உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஆகஸ்ட், 2022

நீங்கள் மகிழ்ச்சிக்கு தகுதியானவர்,

சுய தண்டனை 

(Self Punishment)

சுய தண்டனை (Self Punishment) அல்லது சுய-தீங்கு (Self Harming) என்பது தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல்.

இது மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் ஓர் உளவியல் சிக்கல்.

வாழ்வில் ஏற்படும் இயலாமை, ஏமாற்றம், கையறுநிலை, விரக்தி இவற்றின் விளைவாக ஒருவர் தனக்கு தானே துன்பம் விளைவித்துக் கொள்ளும் செயல் என இதை வரையறுக்கலாம். 

இதைக் கட்டுப்படுத்தாது விட்டு விட்டால்  மன ஆரோக்கியத்திற்கு கடும் தீங்கை விளைவிக்கும்.

சுய தண்டனை (Self Punishment) - அது எங்கிருந்து வருகிறது?

அதற்கு முதலில் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மனம் இடைவிடாமல் தனக்குள் உரையாடிக் கொண்டே இருக்கிறது. அது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் வினை.

மகிழ்ச்சி நிறைந்த கடந்த கால தருணங்கள், எதிர்கால திட்டங்கள், மற்றும் நம்பிக்கை தரும் கனவுகள்..,  இது போன்ற குதுகலம் நிறைந்த எண்ணங்களால் நிறைந்து இருக்கும் போது, மனதின் உரையாடல் உற்சாகமாக இருக்கும்.

ஆனால், கடந்த கால தவறுகள், குற்ற உணர்வு, எதிர்மறையான சூழல்கள், இழப்பு, அவமானம்.., இவை போன்ற சம்பவங்களால் மனம் ஆக்கிரமிக்கப் படும் போது; அதில் நிகழும் சுய உரையாடுதல் குற்றவுணர்வைத் தூண்டுகிறது. 

இத்தகைய குற்ற மன நிலையில் பீடிக்கப்படுபவர், தமக்குத் தாமே தண்டனையை விதித்து அதன் வழியாக அமைதி அடைய முயற்சி செய்கிறார்கள்.

பெரும்பாலும் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளும் நபர்களின் அறிகுறிகள்:

1. அவர்கள் என்ன செய்தாலும் திருப்தி இருக்காது (No matter what they do, it's never enough).

2. அவர்கள் தொடர்ந்து தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள் (Put themselves down constantly).

3. அவர்கள் எப்பொழுதும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குறைவாக மதிப்பிடுகின்றனர் (always comparing themselves to others and coming up short).

4. அவர்கள் பரிபூரண வாதிகள். செய்யும் எதிலும் திருப்தியடைய மாட்டார்கள் (Perfectionists who are never satisfied with anything they do).

5. அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள் (Always trying to prove something to themselves or others).

6. கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான மோசமான தண்டனை தான், இப்போது தங்களுக்கு நிகழும் துன்பத்திற்கான காரணம் என்று நம்புகிறார்கள் (Think that the bad things that happen to them are a punishment for their bad behavior in the past).

7. சுயமரியாதை இருப்பது இல்லை. ஆகவே தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற சுய அழிவு நடத்தைகளில் ஈடுபட அது அவர்களை வழிவகுக்கிறது. (Low self-esteem leads them to engage in self-destructive behaviors like self-injury or substance abuse.).

கோடு எங்கே வரைய வேண்டும்:

சுய மதிப்பிற்கும், சுய-தண்டனைக்கும் இடையில் எங்கே கோட்டை வரைய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

நமது கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்கள் மற்றும்  மன ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் தாக்கத்தை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

நாம் நடந்து கொள்ளும் விதம் (behaviour patterns) ஆழ் மன உணர்வுகளின் (deep emotional experiences) வெளிப்பாடு ஆகும்.

நமது சுய மதிப்பற்ற நடத்தைக்குக் காரணமான உணர்வுகளுக்கான உந்துதல் எங்கிருந்து  வெளிப்படுகிறது?  

இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

அதற்குப் பங்களிக்கக்கூடிய காரணம் எது என்பதைக் கண்டுபிடிக்கக் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாகக் குழந்தைப் பருவ கசப்பான அனுபவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை, இழிவு படுத்தப் பட்ட நிகழ்வுகள், அடக்குமுறை, வார்த்தை மோதல்கள், தனிமைப் படுத்த படுதல் போன்றவை குற்ற உணர்விற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆக 

நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் எண்ணங்களைத் தேர்ந்து எடுக்க முனைகிறது. 

அந்த எண்ணங்கள் செயல்களை உருவாக்குகின்றது. 

அவை நடத்தையாக வெளிப்படுகிறது.

ஆக ஆழ் மனதின் உணர்வுகள் நடத்தையை கட்டுப்படுத்துகிறுது.

இப்போது நம்மையே நாம் மதிப்பு குறைவாக நினைக்க வைக்கும் நடத்தைக்கு எது உந்துதல்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மனதை ஈர்க்கும் ஒவ்வொரு சிந்தனையும் ஆராய்ந்து கவனமாகப் பார்ப்பது முக்கியம்.

இது ஆக்கப்பூர்வமானதா? 

இது நம்மை நேர்மறையான வழியில் ஊக்குவிக்கிறதா? 

அல்லது 

இது ஒட்டுமொத்தமாக நம்மைப் பற்றி மோசமாக உணர வைக்கிறதா? 

இது நம் சுய மதிப்பை இழக்க வைக்குமா?

மனதை ஊக்குவிக்கவும் நமது செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் வழிகள்:

குற்றவுணர்வு, அவமானம் இவற்றுக்கு நம் வாழ்வில் இடம் தரக் கூடாது. ஏனென்றால் அவை நம் வாழ்வில் அடையக் கூடிய அனைத்து விதமான வளர்ச்சிகளையும்  தடுக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் நாம் எப்படி முன்னேற முடியும்? 

