கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூன், 2020

கவனித்துப் பாருங்கள்

  தகவமைப்பு.  

 

  
வறண்ட வெறுமையான 
ஊளையிடும்
பாலை நிலத்தின்
அவாந்தர வெளியில்
அழகியதொரு சப்பாத்திக்கள்ளி  

சூழல் குறித்து 
முறுமுறுக்காது 
தன்னைத்தான் பொருத்தி
நீர் ஆவியாகாவண்ணம் 
கிளைகள் நீக்கி 
இலைகள் துறந்து  
தண்டில் பாத்திகட்டிப்
பனி நீரை 
வேருக்குப் பாய்ச்சி 
பாதுகாக்க
முட்களைச் சூடி 
வறண்ட நிலம் மகிழக்
கடுவெளி களிக்கப் 
புஷ்பம் பூத்துச் சிரிக்கிறது

வான வீதியில்
உல்லாசமாக
உலாவருகின்றன
சில பறவைகள்

அவை
விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை

அவைகளுக்குக்
களஞ்சியமுமில்லை
பண்டகசாலையுமில்லை
அதற்காக அவைக்
கவலைப்படுவதுமில்லை

கூடித் திட்டமிட்டு 
சிறகை விரித்துச்
சோர்வின்றி பறந்து 
உணவைத் தேடிக் 
கண்டடைந்து 
களிக்கின்றன

அடர் வனத்தில்
உயர்ந்ததொரு மரம்

அவை
நூல் திரிப்பதுமில்லை
ஆடை நெய்வதுமில்லை

எனினும்
மகிமை பொருந்திய
மன்னர் அணியும்
மெல்லிய ஆடையினும்
மெலிதான மலரை
அணிந்து அழகுடன்
மிளிர்ந்து, கவர்ந்து
சந்ததியைக் கடத்துகிறது

இயற்கையோடு 
இயைந்தவை
சுயமதிப்பை,  
இருப்பை, 
மகிழ்ச்சியை 
எச் சூழலிலும் இழப்பதில்லை

அவை 
தம்மைத்தாமே
தகவமைக்கின்றன. 
மறைகின்றன.
மறுரூபமாகின்றன.

அதிகாலைப் பனித்துளி 
புல்லின் முனையில் பூ
காற்றில் தொலைந்த மேகம்
வெட்டி மறையும் மின்னல்

தோற்றமும் மறைவும்
நீர்க்குமிழி எனினும் 
தத்தம் கடமையை 
நிறுத்துவதில்லை

வாழ்வின் இருப்பை 
எது இறுதி செய்கின்றன?  
உண்மையை யார் உணர்வார்?

தகவமைப்பு 
உயிர்களின் வாழ்வியல் 
ஓர் புரிபடா சுழற்சி 

தேடல்
கூர்ந்து கவனித்தல்  
இயல்பைப் புரிதல்
தெரிந்து கொள்ளுதல் 
சோர்வின்றி உழைத்தல் 
அடைதல் 
அனுபவித்தல்
உண்மை உணர்தல்
பயணித்தல் அன்றி விலகல்
தன் வினை உணர்தல் 
சீர் செய்தல் 
மீண்டும் ஓர் புதிய தேடல்

புகையாக 
வாழ்க்கை கரைகிறது 
வாசனைகள் மட்டும் 
எச்சமாகக்
காற்றோடு காற்றில் 
கண்ணுக்குப் புலப்படா
நுண் துகளாக

வாழ்வுக்கேற்ற வாசனை 
வாசத்துக்கேற்ற மீள் வாழ்வு

தகவமைப்பு : மாறுகின்ற சூழலுக்கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்கின்ற திறன்.  

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

புதன், 13 மே, 2020

நிழல் யுத்தம்

ஓயாத போர்.



