன்று விடும். 

இன்றைக்கு நாம் உறவுகள் சிதைவுப்பட்ட காலத்தில் வாழ்கிறோம். எங்கும் சுயநலம் மிகுதியாக உள்ளது. உறவுகள் பெரும்பாலும் பயன் கருதியே நீடிக்கின்றன. 

பலர் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவே பழகுகிறார்கள்.  

இத்தகைய சூழலில் எச்சரிக்கையுடன் பழகவும், கவனமாகப் பேசவும் வேண்டும்.  

உணர்வு நிலை தவறிப் பேசும் மதியீனமான பேச்சுகள் இறுதியில் மனதிற்கு கடும் துயரத்தையே தரும்.

இறுதியாகக் குறைவாகப் பேசுவது நல்லது. எப்போதும் உள்ளம் உணர்ந்து கவனமாக உண்மையுடன் பேசுவது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கும். 

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் 


வியாழன், 7 மே, 2020

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 2

ஆத்ம ஞானம்.



1. ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வத் தன்மையுடைய ஆன்மா ஒன்று உறைந்திருக்கிறது. அதற்குத் தீங்கு நேரிடாமல் சுத்தமாக வைத்துப் பாதுகாப்பது ஞானம். உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு அறிவுள்ளவராக நடந்து கொள்வதென்பது அவரவர் சுதந்திரம். இறையச்சம், சத்தியம், நீதி, தெளிந்த புத்தி, தைரியம் இவற்றை விட ஆன்மாவிற்கு நன்மையும் ஆனந்தமும் அளிப்பது இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

2. வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி நிகழும். இந்த சுக துக்க உணர்வுகளால் அலசலடிப்படாதவாறு மனதை அதனின் விலக்கி வைத்துப் பயிற்றுவிப்பது ஞானம்.

3. பயனற்ற சொற்களைப் பேசாதிருப்பது ஞானம். எண்ணங்களைச் சீர் செய்தால் சொல்லும், செயலும் சிறப்படையும். நம்முடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் பத்தில் ஒன்பது பங்கு யாருக்கும் வேண்டாதவை. தேவையற்ற பேச்சைத் தவிர்த்தால் கவலையும் மனக்கசப்பும் அகலும். காலமும் வீணாகாது.

4. ஒவ்வொருவர் உள்ளத்திலும் அறத்தைப் பற்றி நிற்கும் தெய்வாம்சம் ஒன்று இருக்கிறது. ஆகவே எவருக்கும் தீங்கு செய்யக் கூடாது. ஒருவரை மனதில் பகைத்து துவேஷம் செய்யும் எண்ணங்கள் தன்னிச்சையாகவே  வார்த்தையிலும் செயலிலும் பாவத்தைப் பிறப்பிக்கும். இந்த விழிப்புணர்வு ஞானம்.

5. மோகம், கபடம், சினம் போன்ற தீய உணர்ச்சிகளுக்கு ஆட்படாது மனதை நெறிப்படுத்துவது ஞானம். பிறர் விஷயத்தில் ஒருபோதும் பயனின்றி தலையிட வேண்டாம்.

6. மனதை அடக்கி, எண்ணங்களைக் காத்து, புலன்களால் இழுக்கப்படாமல் விலகிநின்று, தெய்வத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து உலகத்தின் நன்மையை நாடி வாழ்வதே ஞானம். 

7. தெய்வ பக்தி, நல் வாழ்க்கை, உண்மை அன்பு இவற்றை உடையவருடன் நெருங்கிப் பழகுவதும், பெரியவர்கள் எதை விரும்பினார்கள், எதை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதை நன்றாகக் கவனித்து அந்தப் பாதையில் செல்வதும் ஞானம்.

8. பிறர் அறியாமல் இரகசியமாகத் திரைக்குப் பின் மறைந்து வஞ்சகமாகத் திட்டமிட்டு அனுபவிக்க நினைக்கும் எந்த சுகமும் நன்மையைத் தராது எனும் தெளிந்த புத்தி ஞானம்.

9. ஒருவர் காரணமின்றி தீங்கு செய்தால் அவர் செய்த தீமைகளைத் திரும்பத் திரும்ப மனதில் எண்ணக்கூடாது. தீயவர் நம் மனதில் எதை உண்டாக்க விரும்புகிறாரோ அதற்கு இடமளிக்காமல் விலகி வாழ்வது ஞானம்.

