அனுபவம் / லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் / லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஏப்ரல், 2020

புதுப்பித்தல்

கவனித்துப் பார்ப்போம்




Khasab இல் நான் பணிபுரிந்த சாலைத் திட்டப்பணிகள் December மாதத்துடன் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்காக முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. Feburaury வரை திட்டப் பணிகளின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து ஒப்படைத்தேன்.

இங்குப் பணி புரிந்த 21 மாதங்கள் பல மறக்க முடியாத அனுபவங்களை உள்ளடக்கியது. நான் பொறுப்பேற்கும்போது திட்டப்பணி நெருக்கடியும் சிக்கலுமான நிலையிலிருந்தது. தொடர்ந்து பல கூடுகைகள், பேச்சு வார்த்தைகள் நிகழ்த்தினோம். அதின் பலனாக அனைவர் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டப் பணியை  வெற்றிகரமாக முடிப்பதற்குக் கடவுள் உதவினார்.



இந்தக் காலகட்டத்தில்  மிக அருமையான பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல உணர்வுப்பூர்வமான பிரிவுபச்சார நிகழ்வுகள்!

நாம் நெருங்கிப் பழகும் ஒவ்வொருவருடனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் நிகழ்ந்து விடுகிறது.




Khasab இல் என்னை அன்புடன் நேசித்துக் கவனித்துக் கொண்டவர்கள் அதிகம்.  Khasab Prayer fellowship பல மாநில மக்கள் ஒன்று கூடி பங்கு பெறும் ஐக்கியம். அது ஒரு Extended family போல இருந்தது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடக்கும் போது அதன் மாநிலங்களின் எல்லைகள் மறைந்து போகின்றது.



வளைகுடா நாடுகளில் ஒமான் பெரிய நிலப்பரப்பு உடையது. Khasab Oman ன் வடக்கு எல்லை. (UAE border) என்றால் Salalah தெற்கு எல்லை. (ஏமன் Border). இப்போது எனது புதிய திட்டப்பணி Salalah க்கு அருகில் உள்ளது. Khasab to Salalah ஏறக்குறைய 1600 Km தூரம். Khasab இல் இருந்து விமானம் மூலம் Muscat வந்து, பின்பு Muscat இல் இருந்து Car இல் Salalah வந்து சேர்ந்தேன்.



Muscat to Salalah  Car இல் பயணிப்பது இது இரண்டாவது முறை. ஏறக்குறைய 1000 km தூரம். அவாந்திரமான பாலைவனம் வழியாகப் பயணிப்பது வித்தியாசமான அனுபவம்.

இன்றைய இக்கட்டான வாழ்க்கைச் சூழலில் புதிய பணியின் பொறுப்பை Salalah வில் March மாத இறுதியில் ஏற்றுக் கொண்டேன்.

தற்போது அரசாங்கத்தின் அமைப்புகளிடமிருந்து Carona குறித்து  விழிப்புணர்வு அறிவிப்புகள் குறுஞ்செய்திகளாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

சாலைகளில் வாகன நெருக்கடி முற்றிலுமாக இல்லை. அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் வழமையாக இயங்குகின்றன. எந்த உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. பொருட்களின் விலையிலும் ஏற்றமில்லை.

உணவு விடுதிகள் இயங்குகின்றன. ஆனால் "Take away" முறைமை. மிக மிக அவசியமான அலுவலகங்கள் மட்டும் இயங்குகின்றன. 30% ஊழியர்கள் மட்டும் "Rotation" முறையில் பணிக்கு வருகின்றனர். பெரும்பாலான பணிகள் "On line" வழியாகத் தொடர்கின்றது.

மசூதி, ஆலயம், கோவில் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தால் அலைமோதும் கடற்கரை மணல் வெளி வெறுமையாக இருக்கின்றது.

நள்ளிரவு வரை மூச்சுத் திணறும் கூட்டத்துடன் உறங்காது விழித்திருக்கும் வணிக வளாகங்கள் அடைபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கின்றன.

வளைகுடா நாட்டில் வசிக்கும் பிறநாட்டினரில் பெரும்பான்மையினர் குறைந்த வருவாய் ஈட்டும் தொழிற்பிரிவினரே.

தற்போதைய இக்கட்டான சூழலும், தொடர்ந்து  குறைந்து வரும் எண்ணெய் விலையும் பொருளாதார மந்தநிலை நோக்கியே உலகத்தை நகர்த்துகிறது போலத் தோன்றுகிறது. இதன் தொடர் விளைவாக உலகளவில் எங்கும் பெருமளவில் வேலையிழப்பு மற்றும் ஊதிய குறைப்பும் நிகழும் என மதிப்பிடப்படுகிறது.

நோயின் அச்சத்தைவிட எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்றத் தன்மையே அதிக கவலையைத் தருகிறது. உலகம் செயல்படும் முறைமையில் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்போது அலுவலக வேலைப் பணி நேரம் குறைக்கப்பட்டதால் ஓய்வு நேரம் அதிகமாக கிடைக்கிறது. TV பார்க்கும் நேரம் சொற்பமே. Internet, Social media வும் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. Online இல்  News Paper மட்டும் கொஞ்ச நேரம் வாசிப்பதுண்டு.

புத்தகங்கள் வாசிப்பு. உணவு சமைத்தல், துணி துவைத்து Ironing, கொஞ்சம் இசை, குடும்பத்துடன் Video Chat, நண்பர்களுடன் உரையாடல் எனப் பொழுது மெதுவாகச் சென்றாலும் அழகாகவே போகின்றது. ஒவ்வொன்றையும் ஈடுபாட்டுடன் இரசித்துச் செய்ய முடிகிறது. Virtual World ஐ விட நிஜ வாழ்வு அருமையானது.

சில எதிர்பாராத சம்பவங்களின் விளைவாக எனது தனிப்பட்ட மனநிலை கடந்த சில மாதங்களாக எழுதுவதற்கு உகந்ததாக இல்லை. காலம் ஒரு அற்புதமான மருந்து. நூல்கள் வழியாகக் கற்பது மறந்து போகலாம். வாழ்க்கை அனுபவங்கள் கற்றுத் தருவது  வலி தந்தாலும் அவை அருமையானவை. அது சீர்திருத்துகிறது. உயிரோடும் உறைந்துவிடுகிறது.

இப்போதைய சூழலில் நல்ல நூல்களை வாசிப்பதும் எழுதுவதும் மனதுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகிறேன். எழுதுவது என்பது ஆன்மாவோடு உரையாடுவது.




தற்போது பல செய்திகள் படிக்கும் போது, கேட்கும் போது மிக வருத்தத்தைத் தந்தாலும் நமது கைக்கு மீறி நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

நதி நீர் மாசு குறைதல், பல ஆயிரக்கனக்கானை டன் எடை திடக்கழிவுகள் குறைவு, காற்றில் நுண்துகளின் அளவு குறைதல், மதுபானக் கடைகள் மூடல், கட்டற்ற நுகர்வின் கட்டுப்பாடு, விபத்துக்களில் நிகழும் உயிரிழப்புகள் அற்ற பத்து நாட்கள்.., எனக் கண்ணுக்குப் புலப்படாமல் பல நன்மைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது

இவையனைத்தையும் விட வாழ்க்கைக்கு இன்றியமையாதது எது?  வாழ்விற்கு அத்தியாவசியமான பணியாளர்கள் யார்? என்பதையும்  இந்தச் சூழல் அற்புதமாக அடையாளம் காட்டுகின்றது.

இந்த அமைதியான ஓய்வில் எது முக்கியமான தேவை?

இயற்கை சொல்ல விரும்பும் சேதியைக் கேட்கும் காதுகள் இருந்தால் நன்றாக இருக்கும். "பூமி மனிதனுக்கானது மட்டுமல்ல ; மனிதனுக்காகவும் படைக்கப்பட்டது." எனும் ஒலி சன்னமாகக் கேட்கிறது.

நம்மைச் சுற்றி நிகழ்வதைத் தெளிவாகக் காண்கிற கண்களும் உணர்கிற இதயமும் இருந்தால் அது இன்னும் அதிக பாக்கியமுள்ளவை எனத்தான் தோன்றுகிறது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


சனி, 3 ஆகஸ்ட், 2019

நான் மாறிக் கொண்டே இருக்கிறேன்






எனது அன்பு நண்பர் தனது 50 வயதைக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

அவரிடம் வாழ்க்கையை அணுகும் முறையில் இப்போது ஏதேனும் மாற்றத்தை உணருகிறீர்களா? என வினவினேன்.

அவரின் பதில் :


ஆம் சகா! நான் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன்.

எனக்காக:


இத்தனை வருடங்களாக, எனது அன்பு, நேசம், உழைப்பு அனைத்துமே, பெற்றோர், உடன்பிறப்பு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள் என இவர்களைச் சுற்றியே வட்டமிட்டு வந்தது.

இப்போதுதான் முதன்முறையாக நான் எனக்காக வாழ வேண்டும் எனும் ஆசைத் துளிர்க்கிறது. இன்று நான் என்னையும் நேசிக்கிறேன். 

தற்போது புரிகிறது. நான் ஒன்றும் "ATLAS" இல்லை, எல்லா சுமைகளையும் என் தோளிலேயே சுமந்து திரிவதற்கு.


பணமும் ; மனமும்:


இப்போதெல்லாம் நடைபாதை வியாபாரிகளிடம் பேரம் பேசுவதே கிடையாது. அந்த சொற்ப பணத்தை வைத்து நான் என்ன மாட மாளிகையா கட்டப் போகிறேன்? 

ஐயோ போகட்டும். 

அந்தச் சிறு தொகை அவர்கள் குழந்தைகள் பள்ளிக் கட்டணத்துக்கு ஒருவேளை உதவக் கூடும் இல்லையா?