சுய குற்ற உணர்வையும், தேவைப்படும்போது அவமானத்தையும் தூக்கி எறிய வேண்டும்! 

மேலும் நேர்மறையான சிந்தனை முறைகளை ஊக்குவிக்கும் விஷயங்களை மனதில் பதிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

அது நமக்குத் துன்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் தனிப்பட்ட செயல்திறன் திறன்களை மேம்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது.

1. உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்துங்கள்:

நம்மை நாமே தண்டிப்பதை நிறுத்துவதே முதல் படி. 

நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும்போது, ​​எதிர்மறை உணர்ச்சிகளையும், பலவீனமான எண்ணங்களையும் அதிகப்படுத்துகிறோம். அது நம்மைத் தகுதியற்றவர்களாக உணர வைக்கிறது. 

சுய-தண்டனை என்பது வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களின் காரணமாகக் காலப்போக்கில்  உருவாக்கப்பட்ட இயல்பான நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு அல்லது குணமடைய வழிவகுக்காது. இது அதிக வலியையும் வேதனையையும் மட்டுமே உருவாக்குகிறது.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முதலில் நம்மை நாமே நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அறியாமல் நிகழ்ந்த தவறுகளை மன்னித்துக் குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டும் (self-love and forgiveness). 

தவறு இழைத்தவருக்குப் பரிகாரம் செய்வதன் மூலமும் சுய அன்பைப் பயிற்சி செய்ய முடியும்.

2. உங்கள் சுய பேச்சு பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

இரண்டாவதாக, நம்மைப் பற்றி நாம் பேசுவது குறித்து அறிந்து கொள்ளத் தொடங்க வேண்டும். 

தன்னை தானே தாழ்த்தி பேசும் பழக்கம், சுய மரியாதை குறித்த விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து உருவாகிறது.

சிறுமைப் படுத்திப் பேசப்படுவது அவமானம் மற்றும் விரக்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அத்துடன் கவலை மற்றும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும். நாம் மதிப்பற்றவர்கள் எனும் மனப்பான்மை வளரும்.

அவமானப் படுத்திப் பேசப்படும் ஒவ்வொரு உரையாடலும் மனதைப் பெரிதும் பாதிக்கிறது. 

ஆகவே நம்மை நாமே மதிப்புடன் பேசப் பயிற்சி செய்வதன் மூலம் தாழ்த்தி பேசும் பழக்கச் சுழற்சியை நிறுத்த வேண்டும். 

3. ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துங்கள்:

மூன்றாவதாக உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். உயிருள்ளவரை உடலும் உள்ளமும் பிரிக்க முடியாது.

மன ஆரோக்கியத்துக்கு நல்ல உடல் நலம் இன்றியமையாதது. சரியான முறையில் சரிவிகித உணவை உண்பது நல்லது. 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். 

4. நல்ல தூக்கம்:

நான்காவது, ஒவ்வொரு இரவும் போதுமான அளவு தூங்குங்கள், அதனால் பகலில் நாம் அனுபவிக்கும் அனைத்து அழுத்தங்களிலிருந்தும்  மூளை விடுபட்டு மீண்டும் புத்துணர்ச்சி பெறும்.

5. நேர்மறை உறவுகளை உருவாக்குங்கள்:

இறுதியாக, உங்களை நேசிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நபர்களுடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குங்கள். 

நம்மை ஊக்குவிக்கும் நண்பர்கள் நமக்குத் தேவை. நீங்கள் நம்பும் மற்றும் மனம் திறந்து பேசுவதற்கு வசதியாக இருக்கும் ஒரு நண்பரைக் கண்டுபிடிப்பது முக்கியம்!

சுருக்கமாக 

சுய தண்டனை உங்கள் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். நீங்கள் மகிழ்ச்சிக்குத் தகுதியானவர், உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்கு உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்த வேண்டும்.

உங்களை நீங்களே தண்டிக்கும் நடத்தைகளில் மனம் ஈடுபடுவதைக் கண்டால், தொழில்முறை உதவியை நாட வேண்டியது அவசியம். 

இது கடினமாக இருந்தாலும், சிகிச்சையை நாடுபவர்கள் நீண்ட காலத்திற்குச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 


Influenced by:

https://www.thewellnesscorner.com/blog/self-punishment-effects-on-mental-health

வெள்ளி, 29 மே, 2020

மன்னிப்பின் மாண்பு

 மீள்தல். 



[இந்தக் கட்டுரை Olivia Delong எழுதிய "How to forgive someone, Even when it feels impossible.  Forgiveness is something you do for yourself" எனும் ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தன் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டது.]

மன்னித்தல் நன்மையானது :



ஏமாற்றியவரை மன்னிக்க முடியுமா?
மன்னித்தல் என்றால் என்ன?
மன்னிப்பதால் மனதில் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? 
எது மன்னிப்பு?
எது  மன்னிப்பில்லை?
மன்னிப்பைச் சொல்லவேண்டுமா?

இக் கட்டுரை இது போன்ற சில கேள்விகளுக்கு எளிமையான விளக்கம் அளிக்கிறது.

ஏமாற்றுபவர் பல விதம்.

ஓர் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக நடித்து நம்பவைத்து ஏமாற்றுபவர் உண்டு. சுய இலாபத்துக்காக மோசடி செய்பவரைச் சந்தித்திருப்போம். ஆதாயத்திற்காக உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பொய் பேசுதல் இன்று சர்வசாதாரணம். தனது குறையை மறைப்பதற்காகப் பிறர் மீது பழி போடுதல் உறவுகளில், பணியிடத்தில் எதிர் கொள்கிறோம்.

இப்படிச் செய்பவர்களை மனதார மன்னிக்க முடியுமா?

மன்னிக்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதால் அதிக நன்மை நிகழ்கிறது.