10. விஷயானுபவங்களை வெறுக்க வேண்டியதில்லை. பற்றுதல் கொள்ளவும் தேவையில்லை. அவைகளினின்றும் மன ஈர்ப்பின்றி  ஒதுங்கிய அளவு மனிதர் விடுதலையாவர். விஷயானுபவங்களால் ஆன்மாவில் துயரம் நிகழ்வதில்லை. அதைக் குறித்த ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்த எண்ணங்களே துயரத்தைத் தருகின்றன.

11. இவ்வுலகத்தில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையுடன் வாழ்வதும், பொய்யரிடமும் அநீதி செய்பவரிடமும் எவ்விதமான வெறுப்பின்றியும் நடந்து கொள்வதும் ஞானம்.

12. எவர் பிறரிடம் நெறி தவறி நடக்கிறாரோ அவர் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறார். எவர் பிறருக்கு அநீதி செய்கிறாரோ, அவர் தன் சுபாவத்தைத் தீமையாக்கிக் கொண்டு தனக்கே அநீதி செய்து கொள்கிறார். 

13. ஆராய்ந்து உணர வேண்டியது ஞானம் இது : 

  • மனிதர் இறைவனை எவ்விதம் அணுக முடியும்? 
  • தன்னிலிருக்கும் எந்த அம்சம் தெய்வீகமானது? 
  • எந்தச் சூழலில் தெய்வீக உணர்வு மேலோங்குகிறது?

14. ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அறம் சார்ந்து, உண்மையும், எளிமையும், பெருந்தன்மை பொருந்திய முறையில் காலத்தை வீணடிக்காது செய்து முடிப்பது ஞானம். அதை ஜீவகாருண்யம், சுதந்திரம், நீதி, நியாயம் இவற்றைப் புறக்கணிக்காது செய்தல் முக்கியம்.

15. படைப்பின் அழகை உணர்ந்து அனுபவிக்கத் தெரிந்தவர்கள் எதிலும் குற்றம் குறை பார்ப்பதில்லை. ஒவ்வொரு படைப்பும் அதனியல்பில் அழகானது. பதமாக வெந்த சப்பாத்தியில் அங்கங்கே சில கருப்பு புள்ளிகள் கொண்டிருப்பதில் ஒரு தனித்துவ அழகு இருக்கிறது.  அதுவே நம்முடைய சுவை உணர்வைத் தூண்டுகிறது. இயற்கையைப் பற்றிய ஞானம் அடைந்தவர் மாசுபடாத பார்வையைச் செலுத்தி அழகை மட்டும் அனுபவிப்பர்.  இயற்கையின் படைப்பில் பயனற்றது என்று எதுவும் கிடையாது.

*******   *******   *******

குறிப்பு : பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

துணை நின்ற நூல் : மூதறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதிய "ஆத்ம சிந்தனைகள்" (வானதி பதிப்பகம்).

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


புதன், 30 அக்டோபர், 2019

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 1.

மனம்.

பேரரசர் மார்கஸ் அரேலியஸ்.
(கி.பி. 121 - கி.பி. 180)

மனதை உறுதிப்படுத்து :