அது போல் பயணத்தில் Auto/ Taxi driver இடம் கட்டணத் தொகை கொடுத்தால், மீதம் உள்ள சில்லறையை எதிர்பார்ப்பது இல்லை. 

"வச்சுக்கோப்பா" என்கிறேன். 

அப்போது அவர்கள் முகம் மலர்வதைப் பார்க்க வேண்டுமே!!. 

அத்தனை மலர்ச்சி. 

பாவம் அவர்கள். 

உண்மையில் எளிய மக்களின் வாழ்க்கையும், உழைப்பும் எனது வாழ்வைவிடப் பல மடங்கு கடினமானது.

அவர்களின் மலர்ச்சியில் மனம் மகிழ்கிறது.

கரிசனையும் ; கவனமும்: 


இப்போதெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் திரும்பத் திரும்ப சொல்லும் அதே கதைகளை ஆர்வமுடன் கேட்கிறேன்.

அந்தக் கதைகளைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள் தாங்கள் வாழ்ந்த அந்த இனிமையான நாட்களுக்குள் நினைவுகளின் வழியே பயணிக்கிறார்கள். 

அதில் தான் அவர்களுக்கு எத்தனைப் பரவசம்.

மாற்றம் என்னில் மட்டும்:


ஒன்று தெரியுமா? இப்போது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்.!!! 

அதாவது  எனக்கு நன்கு  தெரிந்தாலும்  தவறுகளைக் கண்டு கொள்வதில்லை.!!! 

நானே முனைந்து அதைத் திருத்தவும் முற்படுவதில்லை. 

அது சரி, உலகில் உள்ள ஒவ்வொருவரையும் பரிபூரணப் படுத்திச் சரி செய்யவா நான் பிறந்திருக்கிறேன். 

மற்றவரைச் சீர் செய்வதை விட எனது அமைதி முக்கியமானது.

பாராட்டு:


அனைவரின் தாலந்துகள், திறமைகளை மனம் திறந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். ஊக்கப்படுத்துகிறேன். 

இதனால் பாராட்டைப் பெறுபவர் மாத்திரம் அல்ல. என்னையும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

உள் அழகு:


என் ஆடைகளில் தென்படும் சிறு கரை, கசங்கிய உடை இதெல்லாம் பற்றி நான் இப்போது அலட்டிக் கொள்வது கிடையாது. 

எனக்கு நன்கு புரிந்துவிட்டது. 

தோற்றத்தை விட நடத்தையே நம்மைக் குறித்து அதிகமாகப் பேசுகிறது.

நட்பு ; உறவு ; விமர்சனம்:


எனது தகுதியைக் குறைத்து மதிப்பிடுபவர்களைக் கண்டால் புன்னகைத்து விலகி விடுகிறேன். பாவம், என் மதிப்பையும் தகுதியையும் அவர்கள் அறியவில்லை. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். 

என் உயர்வில் பொறாமை கொண்டு குழுக்களைச் சேர்த்துக் கொண்டு சில்லறை அரசியல் செய்து போட்டிப் போடுபவர்களைப் பார்த்தால் மெலிதாக முறுவலிக்கிறேன். 

பாவம் அவர்கள். என்னைத் தனிமைப் படுத்த திட்டம் தீட்டுகிறார்கள். உண்மையில் எனக்கும் அவர்களுக்கும் பொதுவான பந்தயம் என்று எதுவும் கிடையாது. 

அவர்கள் பாதை வேறு. எனது பாதை வேறு.

நான் எனது இயல்பான உணர்வுகளான அழுகை, கோபம், விருப்பம் குறித்து மறைக்கவோ, வெட்கப்படவோ கூடாது எனக் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

ஏனெனில் அந்த உணர்வுகள்தான் எனது மனிதத்ன்மையின் பிரதிபலிப்பு.

உறவா? எனது சுய பெருமையா? 

எது முக்கியம் எனும் கேள்வி எழுந்தால் உறவைக் காப்பாற்ற எனது Ego வை விட்டுக் கொடுக்கிறேன். 

உறவுகளே கர்வத்தை விட முக்கியம். 

பிழையை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தவறில்லை. 

தனிமையை விடக் கூட்டாளி முக்கியம்.

இறுதியாக ...,


இப்போது நான் கற்றுக்கொண்ட சிறந்ததொரு உண்மையை உன்னிடம் சொல்கிறேன்.

ஒவ்வொரு நாளையும் இதுதான் எனது வாழ்வின் கடைசி நாள் என் உணர்வோடு வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். 

ஏனெனில் ஒருவேளை உண்மையிலே அது கடைசி நாளாகவும் கூட இருக்க கூடும்!!!

யாருக்குத் தெரியும்?

பிரிய சகா!


எது எனக்கு அமைதியைத் தருகிறதோ அதையே நான் தொடருகிறேன்.

எனது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு என உணர்கிறேன்.

மகிழ்ச்சியும், அமைதியும் என் கையில் தான் இருக்கிறது.

அன்பு மித்ரு

நான் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும்!!!


(ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

(படம் நன்றியுடன் :  ராமலக்ஷ்மி  - http://tamilamudam.blogspot.com/  )

வியாழன், 20 செப்டம்பர், 2018

மகிழ்ச்சி எனும் இரசவாதம்.

மகிழ்ச்சி எனும் இரசவாதம்.



(கல்லூரி நண்பர்கள் பொங்கல் கூடுகை - மாங்கரை) 

இங்கு பக்ரித் கொண்டாட்டங்கள் முன்னிட்டு  தொடர்ந்து ஒன்பது தினங்கள் விடுமுறை அறிவித்தாயிற்று.

ஏறக்குறைய பத்து தினங்கள்  தனியாக விடுமுறையைச் செலவழிப்பது என்பது மிகச் கடினமாகத் தென்பட்டது. விமான கட்டணமோ நான்கு ஐந்து மடங்கு எகிறியது.

இருப்பினும் விடுமுறையை அப்பா, அம்மா, உறவுகள் மற்றும் நட்புகள் உடன் இணைந்து கொண்டாடிட, மகிழ்ந்திட தீர்மானித்து ஊர் நோக்கிப் பயணித்தேன்.

மகிழ்ச்சி என்பது பயணங்கள் வழியாகவே தொடங்குகிறது.

பிறப்பு என்பது கூட, உயிர் ஒரு ஆனந்த அனுபவத்தை எதிர் நோக்கிய நீச்சல் பயணத்தில் தானே தொடங்குகிறது.

திருநெல்வேலி - குற்றாலம் இடையில்  வீராணம் எனும் ஒரு எளிமையான கிராமம் தான் எனது தந்தையின் பூர்விகம்.

அப்பா, அம்மா இருவரும் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வாகக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் தான் அப்பா முழுவதுமாக பணி புரிந்து ஓய்வு பெற்றார்கள். பணி நிறைவுக்கு சில வருடங்கள் முன்பாக அம்மா  மாறுதல் பெற்று சொந்த ஊரில் பணி புரிந்து பின்பு ஓய்வு பெற்றார்கள்

எனவே சிறு வயதில் இருந்தே, திருநெல்வேலி தொடர்பு என்பது வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை பொழுது மட்டும் தான்.

பள்ளிப் படிப்பு முழுவதும் நெய்வேலி அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி என்னும் சிற்றூர். பின்னர் கோவையில் கல்லூரி வாழ்க்கை.

ஆகையால் சிறு வயதிலேயே நீண்ட பயணங்கள் இயல்பாக அமைந்து விட்டது.

பள்ளி ஆண்டு விடுமுறைக்குச் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்வது என்பது அப்போது ஒரு திருவிழா கொண்டாட்டம்.

எல்லாத் துணிகளையும் பெட்டியில் வைத்து விட்டு கடைசித் தினத்தன்று வெறும் துண்டோடு அமர்ந்து பயணத்துக்காகத் தயாராகி காத்திருக்கும் அற்புதமான தருணங்கள் அது.

"சுகமா இரிக்கிகளா" "வடக்க இருந்து எப்ப வந்தீக"  என்ற சொந்த ஊரின் விசாரிப்பு தெரு முழுவதும் வாஞ்சையுடன் தொடரும்.

இன்றும் கூட அது தொடர்கிறது.

அம்மாவின் பூர்விகம் ஆழ்வார்திருநகர். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த அழகியதொரு ஊர்.

ஏப்ரல், மே மாதக் கோடையிலும் கூட வற்றாத தாமிரபரணி பாய்ந்த அழகிய காலமது.

பாட்டியின் வீட்டில் காலைப் பொழுது சுடச் சுட கடுங்காப்பியுடன் துவங்கும். உடன் சுற்று முறுக்கு. பள்ளி விடுமுறை காலம் ஆதலால் வீடு முழுவதும் சொந்தங்களால் நிறைந்து இருக்கும்.

நீராகாரம் குடித்து விட்டு ஆற்றை நோக்கிச் செல்லும் பயணம் எப்போது திரும்புவோம் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

ஆற்றுப்படுகையில் தோண்டி எடுத்துப் பருகிய சுனை நீரின் இனிப்பு இன்னும் மனதில் தித்திக்கிறது.

அந்த ஒரு மாதம் எப்படிப் போனது  என்றே தெரியாது. சிறகடித்துப் பறந்த நாட்கள்.

விடுமுறை முடிந்து ஊர் திரும்பி பள்ளி வந்தவுடன் நண்பர்கள் நான் பேசும் விதம் குறித்து கேலி செய்வார்கள்.

என்னடா "ஏல", "வால",  "போல" ன்னு இழுத்து இழுத்து பேசுற.

நம்மை அறியாது ஒட்டும் பேச்சின் மண் வாசம்.

மகிழ்ச்சிக்கான காரணிகள் குழந்தைப் பருவத்தில் இருந்து வாலிப வயதுக்கு இடம் பெயரும் போது தடம் மாற்றம் அடைகிறது.