மன்னிப்பதால் மனம் மற்றும் உடல் இவற்றில் நிகழும் வேதியியல் மாற்றங்களை ஆழமாகப் புரிந்து கொண்டால் அதைப் பற்றி ஒரு புதிய பார்வை கிடைக்கும். அப்போது மன்னிப்பின் மாண்பை உணர்வோம்.

மன்னிப்பு : உடலும் - மனமும் :



கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம். ஏமாற்றப்பட்டது தெரிய வரும்போது மனதில் என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறது?

கோபம் கொந்தளிக்கும். அந்த எண்ணம் நினைவில் எழும் போதெல்லாம் மன அமைதி கெடும். மனப்பதற்றம் தொடரும். பழி வாங்கும் உணர்வு மேலிடும். தீமை செய்தவர்க்குத் தீங்கு நேரிட வேண்டுமென மனம் துடிக்கும். கவனம் சிதறும். தன்னிரக்கம், சுயபச்சாதாபம் மிகும். தனிமையை விரும்பும். இயல்பாகப் பணி செய்ய முடியாது.

இந்த கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை எண்ணங்கள் உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது?

இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்தின் படபடப்பு கூடும். உடல் சோர்வாகும். நா வறளும். தலைவலி ஏற்படும். உணவு பிடிக்காது. தனிமையை விரும்பும். எதிலும் ஈடுபாடு இருக்காது. ஒரு வித வெறுமை மனதை ஆக்கிரமிக்கும். கண்ணீரும் சோகமும் தொடர்கதையாகும்.

இந்த மாய உணர்வுகளைச் சரியாகக் கையாளாவிட்டால் அவை மனதில், உடலில், நடத்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏமாற்ற உணர்வுகளிலிருந்து மீளாவிடில் அது மனச் சோர்வு, உறக்கமின்மை, இதய நோய், பக்க வாதம், மூல நோய், சர்க்கரை வியாதி என உடல் உபாதையாக மாறும். நோயெதிர்ப்பு திறனை வெகுவாகக் குறைத்து விடும். சமூக கூட்டுறவை விட்டு விலகத் தூண்டும். பணித்திறனை இழக்கச் செய்யும்

மன்னிக்காத தன்மை மனம், உடல் இரண்டையும் கூடுதலாகப் பாதிக்கும்.


மன்னிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :




மன்னிப்பதால் மனதில், உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்களைத் தெரிந்து கொண்டால் மிக ஆச்சரியமாக இருக்கும். மாற்றங்களின் விளைவுகள் சில :
  • எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை.
  • கோபம் நீங்கும். 
  • மனப் பதற்றம் நீங்கும்.
  • மன அழுத்தம் சீராகும்.
  • மனச் சோர்வு அகலும்.
  • மன அமைதி.
  • நல்ல உறக்கம்.
  • நிதர்சனம் மெல்லப் புரியும்.
  • மன வலிமை அதிகரிக்கும்.
  • எதிர்பார்ப்பு குறையும்.
  • சூழல் மாறும் எனும் புதிய நம்பிக்கை பிறக்கும். 
  • நன்றாக இருக்கிறேன் எனும் பாதுகாப்புணர்வு கிடைக்கும்.
  • முடக்கத்திலிருந்து விடுதலை.   
  • புதிய வாய்ப்புகளைத் தேடுதல்.. 
  • உண்மையான நட்பை அடையாளம் காணுதல்.
  • உடலில் உயர் இரத்த அழுத்தம் குறையும். 
  • இதயம் வலிமை பெறும். 
  • நோயெதிர்ப்பு திறன் கூடும்.   
மன்னிப்பதால் கிடைக்கும் இந்த நல் உணர்வுகளை நன்கு மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

எது மன்னிப்பு? 



"இது எனக்கு நிகழ்ந்து விட்டது. இதை நான் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சூழல் சகிக்க முடியாத வேதனை தான். எனினும் இதிலிருந்து விடுபட்டு எனது வாழ்வைத் தொடரப் போகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. இது ஏன் நிகழ்ந்தது எனும் காரண காரியங்களை நிதானமாகப் புரிந்து கொள்ள முயல்வேன். இது ஒரு வாழ்க்கைப் படிப்பினை. இவ்விதம் மீண்டும் நிகழாதவாறு எச்சரிக்கையாக இருப்பேன். ஒரு போதும் இவ்விதமாகப் பிறரை ஏமாற்றமாட்டேன். ஏனெனில் இதன் வலி எனக்குத் தெரியும். இந்த நிதர்சனத்தைப் புரிவது தான் எனது உடலுக்கும். மனதுக்கும் நல்லது. துரோகத்தை நினைக்கும்போது ஆவேசம் வருகிறது. அவர்களும் இவ்விதம்  வேதனை அனுபவிக்க வேண்டும் என மனம் துடிக்கிறது. ஆனால் தீய உணர்வுகள் ஒருபோதும் நன்மை தராது. மனதாலும் பிறர்க்குத் தீங்கு எண்ணுதல் கூடாது. கோபம், எரிச்சல், பகையுணர்வு முற்றிலும்  பயனற்றது. எனவே நான் மன்னிக்கிறேன்."

இவ்விதம் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்த மனநிலையில் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அநீதியைத் திருப்பித் தாக்காது பொறுத்துக் கொள்வதே மன்னிப்பு.

எது மன்னிப்பில்லை?





தீங்கு நடந்தும் "எனக்கு ஒன்றும் ஆகவில்லை" என எதுவுமே நடக்காதது போலத் தீமை செய்தவரோடு மீண்டும் சகஜமாகப் பழகுதல் மன்னிப்பு இல்லை. தொடர்ந்து தவறுகள் செய்பவருடன் அனுசரித்துப் போவது மன்னிப்பு இல்லை

இவ்விதம் நடப்பது பெருந்தன்மை என்பது தவறான புரிதல். இத்தகைய "தாராள மனநிலை" தீமை செய்தவரைத் தொடர்ந்து தவறு செய்யும்படி ஊக்கப்படுத்தும்.

