சனி, 28 செப்டம்பர், 2019

கண்ணீர் துளிகள்

அழுகை - ஏழு நிலைகள்.




மனநிலையில் ஏற்படும் ஏழு விதமான பாதிப்புகளால் அழுகை ஏற்படுகிறது என மஜீத் இப்னு மைஸரா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் குறிப்பிடுகிறார்.

1. ஆனந்தம்
2. மன அழுத்தம், (புத்தி பேதலித்த நிலை)
3. வேதனை
4. திடுக்கிடும் அதிர்ச்சி சூழல்
5. நடிப்பு
6. போதையில் (தன்னிலை மறந்து)
7. இறை அச்சம், (பாவத்தைக் குறித்த மன வருத்தம்.)


மனம் வருந்தி இறையச்சத்தில் செய்யும் பிரார்த்தனை மிக வலிமை பெற்றது.

இறை வேண்டலில் சிந்தப்படும் கண்ணீர் நெருப்புக் கடலையும் அனைத்து விடும் தன்மை பெற்றது. 

இறைமைக்குப் பயந்து அழுது வடித்த கண்ணீர் பட்ட இடத்தை நரக நெருப்பு தீண்டாது.

"நீங்கள் பிரார்த்தனையில் சிந்தும் கண்ணீர் இறைவனின் கைகளில் உள்ள துருத்தியில் அல்லவோ வைக்கப்பட்டிருக்கிறது" என வேதம் சொல்கிறது.

மனம் உருகி இறையச்சத்தோடு கண்ணீர் சிந்திச் செய்யப்படும் வேண்டுதலின் பலனை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 

நியாயத்தீர்ப்பு நாளில் இறையரசின் நிழலில் இளைப்பாறும் ஏழு நபர்களில் ஒருவர் நிச்சயமாக, "தனிமையிலிருந்து இறைவனை நினைத்துப் பயந்து கண்ணீர் வடித்தவராக வாழ்ந்தவராக இருந்திருப்பார்" என இறை நூலில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு இறையடியவரின் கண்களில் நோய் ஏற்பட்டிருந்தது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், "இனிமேல் அழுது பிரார்த்தனை செய்வதில்லை என வாக்களித்தால் கண்கள் குணமடைந்துவிடும்" என்றார்.

அதற்கு "இறைமையை நினைத்து அழாத கண்களினால் எவ்வித நன்மையுமில்லையே" என அவர் பதிலுரைத்தார்.

"துயரப்படுகிறவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்."( Blessed are those who mourn, for they shall be comforted) எனும் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின் மெய்ப் பொருளை யார் உணர்வார்?




வியாழன், 26 செப்டம்பர், 2019

உயிரின் பாடல்

வாழ்வின் சங்கீதம். 

(A Psalm of Life).


கவிதையின் சாராம்சம் :


Psalm என்பது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடும் திருப்பாடல்களைக் குறிக்கும் ஓர் சொல். கவிஞரின் பார்வையில் வாழ்க்கை என்பதும் போற்றிக்  கொண்டாடப்பட வேண்டிய ஒரு அற்புதமான சங்கீதம். 

இந்தக் கவிதை நேர்மறை எண்ணங்களின் தொகுப்பு. 

வாழ்வு இயற்கை அளிக்கும் ஒரு உயர்ந்த பொக்கிஷம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் இருக்கும். வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பதிக்க ஆசைப்படுவோம். 

நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் இந்த நெருப்பை, தீ மூட்டிவிடும் நெருப்புப்பொறி தான் இந்தக் கவிதையின் வார்த்தைகள். 

கவிதை சொல்லும் அற்புதமான கருத்துக்கள் :

உலகம் வாய்ப்புகளால் நிறைந்துள்ளது. மானுட வாழ்வு குறுகிய கால அளவு உடையது. நேரத்தை வீணடிக்காது திறம்படச் செயல்படுவதே முக்கியம்.
புலம்பல்களை வீசியெறிந்துவிட்டு,  நேர்மையோடும், நீதியோடும் இதயத்தின் சத்தத்துக்குச் செவிமடுத்து அயராது ஒவ்வொரு கணமும் உழைத்தால் வாழ்க்கை வரலாறாக மாறும்.

வாழ்க்கை என்பது கல்லறை நோக்கிய பயணம் அல்ல. இறந்தகாலத்தின் இனிப்பான,  கசப்பான எச்சங்களும் அல்ல. எதிர்காலத்தின் ஏக்கமும் அல்ல. நிகழ்காலத்தில் திறம்பட உழைப்பது. அது அழியாததொரு தடத்தை வரலாற்றில் பதிக்கக் கிடைக்கும் அரிய வாய்ப்பு. 

உடல் அழியும். ஆனால் ஆன்மா எழுதிய கதை சிறப்பாக இருந்தால் அது என்றென்றும் நிலை நிற்கும்.

ஆசிரியர் வரலாறு :


(Henry Wadsworth Longfellow - February 27, 1807 – March  24, 1882
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ என்பவர் ஒரு உலகப்புகழ் பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். 

இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. 

புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1836-ல் ஹார்வர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் பணியிலிருந்து 1853-ல் ஓய்வு பெற்று முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

‘எ பில்கிரிமேஜ் பியாண்ட் த ஸீ’ (A Pilgrimage Beyond the Sea)  என்ற பயண நூலை 1839இல் எழுதியுள்ளார். 

பின்பு ‘வாய்சஸ் ஆப் த நைட்’ (Voices of the Night) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ் ஆஃப் பிளாக்ஸ்மித்’, ( The Vilage of Blacksmith),  ‘த ரெக் ஆஃப் த ஹெஸ்பெரஸ்’ (The Wreck of the Hesperus), உள்ளிட்ட இவரது கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன. 

ஐரோப்பா, ஆசியா, அரேபிய நாடுகளை சேர்ந்த பல புகழ்பெற்ற கவிதைகளைத் தொகுத்து 31 தொகுதிகளாக ‘போயம்ஸ் ஆஃப் பிளேசஸ்’ (Poems of Places) என்ற பெயரில் 1874-ல் வெளியிட்டார்.
1861-ல் உடையில் தீப்பற்றியதில் மனைவி இறந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு மழிக்க முடியாமல் போனதால் நீண்ட தாடி வளர்ந்தது. நாளடைவில் அதுவே அவரது அடையாளமானது. லாங்ஃபெல்லோ 75 வயதில் (1882) மறைந்தார்.
(ஆசிரியர் பற்றிய குறிப்பு தமிழ் விக்கிபீடியா வில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.)

கவிதையின் அழகு :




இக் கவிதையின் ஒவ்வொரு பத்தியிலும் முதல் மற்றும் மூன்றாம் வரிகளின் கடைசி வார்த்தை Rhyming இல் அமைந்திருக்கும். (Numbers, slumbers ; earnest,  returnest ; sorrow,  morrow...,)

அது போல்  இரண்டாம் மற்றும் நான்காம் வரிகளின் கடைசிச் சொற்கள் Rhyming ஆக இருக்கும்.(dream, seem ; goal, soul ; way, day...,)


*******   *******   *******

உயிரின் பாடல் 



நிறுத்துங்கள்! துயர் மிகுந்து புலம்பியது போதும்.
ஆன்மா மரித்து நித்திரையடைந்தது, 
வாழ்வு ஓர் வெற்றுக் கனவு, 
தோற்றமெல்லாம் மாயை 
எனும் சோக கீதங்கள் இசைத்தது போதும்.

வாழ்வு உண்மை! வாழ்வு ஊக்கம்!
வாழ்வின் இலக்கு கல்லறை அல்ல. 
மண்ணில் உருவாகி புழுதியில் புதைவது 
உடல் மட்டுமே ; ஆன்மா அல்ல.

மகிழ்ச்சியும் துயரமும் மட்டுமல்ல வாழ்வு. 
முடிவு அது அன்று ; இன்னும் கொஞ்சம், 
இன்னும் கொஞ்சம் என முன்னேறத் 
துடிக்கும் ஏக்கத்தின் தேடலால் நிரப்பு. 

வாய்ப்புகள் ஏராளம். 
நேரமோ சிறகை விரித்துப் பறக்கிறது.  
இதயம் வலிமையுடன் தைரியமாகத் துடிக்கிறது. 
இருப்பினும் மரண அச்சம் துளிர்க்கையில் 
இதயத்துடிப்பு பறையோசயின் இலயமாக இசைக்கிறது. 

உலகின் அகன்றதொரு போர்க்களத்தில் 
வாழ்க்கைப் போராட்டம் தற்காலிகம்.
இதில் ஊமையாகவோ, உந்தப்பட்டு 
வழிநடத்தப்படும் கால்நடையாகவோ வாழாதே. 
நாயகனாகப் போர் புரி.

வனப்புடன் வசப்படுத்தத் துடிக்கும் எதிர்காலம் இருக்கட்டும். 
இறந்த காலத்தின் மரித்த நினைவுகளை மரித்தவரோடு அடக்கம் செய். 
தற்கணச் சூழலில் செயலாற்று. நிகழ்காலம் மட்டும் நிஜம். 
இதயத்தின் குரலுக்குச் செவிமடு, இறைவன் அதனுள்ளே.

வரலாற்றின் சிறந்த சாதனையாளர்கள் 
நினைவூட்டுவது எல்லாம் 
நமது கதைகளும் விழுமியங்களாகட்டும்.
கடந்து செல்லும்முன் காலத்தின் மணற் பரப்பில் 
அழுத்தமான கால்தடத்தை அழியாதவாறு பதித்துவிட்டுச் செல்.


உனது தடம் புனித முத்திரையாகட்டும்.
கப்பல் உடைந்து, கடினமான பயணத்தின் 
நொறுங்கிய இதயத்துடன் தவிக்கும் மனதுக்கு 
நீ பதித்த தடங்கள் வழி காட்டட்டும். 

