திருவாசகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாசகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 அக்டோபர், 2019

வேற்று விகார விடக்கு

திருவாசகம் : வேற்று விகார விடக்கு - வேறு வேறு உருவங்களில்.




காலப் பெருவெளியின் சமுத்திரத்தில் 
அலை அலையாக எழும்புகிறது 
மானுடத் தலைமுறைகள்! 
தனி வாழ்வு அதிலோர் அனுவிலும் 
சிறிதான நீர்த்துளிச் சிதறல்.  

கவனச்சிதறலாக கடந்துபோன 
வாழ்வில்தான் 
எத்தனை விருதாவன 
உட்கிடக்கைகள். 

தவறவிட்ட வாய்ப்புகளும் 
தவறி விழுந்த தடுமாற்றங்களும்
தந்திட்ட தீரா வலிதானே
தவத்திற்கு விதையானது. 


வயதானால் உடலின் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. கறுத்த முடி வெண்மையாகிறது. பற்கள் உதிர்கிறது. தோல் சுருக்கம் அடைகிறது. முதுகு வளைந்து கூன் விழுகிறது. உடல் விகாரமாகிறது. எனினும் இவ்வுடம்புடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். 
ஆனால் மாணிக்க வாசகர் அவர்கள் "ஆற்றேன்" என்கிறார். "ஆற்றேன்" என்ற சொல்லுக்கு "பொறுக்க முடியவில்லையே" என்பது பொருள். தாங்கமுடியாத வேதனையுடன் இந்த உடலுக்குள் என்னால் இருக்க முடியவில்லையே என முறையிடுகிறார் அருளாளர்.
ஐம்புலன்களை ஏமாற்றும் வஞ்சகன் என்கிறார். 
ஏன்? புலன்களே தவறு செய்ய நம்மைத் தூண்டுகின்றன. அதனால் மனம் சஞ்சலம் அடைகிறது. அவை குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. 
அதை மீண்டும் செய்யாது இருக்கப் புலன்களே யோசனை சொல்கின்றன. அதை நம்புகிறோம். கீழ்ப்படிந்து கடைப் பிடிக்கிறோம். சிறிது நாள் சென்ற பின்பு குற்றவுணர்வு மங்குகிறது. 
இப்போது புலன்களே ஆசையை மீண்டும் துளிர்க்கச் செய்கின்றது. அவற்றால் மீண்டும் உணர்வுகள் தூண்டப்படுகிறது. எதைச் செய்ததால் மனம் வருந்தியதோ, எதைச் செய்யக்கூடாது என மனதில் நினைத்தோமோ அதையே மீண்டும் துணிகரமாகச் செய்கிறோம். 
ஆக புலன்களே நம்மை மீண்டும் மீண்டும் தவற்றில் விழவைத்து மனதைப் பலவீனப்படுத்திச் சிறைபிடிக்கின்றன. எனவே புலன்களை ஏமாற்றும் வஞ்சகம் என்கிறார்.
புலன்கள் அளிக்கும் சிற்றின்ப உணர்வுகள் என்பது பொய்ப் பொருள். அது அறியாமை எனும் இருள். அது மயக்கும் இயல்புடையது. திரும்பத் திரும்ப அனுபவிக்க வேண்டும் எனும் தீரா வேட்கையை எழுப்பக்கூடியது. மனதை அடிமைப்படுத்தும். கவனச் சிதறலை ஏற்படுத்தும். வாழ்வின் நோக்கத்தை மறக்கடிக்கும். இறுதியில் காலத்தில் வாழ்க்கையை வீணடித்து விட்டோமே எனும் தீரா துயரத்தையும் மன வேதனையும் அளிக்கும்.
இந்தச் சிற்றின்பச் சேற்றிலிருந்து மீட்கப்பட இறைமையின் ஒத்தாசை தேவை. 
நாமாக உளைச் சேற்றிலிருந்து விடுபட முடியாது. சொந்த முயற்சியில் விடுபட முயன்றால் இன்னும் அமிழ்ந்து போய் விடுவோம்.
அதிலிருந்து வெளியேற நமக்கு உதவி தேவை. கைதூக்கி விடப்பட வேண்டும்.  இந்த அறிவை அறிவது மெய்ப்பொருள். இவ்வாறு உணர்வது புத்தி.
எனவே மெய் அறிவு அடைந்தவர்கள் இந்த உடம்புடன் நெடுநாட்கள் உயிர்வாழ வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதக்கூடாது.
மாறாக, வினைச் சுழற்சிக் கட்டிலிருந்து அறுத்து என்னை விடுவிக்க  இறைவனே உம்மால் மட்டுமே முடியும் என அவரிடம் சரணாகதி ஆவதே உயிர் வாழ்தலின் முக்கிய பயன் என உணர்தல் வேண்டும்.




