சனி, 29 செப்டம்பர், 2018

நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.

🌺 நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.




🔹 கசப்பை வளரவிடாதீர்கள். பழிவாங்குதலில் முடியும்வரை அதன் அனல் அணையாது!

அதற்கு மாற்றாக அன்பினால் மனதை நிரப்புங்கள். அதன் நேசத்தில் எப்போதும் மகிழ்ந்து களி கூறலாம்.

🔸 இச்சையை வளரவிடாதீர்கள். விபச்சாரத்தில் முடியும்வரை அதன் இமை சாயாது!.

ஒழுக்கத்தை உயிரை விட மேலாக கருதி நேசியுங்கள். அதுவே வாழ்வை மேன்மைப்படுத்தும்.

🔹 கோபத்தை வளர விடாதேயுங்கள். கொலையில் முடியும்வரை அதன் குருதி ஆறாது!

மன்னிப்பை ஈந்தளியுங்கள். மனதின் சமாதானம் கடலைப்போல விஸ்தாரம் ஆகும்.

🔸 பெருமையை வளர விடாதேயுங்கள். அவமானத்தில் முடியும்வரை அதன் தாகம் தீராது!

தாழ்மையை மனதில் எப்போதும் தரித்துக் கொள்ளுங்கள். அது உயர்ந்ததும் உன்னதமான நிலையை எய்திட அனுக்கிரகம் செய்திடும்.

🔹 பொறாமையை வளர விடாதேயுங்கள். நம்மை கொல்லாதவரை அதன் வேகம் குறையாது!

பிறரின் திறமையை, உழைப்பை, உயர்வை அங்கீகரியுங்கள். அது அனைவருடனும் நட்போடும், நேசத்துடனும் வாழ்வில் சுபிட்சமாக வாழந்திட அருள் செய்யும்.

வாழ்க வளமுடன்.

வியாழன், 20 செப்டம்பர், 2018

மகிழ்ச்சி எனும் இரசவாதம்.

மகிழ்ச்சி எனும் இரசவாதம்.



(கல்லூரி நண்பர்கள் பொங்கல் கூடுகை - மாங்கரை) 

இங்கு பக்ரித் கொண்டாட்டங்கள் முன்னிட்டு  தொடர்ந்து ஒன்பது தினங்கள் விடுமுறை அறிவித்தாயிற்று.

ஏறக்குறைய பத்து தினங்கள்  தனியாக விடுமுறையைச் செலவழிப்பது என்பது மிகச் கடினமாகத் தென்பட்டது. விமான கட்டணமோ நான்கு ஐந்து மடங்கு எகிறியது.

இருப்பினும் விடுமுறையை அப்பா, அம்மா, உறவுகள் மற்றும் நட்புகள் உடன் இணைந்து கொண்டாடிட, மகிழ்ந்திட தீர்மானித்து ஊர் நோக்கிப் பயணித்தேன்.

மகிழ்ச்சி என்பது பயணங்கள் வழியாகவே தொடங்குகிறது.

பிறப்பு என்பது கூட, உயிர் ஒரு ஆனந்த அனுபவத்தை எதிர் நோக்கிய நீச்சல் பயணத்தில் தானே தொடங்குகிறது.

திருநெல்வேலி - குற்றாலம் இடையில்  வீராணம் எனும் ஒரு எளிமையான கிராமம் தான் எனது தந்தையின் பூர்விகம்.

அப்பா, அம்மா இருவரும் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வாகக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் தான் அப்பா முழுவதுமாக பணி புரிந்து ஓய்வு பெற்றார்கள். பணி நிறைவுக்கு சில வருடங்கள் முன்பாக அம்மா  மாறுதல் பெற்று சொந்த ஊரில் பணி புரிந்து பின்பு ஓய்வு பெற்றார்கள்

எனவே சிறு வயதில் இருந்தே, திருநெல்வேலி தொடர்பு என்பது வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை பொழுது மட்டும் தான்.