அது உறவுகளின் கூட்டுறவில் இருந்து விலகி நட்பின் கூடாரத்துக்குள் நுழைகிறது.

கல்லூரி வாழ்க்கை என்பது ஓர் வசந்த காலம். கோவையில் வாழ்ந்த அந்தத் தருணங்கள் வாழ்க்கையில் ஒரு கொண்டாட்டம்.

அப்போது மகிழ்ச்சி என்பது திட்டமிடப்படாத இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வாகும்.

ஆனாலும் கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சியாகக் கருதி செய்த பல செயல்கள் இப்போது திரும்பிப் பார்த்தால், அது நகைப்பாகத் தான் இருக்கிறது.

வாலிப பருவத்தில் இருந்து இளம் மனிதனாக உருவெடுப்பது கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாக உருமாற்றம் அடைவதற்கு ஒப்பாகக் கருதலாம்.

எனது இளமைக் காலத்தில் குறிப்பாக 1997 துவங்கி 2003 வரையில் வாழ்க்கை  என்பது பயணங்களால் நிரம்பி வழிந்தது. அப்போது  இந்தியாவின் 18 மாநிலங்களில் நடைபெற்ற கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்ய வேண்டியது எனது பொறுப்பு.

கிழக்கில் இருந்து மேற்கு; தெற்கிலிருந்து வடக்கு எனத் தேசம் தழுவிய பயணங்கள். அப்போது பெற்ற அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறைகளைப் பெரிதும் மாற்றம் செய்தன.

பால பருவம் துவங்கி இளம் பருவம் வரை மகிழ்ச்சியாக இருப்பது என்பது  உடல் கிளர்ச்சியை மையமாகவும் உணர்வு சார்ந்த செயல்களில் ஈடுபட்டும்  தனது ஆசைகளை மனம் தீர்த்து கொண்டதாகவே இருந்திருக்கிறது.

அப்போது மகிழ்ச்சி என்பது புலன் உணர்வு சார்ந்த ஒரு குதுகலம்.

பொருட்கள் அளித்த ஈர்ப்பு, பாலுறவு கவர்ச்சி, பிறரின் அங்கீகாரத்தைப் பெற விழையும் ஏக்கம், எதிர் பால் அங்கீகாரம், தன்னை முதன்மைப் படுத்த விழையும் ஆர்வம் என ஒரு விதமான மயக்க நிலைதான் மனதை ஆளுமை செய்திருக்கிறது.

இளமைப் பருவம் கடந்து ஆளுமை உணர்வு மனதில் துளிர்க்கும் போது தான் சந்தோஷத்திற்கான வரையறைகள் உருமாற்றம் அடைவதாகத் தோன்றுகிறது.

அப்போது மகிழ்ச்சி என்பது குடும்பத்தின் நிலையை உறவுகள் மத்தியில் உயர்த்துவது, பிள்ளைகளுக்குச் சிறந்த  வாழ்க்கையை அமைத்துத் தருவது, பணியிடத்தில் சிறந்த பதவியை அடைவது, நட்பு வட்டத்தில் ஒரு மதிப்பு மிக்க ஸ்தானத்தை அடைவது, சமூக வெளியில் தன்னார்வ பொறுப்புகளை ஏற்பது எனத் தேடல்கள் திசை மாறிப் பயணிக்கின்றன.

இப்போது கால ஓட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறைகள் முற்றிலுமாக மாறுதல் அடைந்து வருகிறது.

ஐம்பதைத் தொடும் வயதில் அநேகமாகத் திரும்பவும் குழந்தைப் பருவத்திற்கே மனம் வட்டமிட்டுத் திரும்புகிறது.

இப்போது மனம் மீண்டும் உறவுகளின், நட்புகளின் கூடுகையையே பெரிதும் விரும்புகிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் கல்லூரி நண்பர்களின் சில  குடும்பங்கள் ஒன்றாகக் கூடி  கோவை அருகில் உள்ள மாங்கரை வனப்பகுதியில் பொங்கல் வைத்துக் கொண்டாடியது மனதில் இன்றும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.


கோவையில் வசிக்கும் கல்லூரி நண்பர் திருமதி உஷா அங்குசாமி தனது கணவருடன் இனைந்து, அவர்கள் இருவருமாக முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.




அந்த நாள் முழுவதும் கல்லூரியில் வாழ்ந்த நாட்களுக்கு திரும்பிப் பயணம் செய்தோம். 


ஆச்சரியமாக  நாள் முழுவதும்  மொபைல் போனைத் தொடவே இல்லை. 


மனதில் இருந்து பகிர்ந்து கொள்ளும் அன்பு, கரிசனை, உபசரிப்பு, செவிமடுத்துக் கேட்டல், உற்சாகமாகச் சம்பவங்களை பகிர்தல் என அந்தநாள் அற்புதமாகக் கடந்து சென்றது.

உண்மையான மகிழ்ச்சிக்கான காரணிகள் இப்போது முற்றிலும் மாறுபடுகிறது.

இந்த இரசவாதம் அற்புதமானது.

இது தெள்ளத் தெளிவாக புலப்படுகிறது.

மகிழ்ச்சியிலிருந்து ஆனந்தம் என்பது ஓர் வளர் நிலை அனுபவம்.

மகிழ்ச்சிக்கான வரையறைகள் கால ஓட்டத்தில் கடும் மாறுதலடைகின்றன.

ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வந்தால் மட்டுமே அடுத்த நிலைக்குப் பயணிக்க முடியும் எனத் தோன்றுகிறது.

ஒன்றை அடைந்து அதை அனுபவித்துத் தீரும்போது மட்டுமே அதன் மீது உள்ள பிடிப்பு அகல்கிறது.

வாழ்வின் உண்மையான வளர்ச்சியில் காமமும், கபடும், அகந்தையும்  மெல்ல மெல்ல அழிகின்றன.

உடலின் திறனும் மனதின் அகங்காரமும் குறைவதால் புத்தி தெளிகிறது. மனம் புதிதாக பிறக்கிறது.

எதிலும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் கூடுகிறது.

இன்று முதிர்ந்த நிலையில் முகமூடி அணிந்த நட்புகள் வெறுப்பைத் தருகிறது.

போலியான மனிதர்களின் உரையாடல் அலுப்பைத் தருகிறது.

வேடதாரிகளால் எரிச்சல் ஏற்படுகிறது.

அர்த்தமற்ற பொய் உறவுகளை மனம் நிராகரிக்கிறது.

ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை விட்டு  மனம் விலகி ஓடுகிறது.

புதிய நூதனமானப் பொருட்கள் வாங்குவதில் அவ்வளவு நாட்டமில்லை.

பெரும் திரள் கூட்டம் உவப்பானதாக இல்லை.

மற்றவர்களை உற்றுப்பார்க்க வைக்க வேண்டும் எனத் தீர்க்கமாக காரியத்தில் ஈடுபடுவது அவ்வளவு சுவாரசியம் தருவதாக இல்லை.

மாறாக

உண்மையான மனிதர்களின் ஒற்றை வார்த்தை உரையாடல் மனதில் மாயாஜாலம் செய்கிறது.

அர்ப்பணித்து உழைத்து முன்னேறும் திறம் மிக்க மனிதர்களின் கூட்டுறவு அளவற்ற ஆனந்தம் தருகிறது.

ஒத்த அலைவரிசை உடைய நட்புகளின் உரையாடல் மனதை உவகையாக்குகிறது.

சிறந்த படைப்புகளில் ஒளிந்திருக்கும் படைப்பாளரின் மனதை அதன் கலை உணர்வுகளை அவரது கற்பனைகளின் வீரியத்தை, அபிலாஷைகளைக் கண்டு உணரும்போது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

நம்மைப் பிரியமாக நேசிக்கும் உறவுகள், நட்புகள் அருகாமை அளவற்ற ஆனந்தத்தை அளிக்கின்றன.

இன்று மகிழ்ச்சி என்பது உணர்வுகளை உண்மையான நட்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அடையும் ஒரு ஆனந்த நிலையாகத் தோற்றமளிக்கிறது.

எனவே சிறு விடுமுறைக்கும் ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

உண்மையான உறவுகளும், நட்புகளும் தான் வாழ்க்கையை இன்று அர்த்தமும் மகிழ்ச்சியுமாக  ஆக்குகிறது.

நமக்காக மதிப்புமிக்க  நேரத்தையும், உழைப்பையும் தனது செல்வத்தையும் செலவிட ஆயத்தமாக இருக்கும் பத்து பேரைச் சம்பாதித்து விட்டால் போதும்.

இந்த உலக வாழ்வில் துன்பங்கள் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அது நிச்சயமானதொரு உத்தரவாதம் தரும்.




வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

Salalah - அழகிய நகரம்.

Salalah  




சலாலா ஓமான் தேசத்தின் தெற்கில் அமைந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து ஏறக்குறைய 1100 கி.மி. தெற்கு நோக்கிப் பயணிக்க வேண்டும். ஏமன் தேசத்தின் அருகில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். தற்போது அரசாளும் மன்னர் பிறந்த ஊர். ஒரு புறம் கடல் மற்ற மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கு.

சலாலாவின் சிறப்பு " kareef" எனும் சாரல் மழை தூவும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான வசந்த காலம்.

அரபு தேசத்தின் தகிக்கும் உஷ்ண காலத்தில் இந்தப் பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் இது ஒரு பாலைவன சோலையாக, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

இது ஒரு சிறிய நகரம். ஊரைச் சுற்றி தென்னந்தோப்பு, வாழை மரம், பழத் தோட்டங்கள் என கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்தை நினைவு படுத்தும்.



சுற்றுலாத் தலமாக இருப்பதால் திரும்பிய திசை எல்லாம் உணவகங்கள் தான். மிகச் சிறந்த தென் இந்திய சைவ உணவகங்கள் உள்ளன. "Karref" இன் மூன்று மாதங்கள் முழுவதும் சாலை முழுவதும் சேறும் சகதியும் பூசப்பட்ட வாகனங்கள் அணிவகுப்பு தான்.