காரிருளிலிருந்து
ஒளி உதித்த போது
நிழலும் உடனிருந்தது

நிழல் முன் செல்கிறது
நிழல் பின் தொடர்கிறது
நிழல் படர்கின்றது
தீப ஒளியினுள் கருஞ் சுடராக
நிழல் உள் உறைந்துள்ளது

பள்ளிப் பருவத்தில்
நிழல் முகத்தை
மிதிக்கத் துடித்து
எட்டி எட்டி நடைபோட்டு
ஏமாந்த தருணத்தில்
நிழல் நகைத்தது

திரையினின்றும்
அருவமாக அசைந்து
எழுந்த பிம்பங்கள்
கற்பனையில் உருப்பெற்று
மாயக் கனவுகளாக விரிந்து
மனதை முடக்கிய போது
நிழல் முறுவலித்தது

அரவமற்ற மெல்லிய
இருட்டின் நிழலில்
மதி மயங்கி
மறைந்திருந்து துய்த்த
கானல் இன்பங்களில்
களி கூர்ந்தபோது
நிழல் குதுகலித்தது

உள் ஒளி உதித்து
எண்ணங்களின் மீது
வெளிச்சம் பரவி
ஆன்மாவில் உணர்வுகள்
கிளர்ந்தெழுந்து
மனக் கண்கள் விழித்ததில்
நிழல் எரிச்சலானது

வெளிச்ச கீற்று
நினைவுகளில் படர
மறைந்து திளைத்த
அனுபவங்கள்
வெட்கமாகிக் கசந்து
கண்ணீரில் கரைய
நிழல் சினமடைந்தது

மனக்கண்கள் பிரகாசித்து
மறுரூபமடைந்த இதயத்திலிருந்து
ஊற்றெடுத்த
நன்றியுணர்வின்
வெம்மை தாங்காது
வீழ்த்துவேன் எனும்
சபதத்துடன் வெட்கி
நிழல் வெளியேறியது

நிஜமும் நிழலும்
பிரிவதுமில்லை
இணைவதுமில்லை
இடைவிடா யுத்தம்
தொடர்கிறது

உணர்வு வெளிச்சத்தின்
மீது நிழலால் வீசப்படும்
மாய வலையில்
மானுடத்தின்
கண்கள்
பார்வையிழக்கின்றன
செவிகள்
கேட்க மறுக்கின்றன
உள்ளம் கள்ளமாகிறது

உணர்ந்து தெளியும் வரை
பாடம் தொடர்கிறது
கால ஓட்டத்தில்
கற்பதும் மறப்பதும்
பதிவுமாக வாழ்க்கை
கடக்கிறது

உள் ஒளி மறைந்து
காரிருள் கவ்வும்போது
பல நிழலில் கரைகிறது
சில ஒளியில் சங்கமிக்கிறது

வெளிச்சம் உதிக்கையில்
நிழலின் மரணம்
ஆசைகளின் ஈர்ப்பில்
நிழலின் ஜனனம்

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

வியாழன், 23 ஏப்ரல், 2020

உன்னோடு நீ பேசு.

காலமும் கதைகளும்



எங்கே அது புறப்பட்டதோ,
அங்கே அது திரும்ப வேண்டும்.

செயல்களின் விளைவுகளால்
ஓர் உரு மாற்றத்தைத் தேடி
அது பயணிக்கிறது.

அறிந்தோ, அறியாமலோ,
விரும்பியோ, விரும்பாமலோ
நாம் எழுதிய கதைகளில்
இருந்தே நாடகத்தின்
காட்சிகள் விரிகின்றன.

காலவெளியில்
பயணிக்கும் செயல்கள்
குறித்த நேரத்தில்
திசை திரும்பி
வளைய வருகிறது.
வளைக்க வருகிறது.

தாமதமும் அல்ல,
விரைவாகவும் அல்ல,
அது அதன் நேரத்தில்
சரியாகவே வருகிறது.
அவை எதிரொலிகள்.

எதிர்வினை சங்கடங்கள்
சந்திக்க நேரிடும் போது
மனதை அமைதியாக்கு.

வலி  மிகும் நேரங்களில்
வருத்தத்தை ஏற்றுக்கொள்.
உண்மை உணர விரும்பினால்
உள் நோக்கி உற்றுப் பார்.