தீயவர் செய்த தவற்றைச் சுட்டிக் காண்பிக்க வேண்டும். அவர் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் தமது தவற்றை உணர்ந்து மனம் வருந்தினால் மீண்டும் சேரலாம். அது ஒப்புரவாகுதல்.

ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்துபவருடன் தொடர்ந்து  சிநேகம் பாராட்டுவது மன்னிப்பல்ல. அது பொருளற்றது.

தெரிந்தும் திருந்த மறுப்பவரை  மாற்றவோ, புரிய வைக்கவோ கடும் முயற்சி எடுப்பது வீண் வேலை. அந்தச் சூழலில் அமைதியாக விலகி நிற்பது நல்லது. காலம் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் கற்றுக் கொடுக்கும்.

அன்பு செலுத்துங்கள். மன்னியுங்கள். ஆனால் தீயவர் நட்பு என்றும் வீழ்ச்சியை அளிக்கும். தீமையை விட்டு விலகியிருக்க வேண்டும்.

மன்னிப்பைச் சொல்ல வேண்டுமா?




மன்னித்தல் என்பது இறைவனுடன் ஆன்மா நிகழ்த்தும் உரையாடல்.

மன்னியுங்கள். உங்கள் பணியை நேர்மையாகத் தொடருங்கள். பொறுமையாகக் காத்திருங்கள். அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். அவர்களை மனதார வாழ்த்துங்கள். ஒரு நாள் தவறிழைத்தவர் உணர்வு அடைவர்

தாங்கள் செய்தது தவறு என்றே உணராதவரிடம் போய் மன்னித்துவிட்டேன் என்று சொல்வது பரிதாபம். திருந்த மறுப்பவரிடம் மன்னித்து விட்டேன் எனச் சொல்வது அர்த்தமற்றது.

ஏமாற்றியவரிடம் சென்று சொல்வதால் மன்னிப்பு முழுமையாவதில்லை. தவறு செய்தவர் அதை உணரும்போதே மன்னிப்பு பரிபூரணமாகிறது. அதுவே வாழ்வின் ஓர் அற்புதமான தருணம்.

உண்மை, பொய் இரண்டையும் மறைக்க முடியாது. அது ஓர் நாள் வெளியரங்கமாகும். அப்போது உங்களது மன்னிப்பின் மாண்பு வெளிப்படும்.

மன்னிப்பின் பாதை : 




மன்னித்தல் என்பது ஓர் தெய்வீக பண்பு. அதைக் கடைப்பிடிப்பது எளிதானதல்ல. நீடிய பொறுமை தேவை. மன்னிப்பை உறுதிப்படுத்த ஓர் வழி.

கடிதம் ஒன்றை எழுதுவோம். அதை யாருக்கும் காண்பிக்கத் தேவையில்லை. எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுவோம். ஏமாற்றங்களைப் பதிவு செய்வோம். நமது குற்றங்களை ஆராய்வோம். செய்த சில தவறுகள் கண்ணீர் சிந்த வைக்கும். கண்ணீர் தீமையை அழிக்கும்.  இதயத்திலிருந்து எழும் எண்ணங்களை, உணர்வுகளை  அதில் கொட்டி விட வேண்டும். எதையும் மனதில் சுமக்க வேண்டாம். மறைக்கவும் வேண்டாம். எவை வலி ஏற்படுத்துகிறது? எதனால் வெகுண்டு எழுகிறோம்? எதை மறக்க முடியாது தவிக்கிறோம்?  திரும்பத் திரும்ப நினைவில் எழும்பி எவை வாட்டுகிறது? இவை ஒன்று விடாமல் எழுத வேண்டும். எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்த்தால் நம் கோப உணர்வை எவைத் தூண்டுகிறது எனப் புரியும்.

இப்போது காகிதத்தை எரித்து விடலாம். கோபத்தைத் தூண்டும் உணர்வு மீண்டும் எழுந்தால் அது நமக்கு முன்பே தெரியும் என மனதிடம் சொல்லுங்கள். மனம் சிறிது நேரத்தில் அமைதியாகிவிடும். புரிந்து கொள்ளப்பட்ட உணர்வுகளுக்கு வீரியம் அவ்வளவுதான்!.

மன்னிப்பும் காலமும் :


பயணத்தில் தவறுதலாக மிதித்து விட்டவரை விரைவாக மன்னித்து விட முடியும். ஆனால் ஓர் பாலியல் துன்புறுத்தலை அவ்வளவு எளிதாக மன்னித்து விட முடியாது. மனக் காயத்தின் ஆழத்திற்கேற்ப வலியும் இருக்கும்.

சில துரோகங்களைக் கஷ்டப்பட்டு மன்னித்து விடலாம். ஆனால் எளிதில் மறக்க முடியாது. ஆயினும் ஒருபோதும் பகையுணர்ச்சி வேண்டாம். பழி வாங்கும் உணர்வுக்கு இடம் கொடாது இருங்கள். அது மனதைக் காயப்படுத்தும். தீர்ப்பை அளிக்க வேண்டாம்.

சில கசப்பான நினைவுகள் மறைய காலம் பிடிக்கும். மன்னித்து விட்டாலும் மறக்க காலம் ஆகும். சில சமயம் மனதில் நம்மை மீறி ஆவேச கோப உணர்வுகள் எழும். ஏமாற்றுபவரைத் தண்டிக்கும் உணர்வு எழும். அது இயல்பானது. அதற்கு வருந்த வேண்டாம். உணர்வுகளால் மனதைக் காயப்படாது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். காலம் ஒன்றே மாமருந்து.

ஏமாற்றியவரைத் தண்டிக்க இன்னும் ஓர்  சிறந்த வழி உள்ளது. தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுங்கள். ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காண்பிப்பதே அவர்களுக்கு அளிக்கும் சிறந்த தண்டனை.

இறுதியாக இறையருள் உதவியுடன் மன்னியுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி மன சஞ்சலங்களிலிருந்து மீண்டு வாருங்கள். அது மிகச் சிறந்த முடிவு.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge. 