அந்த மூன்று மாதங்களும் மலையில் இருந்து வழியும் அருவிகள், சிற்றோடை, ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள், பசுமையான மலைகள் எனக் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்.



இங்கு விளையும் சாம்பிராணி வாசனைப் பிசின் மிகப் பிரசித்தமானது. இது மிகப் பழமையான ஒரு வியாபார ஸ்தலம்.  தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் archeological sites உள்ளது.

Khor Rorī எனும் இடத்தில் பழங்கால மக்கள் (BC 2 nd Century)   உபயோகம் செய்த மட் பாண்டம், குளியறை கல் தொட்டிகள், கல் அரவை இயந்திரம் எனப் பல பொருட்கள் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.


அவர்கள் வாழ்ந்த இடங்கள் அதே விதத்தில் மிக அழகாகப் பராமரிக்கப்படுகின்றன.

Salalah வில் இந்து கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள் உண்டு.  எல்லாச் சமய நம்பிக்கை உடையவர்கள் தங்கள் மொழிகளிலேயே  வழிபாடு செய்ய அனுமதி உண்டு.


இங்கு யோபு என்னும் இறைத்தூதர் வாழ்ந்து மரித்தார் எனக் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை உடையவர்கள் நம்புகிறார்கள். அவரது கல்லறை புனித இடமாக, வழிபாடு ஸ்தலமாக விளங்குகிறது.

ஓமான் தேசத்தின் முக்கிய துறைமுகங்களில் சலாலா துறைமுகம் ஒன்று.

மிக நவீனமான வசதிகள் உடைய அழகிய பன்னாட்டு விமான நிலையம் உண்டு. திருவனந்தபுரம், கொச்சின் நேரடி விமான சேவையும் உள்ளது.

2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு பெற்று இந்தப் பகுதிக்கு மாறுதல் ஆகி வந்தேன். இறைவன் அருளால் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் வரை இங்குப் பணியாற்றவும் எனது பொறுப்பில் வழங்கப்பட்ட திட்டப்பணிகள் முடிக்கவும் கடவுள் உதவினார்.

நல்ல நண்பர்கள், ஆலயங்கள், சீதோஷ்ண நிலை, உணவகங்கள், தோப்புகள், தோட்டங்கள், சாரல் மழை என நமது ஊரில் வசிப்பது போலவே ஒரு தோற்றம்.

ஆஸ்திரேலியாவில் எனது மகனின் மேல்படிப்பு, மகள் பல் மருத்துவ படிப்பு, மகனின் திருமணம், புதிய பேத்தியின் வரவு, மகன் குடும்பமாக ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் என இந்தக் காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும்எனது மனதுக்கு மிக நெருக்கமானது.


வாழ்க்கை ஒரு நெடிய பயணம். அது மகிழ்வைத் தேடி ஓடும் பயணம் அல்ல.  அந்தப் பயணத்தில் அடையும் அனுபவங்களே துயரங்களும் மகிழ்ச்சியும்.

ஏமாற்றுபவர்கள் வழியாகத் தான் நல்ல நட்புகளின் அருமை புரிகிறது.

துயரமான இடங்களில் பணி புரியும் போது தான் சிறந்த இடங்களுக்கான வாசல்கள் திறக்கின்றன.

ஏழ்மையும் வறுமையில் வாழ்ந்த தருணங்கள் தான் பணத்தின் மதிப்பை கற்றுத் தந்தது.

தோல்விகளும் தனிமையும் தான் வெற்றியில் அடக்கத்தையும் பணிவையும் சொல்லித் தருகிறது.

தவறுகள் மன்னிக்கப்பட்ட போது தான் அன்பின் அர்த்தம் புரிகிறது.

உதவி செய்தும் மறக்கப்படும் போது தான் நமக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பு வளர்கிறது.

புதிய இடம் நோக்கி தெற்கு எல்லையிலிருந்து வடக்கு எல்லை நோக்கி மீண்டும் அடுத்த பயணம்.

அதுவும் ஒரு சுற்றுலா தலமாகும்..

வாழ்க்கை என்பது நகர்தல். அதுவே சுவாரசியம்.

சனி, 11 நவம்பர், 2017

நினைவுகளே வாழ்க்கை

நினைவுகளே வாழ்க்கை




நல்ல நினைவுகளே வாழ்க்கையை இனிமையாக்குகிறது.

மகிழ்ச்சி  என்பது ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அந்தத் தருணத்தில் உணர்வுகளில் ஏற்படுத்தும் இனிமையான அனுபவம் மாத்திரம் அல்ல.

மாறாக நாம் அனுபவித்த சம்பவங்கள் ஏற்படுத்திய உணர்வலைகளை மீண்டும் மனத்திரையில்  நினைவு கூறும்போது அஃது ஏற்படுத்தும் மனநிறைவே உண்மையான நீங்காத ஆனந்தம்.

இளமையில் கற்றல் :


வாழ்க்கை கல்வி அனுபவங்கள் வழியாகவே நிகழ்கிறது. அனுபவங்கள் கற்றுத் தரும் சுகம், துக்கம், எச்சரிக்கை, விழிப்புணர்வு மனதில் உணரும்போது மட்டுமே வாழ்க்கையில் சரியான திசையில் பயணிக்கிறோம்.

சிறு வயதில் அடைந்த சில அனுபவங்களை இன்று நாம் நினைத்தாலும்கூட அவை மனதுக்குத் தரும் ஆனந்தத்தை அளவிட முடியாது.

அந்தப் பருவத்தில் மகிழ்ச்சி அடைவதற்கு மிகப் பெரிய மெனக்கெடுதல் தேவையில்லை. எளிய நிகழ்வுகளே போதுமானது.

இன்றும்கூட அவற்றை நினைவு கூர்ந்தால், உதட்டோரம் அரும்பும் புன்னகை மனதை இலேசாக்குகிறது.

அனுபவங்களே கற்பிக்கின்றன..,


அப்போது  கிராமப் பின்னணியில் வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கை பல இனிமையான அனுபவங்களை வாரி வழங்கியது. பெரும்பாலும் ஊரைச் சுற்றி குளம், ஏரி, வாய்க்கால், வயல் என இயற்கை வளம் சூழ்ந்திருக்கும். ஆகையால்  விடுமுறைகள் அநேகமாகத் தண்ணீருக்குள் நீச்சல் தான்.

சமூகத்தில் தன் குழந்தை மட்டும்தான் சிறந்து இருக்க வேண்டும் என்கிற இன்றைய பொதுப்புத்தி அன்று இல்லை. படிப்புதான் வாழ்க்கை என்பதும் கிடையாது.

குழுவாக, நண்பர்களாக அலைந்து, திரிந்த இனிமையான வருடங்கள் அவை.
நண்பர்கள் படைசூழ விளையாடியது, சுள்ளி பொறுக்கி மரவள்ளிக்கிழங்கு சுட்டு தின்றது, மாங்காய், புளி மரத்தில் அடித்துத் தின்றது, வாடகைக்குச் சின்ன சைக்கிள் எடுத்து ஊர் சுற்றியது, ஐயனார் கோவில் தோப்பில் மரத்தில் ஏறி, இறங்கி விளையாடியது என இனிய நினைவுகளுக்குப் பஞ்சமில்லை.

பொதுவாக மாணவப் பருவம்  சுவாரஸ்யமான வெட்டிக் கதைகள், ஆர்வமாய் படித்த கதைகள், எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம் எனும் கனவுகள், கவிதை எழுதும் ஆர்வம், எதிர் பால் நட்புகள் மீது இருந்த அதீத ஆர்வம் எனச் சொற்களுக்குள் சொல்ல இயலாத வாழ்வாகத் திரிந்த பருவம்.

வீட்டில் நிகழ்ந்த விசேஷங்கள், உறவினர்களின் பட்டாளத்தோடு செலவழித்த குதுகலமான நேரங்கள்,   சிறு சிறு சண்டைகள், பிரிவுகள் என வாழ்க்கையில் எத்தனை எத்தனைச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பாடமாக நமக்குப் போதிக்கப்பட்டது...,

நம்மையறியாது வாழ்க்கையின் மனித உறவுகளைப் பற்றிய பல மதிப்பீடுகள்  இத்தகைய அனுபவங்கள் வழியாகவே மனதில் ஆழமாக ஊடுருவிப்  பதிந்துள்ளது. 

வாழ்க்கை கல்வி :


கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நிகழ்வது. அது முடிவற்றது.

வாழ்க்கையில்  தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும்போதுதான் கற்றல் துவங்குகிறது.

முதிர்ச்சி என்பது  வயது கூடுவதால் வருவதல்ல. தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தாலும் நேர்மை பிறழாது வாழ்வைத் தொடர்ந்தால் மட்டுமே நிகழ்வது.

வாழ்க்கையின் யதார்த்தம் நமக்குப் பிடிபடும்போது அவை நம்மைக் கனவுகளில் இருந்து விடுதலையாக்குகின்றன.

இளம் வயதுக்கான அந்த Innocence, ignorance, எதையும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பேதமைத்தன்மை மறைகிறது. வாழ்க்கையின் இன்பத்திற்கான புரிதல் தொடங்குகிறது.

இங்குதான் நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்புமைப்படுத்தி வெற்றி , தோல்வி எனப் பகுத்து நிதானிக்கின்ற  தன்மை மேலோங்குகிறது. கற்றல் புதுப்பிக்கப்படுகிறது. 

அத்துடன் சமுக அங்கீகாரத்திற்கானப் புதிய அளவுகோல்கள் நமக்கு புலனாகின்றன. பேச்சு மட்டுப்படுத்தப்படுகின்றது. 