எழுந்திரு! இதயம் தளராது செயலாற்று. 
எந்த விதியையும் எதிர்கொள். 
இன்னும் சாதிக்க வேண்டும். 
இடைவிடாமல் தொடர்ந்து முன்னேறு. 
உழைப்பதற்கும், காத்திருப்பதற்கும் 
எப்போதும் கற்றுக்கொள்.

*******   *******   *******

மூலப் பாடல்

A Psalm of Life 

(by Henry Wadsworth Longfellow)



Tell me not, in mournful numbers,
Life is but an empty dream!
For the soul is dead that slumbers,
And things are not what they seem.
Life is real! Life is earnest!
And the grave is not its goal;
Dust thou art, to dust returnest,
Was not spoken of the soul.
Not enjoyment, and not sorrow,
Is our destined end or way;
But to act, that each to-morrow
Find us farther than to-day.
Art is long, and Time is fleeting,
And our hearts, though stout and brave,
Still, like muffled drums, are beating
Funeral marches to the grave.
In the world’s broad field of battle,
In the bivouac of Life,
Be not like dumb, driven cattle!
Be a hero in the strife!
Trust no Future, howe’er pleasant!
Let the dead Past bury its dead!
Act,—act in the living Present!
Heart within, and God o’erhead!
Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time;
Footprints, that perhaps another,
Sailing o’er life’s solemn main,
A forlorn and shipwrecked brother,
Seeing, shall take heart again.
Let us, then, be up and doing,
With a heart for any fate;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.

*******   *******   *******

திங்கள், 23 செப்டம்பர், 2019

இறைவனின் பண்புகள்

திருவாசகம் - மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே




மலரின் இதழ்களில் 
நீர்த்துளி! 

பனித்துளியா? மழைச் சாரலா? 
கண்ணீரோ?
பூவிற்கும் வியர்த்திருக்குமோ? 


எதுவாக இருக்கக் கூடும்? 

அசரீரியாக ஒரு குரல்  
அது பார்ப்பவரின் 
மனதில் ஒளிந்திருக்கிறது 
மலரோ எப்போதும்
மலராகவே இருக்கின்றது.





திருவாசகம் பாடல் - திருச்சிற்றம்பலம். (62 -83) - இறைவனது பண்புகள்


62. மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
63. தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
64. பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
65. நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠ 

66. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
68. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
69. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
70. இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠


71. அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 
72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
73. ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
74. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
75. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠ 

76. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
77. போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
78. காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
80. தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠ 

81. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
82. தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
83. ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 



இருக்கிறவராகவே இருக்கிறேன்.



(படம் நன்றியுடன் : ராமலக்ஷ்மி)  


நாம் ஆலயத்துக்குப் போகிறோம். 

ஆனால் எப்போதாவது மனம் மறந்து நேரம் போவதே தெரியாமல் இறைவனைக் கும்பிடுகிறோமா?

கடவுளைத் தொழுது கொள்ளும்போது கண்களில் ஈரம் கசிந்ததுண்டா? 

வீட்டில்  தொழுகை செய்கிறோம். மனம் இலயத்து இன்னும் கொஞ்சம் நேரம் கடவுள் சமூகத்தில் அமர்ந்திருக்க வேண்டும் எனும் ஆசை வருகிறதா? 

வேதத்தை, அற நூல்களை வாசிக்கும் நேரத்திற்கும், பிற நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாசிப்பதற்குச் செலவிடும் நேரம் ஒப்புமை அளவில் எப்படி இருக்கிறது?

வேதத்தையும், இறை நூல்களையும் ஆர்வமுடன் வாசிக்கிறோமா?  அல்லது கடமைக்காக வாசிக்கிறோமா? 

பொதுவாக நாம் துயரத்தில் இருக்கும்போது இறைவனைக் கருத்தாய் தேடுகிறோம். 

எனது இளவயதில் மரணத்துக்குச் சமீபமாக இருந்தேன். மரணத்துக்கும் எனக்கும் ஒரு நூலிழை தான் இடைவெளி.

அப்போது இறைவனது பல நாமங்களைக் குறிப்பிட்டு இடைவிடாமல் வேண்டுதல் செய்வேன். 

வாழ்வில் மீதமுள்ள வருடங்களில் இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும் எனப் பல தீர்மானங்களை எடுத்தேன். அப்போது இறை நூல்களை ஒழுங்காக உணர்ந்து வாசிப்பேன். விரதம் இருந்தேன். 

ஆனால் துயரச் சூழல் மாறியவுடன் வருடங்கள் செல்ல செல்ல அனைத்தையும் மறந்து மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு மனம் திரும்புகிறது. இறை வேண்டல், வேதம் வாசிப்பது ஒரு தினசரி கடமை முறையாக மாறி விடுகிறது.

துயரத்திலிருந்தபோது இருந்த உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு இப்போது இல்லை. இது எவ்வளவு துரதிர்ஷ்டம். நன்றியற்ற தன்மை.

