செவ்வாய், 19 நவம்பர், 2019

35. கீழ்மை அகற்று.

ஆத்திசூடி : ககர வருக்கம்

இழிவான சிந்தனைகளை நீக்கு. 

கீழ்மை அகற்று : 


தன்னோடு பிறரை ஒப்பிட்டு, அவரை உள்ளத்தில் அற்பமாக நினைப்பதும், அவமதிப்பதும் கீழ்மை ஆகும். 

கீழ்மை எண்ணங்கள் உடையவர்கள் முதலில் இழிவான அவமரியாதைச் சொற்களைப் பேசுவார்கள். பின்பு அது வன்முறையாக  வெளிப்படும்.


"கீழ்மை அகற்று"  என்றால் மனதிலிருந்து அத்தகைய இழிவான அற்பச் சிந்தைகளை, தற்பெருமை எண்ணங்களை அகற்ற விழிப்புடன் போராடு என்பதாகும். 

கீழ்மை செயல்கள் : 

கீழ்மையான இழிச் செயல்கள் பல வகைகளில் வெளிப்படும்.

பிறர் மனம் காயப்படும்படி அமிலச் சொற்களைப் பேசுவது, துன்புறுத்தி இரசிப்பது ஒரு வகை மனநோய். 

ஒருவரை வன்முறையைப் பிரயோகித்து உடலைக் காயப்படுத்துவது என்பது

கட்டுப்படுத்த முடியாத இயலாமையால் எழும் பெரும் கோபத்தின் வெளிப்பாடு. 

கோள் பேசிப் பிற குடும்பங்களைக் கெடுப்பது என்பது பொறாமையின் 

விளைவு.

ஒருவரை ஆசைகாட்டி, ஏமாற்றி சுயலாபத்திற்காக நடித்து வசப்படுத்துவது 

வஞ்சனை. 

சபல உணர்வுகள் இழிவான செய்கையில் சிக்க வைத்து அடிமைப்படுத்தும்.

மனித மனம் கீழ்மை சிந்தனையில் சிறைப்பட்டுள்ளது. மதம், இனம், சாதி, ஆண் பெண் பேதம், நிறம், மொழி, அறிவு, பதவி, அதிகாரம், பொருளாசை  என அது மனித சிந்தையில் பெருமை உணர்வாக ஆழமாக ஊடுருவி ஆட்டிப் படைக்கிறது. 

கீழ்மை சிந்தை காரணம் 


ஆதிக்க செருக்கு, அதிகார மமதை எனப் பல மனப் பாதிப்புகளும் கீழ்மை சிந்தைகளை உருவாக்குகிறது. 

தற்பெருமையும், தான் தான் உயர்ந்தவன் என்கிற பெருமை உணர்வும் பிறரை அற்பமாக நடத்தத் தூண்டுகிறது. தான் சொல்வதே சரி என்கிற சிந்தையுடையவர் பிறரை அவமரியாதை செய்யத் தயங்க மாட்டார்கள். 

ஆழ்மனதில் ஏற்பட்ட வலி, அவமானம்,  குற்றவுணர்வு போன்ற கசப்பான அனுபவங்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பழிக்குப் பழிவாங்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. 

குறிப்பிட்ட கருத்துக்களில் ஏற்படும் அதீத தீவிரப் பற்று, அறியாமை கீழ்மையான செயல்களைச் செய்ய வழி நடத்துகின்றது. 

நன்கு கற்றுணர்ந்திருந்தவர்களும்  கூடச் சில சமயம் தமது குழுவைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காகக் கீழ்மையான செயல்கள் செய்கிறவர்களைக் குற்றவுணர்வின்றி ஆதரிக்கும் பொதுப்புத்தி பரவலாக உள்ளது.

சூழலும் சிந்தையும் :


நாம் வாசிக்கும் நூல்கள்,  பார்க்கும் காட்சிகள்  நமது சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் பல கருத்துக்கள் நாம் உணராமலேயே நம் மனதில் இயல்பாகப் பதிக்கப் படுகிறது. 

உணவில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்த உணவும் நஞ்சாகிவிடுவது போல் தவறான ஒரு கருத்தை நம்புவது முழு மனதையும் பாழக்கிவிடக்கூடும். 

இணையதளம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரம் இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது. ஒரு கருத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க விடாதபடி புது புதுச் செய்திகள் கொட்டப்படுகின்றது. 

சமூக ஊடகத்தின் மூலமாகப் பல கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன. ஒரு கருத்து நல்லதா அல்லது கெட்டதா என்பது பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில் இன்று தீர்மானிக்கப்படுகிறது. 

எனவே வாசிப்பதைத் தெரிவு செய்வதில் கருத்தை நம்பி ஏற்றுக் கொள்வதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவை. 

இன்று அதிக பரந்துபட்ட வாசிப்பைவிட ஆழ்ந்த பொருள் உணர்ந்த வாசிப்பு முக்கியம். சிந்தனையைத் தூண்டாத வாசிப்பு பொருளற்றது. 