அறியாமை இருளில்,
மதி மயக்கத்தில்,
வலி உணராது வலி தந்ததும்,
வலி அறிந்தும் அலட்சியமாகப்
பயணித்த மூட வருடங்கள்
சட்டென நினைவு திரைகளில்
காலம் அல்லவோ
மறு ஒளிபரப்பு செய்கிறது.

தேவை அது செய்யவில்லை,
செய்தவை பல தேவையற்றது.

அன்று காலம் பொறுமையுடன்
அமைதி காத்தது.

இன்று,
கற்றுக் கொள்வாயா?
கடந்து செல்வாயா?
எதைத் தெரிவு செய்வாய்?
தெரிந்து கொள்ளக்
காலமும் ஆவலுடன்
காத்திருக்கிறது.

மனித மன மாற்றங்களை
உருவாக்குவதும்,
நகைப்பதும்,
இரசிப்பதும்,
தாழ்த்தி உணர்த்துவதும்,
உயர்த்தி மகிழ்வதும்
காலத்தின் திருவிளையாடல்.

அது சுழன்று சுழன்று
ஓயாமல் படிப்பிக்கிறது.
மாற மனமிருந்தால்
அனுபவங்களும் ஆசான்.

அதுவே விழிப்பு.
அதுவே சாட்சி.
அதுவே சப்தம்.
அதுவே உள் ஒளி.

தனிமைச் சிறையில்
கர்ம சங்கிலி அறுபடுகிறது.
புதிய கதைகள் எழுத
வாசல்கள் திறக்கப்படுகிறது

மீண்டும் நடிக்கத் துவங்கும்முன்
புரிந்து கொள், 
அவைதான் எதிர்காலத்தின் நீ.

சிறந்த கதைகள்
வசீகர எழுத்துக்களால்
கோர்க்கப்படுவதில்லை.
வலிகளினால்
செதுக்கப்படுகின்றன.

மதிப்புமிகு வேடம்
அணிய விரும்பினால் :

புத்தி தெளிந்து,
தவற்றை உணர்ந்து,
மனம் வருந்தி,
பற்கள் கடிக்காது,
பொங்கி எழாது,
நியாயப்படுத்தாது,
வலியைப் பொறுத்து,
உண்மை உணர்ந்து,
பொறுமையுடனும்,
பொறுப்புடனும்,
சரியான பாதையைத்
தெரிவு செய்.

இடுக்கமான வாசல் வழிப் 
பயணம்தனை தொடர்.
அழிவின் வாசல் விசாலம்,
அதில் பயணிப்பவர் அநேகர்.

கரடு முரடான பாதைகளில்
பயணிக்க விழிப்புணர்வு தேவை.
நீரின் போக்கில் நீந்துவது எளிது.

விட்டு விட வேண்டியது எது?,
தொட்டுத் தொடர வேண்டியது எது?
என அறிவதை விட
வாழ்வின் மேன்மை தான் என்ன?

வந்த வண்ணமே செல்வதற்கு 
எதற்கு இங்கு வர வேண்டும்?

இச்சைக் குதிரைகள்
ஐந்தின் கடிவாளத்தை
மனதிலிருந்து வேரறுத்து
புத்தியின் வசம் ஒப்படை

ஒழுங்கு படுத்து.
கற்றுக் கொள்.
கடைப்பிடி.
நிலைத்திரு.

இன்று நீ
தனித்திருந்து சீர் செய்வது
நாளைய சிறப்புப் பக்கங்கள் .

நீ விரும்பும்
உனது கனவுகளை
உறங்காது சிந்தையில் எழுது.

எழுதத் தவறியவர்களும்,
இயலாத சோம்பேறிகளும்
பிறரது கதையின்
துணை கதாபாத்திரங்களாக
மட்டுமே வலம் வர முடியும்.

துயரத்தில் உதித்த
கண்ணீர் நதியின்
நினைவுத் தடங்கள்
வறண்டு வற்றி
தழும்புகளாக உருமாறட்டும்.

கொஞ்சம் பொறு
காலம் உருமாறும்!
காரிருள் கடந்து
வெளிச்சக் கீற்றுகள்
உதிக்கும்.