இவ்வாறு நாம் சூழலுக்குத் தக்க மாறுகிறோம். ஆனால் இறைவன் மாறாதவர். அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர். அவர் அன்பானவர். அவர் தீமையை நம்மிலிருந்து நீக்க விரும்புகிறவர். நல்வழியில் நடக்க உறுதுணையாக உதவி செய்பவர். நம்மை உயர்த்தி மேன்மையாக வாழ வைப்பவர். 

ஒவ்வொரு சமய நூல்களிலும் இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு.  இறைவனது பிள்ளைகள் நாம். அவரது குணங்கள் நம்மில் உருவாக இறைவன் விரும்புகிறார். அவரது திருப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவரது குணத்தைச் சொல்கிறது.

தொழுகையின் போது ஒவ்வொரு பெயரை மனமுவந்து நன்றியுணர்வுடன் உச்சரிக்கும்போது அப்பண்புகள் நம்மில் உருவாகும்.

நமது மனதை மீண்டும் மீண்டும் இறைவனிடம் அர்ப்பணம் செய்வதன் மூலமாகவே வாழ்க்கைப் பயன் நிறைந்ததாக மாறும்.




அருளாளர் மாணிக்க வாசகர் இப்பாடலில் மனம் கசிந்து இறைவனது அன்பில் தோய்ந்து அவரது பண்புகளை அனுபவித்து உணர்ந்து போற்றிப் பாடுகிறார்.

அவரது மனதில் இறைவனது அன்பு எழுப்பும் உணர்வுகள் அருவியாகக் கொட்டுகிறது.

இப் பாடல் பகுதியில் அருளாளர் எத்தனை விதமாக இறைவனது பண்புகளைப் போற்றிப் பாடுகிறார் பாருங்கள்.


தூய்மையானவரே. களங்கமற்றவரே.

நீர் ஒளியாகப் பிரகாசிப்பவர்.


நீர் தேன் போன்ற இனிமையானவர்.


அரிய அமுதம் போன்று என்னை உயிர்ப்பிப்பவர்.


பாசமாகிய பற்றை அறுத்து என்னைக் காத்து வழி நடத்தும் குருவானவர்.


என் மனதில் உள்ள வஞ்சகத்தை அழிக்கும் பெருங்கருணை நதி.


தெவிட்டாத அமிர்தம். 


எல்லையில்லாதவர். 


மனதில் மறைந்திருக்கும் ஒளி.


என் கல் மனதை உடைத்து நீர் போல் உருகச் செய்பவர்.


எனது ஆருயீர்.


இறைவா! உமக்கென்று இன்பம், துன்பம், சுகம், துக்கம் இயற்கையில் இல்லாதவர்.


எம் போன்று அடியவர்க்கு வரும் இன்ப துன்பங்களை நீர் ஏற்றுக் கொள்வதனால் இன்பமும் துன்பமும் உடையவர்.


உமது அன்பர்களிடத்தில் அன்புள்ளவர்.


எல்லாப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவர்.


காரிருளிலும் ஒளியிலும்  வாசம் செய்பவர்.


பேரொளியே.

புறத்தில் வெளிப்படாத பெருமையுடையவர். ( இறைவனைக் கண்ணால் காண முடியாது. அறிவினாலும் முழுமையாக அறிய முடியாது. அனுபவத்தால் உணர்ந்து சிந்தனையில் அவர் பெருமையை அனுபவிக்க மட்டுமே முடியும்)

துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

என்னை மீட்டுக் கொண்டவர். 

எம் அன்பு தந்தையே.

இயற்கையின் நுட்பமான அறிவே.

எப்போதும் காப்பவர். (போகையில், வருகையில், நிற்கையில் என எப்போதும் நிழலாய், மேகமாய் உடனிருந்து காப்பவர்.)

புண்ணியனே.

என்னைக் காப்பாற்றும் அரசரே.

காண்பதற்கு அரிய பேரொளியே

மகாநதி போன்ற ஜீவ நதியே. இன்ப ஊற்றே.

தாய், தந்தையிலும் மேலானவரே.

மாறுதலையுடைய இவ்வுலகத்தில் நிலை பெற்ற தோற்றத்தையுடைய ஒளியாகவும், சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகவும்  வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு  உயிர்களின் மனப் பக்குவத்திற்கேற்ப அருள் பாலிக்கும் தெளிந்த ஞானமே.

என் மனதில் வற்றாத ஜீவ ஊற்று போன்று சுரக்கும் அமிர்தமே.


இறைவனை வழிபடும்போது நமது மனதிலும் இத்தகைய நன்றியுணர்ச்சி மேலிடுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


வியாழன், 19 செப்டம்பர், 2019

கடலோடு உறவாடி

நானும் எனது கடலும்.., 



மசூதியை ஒட்டிச் செல்லும் அந்தச் சாலை
வளைந்து நெளிந்து செல்லும் 

கருநாகம் போல் படுத்துக் கிடக்கின்றது.
கார்கூந்தல் எனச் சொல்ல
ஏனோ இப்போது மனமில்லை


சாலைக்கு அப்புறம் சலசலக்கும் கடல்.