திருவாசகம் பாடல் : 

84. வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப 
85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று 
86. போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்,
87. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
88. கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே 
89. நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
90. தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே  
91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ வென்று 
92. சொல்லற் கரியானைச் சொல்லி திருவடிக் கீழ்ச் 
93. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
94. செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவன் அடிக்கீழ் செல்வர் 
95. பல்லோரும் ஏத்த பணிந்து
இவ்வுலகில் இறைவன் திருவிளையாடல் புரிந்த இடம் தென்பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை. நள்ளிரவிலும் இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. இது இறைமையின் இருப்பையும், உடலின் அகத்தையும் குறிப்பது.
இந்தப் பாடலின் பொருளையுணர்ந்து உடலினுள் உறைந்து சர்வ காலமும் நடனம் புரியும் இறைவனை இடைவிடாது துதித்தல் வேண்டும். 
அவ்வாறு இறைவனை இடைவிடாது துதிப்பவர் ஏக இறைவன் வாழும் சிவபுரத்துக்குச் செல்வர். சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

இறைவனின் பண்புகள்

திருவாசகம் - மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே




மலரின் இதழ்களில் 
நீர்த்துளி! 

பனித்துளியா? மழைச் சாரலா? 
கண்ணீரோ?
பூவிற்கும் வியர்த்திருக்குமோ? 


எதுவாக இருக்கக் கூடும்? 

அசரீரியாக ஒரு குரல்  
அது பார்ப்பவரின் 
மனதில் ஒளிந்திருக்கிறது 
மலரோ எப்போதும்
மலராகவே இருக்கின்றது.





திருவாசகம் பாடல் - திருச்சிற்றம்பலம். (62 -83) - இறைவனது பண்புகள்


62. மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
63. தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
64. பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
65. நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠ 

66. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
68. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
69. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
70. இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠


71. அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 
72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
73. ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
74. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
75. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠ 

76. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
77. போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
78. காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
80. தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠ 

81. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
82. தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
83. ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 



இருக்கிறவராகவே இருக்கிறேன்.



(படம் நன்றியுடன் : ராமலக்ஷ்மி)  


நாம் ஆலயத்துக்குப் போகிறோம். 

ஆனால் எப்போதாவது மனம் மறந்து நேரம் போவதே தெரியாமல் இறைவனைக் கும்பிடுகிறோமா?

கடவுளைத் தொழுது கொள்ளும்போது கண்களில் ஈரம் கசிந்ததுண்டா? 

வீட்டில்  தொழுகை செய்கிறோம். மனம் இலயத்து இன்னும் கொஞ்சம் நேரம் கடவுள் சமூகத்தில் அமர்ந்திருக்க வேண்டும் எனும் ஆசை வருகிறதா? 

வேதத்தை, அற நூல்களை வாசிக்கும் நேரத்திற்கும், பிற நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாசிப்பதற்குச் செலவிடும் நேரம் ஒப்புமை அளவில் எப்படி இருக்கிறது?

வேதத்தையும், இறை நூல்களையும் ஆர்வமுடன் வாசிக்கிறோமா?  அல்லது கடமைக்காக வாசிக்கிறோமா? 

பொதுவாக நாம் துயரத்தில் இருக்கும்போது இறைவனைக் கருத்தாய் தேடுகிறோம். 

எனது இளவயதில் மரணத்துக்குச் சமீபமாக இருந்தேன். மரணத்துக்கும் எனக்கும் ஒரு நூலிழை தான் இடைவெளி.

அப்போது இறைவனது பல நாமங்களைக் குறிப்பிட்டு இடைவிடாமல் வேண்டுதல் செய்வேன். 

