வெள்ளி, 28 ஜூலை, 2017

உள்ளும் புறம்பும்



🌺  உள்ளும் புறம்பும்


விருப்பங்களும்
தெரிந்தேடுப்புகளும்
புறச் சூழ்
அழுத்தங்களும்
அனுபவத்தை
அளிக்கின்றன.

கடைப்பிடிக்கத்தக்கது எது?
விட்டுவிலக வேண்டியது எது?
எனக் காலம்
கற்றுத் தருகிறது.

கடைபிடிக்கத்தக்கதை
பற்றித் தொடர மனமும்

விட்டு விலக
வேண்டியவை
மேல்
பட்டுப் படர
நானும்

இடைவிடாது
துடிக்கிறோம்
இதயத்துடன்!

கழுத்தில் பாம்பும்
தோளில் கருடனுமாய்.

🌺  சுற்றுப்பாதை


திருமண உறவு
சிலருக்கு ஒரு வழிப் பாதை!
பலருக்கு இரு வழிப் பாதை!
நன்கு புரிதல் உடையவர்க்கு வட்டப்பாதை!!
அதன் மையப்புள்ளி பெரும்பாலும் குழந்தைகளே.

 🌺 வெற்றிக்குப் பின்னால்


ஓர் ஆண்
ஒழுக்கமுடையவனாக
வாழும்போது
உயர்ந்த ஸ்தானத்தை
அடைகிறான்.

ஓர் பெண்
குணவதியாக
வாழும்போது
அவளது குடும்பமே
உயர்ந்த நிலையை
அடைகிறது.


🌺 சுதந்திரம்


தன் தாய்
தன் சகோதரி
தன் மகள்
இவர்களுக்கு
அளிக்கும்
சுதந்திரத்தை
ஒரு ஆண்
ஒரு போதும்
தனது மனைவிக்கு
அளிக்க மாட்டான்.

🌺 உயர்வு பெற


ச்சீ!!
நாம் ஏன் இதைச் செய்தோம்?
என நம்மை நாமே
குற்றப்படுத்தி
அழுது
துக்கிக்கும்
செயல்களே
நமது பலவீனங்கள்.!!
நம்மைக் கீழ்நோக்கி
விழப் பண்ணுபவை.

ஒவ்வொரு தவற்றுக்குப்
பின் மனம் வருந்தி
இனி
இவற்றையெல்லாம்
செய்வேன்
எனத் தீர்மானித்து
பட்டியிலிடுபவைகள்
நம் பெலன்.
நம்மை மேல் நோக்கி
உயர்த்துபவை.

🌺 புத்துணர்ச்சி


அழகிய மலை வாசஸ்தலம்
தனிமையான வீடு
பர்மூடாஸ், டீ ஷர்ட்
நீண்ட தூரநடை
நீல வாணம்
குளிர்ந்த காற்று
பச்சைப் புல்வெளி
அடர்ந்த காடு
பறவைகள் கீச்சு
காற்றின் மவுனம்
மலை முகட்டின் உச்சி
கீழே கொத்து கொத்தாய் மேகம்
கொட்டும் நீர் எழுச்சி
சலசலக்கும் நீரோடை
நீந்தி சுகமான குளியல்
Grill இல்லாத ஜன்னல்
சூடான லெமன் டீ
மொறு மொறு வர்க்கி
இளையராஜா
பாலகுமாரன்
நான்
நீ
இயற்கை
மூன்று நாட்கள் போதும்
மறுபடி பிறக்க!

ஞாயிறு, 23 ஜூலை, 2017

எது சரி? எது தவறு?

எது சரி? எது தவறு?




ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன்பாக,
எதற்காக அதைக் குறித்து சிந்திக்கிறோம்?  
ஏன் பேச விரும்புகிறோம்?
எதை தீர்மானிக்க உதவும்படி எழுதுகிறோம் என்கிற 
அடிப்படை புரிதல்  தேவை.

இன்றைய விவாதப்பொருள் :

நல்ல கருத்துகளை  தங்கள் சொந்த வாழ்வில் கடைப்பிடிக்காமல், ஆனால் அந்தக் கருத்துகளைச் செயல்படுத்த தன்னை முன்னிலைப்படுத்துவது 

சரியா? தவறா?  

அவற்றை அப்பியாசிக்க வேண்டியது கட்டாயம் தேவையா? இல்லையா? 

கற்பைக் குறித்து அதைக் குறித்த அக்கறையே இல்லாதவர் வியாக்கியானம் 
செய்வது, 
குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பைப் பற்றி குடும்ப வாழ்வையே முறையாக
வாழாதவர் எழுதுவதும், கற்றுக்கொடுப்பதும்,
நேர்மையற்ற முறைகேடு செய்பவர், நீதியான ஆட்சி குறித்து விஸ்தாரமாக
பேசுவதும், 
தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமற்ற முறைகேடான வாழ்பவர் அறநெறி பற்றி போதிப்பதும்

 சரியா? தவறா? முறையா? 