பள்ளிப் படிப்பு முழுவதும் நெய்வேலி அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி என்னும் சிற்றூர். பின்னர் கோவையில் கல்லூரி வாழ்க்கை.

ஆகையால் சிறு வயதிலேயே நீண்ட பயணங்கள் இயல்பாக அமைந்து விட்டது.

பள்ளி ஆண்டு விடுமுறைக்குச் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்வது என்பது அப்போது ஒரு திருவிழா கொண்டாட்டம்.

எல்லாத் துணிகளையும் பெட்டியில் வைத்து விட்டு கடைசித் தினத்தன்று வெறும் துண்டோடு அமர்ந்து பயணத்துக்காகத் தயாராகி காத்திருக்கும் அற்புதமான தருணங்கள் அது.

"சுகமா இரிக்கிகளா" "வடக்க இருந்து எப்ப வந்தீக"  என்ற சொந்த ஊரின் விசாரிப்பு தெரு முழுவதும் வாஞ்சையுடன் தொடரும்.

இன்றும் கூட அது தொடர்கிறது.

அம்மாவின் பூர்விகம் ஆழ்வார்திருநகர். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த அழகியதொரு ஊர்.

ஏப்ரல், மே மாதக் கோடையிலும் கூட வற்றாத தாமிரபரணி பாய்ந்த அழகிய காலமது.

பாட்டியின் வீட்டில் காலைப் பொழுது சுடச் சுட கடுங்காப்பியுடன் துவங்கும். உடன் சுற்று முறுக்கு. பள்ளி விடுமுறை காலம் ஆதலால் வீடு முழுவதும் சொந்தங்களால் நிறைந்து இருக்கும்.

நீராகாரம் குடித்து விட்டு ஆற்றை நோக்கிச் செல்லும் பயணம் எப்போது திரும்புவோம் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

ஆற்றுப்படுகையில் தோண்டி எடுத்துப் பருகிய சுனை நீரின் இனிப்பு இன்னும் மனதில் தித்திக்கிறது.

அந்த ஒரு மாதம் எப்படிப் போனது  என்றே தெரியாது. சிறகடித்துப் பறந்த நாட்கள்.

விடுமுறை முடிந்து ஊர் திரும்பி பள்ளி வந்தவுடன் நண்பர்கள் நான் பேசும் விதம் குறித்து கேலி செய்வார்கள்.

என்னடா "ஏல", "வால",  "போல" ன்னு இழுத்து இழுத்து பேசுற.

நம்மை அறியாது ஒட்டும் பேச்சின் மண் வாசம்.

மகிழ்ச்சிக்கான காரணிகள் குழந்தைப் பருவத்தில் இருந்து வாலிப வயதுக்கு இடம் பெயரும் போது தடம் மாற்றம் அடைகிறது.

அது உறவுகளின் கூட்டுறவில் இருந்து விலகி நட்பின் கூடாரத்துக்குள் நுழைகிறது.

கல்லூரி வாழ்க்கை என்பது ஓர் வசந்த காலம். கோவையில் வாழ்ந்த அந்தத் தருணங்கள் வாழ்க்கையில் ஒரு கொண்டாட்டம்.

அப்போது மகிழ்ச்சி என்பது திட்டமிடப்படாத இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வாகும்.

ஆனாலும் கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சியாகக் கருதி செய்த பல செயல்கள் இப்போது திரும்பிப் பார்த்தால், அது நகைப்பாகத் தான் இருக்கிறது.

வாலிப பருவத்தில் இருந்து இளம் மனிதனாக உருவெடுப்பது கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாக உருமாற்றம் அடைவதற்கு ஒப்பாகக் கருதலாம்.