  • எந்தப் பொருள்களைப் பற்றி நீ இடைவிடாமல் சிந்திக்கிறாயோ, அவற்றின் தன்மையை உன் மனம் அடைகிறது. சாயத்தில் தோயும் துணியைப்போல், உள்ளத்திலுள்ள எண்ணங்களில் தோய்ந்த ஆத்மா நிறம் மாறும்.
  • தத்துவங்கள் தம் வழியே நேராகச் செல்லும். அதன் போக்கை நம் இஷ்டப்படி மாற்றமுடியாது. இதனால்தான் தரும வாழ்வுக்கு நேர்மை என்பது பெயர்.
  • மற்றவர்கள் உள்ளத்தில் என்ன நடைபெறுகிறது? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எதைத் திட்டமிடுகிறார்கள்? என்று யோசித்துக் கொண்டு இருந்தால் மனதில் கவலையும் துக்கமுமே வரும். உள்ளத்தைச் சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்வதே சுகம்.
  • அரண்மனை வாழ்க்கையிலும்கூட ஒருவன் உண்மை வாழ்வு வாழ முடியும்.
  • எந்தப் பொருளாலும் ஆன்மா பாதிப்படைவதில்லை. ஆன்மாவைத் தீண்ட ஒரு பொருளாலும் முடியாது. ஆன்மா சுதந்திரமாகத் தனது முடிவுகளை அதுவே எடுக்கும். அது தன்னைத் தானே வழி நடத்தும். ஆனால் பொருள்களைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும் உள்ளத்தில் நாம் எவ்விதம் எண்ணம் கொள்கிறோமோ, அதுதான் ஆன்மாவைப் பாதிக்கும்.
  • நன்மை செய்வதும், இடர்களைப் பொறுப்பதும் மனிதரின் கடமை. இடையூறுகள் உள்ளத்தின் சக்தியையாவது சுபாவத்தையாவது பாதிக்கக்கூடாது.
  • இன்பமும் துன்பமும் மனத்துக்குள் உள்வசத்திலேயே இருக்கின்றன. புறத்தில் ஒன்றுமில்லை. உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம்.
  • இவ்வுலகில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையும் கொண்டு வாழ்வதும், பொய்யரிடமும், அநீதி செய்பவரிடமும், வெறுப்பின்றி அன்புடன் நடந்து கொள்வதுமே.
  • நாம் இடங்கொடுக்காமல், விருப்பப்படாமல் எந்த ஒரு விஷயமும் மனதில் நுழைய முடியாது.


  • மனதின் சுத்தம் என்பது எது?

தீடிரென ஒருவர், "நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? " என்று கேட்டால் "இது என் மனதிலுள்ள எண்ணம்" என்று எளிதில் சொல்லும் படி மனம் இருக்க வேண்டும்.

பிறரிடம் சொல்ல இயலாத தவறான எண்ணங்கள் மனதில் உதிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

எந்தக் காலத்திலும் உள்ளத்தில் இருப்பதைப் பலர் அறிய வெளிப்பட்டாலும், அதில் வெட்கப் படக்கூடியது எதுவும் இல்லாதபடி மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி மனதைப் பழக்கப் படுத்திக் கொண்டு நன்மையே நாடி வரும் மனிதன், தன் சரீரத்தில் குடி கொண்டிருக்கும் கடவுளின் உண்மை அடியவர் ஆவான்.

அப்போது மனதுக்குள் குடியிருக்கும் இறையம்சமான ஆன்மாவை, எந்த இன்பமும் மாசுபடுத்தாமலும், எந்த துன்பமும் துயர் படுத்த விடாமலும் இறைவன் காப்பார். 

இவ்விதம் மனம் உறுதிப்பட்டவன் பிறர் சொல், செயல், எண்ணம் என்னவென்று கவலைப்படாமல் தன் கடமையை மட்டும் கருதி வாழ்வான்.

*******   *******   *******   *******   *******

பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  

தமிழில் மூதறிஞர் ராஜாஜியால்  "ஆத்ம சிந்தனைகள்'  என்ற பெயரிலும், திரு. பொ.திரிகூடசுந்தரத்தால் "இதய உணர்ச்சி' என்கிற பெயரிலும், திரு. என்.ஸ்ரீநிவாசன் அவர்களால் "மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்" என்கிற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன.

சனி, 28 செப்டம்பர், 2019

கண்ணீர் துளிகள்

அழுகை - ஏழு நிலைகள்.




மனநிலையில் ஏற்படும் ஏழு விதமான பாதிப்புகளால் அழுகை ஏற்படுகிறது என மஜீத் இப்னு மைஸரா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் குறிப்பிடுகிறார்.

1. ஆனந்தம்
2. மன அழுத்தம், (புத்தி பேதலித்த நிலை)
3. வேதனை
4. திடுக்கிடும் அதிர்ச்சி சூழல்
5. நடிப்பு
6. போதையில் (தன்னிலை மறந்து)
7. இறை அச்சம், (பாவத்தைக் குறித்த மன வருத்தம்.)


மனம் வருந்தி இறையச்சத்தில் செய்யும் பிரார்த்தனை மிக வலிமை பெற்றது.