TWO DIFFERENF THOUGHTS OF SCHOOLS :

எந்த ஒரு கருத்தைக் குறித்து சிந்தித்தாலும் அதற்கு இரண்டு விதமான
நிலைப்பாடு உண்டு. 

முதல் நிலை :

The messenger is not much important  rather the contents of the message prevails needs to be focussed. 

யார் சொல்லுகிறார்கள் என்பதல்ல முக்கியம் ; செய்தியின் உள்ளடக்கம் சிறப்பாக இருக்கிறதா என்பதே கவணிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது நிலை :

கருத்துக்கள்  விவாதிக்கப்படுவதோடு முடிவதில்லை அவை நடைமுறை
படுத்தப்பட வேண்டும். தனது சொந்த வாழ்க்கையிலேயே அப்பியாசிக்க முடியாத ஒன்றை ஒரு மனிதன் பொது வாழ்வில் செயல்படுத்துவார் என்பதை
எங்கனம் எதிர்பார்க்க முடியும்.

இவற்றுள் எது சரி? எது தவறு? 

ஓர் ஆசிரிய நண்பர் இப்படிக் கூறினார்.

சரி அல்லது தவறு எது என்பது அவரவர் பார்வையின் கோணங்களில் (Perspectives) அடிப்படையில் அமைகிறது.

இதன் நீட்சியாக நம் மனதின் அனுமானங்களின் (Perceptions)   புரிதல்கள் அடிப்படையில் சரி மற்றும் தவறுகளைத் தீர்மானிக்கின்றோம். 
  • வாழ்க்கைச் சூழல் 
  •  பொருளாதார நிலை 
  •  நட்பு வட்டம் 
  • கல்வி 
  • பண்பாடு
  •  கலாச்சாரம் 
  • சமய நம்பிக்கை
  •  வாழ்க்கை அனுபவம் 
  •  அறவழி நூல்கள்.
இவை போன்ற பல காரணிகளை நமக்குள் ஏற்படுத்தும் புரிதல்கள் அடிப்படையில் மன அபிப்பிராயம்  உருவாகின்றது.

இதனடிப்படையில் சரியானது, தவறானது எனத் தரம் பிரிக்கின்றோம்.

நமது புரிதல்கள், புலனுணர்வு (Perception) பார்வையில் சரியெனப்படுவது, பிறர் பார்வையில் அபத்தமாகத் தோன்றக்கூடும். அஃது உண்மையாகக் கூட இருக்கலாம்.

கற்றுத் தெளிதல்.

படித்த கதை ஒன்று நினைவில் வருகிறது. ஒரு தாய் தன் மகன் அதிக இனிப்புகளை உண்பதாகத் துறவியிடம் கூறிக் கவலைப்பட்டார். அஃது அவனது உடல் நலத்துக்கு உகந்ததல்ல என வருத்தப்பட்டார். நீங்கள் தான் அவனுக்கு நல்ல புத்திமதி கூற வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

துறவி ஒரு வாரம் கழித்து மகனை அழைத்து வரும்படி பணித்தார். ஒரு வாரம் கடந்து பின்பு அந்தச் சிறுவனுக்கு அதிகமாக இனிப்புகள் உண்பதால் வரும் தீமைகளை எடுத்துரைத்தார்.  அவற்றை விட்டுவிடும்படி அறிவுறுத்தினார்.

தாய்க்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு நன்றி செலுத்தினார். பின்பு பணிவுடன் ஐயா நீங்கள் ஏன்  இந்த அறிவுரை சென்ற வாரம் வழங்கவில்லை? 

துறவி பதிலுரைத்தார்!

அம்மா ஒரு வாரக் காலம் முதலில் இனிப்பு உண்ணாமல் வாழ நான் பயின்றேன். அதன்பின் அவனுக்கு உபதேசிப்பது எனக்கு எளிமையானதாக இருந்தது.

நல்லக் கருத்துகளை யார்  வேண்டுமானாலும் எடுத்துரைக்கலாம்.

ஆனால் அதைச் செயல்படுத்தும் தகுதி அவற்றை கடைப்பிடிப்பவர்க்கு மட்டுமே உண்டு.

இல்லையென்றால் சாரய ஆலை உரிமையாளர் நீதியான ஆட்சி அளித்தது போலத் தான் அமையும்.

சனி, 8 ஜூலை, 2017

கடந்து வந்த பாதை : கவனித்துப் பாருங்கள்.

கடந்து வந்த பாதை : கவனித்துப் பாருங்கள்.




"Nobody can go back and start a new begining, but anyone can start today and make a new ending."


வருடத்தின் ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டது. பொதுவாக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யும் காலம். இலாபம் நஷ்டங்களைப் பரிசோதித்து நிறுவனத்தின் செயல்பாடுகளை மறு சீரமைப்பர்.

தனிப்பட்ட நமது வாழ்விலும் குறிப்பிட்ட கால இடைவெளியில், நமது செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது சாலச்சிறந்தது.