நெருக்கமான நண்பர்கள், நம்பிக்கையான உறவுகள், பணிச் சூழல், இறை நம்பிக்கை இவை வழியாகவும் பல கருத்துக்கள் நம்பிக்கைகளாக மனதில் ஆழமாக விதைக்கப் படுகின்றது. 

இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் மிக மிகக் கவனம் தேவை. நடுநிலையில் உறுதியாக நிற்க நம்மைச் சுற்றி நாம் அமைத்துக் கொள்ளும் சூழல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

மனித நேயத்தைக் குலைக்கும் என்று உணர்ந்தால் அவற்றை விட்டு விலகி வாழ வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண முடியாது. 

சமய நம்பிக்கை, சாதிய உணர்வு, மொழிப்பற்று, இவை மனித நேயத்தை மீறி வெறியுணர்வாக மாறும் அபாயம் உள்ளது. இத்தகைய சார்புத் தன்மை படுகொலைகளைக்  கூட நியாயப்படுத்த வைக்கும். 

குடும்ப உறவுகளில் அதீத பாசம் வைப்பதும் கண்ணை மறைத்துவிடும். 

கீழ்மை சிந்தை அகற்ற 


பிறரைத் துன்புறுத்தாமல் வாழவேண்டும் எனும் உறுதியான விருப்பம் இருந்தால்தான் மனதிலிருந்து கீழ்மையை அகற்ற முடியும். 

பிறரது மன வேதனையை உணரும் உள்ளம் வேண்டும். அன்பால் நிறைந்த உள்ளம் ஒரு போதும் பிறரைத் துன்புறுத்தாது. 


ஒருவர் தகுதியை அவரது குணத்தைக் கொண்டே மதிப்பிடவேண்டும். 

வாழ்வின் நிலையாமை உணர்ந்தால் தாழ்மையுடன் அடக்கமாக இருப்போம்.

நற்பண்புகளை, நல்லுணர்வுகளை வளர்த்தெடுப்பதன் மூலம் கீழ்மையான சிந்தைகள் நம் மனதில் வேரூன்றா வண்ணம் பாதுகாக்க முடியும். 


மனதை எதிலும் அதீத பற்றின்றி சமநிலையில்  வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.

கீழ்மை சிந்தனையை மனதிலிருந்து அகற்றுவது என்பது வாழ்நாள் முழுவதும் சுத்திகரிக்க வேண்டியதொரு தொடர் பணி.

எது முக்கியம்? 


மனித வாழ்க்கை ஒரு அரும்பெரும் கொடை. மனதைப் பீடித்த இருளை அகற்ற அருளப்பட்ட நல்வாய்ப்பு. 

வாழ்வில் இழிவான மனிதர்கள் சந்திப்பதை ஒருபோதும் தவிர்க்க முடியாது. 

இவர்களைப் பொறுமையோடு கையாளுதல் வேண்டும். நமது மனம் பாதிக்காதபடி இவர்களைச் சரியான தூரத்தில்  வைத்து விவேகமாக வாழ்தல் நலம். 

கீழ்மையான சிந்தைகளை அகற்றுவது, தீய வழிகளை விட்டு விலகி வாழ முயல்வது இவற்றை விட மனித வாழ்வில் வேறு பெரிய அரிய சாதனை எதுவும் இல்லை. 


கீழ்மை அகன்றால் அனைத்து நன்மையும் தானாகவேப் பின் தொடரும். 


திங்கள், 11 நவம்பர், 2019

அது - நீ

நீயே அதுவாக இருக்கிறாய். 




சுத்தமான கண்ணாடியின் முன் நின்றால் 
தெரியும் பிம்பம் போல
மனம் தூய்மையெனில் அது துலங்கும், 
புத்தி உறுதியெனில்
அறியாமையும் அகலும். 

கனவில் தோன்றும்
காட்சிகள் போல, 
உறக்கத்தில் அது உதிக்கும், 
விழிக்கும்போதோ விலகி மறையும். 
அந்த விசித்திர வானில். 

நீரில் பார்க்கும் 
பிரதி பிம்பம் போலத் 
தெளிந்தால் அது காட்சிதரும், 
கலங்கினால் அதைக் காணவியலாது. 
கந்தர்வ உலகமது. 

ஒளியும் நிழலுமாக 
உருவத்தில் அது விரிந்து, 
அருவத்தில் மறைந்து, 
பொருளென அறிந்தால் அறியாதது. 
விஷயமாக அறியாததால் அறிந்தது. 

*******   *******   *******   *******   *******


உபநிடதம் - கடோபநிஷத், இரண்டாவது அத்தியாயம் மூன்றாவது வல்லி ஐந்தாவது பாடலில், ஆன்மாவை பூவுலகம், பித்ரு, கந்தர்வ, ப்ரஹ்ம உலகில் எவ்விதம் அறிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆன்மாவைத் தெளிவாக உணரும் வாய்ப்பு இவ்வுலகில் மட்டுமே. ஆகவே இவ்வாழ்க்கையை ஞானத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே மையக் கருத்து.