இறை வேண்டலில் சிந்தப்படும் கண்ணீர் நெருப்புக் கடலையும் அனைத்து விடும் தன்மை பெற்றது. 

இறைமைக்குப் பயந்து அழுது வடித்த கண்ணீர் பட்ட இடத்தை நரக நெருப்பு தீண்டாது.

"நீங்கள் பிரார்த்தனையில் சிந்தும் கண்ணீர் இறைவனின் கைகளில் உள்ள துருத்தியில் அல்லவோ வைக்கப்பட்டிருக்கிறது" என வேதம் சொல்கிறது.

மனம் உருகி இறையச்சத்தோடு கண்ணீர் சிந்திச் செய்யப்படும் வேண்டுதலின் பலனை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 

நியாயத்தீர்ப்பு நாளில் இறையரசின் நிழலில் இளைப்பாறும் ஏழு நபர்களில் ஒருவர் நிச்சயமாக, "தனிமையிலிருந்து இறைவனை நினைத்துப் பயந்து கண்ணீர் வடித்தவராக வாழ்ந்தவராக இருந்திருப்பார்" என இறை நூலில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு இறையடியவரின் கண்களில் நோய் ஏற்பட்டிருந்தது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், "இனிமேல் அழுது பிரார்த்தனை செய்வதில்லை என வாக்களித்தால் கண்கள் குணமடைந்துவிடும்" என்றார்.

அதற்கு "இறைமையை நினைத்து அழாத கண்களினால் எவ்வித நன்மையுமில்லையே" என அவர் பதிலுரைத்தார்.

"துயரப்படுகிறவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்."( Blessed are those who mourn, for they shall be comforted) எனும் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின் மெய்ப் பொருளை யார் உணர்வார்?




வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

இயற்கையின் விதி

நல் வாழ்க்கைக்கான அடிப்படை விதி.





இயற்கையின் விதி :

ஒரு செயலைச் செய்ய ஆசைப்படும் போதே அது நல்லதா அல்லது கெட்டதா என்பது மனதுக்குத் தெரியும்.

இந்த இயல்பான எச்சரிக்கை உணர்வு  பிறக்கும்போதே ஒவ்வொரு உயிரிலும் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளது.

இதுவே இயற்கையின் விதி.

இதை 

மன சான்று (Conscience), 

(அல்லது)

தார்மீக மதிப்பு (Moral Values), 

(அல்லது)

அடிப்படை  உணர்வு (Common Sense) எனப்படுகிறது.

மனம் செயல்படும் விதம் :


மனசாட்சியின் குரலைத் தெளிவாகக் கேட்கக் கூடுமா?


மனக் காட்சியில் நாம் நடக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியுமா?

உயிரில் ஒளிந்திருக்கும் மன சாட்சியை எப்படிப் புரிந்து கொள்வது?

இந்தக் கேள்விகளுக்கு மனம் எப்படி செயல் புரிகிறது எனப் புரிந்து கொள்வது அவசியம்.

மனம் பல வித உணர்வுகளால் இயக்கப்படுகின்றன.

விருப்பங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துகின்றன.

அனுபோகம் விருப்பங்களைத் தீர்மானிக்கின்றன.

அனுபவங்களிலிருந்து அனுபோகம் அடைகிறோம்.


உதாரணமாக :


ஒரு பழத்தைச் சுவைக்கிறோம். அது அனுபவம்.

அதன் சுவை மகிழ்ச்சி அளிக்கிறது. அது அனுபோகம்.

இப்போது மறுமுறை பயணத்தின் போது அந்தப் பழத்தைக் காண நேரிட்டால் பசி இல்லை என்றாலும் வாங்கி சுவைக்கத் தூண்டப்படுகிறோம். அந்த அனுபோகம் விருப்பமாக ஆழ் மனதில் பதிந்து விட்டது.

இப்போது தேவையற்றது எனத் தெரிந்தாலும் வாங்கிச் சுவைக்கத் தூண்டுகிறது.

இது போல் பெருமை, பணம், அதிகாரம், பாலியல் விருப்பங்கள், மனதை மயக்கும் பொருட்கள் தரும் அனுபவம் இச்சையுணர்வாக (Strong Desires) மாறும் போது அவை ஆழ் மனதில் தீவிர விருப்பங்களாகப் (Addictions) பதிந்து விடும்.