பனிபடர்ந்த
பச்சை புல்வெளியில்
பாதம் பதிய
வண்ணக் கனவுகளுடன்
உலாவரும்
சுகானுபவம்
மீண்டும் மலரும்.

அந்தத் தருணத்தில்
தழும்புகளைத் தடவிப்
பார்க்க மட்டும்
ஒருபோதும்
மறந்து விடாதே.

ஏனெனில் தோல்விகளை விட
வெற்றிகளே வெறி கொள்ள
வைத்து வீழ்த்திவிடும்.

எச்சரிக்கையுடன்
விழித்திரு.

புத்தி எழுது முயற்சிக்கும்
கதைகளை விட
மனது விரும்பும் கதைகள்
அவ்வளவு எளிதாக
அழிவதில்லை.

அழுது எழுது,
அழியாதவாறு
அழுத்தமாக எழுது.



Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations towards spread the knowledge.

திங்கள், 11 நவம்பர், 2019

அது - நீ

நீயே அதுவாக இருக்கிறாய். 




சுத்தமான கண்ணாடியின் முன் நின்றால் 
தெரியும் பிம்பம் போல
மனம் தூய்மையெனில் அது துலங்கும், 
புத்தி உறுதியெனில்
அறியாமையும் அகலும். 

கனவில் தோன்றும்
காட்சிகள் போல, 
உறக்கத்தில் அது உதிக்கும், 
விழிக்கும்போதோ விலகி மறையும். 
அந்த விசித்திர வானில். 

நீரில் பார்க்கும் 
பிரதி பிம்பம் போலத் 
தெளிந்தால் அது காட்சிதரும், 
கலங்கினால் அதைக் காணவியலாது. 
கந்தர்வ உலகமது. 

ஒளியும் நிழலுமாக 
உருவத்தில் அது விரிந்து, 
அருவத்தில் மறைந்து, 
பொருளென அறிந்தால் அறியாதது. 
விஷயமாக அறியாததால் அறிந்தது. 

*******   *******   *******   *******   *******


உபநிடதம் - கடோபநிஷத், இரண்டாவது அத்தியாயம் மூன்றாவது வல்லி ஐந்தாவது பாடலில், ஆன்மாவை பூவுலகம், பித்ரு, கந்தர்வ, ப்ரஹ்ம உலகில் எவ்விதம் அறிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆன்மாவைத் தெளிவாக உணரும் வாய்ப்பு இவ்வுலகில் மட்டுமே. ஆகவே இவ்வாழ்க்கையை ஞானத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே மையக் கருத்து.

கண்ணாடி சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகத் தெரியும். மனம் தூய்மையாக இருந்தால் ஆன்மாவைத் தெளிவாக அறியமுடியும். 

நீயே அதுவாக இருக்கிறாய் (தத் த்வம் அஸி) என்பது நான்கு மஹா வாக்கியங்களில் ஒன்று.

(படம்  இணையத்திலிருந்து) 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

மதிப்பீடு எளிதல்ல



(Our College batchmates reunion at Mangarai near Coimbatore - 13th Jan ' 2018)


"சிந்து" வகுப்பில் எப்போதும் முதலிடம்,
படு சுட்டி, கற்பூரம். 
இன்று மகிழ்ச்சியான இல்லத்தரசி! 

கடைசி பெஞ்ச் "கதிர்", 
நூறு குடும்பங்களை வாழ வைக்கும்
தொழில் முனைவர்!  

வளாகத்தில் அலங்காரமாகச்
செல்லக் குழந்தையாக
வளைய வளைய வலம் வந்த "வர்ஷினி",
கண்டிப்பு மிக்க கடுகடு ஆசிரியை!  

பெரும்பாலும் கண்டு கொள்ளாது 
அனைவராலும்
புறக்கணிக்கப்பட்ட "ஜோ",
நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்!  

கணிதத்தில் தேர்ச்சியடையாத "கார்த்தி"'
வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளர்!  