சனி, 2 நவம்பர், 2019

நம்பிக்கை அளிக்கும் புதுவாழ்வு.

ஆற்றுப்படுத்தல். 




Dr.இளவரசன், MS அறுவை சிகிச்சை மருத்துவர். Khasab அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவில் பணி செய்கிறார். அவரது துணைவி Dr.புஷ்லதா MBBS., DDVL தோல் சிகிச்சை மருத்துவர். சென்னையில் பணி செய்கிறார்.

Khasab, (Oman) இல் வைத்து, மருத்துவத் துறையில் பணி செய்பவர்களுக்காக,  ஒரு ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடத்தினார்கள்.

தலைப்பு : "Make witnessing in the work place ".

நோயாளிகளின் மனதில் நிகழும் ஆக்கப்பூர்வமான நம்பிக்கை, சிகிச்சையில் எவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது முக்கியக் கருப்பொருள். அதில் மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள் எத்தகைய பங்களிப்பை அளிக்க முடியும் என்பது விரிவாக விளக்கப்பட்டது.

அவரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இதில் நானும் பங்கு பெற்றேன். இன்றைய சூழலில் இதயநோய், புற்றுநோய்,  சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம்  போன்ற பேரிழப்பை ஏற்படுத்தும் நோய்கள் மலிந்து விட்டன. பெரும் விபத்தால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களும் உண்டு.

இந்தக் கருத்தரங்கத்தில் பகிரப்பட்ட சிலப் பொதுவான குறிப்புகள் நமக்கும் உதவும். நம் உறவுகள், நட்பு வட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோய்மை உடையவரது மனநிலை உணர இவை உதவும்.

இதைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களை நாம் எவ்விதம் அணுக வேண்டும் எனக் கற்றுக்கொள்ள முடியும்.

நம்பிக்கை : (Faith) 

Why is faith important in the healthcare?

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர் சந்திக்கும் முக்கிய சவால் நம்பிக்கையிழப்பு ஆகும்.

மன நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளது நோய் எதிர்ப்புத் திறன் பல மடங்கு சிறப்பாக முன்னேற்றம் அடைவது சமீபத்திய அறிவியல் பூர்வமான  முறையான ஆய்வுகள் மூலம்  நிரூபணம் ஆகியுள்ளது. இறை நம்பிக்கையும் நோயுடன் போராட உதவுகிறது.

எனவே நோயாளிகள் நம்பிக்கையிழக்க வைக்கும் காரணிகளைக் கண்டறிந்து அதை நீக்குவதன் வழியாக அவர்கள் விரைவாகக் குணமடைய உதவ முடியும்.  எனவே இது சிகிச்சையின் ஒரு பகுதியாக அளிக்கப்பட வேண்டும்.

நோய் வாய்ப்பட்டவர் மனதை அமைதி இழக்கச் செய்யும் மூன்று முக்கிய தடைகள் இவை :

1. உணர்வுப்பூர்வமான தடை (Emotional Barrier)
2. அறிவுப் பூர்வமான தடை (Intellectual Barrier)
3. முடிவெடுக்க முடியாத தடை (Volition Barrier)

உணர்வுப்பூர்வமான தடை :


கொடிய நோய் அல்லது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதில் எழும் முதல் கேள்வி : "எனக்கு ஏன் இது நிகழ்ந்தது?" என்பதாகும்.

சில கேள்விகளுக்குக் காலம் தான் பதில் சொல்லும். சில கேள்விகளுக்கு விடை கிடைக்காது. ஏன் நிகழ்ந்தது என்பதைவிட அதிலிருந்து எப்படி மீள்வது என நோயாளரின் மனதைத் திசை திருப்ப வேண்டும்.

அடுத்து, நோயாளர் மனதில் எழும்  சிக்கல் : சுயபச்சாதாபம்.  தன் இருப்பை சங்கடமாக உணர்தல். தன்னை பயனற்றவராக உணர்தல். இத்தகைய எதிர்மறை உணர்வுகள் நோயெதிர்ப்பு திறனைக் கடுமையாகப் பாதிக்கும். இத்தகைய மனநிலையின் உச்சக்கட்டமாக அவர்கள் தற்கொலைக்கும் முயல்வர். வெறுப்பும், கோபமும், இயலாமையும், வார்த்தைகளிலும் செயலிலும் வெளிப்படும்.

இதற்கு ஒரே மருந்து அன்பு செலுத்துதல். அத்துடன் பொறுமையும் அவசியம். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். அவர்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் உயிருடன் வாழ்வது குடும்பத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனும் உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அறிவுப்பூர்வமான தடை :


அறியாமை, தவறான புரிதல், தவறான கருத்துக்களில் ஏற்படும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் குழப்ப மனநிலை, நோயாளர் மன அமைதியைக் குலைக்கும். 

சமூக ஊடகம், நட்பு வட்டம், விளம்பரம் மூலமாக அறியப்படும் மருத்துவ குறிப்புகள் முழுமையானதல்ல. ஒவ்வொரு நோயாளருக்கும் தரப்படும் சிகிச்சைமுறை மற்றும் மருந்துகளின் வீர்யத்தன்மை வித்தியாசமானது. அதன் எதிர் விளைவுகளும் வேறுபடும். அது ஒவ்வொரு நோயாளருக்கும் மாறுபடும். நோயாளரின் தவறான புரிதல் சிகிச்சையைப் பாதிக்கும்.

இன்று பல தரப்பட்ட போலி சிகிச்சை முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த தவறான சிகிச்சைமுறை நம்பி அறியாமையால் பணத்தையும், நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். குறிப்பாகப் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு முறையான சிகிச்சை சரியான சமயத்தில் முழுமையாக எடுக்காவிட்டால் உயிரிழப்பைத் தடுக்க முடியாது.