இதில் எதாவது ஒரு  உணர்வு மனதை அதிதீவிரமாக ஆட்கொண்டு செயல்களைக் கட்டுப்படுத்தும்.

இங்கு தான் மனதில்  எழுதப்பட்டுள்ள இயற்கை விதிக்கும், உணர்வுகளுக்கும் இடையில் போராட்டம் தொடங்குகிறது.

நமது விருப்பங்கள் மனதில் எழுதப்பட்டுள்ள இயற்கை விதிக்கு முரணாகச் செய்ய முற்படும்போது அச்சம், கவலை, பதற்றம் மனதில் தொற்றிக் கொள்ளும்.

இந்த மன சாட்சியின் எச்சரிக்கை உணர்வே அறிவு. அதற்கு கீழ்ப்படிந்து நடந்தால் அதுவே புத்தி.

எனினும் உணர்வுகள் லேசுப்பட்டவை அல்ல. அவை வலிமையானவை. அறிவு சொல்வதைக் கேட்காது. புத்திமதியை அலட்சியம் செய்யும்.

உணர்வை வெல்ல அறிவை வலிமையாக்க வேண்டும்.

அறிவை வலிமையாக்குவது தெய்வீக அன்பு.

தெய்வீக அன்பு :


இயற்கை விதியின் படி வாழ விரும்பினால் மனம் தெய்வீக அன்பினால் நிரப்பப்பட வேண்டும்.

மனித உணர்வுகளில் மிக உயர்ந்ததும், மிக மிக ஆழ்ந்த பொருளையுடைய உணர்வு தெய்வீக அன்பு ஆகும். 

அது நிபந்தனையற்றது.

தாய், தந்தை அன்பிலும் மேலானது.

எந்தவித பிரதிபலனையும் எதிர் பார்க்காதது.

பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதில் ஆனந்தம் அடையும்.

சத்தியத்தில் சந்தோஷப்படும்.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்.

பெருமை, புகழ்ச்சியை விரும்பாது.

மனதை தெய்வீக எண்ணங்களால் நிறைத்தல்,  வேதங்களைத் தியானித்தல், அறிவை உணர்தல், அந்த அறிவில் நிலைத்திருக்கத் தொடர்ந்து வைராக்கியமாகப் போராடுதல் ஆகியவை தெய்வீக அன்பில் நிலைத்திருக்க உதவும் வழிமுறைகள்.

இறையன்பின் அடிப்படை :


"உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல் பிறனிடத்தில் அன்பு கூறுவாயாக" 

எனும் சிந்தையே இறையன்பின் தொடக்கப் புள்ளி.

"எனக்கு எந்த செயல்கள் எல்லாம்  வலியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறதோ அச் செயல்களை நான் பிற உயிர்களுக்குச் செய்தல் கூடாது" 

"நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்."

"தீங்கும் நன்றும் பிறர் தர வாரா"

போன்ற தங்க வாக்கிய கட்டளைகள் (Golden Rules) இயற்கை விதியின் வார்த்தை வடிவங்கள்.

இந்த சிந்தனையின்  தொடர்ச்சியே அறம், ஒழுக்கம், வாழ்க்கை நெறிகள் போன்ற கோட்பாடுகள்.

இயற்கை விதியின்  அடிப்படை :


1. இயற்கையை நேசித்தல் (Love of Nature)

2. உண்மை (Truth)

எனும் இரு பண்புகளே நல்வாழ்க்கைக்கு அடிப்படை நெறி. 

இந்த இரு அறங்களையும் திருக்குறள் இவ்விதம் கூறுகிறது.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்ம்மை நன்று.

(பொருள் : ஆராய்ந்து பார்த்தால், எல்லா உயிர்களையும் நேசித்தல் ஒப்பற்ற அறமாகும். உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.)


தெய்வீக அன்பில் மனம் கீழ்ப்படிந்து வளரும் போது அது வாழ்க்கைப் பண்புகளில் குணங்களாக வெளிப்படும்.

மன சாட்சி பேசும்.

நடக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும்.

விட்டு விலக வேண்டியது புரியும்.

மனம் எத்தனைத் துயரைச் சந்தித்தாலும் கலங்காது.