பாரபட்சமற்ற சுய பரிசோதனை நமது மீதமுள்ள வாழ்க்கைப் பயணத்தை எதிர்கொள்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும்.

ஒரு கப்பல் பயணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம் இஃது. அது நீண்ட தூர நெடிய பயணம். பயணிகளில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாகக் குடித்து, நடனமாடி, களித்து,  இன்புற்று பொழுது போக்குகின்றனர்.

தீடிரென இயற்கை சூழல் மாறுகிறது. கடும் சூறைக்காற்று வீசுகிறது. அலைகள் சீறி எழும்புகின்றன. இடியுடன் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

கப்பலின் மாலுமி செய்வதறியாது திகைக்கிறார். கப்பல் பயணிகளின் ஒட்டுமொத்த மனோபாவமும் மாறுகிறது.

எங்குப் பார்த்தாலும் பயணிகள் எவ்வித பேதமுமின்றி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். பரஸ்பரம் நம்பிக்கை, அன்புகூர்தல், அனுசரணை பெருகுகிறது. பஜன்களின் ஒலியும், தொழுகையின் பாடல்களும் ஒலிக்கின்றன. புனித நூல்கள் வாசிக்கப்படுகின்றன. மதுவின் வாசமே இல்லை. ஏறக்குறைய அது புனிதப் பயணம் போல மாறிவிட்டது.

ஒரு வாரக் காலத்தில் மெல்ல மெல்லக் காற்றும், மழையும் அமரத் தொடங்குகின்றன. இயல்பு நிலை மெதுவாக திரும்பத் துவங்குகிறது. மக்களின் அச்சவுணர்வு அகலத் தொடங்குகிறது.

அவர்களது முகங்களில் திரும்பவும் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பிறக்கின்றன. ஒருவரையொருவர் ஆரத்தழுவி கடவுளைத் துதித்துப் புகழ்ந்து போற்றுகின்றனர்.

மூன்று நாள் கழித்து அந்தச் சூழல் மீண்டும் குடியும், களிப்பும், வெறிப்புமாக மாறியது.

இது மகாத்மா காந்தியின் சுயசரிதையில் அவரால் வேதனையோடு எழுதப்பட்டுள்ள ஒரு உண்மைச் சம்பவம்.

துன்பமும், ஆபத்தும் நேரும்போது மாத்திரம் கடவுளை கருத்தாய் தேடுவதும், உண்மையுள்ளவராக வாழ முற்படுவதும் மாய்மாலம்!! 

எத்து வேலை!! 

இது சுயநலத்தின் மறு உருவம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

நம்மைப் பாரபட்சமின்றி சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

வாழ்வில் மாற்றங்கள் என்பது ஆழமான புரிதலினாலும், உள்ளான மனம் திரும்புதலினாலும் ஏற்பட வேண்டும்.

தவறுகளை, குறைகளை மறைக்கவும், சுய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூக மரியாதையை பெற்றுக் கொள்ளவும், இழிவான பண ஆதாயத்தை அடையவும் நல்ல மனிதர்கள் போல வெளி வேடமாக நம் வாழ்க்கை இருக்கிறதா?

அல்லது

நமது ஆசை, சிந்தனை, சொல், செயல் ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறதா?

தற் பரிசோதனையின் சாராம்சம் இது தான்.

நமது உண்மையான இயல்புக்கும்,  இந்தச் சமூகத்திற்கு நம்மை நாம் அடையாளப்படுத்த முற்படுத்துவதற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு!

இறுதியாக ஒரு சின்ன மதிப்பீடு!


கடந்து சென்ற இருபது வருட கால இடைவெளியில் நம்மைச் சுற்றி நிகழ்ந்த மாற்றங்களைச் சற்று உற்றுப் பார்ப்போமா?

தானும், தான் சார்ந்த குடும்பமும் மட்டுமே வாழ வேண்டும் என எண்ணி அகந்தையோடு நெறிதவறி  வாழ்ந்த உறவினர், நண்பர், அயலார் வாரிசுகளின் தற்போதைய நிலை என்ன?

அற்பமாக எண்ணப்பட்ட, சிறுமையும் எளிமையுமான கடவுளைப் பற்றி வாழ்ந்த குடும்பங்களின் சந்ததியினரின் குழந்தைகள் எங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

ஒற்றை வரியில் பதில் கூறிவிடலாம்.

உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான்.

நம் வாழ்வைச் சீர் தூக்கிப் பார்த்துக் குறைகளை களைந்து, பொறுமையுடன் முன்னேறுவோம். வாழ்வு நீண்ட நெடிய பயணம். அற்ப ஆதாயத்திற்காக வழி பிறழாதிருப்போம்.

ஒவ்வொரு செயலும் அதின் எதிர் விளைவைக் கட்டாயம் ஏற்படுத்தும். அதை மனதில் எப்போதும் நிறுத்துவோம். கவனமுடன் செயலாற்ற கடவுளின் அருள் வேண்டித் தொடர்ந்து பயணிப்போம்.

உள்ளத்தால்  பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.