கண்ணாடி சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகத் தெரியும். மனம் தூய்மையாக இருந்தால் ஆன்மாவைத் தெளிவாக அறியமுடியும். 

நீயே அதுவாக இருக்கிறாய் (தத் த்வம் அஸி) என்பது நான்கு மஹா வாக்கியங்களில் ஒன்று.

(படம்  இணையத்திலிருந்து) 

செவ்வாய், 5 நவம்பர், 2019

உன்னதத்தை நோக்கி..,

புனிதர் பிரான்சிஸ் அசிசியின் இறை வேண்டல்.


(Source : El Greco paintings - 1580)




இறைவா, 
என்னை உமது அமைதியின் கருவியாக்கும்;

எங்கே வெறுப்பு நிறைந்துள்ளதோ, 
அங்கு அன்பையும்

எங்கே மனவருத்தம் நிறைந்துள்ளதோ, 
அங்கு மன்னிப்பையும்

எங்கே சந்தேகம் நிறைந்துள்ளதோ, 
அங்கு விசுவாசத்தையும்

எங்கே அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ, 
அங்கு நம்பிக்கையையும்

எங்கே இருள் சூழ்ந்துள்ளதோ, 
அங்கு ஒளியையும்

எங்கே துயர் நிறைந்துள்ளதோ, 
அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.

என் இறைவா,

ஆறுதல் பெறுவதைவிட 
ஆறுதல் அளிக்கவும்

புரிந்து கொள்ளவேண்டும்
என்பதைவிடப் 
பிறரைப் புரிந்து கொள்ளவும்

அன்பு செய்யப்படுவதைவிடப் 
பிறரை அன்பு செய்யவும்

வரமருள்வாய். ஏனெனில்,

கொடுப்பதில் மூலம்தான்
பெற்றுக் கொள்ள முடியும்

மன்னிப்பதன் வழியாகத்தான்
மன்னிப்பு அடைய முடியும்

சுயத்துக்கு இறப்பதில் தான்
முடிவில்லா வாழ்வை அடைய முடியும்.

இறைவா! அப்படியே ஆவதாக.

*******   *******   *******   *******   *******

Prayer of Saint Francis of Assisi


Lord, 
make me an instrument of your peace

Where there is hatred, 
let me sow love

Where there is injury, 
pardon

Where there is doubt, 
faith

Where there is despair, 
hope

Where there is darkness, 
light

And where there is sadness, 
joy

O Divine Master, grant that I may

Not so much seek to be consoled as to console

To be understood, as to understand

To be loved, as to love

For it is in giving that we receive

And it's in pardoning that we are pardoned

And it's in dying that we are born to Eternal Life

Amen

*******   *******   *******   *******   *******

புனிதர் பிரான்ஸிஸ் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் :


புனித பிரான்ஸிஸ் கி.பி. 1181 ம் ஆண்டு இத்தாலியில் உள்ள அசிசி என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone). அவர்  செல்வந்தரான ஒரு துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont). பிரான்ஸிஸ் தமது இளவயதுவரை செல்வச் செழிப்புமிக்க வளமான வாழ்வு வாழ்ந்தார். 

அசிசி நகருக்கும், அருகாமை நகரான பெரூஜியா (Perugia) நகருக்கும் இடையில் நீண்ட பகையும், இடைவிடா போரும் இருந்து வந்தது. கி.பி.1201ம்  ஆண்டில் இரு நகருக்கும்  இடையில் போர் நிகழ்ந்தது. அப்போது இருபது வயதே நிறைந்த பிரான்சிஸும் படையில் சேர்ந்தார். போரில் எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். 

சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின் இவர் தம் வாழ்வுப் பாதை மெல்ல மெல்ல மாறியது. தனிமையை நாடினார். கேளிக்கைகளை வெறுத்தார். ஏழையிலும் பரம ஏழையாக விரும்பினார். இவருக்குப் புத்தி சுவாதீனம் ஏற்பட்டுவிட்டதெனத் தந்தை வீட்டில் சிறை வைத்தார்.

வீட்டைத் துறந்து மிக வறியவராக அலைந்து திரிந்தார். கி.பி. 1206 ம் ஆண்டு  அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ ஆலயத்தில் இறை வேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையிலிருந்தது. கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவை முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். 

அப்போது இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது: "பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு! 
இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். முதலில் பழுதுபட்ட ஆலயத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார். பின்பு இயேசுவின் உபதேசங்களை மக்களுக்கு அறிவிப்பதே தனது பணியென உணர்ந்தார். 

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின்படி எளிமையிலும் எளியவராக. வாழ்ந்தார். அவரைப் பின்பற்றிய ஆண்கள், பெண்களுக்கு எனத் துறவர 
சபைகளை நிறுவினார். 
கி.பி. 1226ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி இறையரசில் இனைந்தார்.