எதற்காகப் படைக்கப்பட்டோமோ அந்த இலக்கையும் அடைய முடியும்.

மாறாக விருப்பங்களின் இச்சைக்கு மனம் அடிமையாகி விட்டால் தெய்வீக உணர்வு போய் விடும். புத்தி மயங்கும். அறிவீனமாக செயல்பட வைக்கும். அப்போது

கண்கள் இருந்தாலும் காண முடியாது.

செவிகள் இருப்பினும் மனசாட்சியின் சப்தம் கேட்காது.

உணர்வு இருந்தாலும் உண்மை புரியாது.


தெய்வீக அன்பிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்வதே நல்வாழ்வின் அடிப்படை விதி. 



சனி, 29 செப்டம்பர், 2018

நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.

🌺 நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.




🔹 கசப்பை வளரவிடாதீர்கள். பழிவாங்குதலில் முடியும்வரை அதன் அனல் அணையாது!

அதற்கு மாற்றாக அன்பினால் மனதை நிரப்புங்கள். அதன் நேசத்தில் எப்போதும் மகிழ்ந்து களி கூறலாம்.

🔸 இச்சையை வளரவிடாதீர்கள். விபச்சாரத்தில் முடியும்வரை அதன் இமை சாயாது!.

ஒழுக்கத்தை உயிரை விட மேலாக கருதி நேசியுங்கள். அதுவே வாழ்வை மேன்மைப்படுத்தும்.

🔹 கோபத்தை வளர விடாதேயுங்கள். கொலையில் முடியும்வரை அதன் குருதி ஆறாது!

மன்னிப்பை ஈந்தளியுங்கள். மனதின் சமாதானம் கடலைப்போல விஸ்தாரம் ஆகும்.

🔸 பெருமையை வளர விடாதேயுங்கள். அவமானத்தில் முடியும்வரை அதன் தாகம் தீராது!

தாழ்மையை மனதில் எப்போதும் தரித்துக் கொள்ளுங்கள். அது உயர்ந்ததும் உன்னதமான நிலையை எய்திட அனுக்கிரகம் செய்திடும்.

🔹 பொறாமையை வளர விடாதேயுங்கள். நம்மை கொல்லாதவரை அதன் வேகம் குறையாது!

பிறரின் திறமையை, உழைப்பை, உயர்வை அங்கீகரியுங்கள். அது அனைவருடனும் நட்போடும், நேசத்துடனும் வாழ்வில் சுபிட்சமாக வாழந்திட அருள் செய்யும்.

வாழ்க வளமுடன்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மறு பிறப்பாளன்

மறு பிறப்பு.





"நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் கடவுளின் இறையரசில் இடம்பெற முடியாது” - இயேசு கிறிஸ்து.

ஒரு யூத சமய போதகர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக  இரவில் இயேசுவை சந்திக்கிறார். அவரிடம் இயேசு கிறிஸ்து கூறியது தான் இந்த மாபெரும் உண்மை.

ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? 

ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் எப்படி நுழைய முடியும்? "ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாகப் பிறக்க முடியாதே” என அந்தப் போதகர் மறு உத்தரவு சொன்னார்.

அதற்கு இயேசு:

ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். "நீ மறுபடியும் பிறக்க வேண்டும்". 

"காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் இறைமையினால் மறுபடியும் பிறக்கிறான்” என்றார்.

மறுபடி பிறத்தல் என்பது குலப்பிறப்பால், சமய அடிப்படையில் நிகழ்வதல்ல.

எந்த ஒரு மனிதன் தனது இழிநிலையை உணர்ந்து, அந்த இழிநிலைக்குக் காரணமான அனைத்துச் செய்கைகளையும் விட்டு விலகி புது வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானிக்கிறானோ அப்போது மறு பிறப்பாளானாக தனது பயணத்தை  துவக்குகிறான்.

தனது இழிநிலையை உணர்ந்து புத்தி தெளிதல் எனும் இந்த நிகழ்வு கடவுளின் அருளால் மாத்திரம் ஒரு மனிதனின் ஆன்மாவில் நிகழ்கிறது.