குழப்ப மனநிலை உடையவர்கள் சிகிச்சையை முழுமையாக எடுக்காது பாதியிலேயே நிறுத்த முயல்வர். பக்க விளைவுகளைக் குறித்த தவறான நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இவர்களுக்குப் பொறுமையுடன் முழு உண்மைகளையும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்பிக்கைகளை மதிப்புடன் கேட்க வேண்டும்.  உண்மையாக இருந்தாலும் நமது கருத்துக்களை வற்புறுத்தக் கூடாது. அவர்களது தவறான நம்பிக்கைகளைக் கேலி செய்யக் கூடாது. பொறுமையுடனும், கனிவுடனும், அதைக் கவனமுடன் அணுக வேண்டும். அவர்கள் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் அவசியம். 

முடிவெடுப்பதில் தடை :

நோயாளர் தன்னிச்சையாகத் தீர்மானிக்க இயலாத மனநிலையில் இருப்பார். இந்த வித சிகிச்சை எடுக்கலாமா? அல்லது  வேண்டாமா? எனும் குழப்ப மனநிலை இருக்கும்.

சில சிகிச்சை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது எனும் தடுமாற்றத்தைத் தரும். சிகிச்சை எடுப்பதால் பல மாதங்கள் வேலைக்குச் செல்லமுடியாத சூழல் பயமுறுத்தும். பணத்தேவைகள் சிகிச்சை எடுப்பதைத் தள்ளிப் போடக் கட்டாயப்படுத்தும். சில சமயம் நிரந்தரமாக வேலைக்கு செல்லவே முடியாத கட்டாய ஓய்வு தேவைப்படும். 

நோயாளருக்குச் சிகிச்சையின் அவசியத்தை உண்மையைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். வேலைக்குச் செல்வதை விட உயிருடன் இருப்பது முக்கியம் என்பது புரிய வைக்கப் பட வேண்டும்.

புற்றுநோய் போன்ற சிகிச்சையில் ஏற்படும் முடி உதிர்தல் போன்ற பக்க விளைவுகள் நிரந்தரமல்ல என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சமூக பெருமையை விட குடும்பத்திற்கு அவர்கள் வாழ்க்கை  மதிப்புமிக்கது என்பதை உணர்த்த வேண்டும்.

பணியாளர்களாக நம்பிக்கையை அவர்கள் மனதில் தினமும் விதைத்தல் வேண்டும். மனத் தடைகளைக் களைய வேண்டும். ஆக்கப் பூர்வமான சூழலை உருவாக்க வேண்டும். உடன்பாட்டுச் சிந்தனைகளைப் பேச வேண்டும். மன தைரியத்தை உருவாக்க வேண்டும். நமது பேச்சு, புன்னகை நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும்.

உடல் நலம் தேறிச் சென்றவர்கள் பற்றிய கதைகளைப் பகிர வேண்டும். ஒரு Faith tag line தினசரி சொல்வது நல்லது.


மருத்துவம் சேவை :


ஆலயம், கோவில், மசூதி ஒரு குறிப்பிட்ட நேரம் தான் திறந்திருக்கும். மருத்துவமனை கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. மருத்துவமனையில் நுழையும் நோயாளர் வேதனை, வலி, கலக்கம் சூழ நுழைகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை, ஆறுதல் மற்றும் சுகமாக்க உழைப்பது ஊழியர்கள் பொறுப்பு.

நம்மைத் தேடி ஒருவர் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. அவர்களுக்கு நான் எவ்விதம் உதவியாக இருக்க முடியும் என்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையாளராக மாற வேண்டும். நோயாளர் தனது வாழ்வின் பயணத்தில் அடுத்த நிலைக்கு நம்பிக்கையுடன் முன்னேற தோள் கொடுங்கள். 

ஆலயம், மசூதி, கோவில் போல மருத்துவமனையும் புது வாழ்க்கை தரும் ஒரு நம்பிக்கை ஸ்தலம்.


செவ்வாய், 3 செப்டம்பர், 2019

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் எதிர்த்து போராடுபவருக்கு உதவுவது எப்படி?




இன்றைய அவசர உலகில் அதிகமான பேர்கள் புற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாகிறனர்.

புற்றுநோய் பாதிப்பு சிறு குழந்தை முதல் முதிர் வயதினர் வரை அனைவரையும் தாக்குகிறது.

புற்றுநோய் குறித்து முறையான தகவலும் விழிப்புணர்வு தேவை. எனது இரண்டாவது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 42 வயதில் மறைந்தார். சற்று கவனக்குறைவாக இருந்ததால் இந்த மாபெரும் இழப்பு. 

புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்களின் ஆலோசனையை அப்படியே பின்பற்ற வேண்டும். கால தாமதம் கூடாது.


புற்றுநோய் என்பது என்ன?
 


உடலின் மரபணுக்களில் சேதம் ஏற்படுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று  உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் (Tissues) மிகைப் பெருக்கம் ஏற்படுகிறது. இக்கட்டிகள் ஏனைய உடற்ப் பகுதிகளுக்கும் பரவும் ஆற்றல் கொண்டிருந்தால் அவை புற்றுநோய் கட்டிகள் எனப்படும். இவை உடலின் இருக்கும் பாகத்தை வைத்து எந்த வகை புற்றுநோய் எனப் பெயரிடப்படுகிறது.

புற்றுநோய் ஏற்படும் காரணம்


1. புகையிலை - 22%
2. உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை - 10%
3. அளவுக்கதிகமான மது 6%
4. பாரம்பரியம் 5%
5. செயற்கை உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம்
6. கதிர்வீச்சு 
7. சுற்றுச் சூழல் மாசுபாடு
8. சில நோய்மை (Hebatitis C)

உடலில் ஆண்களைப் புற்றுநோய் அதிகமாகப் பாதிக்கும் பகுதி

நுரையீரல் (Lungs)
வாய் (Oral)
வயிறு பகுதி (Stomach)

உடலில் பெண்களைப் புற்றுநோய் அதிகமாகப் பாதிக்கும் பகுதி

மார்பகம் (Breast)
கர்ப்பப்பை வாய் (Cerivial)
வயிறு பகுதி (Stomach) 

புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாவோர் மனதாலும், உடலாலும் அதிகம் பாதிப்பு அடைகின்றனர். அவர்கள் மனநலம் பாதுகாக்கப்பட வேண்டும். உடல் நலம் மேம்படும் சூழலை உருவாக்க வேண்டும்.  Ms. Kamini Pradhan (Patientsengage.com) எனும் புற்றுநோய் எதிர்ப்பு போராளி புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்க்கு உறவுகளும், நட்புகளும் எவ்விதம் உதவ வேண்டும் என அருமையாக எழுதியுள்ளார்.