சனி, 2 நவம்பர், 2019

நம்பிக்கை அளிக்கும் புதுவாழ்வு.

ஆற்றுப்படுத்தல். 




Dr.இளவரசன், MS அறுவை சிகிச்சை மருத்துவர். Khasab அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவில் பணி செய்கிறார். அவரது துணைவி Dr.புஷ்லதா MBBS., DDVL தோல் சிகிச்சை மருத்துவர். சென்னையில் பணி செய்கிறார்.

Khasab, (Oman) இல் வைத்து, மருத்துவத் துறையில் பணி செய்பவர்களுக்காக,  ஒரு ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடத்தினார்கள்.

தலைப்பு : "Make witnessing in the work place ".

நோயாளிகளின் மனதில் நிகழும் ஆக்கப்பூர்வமான நம்பிக்கை, சிகிச்சையில் எவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது முக்கியக் கருப்பொருள். அதில் மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள் எத்தகைய பங்களிப்பை அளிக்க முடியும் என்பது விரிவாக விளக்கப்பட்டது.

அவரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இதில் நானும் பங்கு பெற்றேன். இன்றைய சூழலில் இதயநோய், புற்றுநோய்,  சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம்  போன்ற பேரிழப்பை ஏற்படுத்தும் நோய்கள் மலிந்து விட்டன. பெரும் விபத்தால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களும் உண்டு.

இந்தக் கருத்தரங்கத்தில் பகிரப்பட்ட சிலப் பொதுவான குறிப்புகள் நமக்கும் உதவும். நம் உறவுகள், நட்பு வட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோய்மை உடையவரது மனநிலை உணர இவை உதவும்.

இதைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களை நாம் எவ்விதம் அணுக வேண்டும் எனக் கற்றுக்கொள்ள முடியும்.

நம்பிக்கை : (Faith) 

Why is faith important in the healthcare?

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர் சந்திக்கும் முக்கிய சவால் நம்பிக்கையிழப்பு ஆகும்.

மன நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளது நோய் எதிர்ப்புத் திறன் பல மடங்கு சிறப்பாக முன்னேற்றம் அடைவது சமீபத்திய அறிவியல் பூர்வமான  முறையான ஆய்வுகள் மூலம்  நிரூபணம் ஆகியுள்ளது. இறை நம்பிக்கையும் நோயுடன் போராட உதவுகிறது.

எனவே நோயாளிகள் நம்பிக்கையிழக்க வைக்கும் காரணிகளைக் கண்டறிந்து அதை நீக்குவதன் வழியாக அவர்கள் விரைவாகக் குணமடைய உதவ முடியும்.  எனவே இது சிகிச்சையின் ஒரு பகுதியாக அளிக்கப்பட வேண்டும்.

நோய் வாய்ப்பட்டவர் மனதை அமைதி இழக்கச் செய்யும் மூன்று முக்கிய தடைகள் இவை :

1. உணர்வுப்பூர்வமான தடை (Emotional Barrier)
2. அறிவுப் பூர்வமான தடை (Intellectual Barrier)
3. முடிவெடுக்க முடியாத தடை (Volition Barrier)

உணர்வுப்பூர்வமான தடை :


கொடிய நோய் அல்லது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதில் எழும் முதல் கேள்வி : "எனக்கு ஏன் இது நிகழ்ந்தது?" என்பதாகும்.

சில கேள்விகளுக்குக் காலம் தான் பதில் சொல்லும். சில கேள்விகளுக்கு விடை கிடைக்காது. ஏன் நிகழ்ந்தது என்பதைவிட அதிலிருந்து எப்படி மீள்வது என நோயாளரின் மனதைத் திசை திருப்ப வேண்டும்.

அடுத்து, நோயாளர் மனதில் எழும்  சிக்கல் : சுயபச்சாதாபம்.  தன் இருப்பை சங்கடமாக உணர்தல். தன்னை பயனற்றவராக உணர்தல். இத்தகைய எதிர்மறை உணர்வுகள் நோயெதிர்ப்பு திறனைக் கடுமையாகப் பாதிக்கும். இத்தகைய மனநிலையின் உச்சக்கட்டமாக அவர்கள் தற்கொலைக்கும் முயல்வர். வெறுப்பும், கோபமும், இயலாமையும், வார்த்தைகளிலும் செயலிலும் வெளிப்படும்.

இதற்கு ஒரே மருந்து அன்பு செலுத்துதல். அத்துடன் பொறுமையும் அவசியம். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். அவர்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் உயிருடன் வாழ்வது குடும்பத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனும் உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அறிவுப்பூர்வமான தடை :


அறியாமை, தவறான புரிதல், தவறான கருத்துக்களில் ஏற்படும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் குழப்ப மனநிலை, நோயாளர் மன அமைதியைக் குலைக்கும். 