பெரும்பாலும் அந்தச் சாலை
ஆள் அரவமற்று 
அமைதியும் 
கடலின் சலசலப்புமாக இருக்கும்.

கடலுக்கும் எனக்குமான உறவு
ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம்


கடலுக்கு எதையும் சொல்லிப்
புரியவைக்கத் தேவையில்லை
ஆகவே அது ஆதித் தாயாக
இருந்திருக்கக்கூடும்


ஒவ்வொரு நாளும் அதற்கு முன்பாக 
ஆவலுடன் அமர்ந்திருக்க ஓடுவேன்

கடல் காத்திருந்ததா எனத் தெரியாது
ஆனால் எதிர்பார்த்திருக்கும் 
என நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன்

மகிழ்ச்சி, கண்ணீர்
துள்ளல், ஆற்றாமை
ஆசை, இழப்பு
எதிர்பார்ப்பு, தவிப்பு
உற்சாகம், ஏக்கம்
காதல், மோதல்
என எனது உணர்வுகள் எதுவாயினும்
கடல் முன்பாக அமர்ந்தால்
பிரமாண்டத்தின்
முன்பாக நான் ஓர் சிறு துளி


ஆக அதற்கு என் அத்துணை 
உணர்வுகளும் அத்துப்படி
எனினும் கடல் உணர்வுகளை
அலைகள் மூலமே அறியமுடியும்
இங்கும் அங்குமாக மாறி மாறி
பொங்கிச் சலசலக்கும்

உண்மையில் கடலைப் பற்றி
எனக்கு அவ்வளவாய் 
தெரியாது
தெரிந்து கொள்ள முயன்றாலும் முடியாது 
அதுவாகவே எதுவும் சொல்லாத வரை

எனது கடலின் அழகு அதன் நிறத்தில்
பச்சோந்தி போல

ஒவ்வொரு மணிக்கும் 
ஒவ்வொரு நிறமாக மாறும்
அதிகாலை செந்நிற சாம்பல்
பின் வெளிர் நிற பச்சை 
மதியம் அடர்த்தியான நீலம் 
அதைத் தொடர்ந்து கரும் பச்சை
மாலையில் தங்க மஞ்சள்
செவ்வான சூரியனை விழுங்கி அடர் கறுப்பாக 
என தினுசு தினுசாக மாறி மாறி
புரிந்து கொள்ளவே இயலாததாக

எனினும் நீலம் எனக்குப் பிடிக்கும்
அதற்கும் கூட அப்படியே இருக்கலாம் 

ஏனெனில் அது பெரும்பாலும் 
நீலமாகவே இருக்கிறது

இன்று வானம் செவ்வானமாகத்
தங்க நிறத்தில் தகதகக்கிறது


பொன்னிற மண்ணில் 
சின்னஞ்சிறு குழந்தைகள் 
அலையோடும் மணலோடும் 
ஓடி விளையாடிக் களித்து 
வெடித்துச் சிரிக்கின்றனர்

கடற்கரை மணலில் நண்டுகள் 
அதன் வளைப் பொந்துகளுக்கும்
கடலுக்கும் இடையில் சர சர என 

அங்கும் இங்குமாக ஓடி ஓடி உறவாடுகின்றன

மணற்பரப்பு நெடுக 
இதயங்கள் வரையப்பட்டு 
அலைகள் அழிப்பதற்காகக் 
காத்து நிற்கின்றன

இன்றும் கடலுக்கு முன்பாக
பிரமாண்டத்தின் 
முன்பாக 
ஒரு சிறு துளியாக நான்

உடை நனையாது அதைச் சரி செய்து
பாதம் மட்டும் அலை தொடும்படி
எச்சரிக்கையாக அமர்ந்தேன்


பாதம் தொட்ட குளிர்ந்த நீரினால்
மனம் பரவசமானது


பரவச மயக்கத்தில் மனம் மயங்க
இன்னும் கொஞ்சம் முன் நகர்ந்தேன்

பாதம் தொட்டுத் தழுவி வழுவி
நுழைந்து புகுந்த நீர்
மனதில் உணர்வுகளோடும்
உடலோடும் உறவாடியது


கடலையேமெய் மறந்து பார்த்தேன்
மாறி மாறி அலைகள் மனதில்

சிறு குழந்தையாகக்
கற்பனை சிறகடித்தது


நானும் கடலும் சிறு பிள்ளைகளானோம்
காகிதக் கப்பல்களில் பயணித்தோம்

பாடல்கள் பாடினோம்
கதைகள் பகிர்ந்தோம்
கவிதைகள் செய்தோம்
பகடி செய்தோம் சிரித்தோம் 
பின்பு சிரித்ததை நினைத்து அழுதோம்
அழுததும் அழகானது

கடலின் ஓர் சிறு துளி தெறித்து
என் நெற்றியின் மத்தியில்
சிறு பிறை வரைந்து அழகு பார்த்தது


சீறிய அலை சிதறடித்த நீர்
கண்ணத்தில் அழுத்தமாகப்
பதிந்து மெல்ல வழிந்து
உதடுகளை உப்பாக நனைத்தது


கடலின் பேரலை சீற்றமா
அல்லது
மசூதியின் தொழுகைப் பாடலா
எது எனத் தெரியவில்லை


சிந்தனை கலைந்தது
திடுக்கிட்டுப் பார்த்தால் எதிரில் பேரலை


வெடுக்கெனப் பின்வாங்கி
வாரிச் சுருட்டி எழுந்துப் பின் வாங்கினேன்.


விளைவுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளாது
அடைய ஆசைப்பட்டு அலைவதும்

அதை அடைந்ததும் அலட்சியப் படுத்துவது
அல்லது பதறி விலகுவதும்
மனித இயல்பாக இருக்கிறது


கடல் எப்போதும் போல் தனது 
உவர்ப்பு மிகு அலைகளைச் 
சிறிதும் பெரிதுமாக மாறி மாறி எழுப்பி
இயல்பாகச் சலசலக்கிறது








ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

33. காப்பது விரதம்

ஆத்திசூடி - நல்லொழுக்கங்களை நிலைக்கச் செய்தல்.




  • "காப்பது விரதம்" எனும் ஆத்திசூடியின் பொருள் :

காப்பது என்பது காப்பாற்றுவது, பாதுகாப்பது, கடைப்பிடிப்பது எனப் பொருள் கொள்ளலாம்.

அப்படி என்றால் "காப்பது விரதம்" எனும் ஆத்திசூடியின் பொருள் :

பிற உயிரினங்களை, இயற்கையைப் பாதுகாப்பது நீதி.

நல்லொழுக்கங்களை உறுதியுடன் கடைப்பிடித்தல் நீதி.


  • விரதம் - நோன்பு - உபவாசம்.


உணவை மறுத்து இறைவனைத் தொழுவது விரதம், நோன்பு அல்லது உபவாசம் எனச் சொல்லப்படுகிறது.

உபவாசத்தின் அடிப்படை உணவையும் மறுத்து இறைவனிடம் இனைந்து அவர் சமூகத்தில் தரித்திருப்பது.

நோன்பு என்பது இறைவனது கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி மனதை உறுதிப் படுத்துவதற்காக மனதுக்கு அளிக்கப்படும் ஒருவகைப் பயிற்சி.

இது ஒவ்வொரு சமயமும் குறிப்பிட்ட காலத்தில் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தும் ஒரு சமய நல்லொழுக்கம்.

ஒவ்வொரு சமயத்திலும் விரதத்துக்கு என சில நியதிகள், ஒழுங்குகள் கடைப்பிடிக்கும்படி நியமிக்கப்பட்டுள்ளது.

அவை மனதைச் சீர்படுத்தவும் இறைவனை நோக்கி ஒருமுகப்படுத்தவும் அமைக்க.பட்டுள்ளன. அவை உயர்ந்த சிந்தனை மற்றும் ஆழ்ந்த பொருள் உடையது.

வாழ்வில் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விரதம் ஏற்றெடுக்கப்படுகிறது.

மறைந்த முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூறும் விதத்திலும் விரதம் அனுசரிக்கப்படுகிறது.

வாழ்வில் சில குறிப்பிட்ட காரியங்களை அடைய விரும்பி நேர்ச்சையுடன் விரதம் ஆசரிக்கப்படுகிறது.

வெறும் உண்ணாமல் இருப்பது உபவாசம் இல்லை. இறைவனது பிரசன்னத்தில் அமர்ந்திருப்பதுவே விரதம்.

அப்போது விரதம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. புலன்களைக் கட்டுப்படுத்துகிறது. வாழ்வின் தடைகளை அகற்றுகிறது. புது வழியைத் திறக்கிறது. மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது. நல்லொழுக்கப் பாதையில் நடக்கச் சக்தி அளிக்கிறது.

ஒவ்வொரு சமய முன்னோடிகளும் நோன்பிருந்தே இறை வாக்குகளைப் பெற்றனர்.

வாழ்வில் விட முடியாத தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற நோன்பிருத்தல் உதவுகிறது.

விரதம் உடலையும் தூய்மை செய்கிறது. உடல் நலிவுற்றவர், நோய் வாய்ப்பட்டவர், சிறு குழந்தைகள் தவிர்த்து மற்றவர் வாரத்தில் ஒரு நாளானாலும் உபவாசம் கடைப்பிடித்து இறை வேண்டல் செய்வது வாழ்வை சுபிட்சமுன்டாகும்.




  • இயேசு கிறிஸ்து விரதம் பற்றிக் கூறியது :


நீங்கள் விரதம் இருக்கும்போது, "வெளி வேஷக்காரர்களைப் போல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்.

உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.

நீங்களோ விரதம் இருக்கும்போது உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்; அப்போது, நீங்கள் விரதம் இருப்பது மனிதர்களுக்குத்  தெரியாது, 

ஆனால் எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் இறைவனுக்குத் தெரியும். அதனால், எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் கடவுள் உங்களுக்குத் தகுந்த பலன் கொடுப்பார்.