உரையாடல்களில்  எந்த ஒரு செயலுக்கும் உள்ள எதிர்வினை உணர்ந்து, நம் வார்த்தைகள் இதயத்தில் இருந்து பிறக்கின்றன.

இப்போது நாம் எந்த ஒருச் செயலைச் செய்தாலும்,  மனதின் ஒரு மூலையில்  எதிர்வினையாக நிகழப்போகும் காரியங்கள் தோன்றி நம்மை எச்சரித்துக் கட்டுப்படுத்துகிறது. பொறுப்புணர்வின் அளவு இங்கு தீர்மானிக்கப்படுகிறது.

இதுவே கீர்த்தியையும் அவமானத்தையும் நிர்ணயிக்கிறது.

மகிழ்ச்சியின் பாதை : 


வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி என்பதை அடைய எந்தக் குறுக்கு வழிகளும் இல்லை.

மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை விரும்பினால் நல்ல அனுபவங்களை அளிக்கும் செயல்களை மட்டும் செய்தல் வேண்டும்.

எவை நல்ல அனுபவங்களை அளிக்கும் செயல்கள்?

நமது இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகள், 
எளியவர்க்கு ஆற்றும் சேவை, 
தன்னலமற்ற உதவி, 
தேடுதல் நிறைந்த பயணங்கள், 
கலை சார்ந்த இரசனை, 
படைப்புகளை நேசிக்கத் தூண்டும் வாசிப்பு, 
ஆன்மீக தேடல்கள், 
பொறுப்புக்களை நிறைவேற்றுதல்,  
நல்ல  உறவுகள், 
சிறந்த நட்புவட்டம்..., 

இவை கற்றுத்தரும் அனுபவங்களே,  நினைவுகளே வாழ்க்கையை இனிமையாக்குகிறது.

தீமையின் பாதை :

தீமையின் பாதையில் நடப்பவர் இந்தக்  குணங்களை வெளிப்படுத்துவர்.
பிறரை ஏய்த்தல், அவர் உழைப்பைச் சுரண்டுதல், பொய்பேசுதல், பிறர் பொருள் இச்சித்தல், திருடுதல், குற்றத்தை நியாயப்படுத்துதல், கேளிக்கை, ஆடம்பரம், வீண் பெருமை, பிறரை இகழ்தல்..,

இப்படி வாழ்பவர்கள் தீராப் பழியும், அவமானமும், கடும் துயரத்தையும் வாழ்வின் இறுதியில் அடைவர்.

நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் :


நமது தூய்மையான இலக்குகளை அடைவதற்காகப் பயணிக்கும்  பாதையில் எதிர்ப்படும் கடினமான  தடைகள், வடிக்கும்  கண்ணீர், உழைப்பில் வெளிப்படும் வியர்வை, தோல்விக்கு அஞ்சாது செய்யும்  இடைவிடா முயற்சி இவை தரும் அனுபவங்கள் மிக மிக இனிமையானது.

ஆனால் நாம் பிறரை ஏமாற்றும்போது என்றாவது ஒரு நாள் அதின் பிரதி வினையாகத் துக்கத்தை அடைவோம்.

பிறர்க்குத் தீங்கு விளைவிக்காது நல் முயற்சியோடு வாழும்போது மிகச் சிறந்த அனுபவங்கள், நட்புகள் கிடைக்கும்.

அப்போது வாழ்க்கையில்  நமது விருப்பம், சிந்தனைக்கு இசைந்த  ஒத்த அலைவரிசையில் உள்ள நபர்கள் மட்டுமே நம்மை வந்தடைவர். 

அவர்களோடு மட்டுமே நம்மால் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

தூய்மையான வாழ்வின் முடிவில் இணையற்ற வெற்றியையும், ஆழ்ந்த அறிவையும், நிகரில்லா தன்னடக்கத்தையும், ஒழுக்கத்தின்மீது தீராத பற்றையும், எல்லையில்லா ஆனந்தமும் உறுதியாக அளிக்கும்.


இந்த உண்மையைப் புரிந்து உணர்ந்து செயலாற்றுவதே மகிழ்ச்சியும் அமைதியும்.


வாழ்க்கை என்னும் வட்டப் பாதை முடிவுக்கு வரும்போது நல் நினைவுகளின் மீட்சியே மனநிறைவையும்,  மகிழ்ச்சியையும் அளிக்கும்.

சனி, 8 ஜூலை, 2017

கடந்து வந்த பாதை : கவனித்துப் பாருங்கள்.

கடந்து வந்த பாதை : கவனித்துப் பாருங்கள்.




"Nobody can go back and start a new begining, but anyone can start today and make a new ending."


வருடத்தின் ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டது. பொதுவாக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யும் காலம். இலாபம் நஷ்டங்களைப் பரிசோதித்து நிறுவனத்தின் செயல்பாடுகளை மறு சீரமைப்பர்.

தனிப்பட்ட நமது வாழ்விலும் குறிப்பிட்ட கால இடைவெளியில், நமது செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது சாலச்சிறந்தது.

பாரபட்சமற்ற சுய பரிசோதனை நமது மீதமுள்ள வாழ்க்கைப் பயணத்தை எதிர்கொள்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும்.

ஒரு கப்பல் பயணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம் இஃது. அது நீண்ட தூர நெடிய பயணம். பயணிகளில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாகக் குடித்து, நடனமாடி, களித்து,  இன்புற்று பொழுது போக்குகின்றனர்.

தீடிரென இயற்கை சூழல் மாறுகிறது. கடும் சூறைக்காற்று வீசுகிறது. அலைகள் சீறி எழும்புகின்றன. இடியுடன் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

கப்பலின் மாலுமி செய்வதறியாது திகைக்கிறார். கப்பல் பயணிகளின் ஒட்டுமொத்த மனோபாவமும் மாறுகிறது.

எங்குப் பார்த்தாலும் பயணிகள் எவ்வித பேதமுமின்றி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். பரஸ்பரம் நம்பிக்கை, அன்புகூர்தல், அனுசரணை பெருகுகிறது. பஜன்களின் ஒலியும், தொழுகையின் பாடல்களும் ஒலிக்கின்றன. புனித நூல்கள் வாசிக்கப்படுகின்றன. மதுவின் வாசமே இல்லை. ஏறக்குறைய அது புனிதப் பயணம் போல மாறிவிட்டது.

ஒரு வாரக் காலத்தில் மெல்ல மெல்லக் காற்றும், மழையும் அமரத் தொடங்குகின்றன. இயல்பு நிலை மெதுவாக திரும்பத் துவங்குகிறது. மக்களின் அச்சவுணர்வு அகலத் தொடங்குகிறது.

அவர்களது முகங்களில் திரும்பவும் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பிறக்கின்றன. ஒருவரையொருவர் ஆரத்தழுவி கடவுளைத் துதித்துப் புகழ்ந்து போற்றுகின்றனர்.

மூன்று நாள் கழித்து அந்தச் சூழல் மீண்டும் குடியும், களிப்பும், வெறிப்புமாக மாறியது.

இது மகாத்மா காந்தியின் சுயசரிதையில் அவரால் வேதனையோடு எழுதப்பட்டுள்ள ஒரு உண்மைச் சம்பவம்.

துன்பமும், ஆபத்தும் நேரும்போது மாத்திரம் கடவுளை கருத்தாய் தேடுவதும், உண்மையுள்ளவராக வாழ முற்படுவதும் மாய்மாலம்!! 

எத்து வேலை!! 

இது சுயநலத்தின் மறு உருவம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

நம்மைப் பாரபட்சமின்றி சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

வாழ்வில் மாற்றங்கள் என்பது ஆழமான புரிதலினாலும், உள்ளான மனம் திரும்புதலினாலும் ஏற்பட வேண்டும்.

தவறுகளை, குறைகளை மறைக்கவும், சுய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூக மரியாதையை பெற்றுக் கொள்ளவும், இழிவான பண ஆதாயத்தை அடையவும் நல்ல மனிதர்கள் போல வெளி வேடமாக நம் வாழ்க்கை இருக்கிறதா?

அல்லது

நமது ஆசை, சிந்தனை, சொல், செயல் ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறதா?

தற் பரிசோதனையின் சாராம்சம் இது தான்.

நமது உண்மையான இயல்புக்கும்,  இந்தச் சமூகத்திற்கு நம்மை நாம் அடையாளப்படுத்த முற்படுத்துவதற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு!

இறுதியாக ஒரு சின்ன மதிப்பீடு!


கடந்து சென்ற இருபது வருட கால இடைவெளியில் நம்மைச் சுற்றி நிகழ்ந்த மாற்றங்களைச் சற்று உற்றுப் பார்ப்போமா?

தானும், தான் சார்ந்த குடும்பமும் மட்டுமே வாழ வேண்டும் என எண்ணி அகந்தையோடு நெறிதவறி  வாழ்ந்த உறவினர், நண்பர், அயலார் வாரிசுகளின் தற்போதைய நிலை என்ன?

அற்பமாக எண்ணப்பட்ட, சிறுமையும் எளிமையுமான கடவுளைப் பற்றி வாழ்ந்த குடும்பங்களின் சந்ததியினரின் குழந்தைகள் எங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

ஒற்றை வரியில் பதில் கூறிவிடலாம்.

உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான்.

நம் வாழ்வைச் சீர் தூக்கிப் பார்த்துக் குறைகளை களைந்து, பொறுமையுடன் முன்னேறுவோம். வாழ்வு நீண்ட நெடிய பயணம். அற்ப ஆதாயத்திற்காக வழி பிறழாதிருப்போம்.

ஒவ்வொரு செயலும் அதின் எதிர் விளைவைக் கட்டாயம் ஏற்படுத்தும். அதை மனதில் எப்போதும் நிறுத்துவோம். கவனமுடன் செயலாற்ற கடவுளின் அருள் வேண்டித் தொடர்ந்து பயணிப்போம்.