சமூக ஊடகம், நட்பு வட்டம், விளம்பரம் மூலமாக அறியப்படும் மருத்துவ குறிப்புகள் முழுமையானதல்ல. ஒவ்வொரு நோயாளருக்கும் தரப்படும் சிகிச்சைமுறை மற்றும் மருந்துகளின் வீர்யத்தன்மை வித்தியாசமானது. அதன் எதிர் விளைவுகளும் வேறுபடும். அது ஒவ்வொரு நோயாளருக்கும் மாறுபடும். நோயாளரின் தவறான புரிதல் சிகிச்சையைப் பாதிக்கும்.

இன்று பல தரப்பட்ட போலி சிகிச்சை முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த தவறான சிகிச்சைமுறை நம்பி அறியாமையால் பணத்தையும், நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். குறிப்பாகப் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு முறையான சிகிச்சை சரியான சமயத்தில் முழுமையாக எடுக்காவிட்டால் உயிரிழப்பைத் தடுக்க முடியாது.

குழப்ப மனநிலை உடையவர்கள் சிகிச்சையை முழுமையாக எடுக்காது பாதியிலேயே நிறுத்த முயல்வர். பக்க விளைவுகளைக் குறித்த தவறான நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இவர்களுக்குப் பொறுமையுடன் முழு உண்மைகளையும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்பிக்கைகளை மதிப்புடன் கேட்க வேண்டும்.  உண்மையாக இருந்தாலும் நமது கருத்துக்களை வற்புறுத்தக் கூடாது. அவர்களது தவறான நம்பிக்கைகளைக் கேலி செய்யக் கூடாது. பொறுமையுடனும், கனிவுடனும், அதைக் கவனமுடன் அணுக வேண்டும். அவர்கள் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் அவசியம். 

முடிவெடுப்பதில் தடை :

நோயாளர் தன்னிச்சையாகத் தீர்மானிக்க இயலாத மனநிலையில் இருப்பார். இந்த வித சிகிச்சை எடுக்கலாமா? அல்லது  வேண்டாமா? எனும் குழப்ப மனநிலை இருக்கும்.

சில சிகிச்சை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது எனும் தடுமாற்றத்தைத் தரும். சிகிச்சை எடுப்பதால் பல மாதங்கள் வேலைக்குச் செல்லமுடியாத சூழல் பயமுறுத்தும். பணத்தேவைகள் சிகிச்சை எடுப்பதைத் தள்ளிப் போடக் கட்டாயப்படுத்தும். சில சமயம் நிரந்தரமாக வேலைக்கு செல்லவே முடியாத கட்டாய ஓய்வு தேவைப்படும். 

நோயாளருக்குச் சிகிச்சையின் அவசியத்தை உண்மையைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். வேலைக்குச் செல்வதை விட உயிருடன் இருப்பது முக்கியம் என்பது புரிய வைக்கப் பட வேண்டும்.

புற்றுநோய் போன்ற சிகிச்சையில் ஏற்படும் முடி உதிர்தல் போன்ற பக்க விளைவுகள் நிரந்தரமல்ல என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சமூக பெருமையை விட குடும்பத்திற்கு அவர்கள் வாழ்க்கை  மதிப்புமிக்கது என்பதை உணர்த்த வேண்டும்.

பணியாளர்களாக நம்பிக்கையை அவர்கள் மனதில் தினமும் விதைத்தல் வேண்டும். மனத் தடைகளைக் களைய வேண்டும். ஆக்கப் பூர்வமான சூழலை உருவாக்க வேண்டும். உடன்பாட்டுச் சிந்தனைகளைப் பேச வேண்டும். மன தைரியத்தை உருவாக்க வேண்டும். நமது பேச்சு, புன்னகை நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும்.

உடல் நலம் தேறிச் சென்றவர்கள் பற்றிய கதைகளைப் பகிர வேண்டும். ஒரு Faith tag line தினசரி சொல்வது நல்லது.


மருத்துவம் சேவை :


ஆலயம், கோவில், மசூதி ஒரு குறிப்பிட்ட நேரம் தான் திறந்திருக்கும். மருத்துவமனை கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. மருத்துவமனையில் நுழையும் நோயாளர் வேதனை, வலி, கலக்கம் சூழ நுழைகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை, ஆறுதல் மற்றும் சுகமாக்க உழைப்பது ஊழியர்கள் பொறுப்பு.

நம்மைத் தேடி ஒருவர் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. அவர்களுக்கு நான் எவ்விதம் உதவியாக இருக்க முடியும் என்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையாளராக மாற வேண்டும். நோயாளர் தனது வாழ்வின் பயணத்தில் அடுத்த நிலைக்கு நம்பிக்கையுடன் முன்னேற தோள் கொடுங்கள். 

ஆலயம், மசூதி, கோவில் போல மருத்துவமனையும் புது வாழ்க்கை தரும் ஒரு நம்பிக்கை ஸ்தலம்.