வாழ்வில் மீதமுள்ள வருடங்களில் இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும் எனப் பல தீர்மானங்களை எடுத்தேன். அப்போது இறை நூல்களை ஒழுங்காக உணர்ந்து வாசிப்பேன். விரதம் இருந்தேன். 

ஆனால் துயரச் சூழல் மாறியவுடன் வருடங்கள் செல்ல செல்ல அனைத்தையும் மறந்து மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு மனம் திரும்புகிறது. இறை வேண்டல், வேதம் வாசிப்பது ஒரு தினசரி கடமை முறையாக மாறி விடுகிறது.

துயரத்திலிருந்தபோது இருந்த உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு இப்போது இல்லை. இது எவ்வளவு துரதிர்ஷ்டம். நன்றியற்ற தன்மை.

இவ்வாறு நாம் சூழலுக்குத் தக்க மாறுகிறோம். ஆனால் இறைவன் மாறாதவர். அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர். அவர் அன்பானவர். அவர் தீமையை நம்மிலிருந்து நீக்க விரும்புகிறவர். நல்வழியில் நடக்க உறுதுணையாக உதவி செய்பவர். நம்மை உயர்த்தி மேன்மையாக வாழ வைப்பவர். 

ஒவ்வொரு சமய நூல்களிலும் இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு.  இறைவனது பிள்ளைகள் நாம். அவரது குணங்கள் நம்மில் உருவாக இறைவன் விரும்புகிறார். அவரது திருப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவரது குணத்தைச் சொல்கிறது.

தொழுகையின் போது ஒவ்வொரு பெயரை மனமுவந்து நன்றியுணர்வுடன் உச்சரிக்கும்போது அப்பண்புகள் நம்மில் உருவாகும்.

நமது மனதை மீண்டும் மீண்டும் இறைவனிடம் அர்ப்பணம் செய்வதன் மூலமாகவே வாழ்க்கைப் பயன் நிறைந்ததாக மாறும்.




அருளாளர் மாணிக்க வாசகர் இப்பாடலில் மனம் கசிந்து இறைவனது அன்பில் தோய்ந்து அவரது பண்புகளை அனுபவித்து உணர்ந்து போற்றிப் பாடுகிறார்.

அவரது மனதில் இறைவனது அன்பு எழுப்பும் உணர்வுகள் அருவியாகக் கொட்டுகிறது.

இப் பாடல் பகுதியில் அருளாளர் எத்தனை விதமாக இறைவனது பண்புகளைப் போற்றிப் பாடுகிறார் பாருங்கள்.


தூய்மையானவரே. களங்கமற்றவரே.

நீர் ஒளியாகப் பிரகாசிப்பவர்.


நீர் தேன் போன்ற இனிமையானவர்.


அரிய அமுதம் போன்று என்னை உயிர்ப்பிப்பவர்.


பாசமாகிய பற்றை அறுத்து என்னைக் காத்து வழி நடத்தும் குருவானவர்.


என் மனதில் உள்ள வஞ்சகத்தை அழிக்கும் பெருங்கருணை நதி.


தெவிட்டாத அமிர்தம். 


எல்லையில்லாதவர். 


மனதில் மறைந்திருக்கும் ஒளி.


என் கல் மனதை உடைத்து நீர் போல் உருகச் செய்பவர்.


எனது ஆருயீர்.


இறைவா! உமக்கென்று இன்பம், துன்பம், சுகம், துக்கம் இயற்கையில் இல்லாதவர்.


எம் போன்று அடியவர்க்கு வரும் இன்ப துன்பங்களை நீர் ஏற்றுக் கொள்வதனால் இன்பமும் துன்பமும் உடையவர்.


உமது அன்பர்களிடத்தில் அன்புள்ளவர்.


எல்லாப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவர்.


காரிருளிலும் ஒளியிலும்  வாசம் செய்பவர்.


பேரொளியே.

புறத்தில் வெளிப்படாத பெருமையுடையவர். ( இறைவனைக் கண்ணால் காண முடியாது. அறிவினாலும் முழுமையாக அறிய முடியாது. அனுபவத்தால் உணர்ந்து சிந்தனையில் அவர் பெருமையை அனுபவிக்க மட்டுமே முடியும்)

துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

என்னை மீட்டுக் கொண்டவர். 

எம் அன்பு தந்தையே.

இயற்கையின் நுட்பமான அறிவே.