ஒவ்வொரு மனிதரும் வாழ்வின் கஷ்ட நேரத்தில் இவ்வித புத்தி தெளிவை லேசாக உணர்ந்தாலும், துன்பம் விலகிய உடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவர். காரணம் அந்தப் பழைய வாழ்க்கைத் தரும் இன்ப மயக்கம்.

இவ்விதம் இல்லாது துன்பம் நேரிடினும் தனது அர்ப்பணிப்பில் உறுதியாக வாழ்வைத் திட சங்கல்பம் கொண்டு தொடர்பவர்கள் மறு பிறப்பு அடைந்தவர்கள்.

சில குறிப்புகள்:


▪ ஆன்மா ஆசைப் பிணைப்பு என்ற ஒரு வகை உணர்வு பந்தத்தால் இவ்வுலகில் கட்டப்பட்டுள்ளது.

▪ அந்த ஆசைப் பிணைப்பில் இருந்து விடுபட்ட ஒருவன் இறை  நிலையை நோக்கிப் பயணிக்கிறான்.

▪ இருளடைந்த மேகங்களில் இருந்து வெளிவரும் நிலவைப் போல ஆசையில் இருந்து விடுபட்டவன்  ஞானத்தை புதையலைத் தேடுவது போலத் தேடி, நாடி தனது களங்கங்கள் அனைத்தையும் நீக்கி, தன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் வாழ்ந்திருப்பான்.

▪ ஆசையற்றவனாக இருக்கும் ஒருவன் ஒரு போதும் ஆன்மாவில் மரணம் அடைவதில்லை.  ஒழுக்கமும், தூய்மையை விரும்பும் மனோ நிலையும் கொண்டவனே உண்மையில் மறுபிறப்பாளனாவான்.

▪  புலன்களால் நுகரும் மணம், சுவை, பிறபொருட்கள் அளிக்கும் இன்பங்களில்   நாட்டம் இருக்காது.

▪ பாராட்டுக்கள், சாதனை மற்றும் புகழில் பற்று இருக்காது.

▪ அனைத்து உயிரினங்களின் வலி உணர்ந்து அவற்றைத் தனது சொந்த உறவைப் போல கருதி சிநேகமாக நடந்து கொள்வான்.

▪ அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்துவதையும், அனைத்து உயிரினங்களிடமும் அச்சங்கொள்வதையும்  நிறுத்துகிறான்.

▪ எண்ணத்தாலும், வாக்காலும், செயலாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறான்.

▪ சடங்குகள் முக்கியமானது அல்ல அதன் பொருள் என்ன என்று உணர்ந்து கடைப்பிடிக்க கவனமாக இருப்பான்.

▪ வேதங்கள் அனைத்தையும் கற்று, சமய சடங்குகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றி, உபவாசம், விரதம் இருந்து, வேத தர்க்கங்கள்  அனைத்தையும் அறிவதால் மட்டுமே ஒருவன் மறுபிறப்பாளன் ஆகமாட்டான்.

▪ கருணை, அன்பு இவை இல்லாமல், ஆசை, பெருமை நிறைந்து இருக்கும் ஒருவன், பல்வேறு வகை அறச்சடங்குகளையும், தர்மங்களுடன்  கூடிய. பல்வேறு வேள்விகளையும் நிறைவு செய்வதால் மட்டுமே இறைமை நிலையை அடைந்துவிட முடியாது.

 ▪ எதையும் விரும்பாமலும், எதையும் வெறுக்காமலும் நடுநிலையில் பற்றறுத்து சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் போது அவன் இறைமை நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறது.

🔹 வைராக்கியம் நிறைந்த இறைப்பற்று,

🔸 சுயப் பற்றிலிருந்து விடுதலை,

🔹 இடைவிடாது உண்மையைத் தேடி விழைதல்,

🔸பொறுமையுடன் துன்பத்தில் அமைதி காத்தல்,

🔹 துன்பம் இழைப்பவரையும் மன்னித்தல்.

🔸 மனத் தாழ்மையாக இருத்தல்.

🔹 அனைத்து உயிர்களிடத்தும் இறைமையைக் காணுதல்

ஆகிய எழு குணங்களைக் கொண்டவர்கள் நிச்சயம் முழுமையடைவார்கள் அல்லது நிறைவடைவார்கள்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான வாய்ப்பு. அதன் பொருளையும் தனது படைப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதை விட ஒருவருக்கு மேலானது வேறு ஒன்றும் இல்லை. 