உள்ளத்தால்  பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

வெள்ளி, 16 ஜூன், 2017

அமைதியாக்கு

அமைதியாக்கு. 




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

ஒருவன் எந்தெந்தப் பொருள்களின் மீது தன் ஆசையை விலக்குகிறானோ, அப்பொருள்களால் அவனுக்குத் துன்பம் இல்லை.


உலகமயமாக்குதல், சந்தைப்பொருளாதாரம், கலாச்சாரம் சார்ந்த அழுத்தங்கள் 
பாதுகாப்பின்மை, ஒடுக்கப்படுதல், உரிமை மறுக்கப்படுதல், மதம், மொழி மற்றும் கலாச்சாரத்  திணிப்பு போன்ற வெளிப்புற அழுத்தங்கள் மன அமைதியைக் கடுமையாக பாதிக்கின்றன.

ஒரு தனி மனிதருக்கு இப்படிப்பட்ட காரணிகளை மாற்றி அமைக்கவோ, தனி நபராக எதிர்த்துப் போராடவோ, மறுக்கவோ நிச்சயம் முடியாது.  எதிர் கொள்ளத்தான் வேண்டும்.

இந்தப் பகிர்வு இப்படிப்பட்ட நம் ஆளுமைக்கு உட்படாதப் புறக்காரணிகள் பற்றியது அல்ல.

நம்மால் செயல்படுத்தக்கூடிய, மனதை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய சில அகக் காரணிகள் பற்றிய அடிப்படைச் சிந்தனை மட்டுமே. 

மன அமைதி  என்பது அகநிலையில் அனுபவிக்கும் திருப்தியான உணர்வுநிலையின் புற வெளிப்பாடு.

அமைதிக்கு எதிரான உணர்வுநிலை : குழப்பம், அச்சம், கொதிப்பு, படபடப்பு, கோபம், எரிச்சல், வெறுப்பு, பகையுணர்வு, பரிதவிப்பு என விரிவடையும்.

நாம் பொதுவாக வாழ்வில் போராட்டத்தையும், துயரத்தையும், மனச் சஞ்சலத்தையும் அடையும் போது மட்டுமே  அமைதியைக் கருத்தாய் தேடுகிறோம்.

மற்றபடி எல்லாம் இயல்பாக நடக்கும் போது ஆசைகள் புதிது புதிதாய் முளைக்கின்றன. கனவுகள் விரிகின்றன. தேடல்கள் தீ விரிக்கிறது. விருப்பங்கள் நிறைவேற்ற ஓடுகிறோம்.

மன அமைதி ஓர் தேடல் 


மன அமைதி இரு நிலைகளில் ஏற்படுகிறது.

முதலாவது நாம்  திட்டமிட்டச் செயல்களை சரிவரச் செய்து முடிக்கும் போது அடைகிறோம், 

இரண்டாவது  ஒரு காரியத்தில் எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு, அவ்வளவு தான் இனி கடவுள் விட்ட வழி, செய்வதற்கு ஒன்றுமில்லை  எனும் நிலைப்பாட்டை எடுக்கும் போதும் மனம் ஆசுவாசமாகிறது .

இதன் உட்பொருள் முதலாவது நமது உண்மையான யதார்த்த நிலையை உணர்ந்து,  எவை நம்மால் நிறைவேற்றக்கூடிய திட்டங்களோ அவற்றில் மாத்திரம் நாம்  ஈடுபடும் போது மட்டுமே வாழ்க்கை இலகுவாகிறது. மாறாகத் தேவைகள் கடந்து,  ஆசைகளும்  பகட்டும் பெருகும் போது வாழ்க்கை பதற்றமடைகிறது. 

இரண்டாவது "நான் " "என்னால் " என்கிற சுயம் மேலோங்கும் போது கர்வம், பெருமை, ஆணவம், மமதை தலை தூக்குகிறது. நாம்  எண்ணிய செயல்கள் தடைப்படும் போது மனதில் கடுங்கோபம், சினம் மேலோங்குகிறது. புத்தி பேதலிக்கிறது. 

பிடிவாதம் மனதை ஆக்கிரமிக்கத்  தவறான முடிவுகள் எடுக்கிறோம். இறுதியில் மனம் உடைந்து வெட்கம், அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது.

சுருக்கமாகக் கூறினால்  "சுயம் அழியும் போதெல்லாம் மனம் அமைதியை உணர்கிறது".

அகக் காரணிகள்


சில கேள்விகள் - சில சிந்தனைகள்:


எந்தச் சூழல்கள் உங்களுக்குக்  கோபம் ஏற்படுத்துகிறது?

எந்த நபர்களின் சந்திப்புகளை நீங்கள்  தவிர்க்கிறீர்கள்?

நீங்கள்   பேசுவதை  தவிர்க்க விரும்பும் நபர் யார்?

 உங்களுக்கு யாருடன் தொடர்ந்து இருக்கப் பிடிப்பதில்லை?

 உங்களுடைய  மனதில் நினைத்தாலே எரிச்சல் ஏற்படுத்துபவர் யார்?

அத்துணைக் கேள்விகளுக்கும் பொதுவானப் பதில் :

  • உங்களின் சிந்தனை, எண்ணங்கள்,  கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
  • அவற்றை   நிராகரிப்பவர்கள்.
  • மாற்றுக் கருத்தை முன் வைப்பவர்கள்.
  •  பல சமயங்களில் உங்கள்  குறைகளைக்  கூறிக் குற்றப்படுத்துபவர்கள். 
  • ஏமாற்றி துரோகம் செய்தவர்கள். 

இந்த அடிப்படை புரிதல் மிக  மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மன அமைதி இழப்பின் மையக் கரு இவை தான்.


  • "நமது எண்ணங்கள், விருப்பங்கள் ஏற்க மறுக்கப்படும் போதும், நிராகரிக்கப்படும் போதும்" மன அமைதியை நாம் இழக்கிறோம்.
  • மிகுந்த ஏமாற்றத்தை, துரோகத்தை நமது  வாழ்க்கையில் ஏற்படுத்தியவர்களைச் சந்திக்கும் போதும், அந்தச் சம்பவங்களை நினைவு கூறும் போதும் அமைதி குலைகிறது.
  • நாம் அடுத்தவர்க்கு இழைக்கும்  நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், அறம் தவறிச் செய்யும் செயல்கள் மன நிம்மதியைப் பாழாக்கும்.


எப்படி விடுபடுவது?


ஒரு சிக்கலில் இருந்து முழுமையாக  விடுபட முதலில் அதன் அடிப்படையான உண்மை நிலையை நாம் புரிந்து கொள்வதில் தான் துவங்குகிறது.

வாழ்வின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வது அவசியம். 

நம் குடும்பம்,  சுற்றி வாழ்பவர்கள், உடன் பணிபுரிபவர், சமூகம் இவற்றில் நம்மால் நாம் விரும்பும்  உடனடி மாற்றத்தை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது.

அதற்கு  மாறாக சுய மாற்றங்கள் என்பது முழுமையான தனி மனித அதிகாரத்துக்கு உட்பட்டது.

நமது கருத்துக்கள், எண்ணங்கள், செயல்களில் தவறுகள் இருந்தால் அதை உணர்வதும், சரி செய்வதும் வாழ்வின் முக்கிய கடமை மற்றும் பொறுப்பு.

மனஅமைதி - உண்மை - பற்றறுத்தல்.


இந்த மூன்று வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்  பிணைந்தது

முழுமையான மனஅமைதி என்பது உண்மையைத் தேடுவதிலும், நம்மைப் பீடித்துள்ள பற்றுதலை விலக்குவதிலும் தான் ஆரம்பமாகின்றது. 

பற்று  / மனஅமைதி இரண்டுக்கும்  உள்ள தொடர்பு நேரிடையானது.

எந்த விடயமானாலும்,   தீவிரமானப் பற்று நமது உண்மையான நிலையை நாம் உணர்ந்து கொள்வதை தடுக்கும். 

ஆங்கித்தில் 3G (Gold, Girl, Glory)  அல்லது 3S (Silver, Sex, Soli) என்று சொல்வார்கள்.

தமிழில் சொல்கிறோம் அல்லவா! பொன், பெண், மண் என்று!!

இது அரசர் தொடங்கி ஆண்டி வரைப் பொருந்தும்.

குடும்பத்தின் உறவுகள் மீது வைக்கும் அளவு கடந்த பாசம் அவர்கள்  வாழ்வைப் பரிதாபமான நிலைக்குத் தள்ளி விடும். கடமைகளை நிறைவேற்றி விலகி வாழ்வது சிறப்பு. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தனித்துவமான இடம் உண்டு. அதிகத் தலையீடு, பிறர் உரிமைகளில் அத்துமீறுதல் உறவுகளில் கசப்பையும், வெறுப்பையும் உருவாக்கும். மன அமைதியை இழக்கச் செய்யும். உறவுகளில் நமது எல்லையை மீறாமல் இருந்தால் நாம் அனைவராலும் விரும்பப்படுவோம்.

குறிப்பாக  நாம் அதிகமாக நேசிக்கும் குழந்தைகள் தவறு செய்யும் போது அந்தத் தவற்றை நியாயப் படுத்தக்கூடாது. அஃது அவர்களை மேலும் தவறானப் பாதையில் செல்லத்தூண்டும். தனிமையில் கண்டித்து உணர்த்த வேண்டும். தவறினால் வாழ்நாளின் இறுதியில் கடும் துயர் அடைவோம். 

கடினமான அனுபவங்கள் வழியாக வழி நடத்தப்படும் பிள்ளைகள் தான் பிற்கால வாழ்வில் நட்சத்திரங்களாக பிரகாசிப்பார்கள்.

நிலம்,  வீடு, வாகனம், நகை,   என வளங்கள் மீது மட்டும் நாட்டம் கொண்டு எதற்காகப் படைக்கப்பட்டோம் என்கிற அடிப்படை உணர்வற்று வாழ்பவர் பலர்.