எப்போதும் காப்பவர். (போகையில், வருகையில், நிற்கையில் என எப்போதும் நிழலாய், மேகமாய் உடனிருந்து காப்பவர்.)

புண்ணியனே.

என்னைக் காப்பாற்றும் அரசரே.

காண்பதற்கு அரிய பேரொளியே

மகாநதி போன்ற ஜீவ நதியே. இன்ப ஊற்றே.

தாய், தந்தையிலும் மேலானவரே.

மாறுதலையுடைய இவ்வுலகத்தில் நிலை பெற்ற தோற்றத்தையுடைய ஒளியாகவும், சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகவும்  வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு  உயிர்களின் மனப் பக்குவத்திற்கேற்ப அருள் பாலிக்கும் தெளிந்த ஞானமே.

என் மனதில் வற்றாத ஜீவ ஊற்று போன்று சுரக்கும் அமிர்தமே.


இறைவனை வழிபடும்போது நமது மனதிலும் இத்தகைய நன்றியுணர்ச்சி மேலிடுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


வியாழன், 5 செப்டம்பர், 2019

தாயுமானவர்

திருவாசகம் - தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.




49. நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
50. மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை 
51. மறைந்திட மூடிய மாய இருளை 
52. அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் 
53. புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி 
54. மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

55. மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

56. விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் 
57. கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் 
58. நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
59. நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
60. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
61. தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

பொருள் :

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த




பிரபஞ்சம்  ஐந்து பூதங்களின் சேர்க்கை. ஒவ்வொன்றிற்கும் ஒரு நிறம் உண்டு.

மண் - பொன்னிறம்
நெருப்பு - சிவப்பு
காற்று - கருமை
நீர் - வெண்மை
ஆகாயம் - புகை

இந்த ஐம்பூதங்களிலும் இறைவன் மறைந்திருக்கிறான். 

இறைவனை அகக் கண்களால் பார்க்க முடியாது. அந்த இறைவனை விண்ணில் வசிக்கும் தேவர்கள் எப்போதும் போற்றித் துதிக்கின்றார்கள்.


அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் 


மனம் புலன்கள் வசப்பட்டு இன்பம் தரும் என நம்பி பல தீயச் செயலில் ஈடுபடுகின்றன. அவை தரும் இன்பம் தற்காலிகமானது. அது பின்பு துயரமாக மாறுகிறது.

அறச் செயல்கள் நல்லது. எனினும் அவையும் மீண்டும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கிறது.

புண்ணியம், பாவம் என்னும் இரு வினைகளின் அறுக்க முடியாத கயிற்றால் மனம் கட்டப்பட்டு அறியாமை என்னும் மாய இருளில் சிக்கித் தவிக்கிறது.





புறந்தோல்போர்த் தொங்கும் புழுஅழுக்கு மூடி 
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மனித உடலின் வாசல்கள் ஒன்பது. அவை செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. 

உடல் உயிர் தங்கும் வீடு. அதன் வெளித் தோற்றம் அழகாக இருக்கலாம். 

ஆனால் உட்புறம் எங்கும் அது காண்பதற்கு அருவருப்பானது. அந்த அழுக்கை அழகிய தோல் மூடியுள்ளது.


மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் 


விலங்குகள் முற்றிலும் உணர்வால் செயல்படுபவை. பசியும், காமமும் வந்தால் தன்னிலை மறந்து தன்னிச்சையாகச் செயல்படும். 

மனிதனுக்கு மட்டுமே இது நன்மை, இது தீமை என மனதில் எழுதப்பட்டுள்ளது. இதுவே புத்தி. இது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடையது. 

எனினும் புலன் ஐந்தும் செய்யும் சூழ்ச்சியால் மனித மனம் மயங்கி அதன் விழிப்புணர்வை இழந்து விலங்கு போல் ஆகிறது.

இந்தப் புலன் தரும் மயக்கத்தில் இன்பமாகத் தோன்றி துன்பத்தைத் தரும் கவர்ச்சியில் மனம் இழுப்புண்டு  மதி மயங்கி மனிதன் விலங்காகி விழுகிறான்.




கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் 
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி

இறைவன் மீது ஏற்பட்ட அன்பால் என் மனம் கசிந்து உருகுகிறது. என்னிடம் சிறிதளவுகூட நல்ல குணம் இல்லை. நீயோ மிகத் தூய்மையானவன். மாசற்றவனே! என் மீது கருணை புரிந்து பூமியின் மீது எழுந்தருள்வாய். உமது நீண்ட திருவடிகளை நான் பற்றிக்கொள்வேன்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

நாய் நன்றியுடையது. தனது எஜமான் யார் என்கிற உணர்வு உண்டு. தலைவனுக்குக் கீழ்ப்படியும். 

ஆனால் மனிதன் எளிதாக நன்றி மறக்கும் இயல்புடையவன். கீழ்ப்படிய மாட்டான். தனது சுக வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதால் இறைவனையும் ஏற்க மாட்டான்.

நான் நாயினும் கீழாக இருப்பவன் . நீயோ தாயினும் மேலாகிய அருள் நிறைந்த உண்மைப்பொருள்.

சாரம்:


எனவே மாணிக்க வாசகர் தன்னை மனிதனாக அல்ல; நாயினும் கீழாகத் தாழ்த்துகிறார். 

அறியாமை இருள் அகல மாசற்ற இறைவனை வேண்டுகிறார். பாவம், புண்ணியம்  எனும் அறுக்க முடியாத கயிற்றால் கட்டப்பட்ட உயிரை விடுவிக்க மன்றாடுகிறார்.

உடல் தோலால் மூடப்பட்டு உள்ளே அருவருப்பு நிறைந்ததை உணர்ந்து புலன் மயக்கம் நீங்க முறையிடுகிறார்.

ஆகக் கடவுள் தன்னை தாயன்புடன் குருவாக இருந்து போதித்து பாவ புண்ணியங்களை நீக்கி முக்தி பாதையில் வழி நடத்துவதாக நன்றியுடன் பாடுகிறார்.


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பூவின் வாசம் உணர்ந்த வண்டு போல

திருவாசகம் - எல்லாம் இறைமையின் செயல்.


"எந்த ஓன்று தானே தோற்றுவிப்பதாக உள்ளதோ அதுவே ஆனந்த ஸ்வரூபம்." 
(யஜுர் வேதம், தைத்திரீயோபநிஷத், ப்ரஹ்மானந்த வல்லி - 7)



41. ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
42. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
43. போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் 

44. நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

45. மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
46கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
47. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
48. பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்





பொருள் :


துவக்கம், நிலைமை, முடிவு இந்த மூன்றும் இல்லாதவனே! 

அனைத்து உலகையும் படைக்கிறாய், காப்பாற்றுகிறாய், அழிக்கிறாய். 

பூவில் வாசமாக மறைந்திருந்து நுட்பமாக வெளிப்படுபவனே. 

தொலைவில் இருப்பவனே. அண்மையில் இருப்பவனே.

சொல், மனம் இவற்றைக் கடந்து வேதத்தின் பொருளாய் இருப்பவனே. 

சிறந்த அன்பர் மனதில் கறந்த பால், இனிப்பு, நெய் கூடினது போல் ஆனந்தத் தேனாக இன்பமளிப்பவனே. 

எம் பிறவித் துயரை அழித்து ஒழிக்கும் எம்பெருமானே.

எனக்கும் இரங்குவாய். எனது அறியாமையை நீக்குவாய். 

உமது அருட் பணியாளராக என்னை உருமாற்றுவாய். 






இப் பாடலில் இறைமையின் சிறப்பு :


உயிரினம் அனைத்தும் பிறக்கிறது. வளர்கிறது. மடிந்து மறைகிறது.

ஆனால் இறைமையைக் குறிப்பிடும்போது பிறத்தல், வளர்தல், மறைதல் இல்லாதவரே என்கிறார் அருளாளர் மாணிக்க வாசகர். 

பிறக்காத, இறக்காத ஒன்றின் இருப்பு எவ்விதம் சாத்தியம்?

அதற்கு உதாரணமாகப் பூவின் வாசனையைக் குறிப்பிடுகிறார். 

மலரைப் பார்க்கிறோம். ஆனால் அதன் வாசனையை உணரத்தான் முடியும். அதன் நறுமணத்தைப் பார்க்க முடியாது. அம்மலர் மறைந்தாலும் அதன் மணம் சிந்தையில் உறைகிறது.