எனது இளமைக் காலத்தில் குறிப்பாக 1997 துவங்கி 2003 வரையில் வாழ்க்கை  என்பது பயணங்களால் நிரம்பி வழிந்தது. அப்போது  இந்தியாவின் 18 மாநிலங்களில் நடைபெற்ற கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்ய வேண்டியது எனது பொறுப்பு.

கிழக்கில் இருந்து மேற்கு; தெற்கிலிருந்து வடக்கு எனத் தேசம் தழுவிய பயணங்கள். அப்போது பெற்ற அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறைகளைப் பெரிதும் மாற்றம் செய்தன.

பால பருவம் துவங்கி இளம் பருவம் வரை மகிழ்ச்சியாக இருப்பது என்பது  உடல் கிளர்ச்சியை மையமாகவும் உணர்வு சார்ந்த செயல்களில் ஈடுபட்டும்  தனது ஆசைகளை மனம் தீர்த்து கொண்டதாகவே இருந்திருக்கிறது.

அப்போது மகிழ்ச்சி என்பது புலன் உணர்வு சார்ந்த ஒரு குதுகலம்.

பொருட்கள் அளித்த ஈர்ப்பு, பாலுறவு கவர்ச்சி, பிறரின் அங்கீகாரத்தைப் பெற விழையும் ஏக்கம், எதிர் பால் அங்கீகாரம், தன்னை முதன்மைப் படுத்த விழையும் ஆர்வம் என ஒரு விதமான மயக்க நிலைதான் மனதை ஆளுமை செய்திருக்கிறது.

இளமைப் பருவம் கடந்து ஆளுமை உணர்வு மனதில் துளிர்க்கும் போது தான் சந்தோஷத்திற்கான வரையறைகள் உருமாற்றம் அடைவதாகத் தோன்றுகிறது.

அப்போது மகிழ்ச்சி என்பது குடும்பத்தின் நிலையை உறவுகள் மத்தியில் உயர்த்துவது, பிள்ளைகளுக்குச் சிறந்த  வாழ்க்கையை அமைத்துத் தருவது, பணியிடத்தில் சிறந்த பதவியை அடைவது, நட்பு வட்டத்தில் ஒரு மதிப்பு மிக்க ஸ்தானத்தை அடைவது, சமூக வெளியில் தன்னார்வ பொறுப்புகளை ஏற்பது எனத் தேடல்கள் திசை மாறிப் பயணிக்கின்றன.

இப்போது கால ஓட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வரையறைகள் முற்றிலுமாக மாறுதல் அடைந்து வருகிறது.

ஐம்பதைத் தொடும் வயதில் அநேகமாகத் திரும்பவும் குழந்தைப் பருவத்திற்கே மனம் வட்டமிட்டுத் திரும்புகிறது.

இப்போது மனம் மீண்டும் உறவுகளின், நட்புகளின் கூடுகையையே பெரிதும் விரும்புகிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் கல்லூரி நண்பர்களின் சில  குடும்பங்கள் ஒன்றாகக் கூடி  கோவை அருகில் உள்ள மாங்கரை வனப்பகுதியில் பொங்கல் வைத்துக் கொண்டாடியது மனதில் இன்றும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.


கோவையில் வசிக்கும் கல்லூரி நண்பர் திருமதி உஷா அங்குசாமி தனது கணவருடன் இனைந்து, அவர்கள் இருவருமாக முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.




அந்த நாள் முழுவதும் கல்லூரியில் வாழ்ந்த நாட்களுக்கு திரும்பிப் பயணம் செய்தோம். 


ஆச்சரியமாக  நாள் முழுவதும்  மொபைல் போனைத் தொடவே இல்லை. 


மனதில் இருந்து பகிர்ந்து கொள்ளும் அன்பு, கரிசனை, உபசரிப்பு, செவிமடுத்துக் கேட்டல், உற்சாகமாகச் சம்பவங்களை பகிர்தல் என அந்தநாள் அற்புதமாகக் கடந்து சென்றது.