புதன், 30 அக்டோபர், 2019

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 1.

மனம்.

பேரரசர் மார்கஸ் அரேலியஸ்.
(கி.பி. 121 - கி.பி. 180)

மனதை உறுதிப்படுத்து :


  • எந்தப் பொருள்களைப் பற்றி நீ இடைவிடாமல் சிந்திக்கிறாயோ, அவற்றின் தன்மையை உன் மனம் அடைகிறது. சாயத்தில் தோயும் துணியைப்போல், உள்ளத்திலுள்ள எண்ணங்களில் தோய்ந்த ஆத்மா நிறம் மாறும்.
  • தத்துவங்கள் தம் வழியே நேராகச் செல்லும். அதன் போக்கை நம் இஷ்டப்படி மாற்றமுடியாது. இதனால்தான் தரும வாழ்வுக்கு நேர்மை என்பது பெயர்.
  • மற்றவர்கள் உள்ளத்தில் என்ன நடைபெறுகிறது? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எதைத் திட்டமிடுகிறார்கள்? என்று யோசித்துக் கொண்டு இருந்தால் மனதில் கவலையும் துக்கமுமே வரும். உள்ளத்தைச் சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்வதே சுகம்.
  • அரண்மனை வாழ்க்கையிலும்கூட ஒருவன் உண்மை வாழ்வு வாழ முடியும்.
  • எந்தப் பொருளாலும் ஆன்மா பாதிப்படைவதில்லை. ஆன்மாவைத் தீண்ட ஒரு பொருளாலும் முடியாது. ஆன்மா சுதந்திரமாகத் தனது முடிவுகளை அதுவே எடுக்கும். அது தன்னைத் தானே வழி நடத்தும். ஆனால் பொருள்களைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும் உள்ளத்தில் நாம் எவ்விதம் எண்ணம் கொள்கிறோமோ, அதுதான் ஆன்மாவைப் பாதிக்கும்.
  • நன்மை செய்வதும், இடர்களைப் பொறுப்பதும் மனிதரின் கடமை. இடையூறுகள் உள்ளத்தின் சக்தியையாவது சுபாவத்தையாவது பாதிக்கக்கூடாது.
  • இன்பமும் துன்பமும் மனத்துக்குள் உள்வசத்திலேயே இருக்கின்றன. புறத்தில் ஒன்றுமில்லை. உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம்.
  • இவ்வுலகில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையும் கொண்டு வாழ்வதும், பொய்யரிடமும், அநீதி செய்பவரிடமும், வெறுப்பின்றி அன்புடன் நடந்து கொள்வதுமே.
  • நாம் இடங்கொடுக்காமல், விருப்பப்படாமல் எந்த ஒரு விஷயமும் மனதில் நுழைய முடியாது.


  • மனதின் சுத்தம் என்பது எது?

தீடிரென ஒருவர், "நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? " என்று கேட்டால் "இது என் மனதிலுள்ள எண்ணம்" என்று எளிதில் சொல்லும் படி மனம் இருக்க வேண்டும்.

பிறரிடம் சொல்ல இயலாத தவறான எண்ணங்கள் மனதில் உதிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

எந்தக் காலத்திலும் உள்ளத்தில் இருப்பதைப் பலர் அறிய வெளிப்பட்டாலும், அதில் வெட்கப் படக்கூடியது எதுவும் இல்லாதபடி மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி மனதைப் பழக்கப் படுத்திக் கொண்டு நன்மையே நாடி வரும் மனிதன், தன் சரீரத்தில் குடி கொண்டிருக்கும் கடவுளின் உண்மை அடியவர் ஆவான்.

அப்போது மனதுக்குள் குடியிருக்கும் இறையம்சமான ஆன்மாவை, எந்த இன்பமும் மாசுபடுத்தாமலும், எந்த துன்பமும் துயர் படுத்த விடாமலும் இறைவன் காப்பார். 

இவ்விதம் மனம் உறுதிப்பட்டவன் பிறர் சொல், செயல், எண்ணம் என்னவென்று கவலைப்படாமல் தன் கடமையை மட்டும் கருதி வாழ்வான்.

*******   *******   *******   *******   *******

பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  

தமிழில் மூதறிஞர் ராஜாஜியால்  "ஆத்ம சிந்தனைகள்'  என்ற பெயரிலும், திரு. பொ.திரிகூடசுந்தரத்தால் "இதய உணர்ச்சி' என்கிற பெயரிலும், திரு. என்.ஸ்ரீநிவாசன் அவர்களால் "மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்" என்கிற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன.

திங்கள், 28 அக்டோபர், 2019

உண்மை தன்மை

நேர்மை மனிதரின் நடத்தை பண்புகள்.




தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பணியிடத்தில் மிகச் சிறந்த உண்மையான மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு அரிதாகவே  கிடைக்கும். 