சனி, 28 ஜூலை, 2018

வெறுமையான / நிறைவான பாத்திரம்.


வெறுமையான / நிறைவான பாத்திரம்.




விருப்பங்களை  நிறைவேற்ற முற்படும் போது அதற்கான விடையை மனமானது தனது சிந்தனைத் தொகுப்புகளில் இருந்தே தேடத் துவங்குகிறது. "இதயத்தின் நிறைவே வாய் பேசும்".

இதயத்தை ஒரு பாத்திரமாக உருவகப்படுத்தினால்; அது சிந்தனை மற்றும் அனுபவங்கள் கற்றுக் கொடுத்த இன்ப மற்றும் துன்ப உணர்வுகளால் நிறைந்து காணப்படுகிறது.

நாம் பேசும் வார்த்தைகள் இந்தச் சிந்தனை தொகுப்புகளில் இருந்தே வெளி வருகின்றன. நமது செயல்களை இந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களும், நம்பிக்கைகளும் தான் தீர்மானிக்கிறது.

நமது பாத்திரங்கள் நிறைவை நோக்கி நகர்கிறதா அல்லது வெறுமையாக உள்ளதா?

அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு மனதை நல்ல எண்ணங்களால் தொடர்ந்து நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இஃது ஓர் இடைவிடாத தொடர் பணி. 


நற்சிந்தனை:


நல்ல எண்ணங்கள் என்பது அன்பை முதன்மைப் படுத்தும். பிறரைக் குற்றப்படுத்தாது. விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாக இருக்க விரும்பும். துன்ப சூழலில் பொறுமையுடன் அமைதி காக்கும். எதிரிடையாகச் செயல்படுபவரை  மன்னிக்கவும் அவரிடமிருந்து விலகி வாழவும் கற்றுக் கொடுக்கும்.

நல்ல மனிதர்களின் கூட்டுறவை விரும்பும். நல் நம்பிக்கையை ஏற்படுத்தும். தீய நடத்தைகள் அளிக்கும் தற்காலிக இன்பத்தை வெறுத்து இச்சை அடக்கத்துடன் வாழ உதவும்.

நல்ல எண்ணங்கள் சாந்தமும் தயவும் உடையது. பொறாமை, கசப்பு, வெறுப்பு இவற்றுக்கு எதிரானது. கர்வம், சுய தம்பட்டம், பெருமை இவற்றை மனதில் இருந்து அகற்றும்.

பிறருக்குத் தீங்கோ, கெடுதலோ நினைக்காது. நல்லவர்கள் வெற்றி பெறும் போது மகிழும்.

நெருக்கடிகள் மற்றும் வெற்றிகள்:


வாழ்வின் நெருக்கடியில் தவறான பாதையில் செல்லத் தூண்டப்படுவோம். நல்ல எண்ணங்கள் மேல் உள்ள வலிமையான நம்பிக்கை மட்டுமே துயரமான தருணங்களில் தவறான பாதையில் செல்ல விடாது நம்மைக் காப்பாற்றும்.

வாழ்வில் அடையும் சிறு வெற்றிகள் கவனச் சிதறலை ஏற்படுத்தும். வெற்றிகரமான பாதையில் பயணிக்கும் போது உடன் பயணிப்பவர்களைத் திருப்தி படுத்த தவறான பாதையில் செல்லும் படி தூண்டப்படுவோம். இதைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

நல்ல எண்ணங்கள் நல் மனிதர்களின் கூட்டுறவால் மேம்படும்.

இன்றைய கடினமான காலத்தில் நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புதல் என்பது சவாலானது. ஒரு தோட்டத்தைப் பராமரிப்பது போன்று தொடர்ந்து கவனமாக உழைக்க வேண்டும். கவனமற்று அலட்சியமாக இருந்தால் களைகள் பரவி புதர் மண்டி விடும்.

வாசிப்பு, தேடல், நட்பு, தனிமையில் இருக்கும் போது ஏற்படும் விருப்பங்கள், நேரத்தைச் செலவிடும் விதம் இவை தான் நமதுப் பாத்திரத்தை எதைக் கொண்டு நாம் நிரப்ப விரும்புகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.