அதன் சுருக்கம்

I. மனநலம் / உணர்ச்சி மேம்பாடு (Mental / Emotional Support)



1. அரவணைப்பு  (Acceptance) 


புற்றுநோய் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து, புரிந்து அவர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும். இது அவர்கள் சிறந்த சிகிச்சையை முழு மனதுடன் எடுத்துக் கொள்ள உதவும்.

2. நேர்மறை (Positivity)


நேர்மறையான எண்ணங்களால் மனம் நிறைந்து இருக்க வேண்டும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் நோயாளர் மற்றும் உடனிருப்பவர்கள் மனதை வலிமையாக வைத்துக்கொள்வது முக்கியம்.  

கால ஓட்டத்தில் "இதுவும் கடந்து போகும்" என முழுமையாக நம்ப வேண்டும். எல்லா எதிர்மறை  எண்ணங்களும் சமுத்திரத்தின் ஆழத்தில் வீசியெறிய வேண்டும்.

3. சிகிச்சை சாதாரணமானது (Normal Treatment)


புற்றுநோய் சிகிச்சை சாதாரணமான நடைமுறை தான். கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பீதியடையத் தேவையில்லை. நோயாளி எவ்விதம் இருப்பது சௌகரியம் என எண்ணுகிறாரோ அவ்விதம் வாழ உதவுங்கள். ஒருபோதும் அவர் தன்னை ஒரு சுமையாக உணரக்கூடாது.

4. அன்பு மற்றும் கவனிப்பு (Love & Care)


புற்றுநோய் எதிர்ப்பு போரில் அன்பும் கவனிப்பும் மிக முக்கியம்.  சலிப்பு எட்டிகூட பார்க்கக் கூடாது. இந்தப் போரில் நாம் அவருடன் இனைந்து உள்ளோம் என்பது நமது அன்பான நடவடிக்கையால் வெளிப்படட்டும். தான் மிக மதிப்புமிக்க முக்கியமானவர் என்பது அவர் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும்.

5. மகிழ்ச்சி (Cheerful)


சிகிச்சை காலம் முழுமையும் மகிழ்ச்சியாக இருத்தல் முக்கியம்.  அவருக்குப் பிடித்த நபர்களோடு இருக்கட்டும். பிடித்த படங்கள்,நேர்மறை சிந்தையைத் தூண்டும் நூல்,  நகைச்சுவை,  சிரிப்பு என மனதை இலகுவாக்கும் சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

II. சூழ்நிலை உதவி (Environmental & Physical Support)



1. சுத்தம் (Cleanliness)


அவரது இருப்பிடத்தின் சுத்தம் மிக மிக முக்கியம். அவரது நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால் எளிதில் தொற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. நோய்மை உடையவர் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

2. நீர் (Water)


குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர் நீர் பருக வேண்டும். உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீக்கப்பட இது தேவை. சுத்திகரிக்கப்பட்ட நீரின் தூய்மை உறுதி சொல்ல முடியாது.  நீரைக் கொதிக்க வைத்துக்  குடித்தல் சிறந்தது.

3. மருந்து (Medicine)


மருந்து,மாத்திரை, ஊசி இவை குறிப்பிட்ட சமயத்தில் சரியாக முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

4. உணவு முறைமை (Diet)


உணவு சிறிது சிறிதாக அடிக்கடி சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிக உணவு உண்ணக்கூடாது. உணவை வீட்டில் வைத்து புதிதாக (Fresh தயாரித்தல் அவசியம். சமைக்க மற்றும் சாப்பிட பயன்படுத்தும் பாத்திரம் தூய்மையாக இருக்க வேண்டும். பாத்திரங்கள் சுடுநீர் கொண்டு சுத்திகரித்தல் வேண்டும்

மருந்தின் வீரியத்தால் நோய் எதிர்ப்புத் திறனை உடல் இழக்கும். அதை ஈடுகட்டக் குறிப்பிட்ட உணவு வகைகளைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1. Citrus Fruits (ஆரஞ்சு, திராட்சை,  எலுமிச்சை, நெல்லி)
2. Red bell Pepper (மிளகு)
3. Brocolli
4. Garlic (பூண்டு)
5. Ginger (இஞ்சி)
6. Yogurt
7. Almonds (பாதாம்)
8. Spinach (கீரை - இலட்சக்கட்டை)
9. Turmeric (மஞ்சள்)
10. Green Tea
11. Papaya (பப்பாளி)
12. Kiwi
13. Chicken Soup
14. Sunflower Seeds
15. Shell fish (நண்டு, இறால், Lobstere Mussels) 

இவை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. ஈடுபாடு (Activity)


நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, தியானம்,  இறை வேண்டல், தொழுகை இவை மனதை உடலை மேம்படுத்தும். சிரமம் இருப்பினும் இதை ஈடுபாடுடன் செய்தல் மிக நல்லது. இதைச் செய்ய ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

6. பார்வையாளர் (Guest)


யாரைச் சந்திக்க வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். வற்புறுத்தக் கூடாது. 

நோய்மை உடையவரை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கக் கூடாது.

பார்வையாளர்கள் அறைக்குள் காலணி அணிந்து செல்ல அனுமதிக்க கூடாது.