அப்படிப்பட்ட பண்புடைய நபர்கள் வாழ்வில் இடைப்பட்டால் கவனமாக அவர்களது உறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உண்மை விரும்பிகளிடம் காணப்படும் பொதுவான நடத்தை பண்புகள்.

1.  பிறர் கவனத்தை அவர்கள் ஈர்க்க விரும்பமாட்டார்கள்.

2. பிறரால் விரும்பப்பட வேண்டும் என்பதற்காக முனைப்புக் காட்டமாட்டார்கள்.

3. மற்றவர்களின் நோக்கம், புரிதல் எந்தளவு  என்பது அவர்களுக்குத் தெரியும்.

4. தங்களது திறமையைச் சார்ந்து மகிழ்ச்சியுடன்  இருப்பார்கள்.

5. எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லுவார்கள். அவர்களுக்குச் சொல்லப்படும் வார்த்தை மதிப்பு மிக்கது.

6. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அவர்களுக்குச் சுருக்கமான விளக்கம் போதும். 

7. அவர்கள் மனவலிமையுடையவர்கள். எளிதில் உணர்வு வயப்பட மாட்டார்கள்.

8. தங்களை மிகுந்த அடக்கமுடையவராகக் காண்பிக்கமாட்டார்கள் அதே சமயம் பெருமை மிக்கவரும் இல்லை. 

9. அவர்கள் நடத்தை சீரானதாக இருக்கும்.

10. அவர்கள் எதைப் பேசுகிறார்களோ அதைக்  கடைப்பிடிப்பார்கள்.

சிறந்த பண்புகளை உருவாக்கிக் கொள்வோம்.



வெள்ளி, 25 அக்டோபர், 2019

எப்போதும் அழகான தருணங்களை மறக்க முடியாது.

சாதனை பெண் மரியகே வெர்வூர்ட்.





Marieke Vervoort  Gold Medalist Paralympic
1979 - 2019
(Image: Isopix/REX) 

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை மரியகே வெர்வூர்ட்.  அவரது 40வது வயதில் செவ்வாய்க்கிழமை (22.10.2019) அன்று தனது சாதனை ஓட்டத்தை நிறைவு செய்தார்.

வெர்வூர்ட் குணப்படுத்த இயலாத தசை நோயினால் (degenerative muscle disease) பாதிக்கப்பட்டவர். அவரது முதுகுத் தண்டுவடத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது cerebral vertebrae இடையில் ஏற்பட்ட குறைபாட்டால் இந்நோய் அவரைத் தாக்கியது.  இது மூளைக்கும் தசைகளுக்கும் இடையில் உள்ள செயல்பாட்டைச் சீர்குலைக்கும் ஒரு அரிதான குணப்படுத்த இயலாத நோய். இது கால்களில் இடைவிடாத நிலையான வலியை ஏற்படுத்தும். தூக்கம் வராது. சிறிது சிறிதாக உடல் பக்கவாதத்தால் செயலிழந்து மரணத்தைத் தழுவ நேரிடும்.














மனதை முடக்கும் இத்தகைய சூழலில் உள்ளம் தளராது நோயை எதிர்த்து இவர் போராடினார். தடகள போட்டியில் வீல்சேர் பிரிவில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். விளையாட்டின் மீது இருந்த காதல் அவருக்கு மரணத்தைக் குறித்த அச்சத்தைக் குறைத்தது. எனினும் கடும்  தசை வலியால் அவதியுற்றார். தாங்க முடியாத வலி, உறங்க முடியாத இரவுகள் இவை எல்லாம் தகர்த்து 2012, 2016 Paralympics மற்றும் 2015 உலக சாம்பியன் போட்டிகளில் சாதனை நிகழ்த்தினார். 

2012ல் லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் வீல் சேர் பிரிவில் 100 மீ., தங்கம் வென்றார். 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். 2015ல் தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீ., 200 மீ., 400., மீ பிரிவுகளில் மூன்று தங்கம் வென்றுள்ளார். 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் 400 மீ., பிரிவில் வெள்ளி, 100 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். இதுவே இவர் பங்குபெற்ற கடைசி போட்டி. 

Marieke Vervoort
Vervoort with her gold medal at the London 2012 Paralympics 
(Image: Getty Images)


இத்தனை வேதனை சூழ்ந்திருந்தாலும் அவர் நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக் கொண்டார். அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்தார். தனது செல்ல ஜென் நாயுடன் அபரிமிதமான அன்பைச் செலுத்தினார். அது அவரது வாழ்க்கை தோழமையாக வலம் வந்தது. மைதானத்தில் அவருக்கு உதவியது. அவரோடு மருத்துவமனையில் சிகிச்சையிலும் உடனிருந்தது. அவர் நினைவு தவறும்போது குரைத்து செவிலியரை அழைக்கும். நினைவு திரும்பும்வரை கண்ணத்தை நாக்கால் வருடிவிடும். அவர் விழிக்கும்போது ஜென்னைப் பார்த்துச் சிரிப்பார். "ஜென் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை." என்றார். 