அவ்வாறே உலகின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் இறைவன் மறைந்திருக்கிறார். 

மலர் அரும்பாக இருக்கும்போது மணம் வீசாது. மொக்கு மலர்ந்தால் மணம் வீசும்.

அதுபோல் ஆன்மா பக்குவப்படும்போது  மறைந்திருக்கும் இறைமை வெளிப்படும்.

அதைத்தான் இறைமையை உணரும் வரை  தூரத்தில் இருக்கிறான். அறிந்தவுடன் அருகில் தோற்றமளிக்கிறான் எனக் குறிப்பிடுகிறார்.

எனவே என்னை உம் பணியில் புகுத்தி பிறவித் தளை அறுப்பாய் எனச் சரணாகதி அடைகிறார்.

எல்லாம் அவன் செயல்.   

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

இறைவன் குருவாகி

திருவாசகம் - இறைவன் குருவாகி வந்து அருளுதல்.




36. வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
37. பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
38. மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
39. எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
40. அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே


பதப் பொருள்:


இயமானன் - ஆன்மாவாக
விமலா - மாசற்றவன்
பொய்யாவின - நிலையற்றப் பொருள்

சாரம்:


இறைவன் தீயின் சுடரைப் போல் நின்று பாவத்தைச் சுட்டெரிப்பவன். குளிர்ந்த நீராக இருந்து ஆன்மாவை நல்வழி நடத்தும் தூய்மையானவன். 

நிலையற்றப் பொருட்கள் (உறவுகள்) ஏற்படுத்தும் பற்றுதலை என்னை விட்டு ஒழியும்படி, குருவாக எழுந்தருளியவன்.

மெய்யுணர்வு வடிவமாக விளங்குகின்ற உண்மை ஜோதி.

எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு ஆனந்தத்தை அருள்பவர்.

ஒளி பிரகாசித்தால் இருள் அகலுவது போல், எனது அறியாமை நீக்குகின்ற நல்ல ஞானத்தின் உறைவிடம்.

இவ்விதம் ஆன்மாவில் ஒளியாகச் சுடர்விடும் இறைமை, 

குருவாக எழுந்தருளி நல்லறிவு புகட்டுவதாகவும், 

தன்னையோ அறிவற்றவராகத் தாழ்த்தியும்,  

மாணிக்க வாசகர் இப்பாடலில் மனமுருகி வேண்டுதல் செய்கிறார்.

சனி, 17 ஆகஸ்ட், 2019

இறைவனின் இருப்பிடம்

திருவாசகம் - இறைவன் உயிர்களிடத்தில் நிற்கும் நிலை






33. உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற

34. மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்

35. "ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!



பதப்பொருள் :

உய்ய - நான் மீட்பை அடையும்படி
ஓங்காரம் - ஓம் என்கிற ஒலி.
விமலா - மாசற்றவன் (தூய்மையானவன்)
விடைப்பாகா - இடபவாகனனே (உயிருக்கு நாதன்)
நுண்ணியனே - நுண்பொருள் ஆக இருப்பவனே.

சாரம் :

மனதிலும் எண்ணங்கள் தோன்றுகிறது. நினைவில் நிற்கிறது. அழிகிறது. அவ்வாறே இறைவன் நுண்ணிய பொருளாய் (அணுவாக) உள்ளத்தில் ஓங்காரமாக, (எண்ணங்களாக) இருக்கிறார்.

ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலி இனைந்தது.
 
"அ" என்பது முதல் எழுத்து. தோற்றம் அல்லது படைத்தலைக் குறிக்கிறது.
"உ" என்பது இயங்குதல் அல்லது காத்தலைக் குறிக்கிறது.
"ம்" என்பது முடித்தல் அல்லது அழித்தலைக் குறிக்கிறது.

நான் மீட்பை அடையும்படி என் உள்ளத்தினுள் எண்ணங்களாக நிற்பவனே. 

உன்மையானவனே! மாசற்றவனே! 

உயிரை ஊர்தியாகக் ( வாகனமாக) கொண்டு இயங்குபவனே!

வேத அறிவால் உம்மைக் காண இயலாது.  

அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணிய பொருளே

உமது அருள் இருந்தால் மட்டுமே நீ நுண்ணிய எண்ணங்களாக இதயத்து  இருப்பதை என்னால் உணர முடியும்.