வகுப்புக்கு வெளியே 
வாடிக்கையாக நிறுத்தப்படும் "ரவி",
எல்லையில் பணியாற்றும்
மதிப்புமிக்க இராணுவ அதிகாரி!  

பல வருடங்கள் கழித்து 
நாங்கள் மீண்டும் சந்தித்த
அந்த மகிழ்ச்சி நிறைந்த இனிய நன்னாள்
எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் : 

வாழ்க்கை தனது 
ஒவ்வொரு அடுக்குகளிலும்
மனிதர்களை மாற்றித்தகவமைக்கிறது என்பதே!  

அதிர்ச்சியும் ஆச்சரியத்திலும்
உறைந்து, அமைதியாக
இருந்த எனது காதோரத்தில்
இயற்கை மெலிதாக கிசுகிசுத்தது :

"ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தை வைத்து 
அதன் உள்ளடக்கத்தை ஒரு போதும்
மதிப்பீடு செய்து விடாதே." 

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் 
ஒரு வெற்றிக்கதையை
இயற்கை பொதிந்து வைத்திருக்கிறது.

*******   *******   ******* *******   *******


* Written Inspired by a English Poem shared by my friend.

வியாழன், 19 செப்டம்பர், 2019

கடலோடு உறவாடி

நானும் எனது கடலும்.., 



மசூதியை ஒட்டிச் செல்லும் அந்தச் சாலை
வளைந்து நெளிந்து செல்லும் 

கருநாகம் போல் படுத்துக் கிடக்கின்றது.
கார்கூந்தல் எனச் சொல்ல
ஏனோ இப்போது மனமில்லை


சாலைக்கு அப்புறம் சலசலக்கும் கடல்.

பெரும்பாலும் அந்தச் சாலை
ஆள் அரவமற்று 
அமைதியும் 
கடலின் சலசலப்புமாக இருக்கும்.

கடலுக்கும் எனக்குமான உறவு
ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம்


கடலுக்கு எதையும் சொல்லிப்
புரியவைக்கத் தேவையில்லை
ஆகவே அது ஆதித் தாயாக
இருந்திருக்கக்கூடும்


ஒவ்வொரு நாளும் அதற்கு முன்பாக 
ஆவலுடன் அமர்ந்திருக்க ஓடுவேன்

கடல் காத்திருந்ததா எனத் தெரியாது
ஆனால் எதிர்பார்த்திருக்கும் 
என நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன்

மகிழ்ச்சி, கண்ணீர்
துள்ளல், ஆற்றாமை
ஆசை, இழப்பு
எதிர்பார்ப்பு, தவிப்பு
உற்சாகம், ஏக்கம்
காதல், மோதல்
என எனது உணர்வுகள் எதுவாயினும்
கடல் முன்பாக அமர்ந்தால்
பிரமாண்டத்தின்
முன்பாக நான் ஓர் சிறு துளி


ஆக அதற்கு என் அத்துணை 
உணர்வுகளும் அத்துப்படி
எனினும் கடல் உணர்வுகளை
அலைகள் மூலமே அறியமுடியும்
இங்கும் அங்குமாக மாறி மாறி
பொங்கிச் சலசலக்கும்

உண்மையில் கடலைப் பற்றி
எனக்கு அவ்வளவாய் 
தெரியாது
தெரிந்து கொள்ள முயன்றாலும் முடியாது 
அதுவாகவே எதுவும் சொல்லாத வரை

எனது கடலின் அழகு அதன் நிறத்தில்
பச்சோந்தி போல

ஒவ்வொரு மணிக்கும் 
ஒவ்வொரு நிறமாக மாறும்
அதிகாலை செந்நிற சாம்பல்
பின் வெளிர் நிற பச்சை 
மதியம் அடர்த்தியான நீலம் 
அதைத் தொடர்ந்து கரும் பச்சை
மாலையில் தங்க மஞ்சள்
செவ்வான சூரியனை விழுங்கி அடர் கறுப்பாக 
என தினுசு தினுசாக மாறி மாறி
புரிந்து கொள்ளவே இயலாததாக