உண்மையான மகிழ்ச்சிக்கான காரணிகள் இப்போது முற்றிலும் மாறுபடுகிறது.

இந்த இரசவாதம் அற்புதமானது.

இது தெள்ளத் தெளிவாக புலப்படுகிறது.

மகிழ்ச்சியிலிருந்து ஆனந்தம் என்பது ஓர் வளர் நிலை அனுபவம்.

மகிழ்ச்சிக்கான வரையறைகள் கால ஓட்டத்தில் கடும் மாறுதலடைகின்றன.

ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வந்தால் மட்டுமே அடுத்த நிலைக்குப் பயணிக்க முடியும் எனத் தோன்றுகிறது.

ஒன்றை அடைந்து அதை அனுபவித்துத் தீரும்போது மட்டுமே அதன் மீது உள்ள பிடிப்பு அகல்கிறது.

வாழ்வின் உண்மையான வளர்ச்சியில் காமமும், கபடும், அகந்தையும்  மெல்ல மெல்ல அழிகின்றன.

உடலின் திறனும் மனதின் அகங்காரமும் குறைவதால் புத்தி தெளிகிறது. மனம் புதிதாக பிறக்கிறது.

எதிலும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் கூடுகிறது.

இன்று முதிர்ந்த நிலையில் முகமூடி அணிந்த நட்புகள் வெறுப்பைத் தருகிறது.

போலியான மனிதர்களின் உரையாடல் அலுப்பைத் தருகிறது.

வேடதாரிகளால் எரிச்சல் ஏற்படுகிறது.

அர்த்தமற்ற பொய் உறவுகளை மனம் நிராகரிக்கிறது.

ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை விட்டு  மனம் விலகி ஓடுகிறது.

புதிய நூதனமானப் பொருட்கள் வாங்குவதில் அவ்வளவு நாட்டமில்லை.

பெரும் திரள் கூட்டம் உவப்பானதாக இல்லை.

மற்றவர்களை உற்றுப்பார்க்க வைக்க வேண்டும் எனத் தீர்க்கமாக காரியத்தில் ஈடுபடுவது அவ்வளவு சுவாரசியம் தருவதாக இல்லை.

மாறாக

உண்மையான மனிதர்களின் ஒற்றை வார்த்தை உரையாடல் மனதில் மாயாஜாலம் செய்கிறது.

அர்ப்பணித்து உழைத்து முன்னேறும் திறம் மிக்க மனிதர்களின் கூட்டுறவு அளவற்ற ஆனந்தம் தருகிறது.

ஒத்த அலைவரிசை உடைய நட்புகளின் உரையாடல் மனதை உவகையாக்குகிறது.

சிறந்த படைப்புகளில் ஒளிந்திருக்கும் படைப்பாளரின் மனதை அதன் கலை உணர்வுகளை அவரது கற்பனைகளின் வீரியத்தை, அபிலாஷைகளைக் கண்டு உணரும்போது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

நம்மைப் பிரியமாக நேசிக்கும் உறவுகள், நட்புகள் அருகாமை அளவற்ற ஆனந்தத்தை அளிக்கின்றன.

இன்று மகிழ்ச்சி என்பது உணர்வுகளை உண்மையான நட்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அடையும் ஒரு ஆனந்த நிலையாகத் தோற்றமளிக்கிறது.

எனவே சிறு விடுமுறைக்கும் ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

உண்மையான உறவுகளும், நட்புகளும் தான் வாழ்க்கையை இன்று அர்த்தமும் மகிழ்ச்சியுமாக  ஆக்குகிறது.

நமக்காக மதிப்புமிக்க  நேரத்தையும், உழைப்பையும் தனது செல்வத்தையும் செலவிட ஆயத்தமாக இருக்கும் பத்து பேரைச் சம்பாதித்து விட்டால் போதும்.

இந்த உலக வாழ்வில் துன்பங்கள் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அது நிச்சயமானதொரு உத்தரவாதம் தரும்.