வாழ்க்கை வழங்கிய பொன்னான வாய்ப்புகளை பொன்னுக்கும், மண்ணுக்கும் ஆசைப்பட்டு வீணடித்தோரை ஒவ்வொரு வீதியிலும் காணலாம்.

சொத்து,  சுகம் என வாழ்ந்து வாழ்ந்து, வாழ்வின் இறுதியில் துக்கத்துடனும், ஏக்கத்துடனும்  மடிபவர்கள் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. 

அதிகாரம், பாலுறவு வேட்கை, புகழ்  இவற்றின் மேல் உள்ள பற்று மயக்கம் வாழ்வைத் தவறான பாதையில் வழி நடத்தி அவமானத்தில் கொண்டு முடிக்கும்.

வாழ்க்கையின் மிகக் கடுமையான சவால் "தன் குற்றம் உணர்வது, அதை ஏற்றுக் கொள்வது, அவற்றிலிருந்து விடுபடுவது". 

துறத்தல் என்பதைப் பலர் கடினமானதாகவும்  மகிழ்ச்சியற்றதாகவும் கருதுகின்றனர். துறத்தல் என்பது இழத்தல் அன்று.

"தனக்குத் தான் அதிக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்பவனே அதிக சுதந்திரமானவன் " என்கிற மகாத்மாவின் வரிகள் ஆழமான பொருள் பொதிந்தது.

எந்தெந்தப் பொருள்களின் மீது நம் ஆசையை விலக்குகிறாமோ, அப்பொருள்களினால் ஏற்படும் கட்டுகளில் இருந்து நாம்   விடுதலை அடைகிறோம்.

முழுமையான சுதந்திரம். மகிழ்ச்சி! 

உண்மையான மன அமைதி என்பது தனக்கு விதிக்கப்பட்ட வரையறையின் எல்லையை உணர்வது, வாழ்வின் நிலையற்ற தன்மையை ஏற்றுக்கொள்வது, பொறுப்புகளை நிறைவேற்ற நேர்மையானப் பாதையில் உழைப்பது மற்றும்

நிகழ்காலத்தில் வாழ்வது இவற்றில் அடங்கியுள்ளது.

இறுதியாகச் செயல்களை செய்யும் ஆற்றல் மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது ; அதின் விளைவுகள் மேல் நமக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை உணர்வது சிறந்தது. 

கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே உணர்வு பிறக்கும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

விருப்பு வெறுப்பு அற்ற இறைவனைப் பற்றியவன், பிற ஆசைகளை எளிதில் விட முடியும்.

வியாழன், 25 மே, 2017

மகிழ்ச்சி மனநிலையின் ஒரு நிலைப்பாடு.

மகிழ்ச்சி மனநிலையின் ஒரு நிலைப்பாடு.


"If you want to live a happy life, tie it to a goal, not to people (or) things."

Albert Einstein. 






அறத்தினூங் (கு) ஆக்கமும் இல்லை ; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தைப்போல நல்லது (மகிழ்ச்சி)   தருவது எதுவுமில்லை ; அறத்தை மறந்து செய்யும் அதர்ம செயல்கள் போல துன்பம் விளைவிப்பதும் இல்லை.

மகிழ்ச்சியைத் தேடியே மக்கள் ஓடுகிறார்கள். 

அதை அடையத்தான் எத்தனை வேஷங்கள்?  

🚫  கேளிக்கை விடுதி, மதுபானக் கடை முன்பு  தள்ளாடித் திரிகின்றனர்.

🚫  உணவகம், திரையரங்கு, வணிக வளாகம் கூட்டத்தால் நிறைந்து வழிகிறது.

🚫  விடுமுறை தினங்களில் சுற்றுலாத் தளங்களில் வாகனங்களின் நெரிசல்.

🚫 தொலைக்காட்சி விளம்பரங்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகிறது.

🚫 விலையுயர்ந்த உடை, நவ நாகரிகமான Cell Phone, வாகனங்கள் வைத்திருப்பது போன்ற பகட்டான வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வாக முன்னிறுத்தப் படுகிறது. 

🚫 தனிப்பட்ட வாழ்வில் தோல்வியுற்ற, மனநிம்மதி இழந்த,  போதைக்கு அடிமையான மனிதர்கள் (So called celebrities)  வெற்றி பெற்ற முன் மாதிரிகளாகச் சித்தரிக்கப் படுகின்றனர்.

🚫 பிற மனிதர்களின் அங்கீகாரம், மதிப்பீடு, புகழ்ச்சி, பாராட்டுக்காக மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்.

இவை எதுவும் உண்மையான மகிழ்ச்சி அல்ல.

மகிழ்ச்சி என்பது  நாம் விரும்பும் செயல்களை செய்யும் போது ஏற்படும் வெறும் உணர்வு எழுச்சி  மாத்திரம் அல்ல. 

மகிழ்வான தருணங்கள் என்பது நம் நினைவுகளில் இருந்துக்   கிளர்ந்து  எழும்பும்போது, அந்நிகழ்வுகள் சந்தோஷத்தையும், மனநிறைவையும் அள்ளித்தருபவை.

மெய்யான மகிழ்ச்சி என்பது  நம் நினைவுகளில் வாசம் செய்கின்றது. 

மகிழ்ச்சியின் தேடல் சுயநலம் சார்ந்தே தொடங்குகிறது.

உண்மையான ஆனந்தம் எது எனக் கண்டு பிடிப்பதும், உணர்ந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. இது ஒரு கசப்பான உண்மை.

சந்தோஷத்திற்கான காரணங்கள் வயது வளர்ச்சியுடன் வேறுபடுகின்றன.

ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் குழந்தைகள், வாலிபர், பெரியவர், முதியோர் உலகங்கள் வெவ்வேறானது.

பருவம் மாறும்போது மகிழ்வை ஏற்படுத்தும் என நம்புகின்ற காரணங்களும் மாறுபடுகின்றன.

குழந்தைப் பருவத்தில் குதுகலத்தை ஏற்படுத்திய பல சம்பவங்களை, தேடல்களை  இப்போது நினைத்துப் பார்த்தால் அநேகமாக அவை நகைப்பைத் தரும்.

இளம்பிராயத்தில் மகிழ்ச்சி தரும் எனத் தீவிரமாக ஆசையுடன் பின்தொடர்ந்தவை தற்போது மிகப் பெரும் அபத்தமாக உணர்வோம்.

அநேகமாக அவை நமது பிள்ளைகள் வாழ்வில் செய்து விடக்கூடாதே  என்று அஞ்சுகிறோம்.

நடுத்தர வயதில் மகிழ்ச்சி என்பது அநேகமாகப் பொருளீட்டலே. 

வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஏற்றெடுத்த பல முயற்சிகள், உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்கச் செய்த உபாயங்கள், கடந்து வந்த கடினமான பாதைகள், சந்தித்த அவமானங்கள், பெற்ற அனுபவங்கள் மகிழ்ச்சி குறித்து பல புதிய புரிதல்களை நமக்குள் உருவாக்கும்.

முதிர் வயதில் நாம் கடந்து வந்த பாதையை உணர்ச்சி ஆதிக்கம் இல்லாது நிதானமாய் திரும்பி பார்க்க முடிகிறது. 

வாழ்வின் இறுதிக்காலம் உண்மையான மகிழ்ச்சி, வெற்றி எது என்பதைத் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

உங்களைச் சுற்றி வாழும் குடும்பங்களை கவனித்துப் பாருங்கள்.

பிறரை ஏய்த்து  வாழ்ந்த தலைமுறையினரின் தற்போதைய நிலை எத்தனை உண்மைகளைச் சொல்லாமல் சொல்லுகிறது?


உண்மையான மகிழ்ச்சிக்கு சில குறிப்புதவி :


🌺     மகிழ்ச்சி என்பது நமது  கடமைகளை உணர்ந்து நிறைவேற்றுவது.

🌺மகிழ்ச்சி என்பது பிறரது அபிப்பிராயங்களுக்காக,மதிப்பீடுகளுக்காக  வாழாது, அறநெறி சார்ந்து வாழ முற்படுவது.

🌺வெளிவேஷம் போடாது உண்மையாய் வாழத் தீர்மானிக்கும் தருணம்தான் மகிழ்ச்சியான வாழ்வின் தொடக்கப் புள்ளி.

🌺 எந்தச் சூழ்நிலையிலும் நடிக்கக்கூடாது. சுயநலத்திற்காக,   பிறரை ஏமாற்றக்கூடாது. ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றப்படுவோம்.

🌺 உண்மையாக உழைத்து ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியைத் தரும். உண்மையுடன் கைப்பாடாய், பிரயாசத்துடன், திட்டமிட்டு, தொடர் உழைப்பில் காத்திருந்து நாம் பெற்றவை நன்மையும், மகிழ்ச்சியும் மன நிறைவையும் அளிக்கும்.

🌺  பிறர் பொருட்கள், உடைமைகள் மீது  ஒரு போதும் ஆசைப்படக்கூடாது. பிறரை வஞ்சித்துப் பெற்ற செல்வம் கடும் துயரத்தையும், மன வேதனையும் ஈடு செய்ய முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தும்.

🌺 ஒரு நபர் இல்லாத போது அவரைக் குறித்து அவதூறு பேசக்கூடாது. பிற்பாடு அவரை நாம் சந்திக்கும் போது குற்றவுணர்வில் வெட்கம் உண்டாகும்.

🌺 நமது நம்பிக்கை தான் சரியானது என எண்ணுவது தவறு. குறிப்பாகச் சமயம், மொழி இவற்றை நேசிக்கலாம். ஆனால் இது தான் உயர்ந்தது மற்றவை குறைவானது என ஒப்புமை தேவையற்றது. நினைவில் கொள்ளுவோம், மொழி, சமயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிலை நிற்பவை. நூறு வருஷம் முன்பு நமது இருப்பு எத்தகையது என்பது நமக்குத்  தெரியாது. நாளைய தினம் என்ன நிகழும் என்பதையும் அறுதியிட்டுக் கூற இயலாது.