பூங்கொத்து நோய்த் தொற்று ஏற்படுத்தும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

சில குறிப்பிட்ட நபர்களைச் சந்திக்க நோய்வாய்ப்பட்டவர் விரும்ப மாட்டார். அவர்கள் முன்பு தான் இயலாத நிலையில் இருப்பதைப் பார்க்க விரும்ப மாட்டார். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனக்கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. அத்தகைய உறவினர்,  நண்பர்களை ஒரு போதும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. 

புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது.

சரியான நேரத்தில் முறையான சிகிச்சையுடன் மற்றும் குடும்பத்தினர், உறவினர், நட்புகளின் அன்பான அரவணைப்பு இருந்தால் இந்த போராட்டத்தில் வெற்றி பெறலாம்.

திங்கள், 8 அக்டோபர், 2018

மகிழ்ச்சிக்கான நான்கு வழிப் பாதை.

மகிழ்ச்சி - ஒரு நெடிய நான்கு வழிப் பாதைப் பயணம்.


(Khasab Musandam)

மனிதர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கும் போது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் குறித்த ஆய்வு குறிப்புகள் மிகவும் சுவாரசியமானது.

அதன் படி மகிழ்ச்சிகரமான சூழலில் நான்கு விதமான வேதிப் பொருட்களை மூளையில் இருந்து வெளிப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டது.

அவை:
  • Endorphins
  •  Dopamine
  •  Serotonin
  •  Oxytocin
எத்தகைய சூழலில் இருந்து இந்த வேதிப்பொருட்கள் மூளையில் இருந்து வெளிப்படுகிறது என பார்ப்போம்.

1. உடற்பயிற்சி:

 

(Gym at Khasab Musandam)

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மிக முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக முறையாக உடற்பயிற்சி செய்வது முக்கியம். இவ்வித உடற்பயிற்சிகள் செய்வதால் தசைகள் களைப்படைகின்றது. இந்தத் தசைகளை வலுப்படுத்தவும் உடல் வலியைப் போக்கவும் மூளையில் இருந்து சுரக்கும் வேதிப் பொருள் தான் Endorphins.

இது மனதில் மகிழ்ச்சி மற்றும் பெருமித உணர்வுகளை வெளிப்படுத்தும். எனினும் இது ஏற்படுத்தும் மகிழ்ச்சி உணர்வு தற்காலிகமானது.

2. இலக்கை அடைதல்:


(Coastal Project Road Khasab Musandam)

வாழ்க்கை என்பது சிறிய மற்றும் பெரிய இலக்குகளால் வழி நடத்தப் பெறுகின்றன. குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி, இலகுவான பயணத்துக்கு உகந்த வாகனங்கள், வசதியான வீடு, விடுமுறைக்குச் சுற்றுலா, உயர்ந்த ஆடைகள், வேலையை எளிதாக்கும் சாதனங்கள்..., என அடைய ஆசைப்படும் பட்டியல் மிக நீளமானது. இத்தகைய இலக்கை அடையவே கடுமையாக திட்டமிட்டு உழைக்கிறோம்.

இந்த இலக்கை அடையும் தருணங்களில் நமது மூளையில் இருந்து வெளிவரும் வேதிப் பொருள் தான் Dopamine. இந்த இரசாயனப் பொருள் மனதில் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் திருப்திகரமான உணர்வை ஏற்படுத்தும். ஒவ்வொரு இலக்கை அடையும் போது இந்த மகிழ்ச்சியான உணர்வைப் பெற முடியும். இதுவும் ஒரு தற்காலிக உணர்வுக் தூண்டுதலே.


3. சமூக நலம் விழைதல்:



(Sunday School Children -  St. Luke Church, Salalah)

நமது பணம், திறமை, நேரம் இவற்றை நம்மைச் சுற்றி வாழும் சமூக மேம்பாட்டுக்காகச் செலவிடும் போது மூளையில் இருந்து வெளிவரும் வேதிப் பொருள் தான் Serotonin.

அதனால் தான் வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் இந்த சமூகத்திற்கு என தங்கள் பணத்தை, நேரத்தை, திறமையை அளிக்க உந்தப் படுகின்றனர். நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கு உதவும் போது ஆத்ம திருப்தி உண்டாகும்.

ஓய்வு நேரத்தில், விடுமுறை காலத்தில் தொண்டு நிறுவனங்கள், சமூக பணி செய்யும் மையங்கள் இவர்களோடு சேர்ந்து பணிபுரிவது நல்ல நட்புககளின் அறிமுகமும் கிடைக்கும். இத்தகைய பணி புரிதல் வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சமூகத்திற்கு நமது பங்களிப்பை நல்குவோம்.

4. அன்பும் அக்கறையும்:


(With Grand daughter Merryl)

Oxytocin எனும் வேதிப்பொருள் நமது உள்ளத்தில் அன்பு உணர்வு பொங்கும் தருணங்களில் உருவாகிறது. நண்பர்களோடு சேர்ந்து அளாவுதல், உறவுகளின் நெருக்கமான பகிர்தல், பிடித்தமான மனிதர்களின் கூட்டுறவு, நீண்ட பிரிவுக்குப் பின்பு சந்திக்கும்போது கட்டிக் தழுவுதல் என நெருக்கமான அன்பின் தருணங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவசியம்.

உறவுகளை மேம்படுத்துவது வழியாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். நான்கு வழிப் பாதையில் இதுவே மிக எளிய வழி. புன்னகை பொங்கும் முகத்துடன் சந்தியுங்கள். அனைவருடனும் அன்பு செலுத்துங்கள். உடன் வாழ்பவர்களுடன் இணக்கமாக இருப்பதற்கு முயற்சி எடுங்கள். நண்பர்களோடு விளையாட்டுகள், உறவுகளோடு விழாக்கள் என  உற்சாகம் தரும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

இந்த நான்கு வாழ்க்கை முறைகளும் கடைப்பிடிப்பதன் வழியாக முழுமையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்..

வாழ்க வளமுடன்.