  • இறைவன் விரும்பும் விரதம் 



கிறிஸ்தவ திருமறையில் இறைவன் விரும்பும் விரதம் இது என ஒரு தீர்க்கதரிசி எழுதியுள்ளார்.

நீங்கள் உங்கள் உணவைப் பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 
நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டுபிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன். 
ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப்போன்றவர்களே. 
இதுவே எனக்குப் பிரியமான நோன்பு.
நீங்கள் இவற்றைச் செய்தால், உங்களது வெளிச்சம் விடியற்கால சூரியனைப்போன்று ஒளிவீசத் தொடங்கும். பிறகு, உங்கள் காயங்கள் குணமாகும். 
உங்கள் நன்மை உங்களுக்கு முன்னால் நடந்து செல்லும். இறைவனுடைய மகிமை உங்களைப் பின்தொடர்ந்துவரும். 
பிறகு நீங்கள் கடவுளை அழைப்பீர்கள். அவர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ இறைவனிடம் சத்தமிடுவாய். அவர் “நான் இங்கே இருக்கிறேன்!” என்பார்.

உண்மையான நோன்பிருத்தல் இதயத்தில் இறையன்பை ஊற்றெடுக்கச் செய்யும்.

திங்கள், 9 செப்டம்பர், 2019

ஆம் ஆயின்

என்றால்.., (IF)



வாழ்க்கையின் ஒரு பகுதி யுத்த களம். வலி மிகுந்தது.

வாழ்க்கையில் போராட்டத்தை எதிர் கொள்ளும் போது அது உடலை (Physically) பலவீனப்படுத்துகிறது.

மனதை (Mentally) சோர்வடையச் செய்கிறது.

உணர்வை (Emotionally) கொந்தளிக்கச் செய்கிறது.

மற்றும் ஆன்மீக ரீதியில் (Spiritually) நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. 

இதைத் தவிர்க்க முடியாது. சந்தித்துத்தான் ஆக வேண்டும். 

போராட்டத்தைக் கண்டு ஓடி ஒளிவது அல்லது பிரச்சனைகளைத் தவிர்ப்பது வாழ்வை அந்த இடத்திலேயே நிறுத்திவிடும். 

அப்படி என்றால் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? 

இந்த உலகப்புகழ் பெற்ற கவிதை  வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள, துயரத்தைச் சகித்துக் கொள்ள, தொடர்ந்து துன்பங்களுக்கு மேலே போரடி முன்னேறிச் செல்ல சில பண்புகளைப் பட்டியலிடுகிறது.

இந்தச் சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்தால் மேன்மை நிச்சயம் என அறைகூவல் விடுக்கிறது.

அப்படி என்ன சிறந்த பண்புகள்? 

இக் கவிதை "இப்படி உங்களால் வாழ முடியுமா? " என ஓர் சவால் நிறைந்த சில பண்புகளைச் சுட்டுகிறது.

இந்த கவிதை ஊக்கமளிக்கிறது. பின்பற்ற ஓர் உதாரணத்தை வழங்குகிறது. வாழ்முறை பயிற்சி அளிக்கிறது. 

உடலின் சக்திக்குப் போஷாக்கு நிறைந்த உணவு தேவை. அதே விதமாக நல்ல வார்த்தைகளே மனவலிமைக்கு  உணவு. இக் கவிதையின் வரிகள் ஆன்மாவிற்கான ஒரு சக்தி நிறைந்த உணவு.


ஆசிரியர் குறிப்பு :




ஜோசப் இரட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling) டிசம்பர் 30 , 1865 - ஜனவரி 18, 1936) - இந்தியாவில் மும்பையில் பிறந்த ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர். 

இவர் 1907 இல் தனது 42 ஆவது வயதில் நோபல் பரிசுப் பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே.

1906 மற்றும் 1910ல் முறையே வெளியிடப்பட்ட பக் ஆஃப் பூக்ஸ் ஹில் மற்றும் ரிவார்ட்ஸ் அண்ட் ஃபேரீஸ் . அதற்குப் பிறகு “இஃப் (IF)…” என்ற கவிதை இடம் பெற்றிருந்தது. 

1995ல் பி.பி.சி நடத்திய கருத்துக் கணிப்பில், இது இங்கிலாந்தின் மிக அதிகமாக விரும்பப்படும் கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது. 

சுய கட்டுப்பாடு மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் பற்றி விவரிக்கும் இந்த கவிதை கிப்லிங்கின் மிகப் பிரபலமான கவிதை என்பதை எந்த சந்தேகமுமின்றி சொல்லலாம்.