அவர் வாழ்க்கை அனுபவங்களை "The Other Side of the Coin." எனும் நூலாக வெளியிட்டார். அவர் தன்னை ஒரு "Tarus" என்றே குறிப்பிட்டார். "நான் ஒன்றை அடைய விரும்பினால் அதை நோக்கியே செல்வேன். அதை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிவிட நான் அனுமதிக்க மாட்டேன்." என வாழ்ந்து காட்டினார். ஒரு சமயம் வலியோடு தற்கொலை எண்ணத்திலிருந்தவர் பின்பு தீவிர மனஉறுதியுடன் நோயை இறுதிவரை எதிர்த்துப் போராடுவது என முடிவு செய்தார். 

வலி மிகுந்த இறுதிக்காலம் : 

பெல்ஜியத்தில் கருணைக் கொலை சட்டப்பூர்வமானது. 2008ம் ஆண்டில் கருணைக் கொலைக்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அது அவருக்கு அமைதியைத் தந்தது. அதை அவர் தற்கொலையாகக் கருதவில்லை. வலியால் அவதியுறும் நபருக்கு முடிவான ஓய்வின் வழியாகக் கருதினார். அதன்பின் தன் உடல் செயல்படும் வரை மனம் தளராது வலியுடன் போராடி சாதனை முத்தாக ஜொலித்தார். Rio Paralympics ன் வதன முகமாக வலம் வந்தார். 


King Philippe and Queen Mathilde of Belgium talk to Marieke Vervoort 
(Image: Photonews via Getty Images) 

2017ம் ஆண்டுக்குப் பின் அவரது பார்வைத்திறன் மங்கியது. உடலின் மார்பகத்திற்குக் கீழ்ப்பகுதி செயலிழந்தது. வலி மிகுந்த தசைப்பிடிப்பால் கடும் வேதனை அனுபவித்தார். பத்து நிமிடம் கூட அவரால் தூங்க முடியவில்லை. சாப்பிடுவதற்கும் மிகவும் சிரமப்பட்டார். அப்போது தன்னை பேட்டி கண்ட Telegraph நிருபரிடம் "நான்  மிகக் கடினமாக உணர்கிறேன். இனி மேலும் மேலும் என்னைக் கஷ்டப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நான் மிக மனச்சோர்வு அடைந்து விட்டேன். வாழ்ந்தது போதும் என எண்ணுகிறேன். எனது இறுதி விருப்பத்தை நிறைவேற்றுங்கள்" என அமைதியாக அறிவித்தார். 

அமைதியான நீண்ட நெடிய உறக்கம். 

கடந்த செவ்வாய்க் கிழமை (22.10.2019) மாலை தனது இறுதி விருப்பத்துக்கு அமைதியாக ஒப்புதல் அளித்தார். "நான் அன்று  அழகானது என்று அதை அழைத்தது போல் அது அழகானதும், தெய்வீகமானதும், அமைதியான பிரியாவிடையாகவும் உணர்கிறேன்." என்றார். 

சட்டத்தின்படி மூன்று மருத்துவநிபுனர்கள் இறுதிப்பரிசோதனை செய்து கையொப்பமிட்டனர். ஒரு நரம்பியல் நிபுணர் அவருடன் இரவு முழுவதும் அமர்ந்திருந்தார். அவர் அழவில்லை. "முன்பு நிறைய அழுதிருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு அந்த அழுகை உணர்வுகள் இல்லை" என்று அமைதியாகக் கூறினார். 

"இது உடல் வலிப்பு அல்ல. ஆனால் உடல் வேதனையில் கதறுகிறது. நான் அதைப் பார்க்கிறேன். நான் அதை முடித்து விட்டேன்." 


"நீங்கள் உறங்கச் செல்லுகிறீர்கள். மீண்டும்  விழித்து எழவில்லை எனில் அதன் பெயர்தான் மரணம்." 

"என் மரணத்திற்குப் பின் "விளையாட்டுத்தனமாகப் புன்னகையுடன் வலம்வரும் பெண் என நான் நினைவு கூறப்பட வேண்டும்." 

"எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்க விரும்பியவள்" . 

இதுவே அவரது இறுதி வார்த்தைகள். 

அந்த இறுதி நிமிடங்கள் பற்றி அவரது நண்பர் குறிப்பிடும்போது, "அவள் அதை மிக விழிப்புணர்வுடன் அனுபவித்தாள். அதில் கண்ணீர் இருந்தது. மகிழ்ச்சியும் இருந்தது. இது துயரமான கடினமான ஆனால் தவிர்க்க இயலாத முடிவு" என அவள் நன்கு உணர்ந்திருந்தாள். 

தனது இறுதி Instagram பதிவில் தனது படத்துடன் அவர் பதிவிட்ட கடைசி வாக்கியம் : "எப்போதும் அழகான தருணங்களை மறக்க முடியாது".