🌺 இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்வதே நிறைவான மகிழ்ச்சி. பகட்டும், ஆடம்பரமும் தேவையற்ற நட்புக்கு வழி வகுக்கும்.

🌺 பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், முதியோர் வாக்கு, புனிதமாக எண்ணப்படும் நூல்கள் குறித்து அபிப்பிராயபேதம் இருப்பினும் தரக்குறைவாக விமரிசிப்பது நல்லதல்ல. தவறான புரிதல் மனக்கண்களைக் குருடாக்கி இழிவான இச்சை ரோகத்தில் நம்மைக் கொண்டு சேர்த்து விடும். உணர்வற்றவர்களாகி விடுவோம்.

🌺 வாக்கு கொடுப்பதற்கு முன்பு நம்மால் முடியுமா என யோசித்து உறுதி கூறுவோம். வாக்கு தவறும்போது அவமானப்படுவோம். தொடர்ச்சியான வாக்குத்  தவறுதல் மேன்மையானவர்களின் நட்பினை இழக்கச் செய்யும்.


உண்மையின் பாதை கடினமானதாயினும் மனநிறைவும், மகிழ்வும் உறுதி.

அவை நம்முடன் இறுதி வரை   நிலைத்திருக்கும்.

சனி, 20 மே, 2017

மரணமும் அழகாக இருக்க முடியும்.

மரணமும் அழகாக இருக்க முடியும்.

"Death is nothing to us, since when we are, death has not come, and when death has come, we are not "

                                                                                                                 Epicurus.


மரணமும் அழகாக இருக்க முடியும்.



உறங்குவது போலும் சாக்கா (டு) உறங்கி 
விழிப்பது  போலும் பிறப்பு.

மரணம் தூக்கத்தைப் போன்றது ; பிறப்பு தூங்கி எழுவது போன்றது. இரண்டும் இயற்கை.

அனுதினம் செய்தித்தாள்களில் பல துயரச் செய்திகளை வாசிக்கிறோம். அவை மனதை சில நிமிடங்கள் பதைபதைக்கச் செய்கிறது. மனம் துயரம் அடைகிறது. அதைக் குறித்துக் குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசும்போது மனம் இலேசாகிறது. மீண்டும் மற்றுமொரு புதியதொரு  துயர செய்தியை வாசிக்கும் போது பழையவை புள்ளிவிவரங்களாக மாறுகின்றன.

இரண்டாவதாக நமக்கு அறிமுகமானவர்கள், தூரத்து உறவினர்கள், நட்பு வட்டத்தின் எல்லையில் இருப்பவர்கள் இவ்வுலகைக் விட்டுக் கடந்து செல்லும் போது மன வேதனையும், ஆற்றாமையும் ஏற்படுகின்றது. அது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை விசாரிக்கிறோம். துயரத்தில் பங்கெடுக்கிறோம். ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அத் துயரம் தங்குகிறது. நினைவு நாட்களில் சில வருடங்களுக்காவது அவர்கள் குறித்துப் பேசுகிறோம்.

மூணாவது நிலை நம் இரத்த சம்பந்தம், நெருங்கிய நட்பு தொடர்புடைய இழப்புகள். இவை நம்மை நிலைகுலையச் செய்கிறது. மனம் துடிதுடிக்கிறது. அங்கலாய்க்கிறோம். அரற்றுகிறோம். ஏன் இது நிகழ்ந்தது எனும் கேள்விகளை எழுப்புகிறோம். இது நிகழாமல் இருந்திருக்கக்கூடாத எனும் நப்பாசை மனதில் எழும்புகிறது. குடும்பத்தின் விசேஷமான நிகழ்வுகளில்  இவர்கள் இல்லாததை
தவறாமல் நினைவு கூறுகிறோம். இவர்களின் இழப்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. 

மரணம் எனும் ஒற்றை விளைவு எத்தனை விதமான எதிர்விளைவுகளை மனதில் உருவாக்குகிறது! 

நமது அன்பின் வட்டத்தின் அருகில் வாழ்ந்து, தொட்டு, கண்டு, உண்டு, பேசி, உணர்ந்து, பழகிய உறவுகளின் பிரிவுகள் ஏற்படுத்தும் துயரங்கள் வலி மிகுந்தது.

அன்பின் வட்டம் விரிவடையும் போது மரணம் இயற்கையின் நியதி என உணரலாம்.

1994. ம் ஆண்டில் கடுமையான நோய் நிமித்தம் மரணத்தின் மிக அருகில் பயணித்தேன். ஏறக்குறைய 15 நாட்கள் மருந்தும், Drips -ம் தான் உணவு.

அப்போது பெற்ற பாடங்கள் எந்தக் கல்வி சாலையும் கற்றுத் தர முடியாது.

எது வாழ்வில் முக்கியமானது?

வாழ்க்கையின் பயனும் நோக்கமும் யாது?
எவை நிரந்தரம்?
மரணத்தில் கூட வருவது எது?
எவற்றை நாம் விட்டுச் செல்கிறோம்?

எனும்  கேள்விகள் இயல்பாக எழுந்தன.

மரணமும் நெருப்பைப் போன்ற இயல்புடையது.

சந்தனம் என்றாலும் சரி, சகதியில் கலந்த பொருள் என்றாலும் சரி தீயில் இடும் போது சாம்பல் தான் மிஞ்சும்.

படித்தவர் -  படிக்காதவர்,
ஏழை  - செல்வந்தர்,
உயர்ந்தவர் - தாழ்ந்தவர்,
ஆண் - பெண்,
அதிகாரமுடையோர் - பாமரன்,
ஞானி - மூடன்,
இவர்கள்  எவராயினும் மரணம் வித்தியாசமின்றி மேய்ந்து போடுகிறது.

பல மனிதர்களை மனம்போல மமதையுடன் வாழ, இந்தத் தவறான புரிதலும் காரணம்.

சமய நம்பிக்கையின் படி மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல. அஃது ஒரு மாறும் முறை (Transition) . ஓர் உருமாற்றம் (Transformation) . சிந்தனையாளர், அறிவியலாளர் கூட மரணம் என்பதை ஒரு முடிவாகக் கருதுவது இல்லை. உயிரினம் தமது அனுபவங்களை,  பாரம்பரியங்கள் இனக்கீற்று அமிலம் (DNA) மூலமாக உயிர் வளர்ச்சிக்கான  மரபு கட்டளைகளாக அவற்றின் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதை உறுதி செய்துள்ளது.

தத்துவ ஞானி எபிக்கூரஸ் (Epicurus - BC 341 - 270) மிகச் சிறந்த சிந்தனையாளர். அவரது முக்கியக் கோட்பாடு : "அச்சத்திலிருந்து விடுதலை - Freedom from fears (ataraxia) " மற்றும் " உடல் துன்பத்திலிருந்து விடுதலை - Absence from body pain (aponia)". விதிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர்.

அவரது வாழ்வின் இறுதி நாளில் நிகழ்ந்த சம்பவம் இது. முதிர் வயதில் மரணத் தருவாயில் தமது சீடர்களிடம் குளியல் தொட்டியை வெதுவெதுப்பான நீரால் நிரப்பச் சொன்னார். அதில் இளைப்பாறியபடி சீடர்களுக்குக் குறிப்புகளைக் கொடுத்தார்.

என்ன குறிப்புகள் தெரியுமா?

மனிதனது உயிர் பிரிகையில் அவனது உடலில், மனதில் நிகழும் மாற்றங்கள் குறித்த அவதானிப்புகள் !

வெற்றியுள்ள வாழ்வு குறித்து இரு நிலைப்பாடுகள் உண்டு.

அதிகாரம், செல்வம், ஆளுமை நிறைந்த வாழ்வின் அடிப்படையில் அளவிட்டு வெற்றியைப் பலர் அளவிடுகின்றனர்.

அன்பு, எளிமை, தியாகம், சேவை, தாழ்மை இவற்றின் மதிப்பீட்டின் படி சிலர்     வெற்றியுள்ள வாழ்வு இது தான் எனத்  தரம் பிரித்துப் பின்பற்றுகின்றனர்.

எனினும் வெற்றியுள்ள வாழ்க்கையை இப்படியும் வகைப்படுத்தலாம்.

இயற்கையில் நிகழும் மரணம் குறித்து அஞ்சாது, அதை இயல்பாக எதிர்கொள்வதும்  வெற்றியுள்ள வாழ்வின் ஓர் அம்சம்.

வாழ்வில் தமது கடமைகளை உணர்ந்து, மிகக் கவனமுடன் உண்மையாக வாழ்ந்து நிறைவேற்றுபவர்கள் மரணத்தைக் குறித்து அச்சப்படுவதில்லை. அவர்கள் முதிர் வயதின் சிரமங்களுக்காக முறுமுறுப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் கவலையெல்லாம் பிறர்க்கு பாரமாகிவிடக்கூடாதே என்பது தான்.

என்  முதிர்  வயதான நண்பர் அடிக்கடி சொல்வதுண்டு,  "குளித்து விட்டு தலையைத் துவட்டிவிட்டு  பின்பு துண்டை உதறிச் செல்வது போல் உடலை உதறிக் கடந்து செல்லவேண்டும் என்று ". அப்படி வாழ்பவர்கள் மரணமும் கூட அழகு தான்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் (பு) உடைத்து.

ஆமைத் தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி தன்னைக் காத்துக் கொள்வது போல ஒருவன் ஐம்பொறிகள் அடக்கினால், ஏழு தலைமுறைக்கும் சிறப்பைச் சேர்ப்பான்.