என்றால்..,




உங்கள் அபிமானத்தை இழந்து, சுற்றி இருப்பவர்கள் 
எல்லாம் குற்றம் சாட்டும் சூழலிலும், தலை நிமிர்ந்து தைரியமாக 
அதைச் சந்திக்கும் மனவுறுதி உனக்கு இருக்கும் என்றால்

அவர்கள் ஐயப்படுவதற்கும் இடமளித்து,
அனைவரும் உன்னைச் சந்தேகிக்கும் சூழலிலும்
நீ உன்னை நம்புவாய் என்றால்

காத்திருப்பதற்கு மனம் தளராது, 
உன்னால் காத்திருக்கக் கூடும் என்றால்

பொய்கள் பேசப்படுகிறது என அறிந்தாலும்,
அதைப் பொருட்படுத்தாது அடக்கமுடன் 
அமைதி காக்க முடியும் என்றால்

உதாசீனப்படுகையிலும் பொறுத்து, 
ஆனால் உன்னை வெறுப்பதற்கு இடமளிக்காது 
மலர்ந்த முகத்துடன் வாழ இயலும் என்றால்

அழகுமிக்க நல்லவராக முன்னிறுத்தாது,
அதி புத்திசாலித்தனமாகப் பேசாது, 
அடக்கமாக உன்னை வெளிப்படுத்த முடியும் என்றால்

கனவு காண முடிந்தாலும், அந்தக் கனவுகள்
உன்னை ஆளுகை செய்ய அனுமதிக்காது இருக்க முடியும் என்றால் 

சிந்தனை ஊற்றெடுத்துப் பொங்கினாலும், 
யோசனைகள் எல்லாம் நோக்கத்தை நோக்கியே குவியாது 
எண்ணங்களை ஒழுங்கமைக்க முடியும் என்றால்

முட்டாள்களைப் பொறியில் பிடிப்பதற்காக,
நீங்கள் பேசிய உண்மைகளைத் திரித்துப் பரப்பும்போது
அதற்காக வெகுண்டு எழாது பொறுத்துக் கொள்ளக் கூடும் என்றால்

உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உருவாக்கப்பட்டது 
உடைத்து உருக்குலைவதைக் கண்டவுடன் கலங்காது, 
நின்று நிதானித்துத், தேய்ந்த கருவிகளைக் கொண்டானாலும் 
மீண்டும் செப்பனிடு செய்து நிலை நிறுத்த முடியும் என்றால் 

உங்கள் எல்லா வெற்றிகளும் ஒரு குவியலாகக் குவிக்கப்பட்டு 
ஸ்ருதி பிசகும் இமைப் பொழுதில் அத்துணையும் இழக்க நேரினும்,
இழந்ததை மீட்கப் பூஜ்யத்திலிருந்து மீண்டும் 
துவங்கும் மன உறுதி இருக்கும் என்றால் 

நீண்ட காலம் உழைத்து செயல்திறன் மங்கி 
இதயம், நரம்பு, இரத்த நாளங்கள் சோர்ந்து 
மன உறுதி மட்டுமே எஞ்சியிருக்கையில்,
செயல்படுங்கள் என இதயத்தைப் பார்த்து 
உத்வேகத்துடன் கட்டளையிட முடியும் என்றால் 

மிகப் பெரிய மக்கள் கூட்டத்துடன் இணக்கமாக வாழ்ந்தாலும், 
உங்கள் தனித்துவம், ஒழுக்கத்தை விட்டுக் கொடுக்காது
காத்துக் கொள்ள முடியும் என்றால் 

அரசர்களோடு உலாவரும் வாழ்க்கை வாழ்ந்தாலும், 
எளிய மனிதனோடும் உறவைப் பேண முடியும் என்றால் 

எதிரிகள் அல்லது அன்பான நண்பர்கள் எவராயினும், 
உங்களைக் காயப்படுத்த அனுமதிக்காது வாழ முடியும் என்றால் 

எல்லோரும் உங்களோடு உடனிருந்தாலும், 
ஒருவருடனும் நெருக்கமாக இருக்காது 
விலகி வாழ முடியும் என்றால் 

மன்னிக்காத தன்மை அறுபது வினாடி ஓட்ட தூரத்துக்குள் 
உங்கள் மனதை விட்டு நீங்கும்படி 
உள்ளம் பக்குவமாக இருப்பீர்கள் என்றால் 

இந்த உலகமும் அதன் 
அத்துணைப் பொருட்களும் 
உனக்கானது.

என் குழந்தையே! நீ மிகவும் சிறந்த மனிதன்.

மூலப் பாடல் :


If 

(Joseph Rudyard Kipling)

If you can keep your head when all about you
   Are losing theirs and blaming it on you,
If you can trust yourself when all men doubt you,
   But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
   Or being lied about, don’t deal in lies,
Or being hated, don’t give way to hating,
   And yet don’t look too good, nor talk too wise:
If you can dream—and not make dreams your master;
   If you can think—and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
   And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you’ve spoken
   Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
   And stoop and build ’em up with worn-out tools:
If you can make one heap of all your winnings
   And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
   And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
   To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
   Except the Will which says to them: ‘Hold on!’

If you can talk with crowds and keep your virtue,
   Or walk with Kings—nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
   If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
   With sixty seconds’ worth of distance run,
Yours is the Earth and everything that’s in it,
   And—which is more—you’ll be a Man, my son!



ஆசிரியர் குறித்து மேலதிக குறிப்புகளுக்கு :  தமிழ் விக்கிப்பீடியா