எனினும் நீலம் எனக்குப் பிடிக்கும்
அதற்கும் கூட அப்படியே இருக்கலாம் 

ஏனெனில் அது பெரும்பாலும் 
நீலமாகவே இருக்கிறது

இன்று வானம் செவ்வானமாகத்
தங்க நிறத்தில் தகதகக்கிறது


பொன்னிற மண்ணில் 
சின்னஞ்சிறு குழந்தைகள் 
அலையோடும் மணலோடும் 
ஓடி விளையாடிக் களித்து 
வெடித்துச் சிரிக்கின்றனர்

கடற்கரை மணலில் நண்டுகள் 
அதன் வளைப் பொந்துகளுக்கும்
கடலுக்கும் இடையில் சர சர என 

அங்கும் இங்குமாக ஓடி ஓடி உறவாடுகின்றன

மணற்பரப்பு நெடுக 
இதயங்கள் வரையப்பட்டு 
அலைகள் அழிப்பதற்காகக் 
காத்து நிற்கின்றன

இன்றும் கடலுக்கு முன்பாக
பிரமாண்டத்தின் 
முன்பாக 
ஒரு சிறு துளியாக நான்

உடை நனையாது அதைச் சரி செய்து
பாதம் மட்டும் அலை தொடும்படி
எச்சரிக்கையாக அமர்ந்தேன்


பாதம் தொட்ட குளிர்ந்த நீரினால்
மனம் பரவசமானது


பரவச மயக்கத்தில் மனம் மயங்க
இன்னும் கொஞ்சம் முன் நகர்ந்தேன்

பாதம் தொட்டுத் தழுவி வழுவி
நுழைந்து புகுந்த நீர்
மனதில் உணர்வுகளோடும்
உடலோடும் உறவாடியது


கடலையேமெய் மறந்து பார்த்தேன்
மாறி மாறி அலைகள் மனதில்

சிறு குழந்தையாகக்
கற்பனை சிறகடித்தது


நானும் கடலும் சிறு பிள்ளைகளானோம்
காகிதக் கப்பல்களில் பயணித்தோம்

பாடல்கள் பாடினோம்
கதைகள் பகிர்ந்தோம்
கவிதைகள் செய்தோம்
பகடி செய்தோம் சிரித்தோம் 
பின்பு சிரித்ததை நினைத்து அழுதோம்
அழுததும் அழகானது

கடலின் ஓர் சிறு துளி தெறித்து
என் நெற்றியின் மத்தியில்
சிறு பிறை வரைந்து அழகு பார்த்தது


சீறிய அலை சிதறடித்த நீர்
கண்ணத்தில் அழுத்தமாகப்
பதிந்து மெல்ல வழிந்து
உதடுகளை உப்பாக நனைத்தது


கடலின் பேரலை சீற்றமா
அல்லது
மசூதியின் தொழுகைப் பாடலா
எது எனத் தெரியவில்லை


சிந்தனை கலைந்தது
திடுக்கிட்டுப் பார்த்தால் எதிரில் பேரலை


வெடுக்கெனப் பின்வாங்கி
வாரிச் சுருட்டி எழுந்துப் பின் வாங்கினேன்.


விளைவுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளாது
அடைய ஆசைப்பட்டு அலைவதும்

அதை அடைந்ததும் அலட்சியப் படுத்துவது
அல்லது பதறி விலகுவதும்
மனித இயல்பாக இருக்கிறது


கடல் எப்போதும் போல் தனது 
உவர்ப்பு மிகு அலைகளைச் 
சிறிதும் பெரிதுமாக மாறி மாறி எழுப்பி
இயல்பாகச் சலசலக்கிறது








சனி, 10 ஆகஸ்ட், 2019

அவர்கள் அப்படித்தான்





அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

அது ஆச்சரியம்தான்

அவர்கள் அப்படி இருக்கும்படி 
படைக்கப்பட்டார்களா 
எனத் தெரியவில்லை.

ஆனால் அப்படி வாழும்படி விரும்பி
அதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

அவர்கள் அலமாரிகளில் 
துணிகளை விட 
வித விதமான முகமூடிகளே 
தொங்கிக் கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் 
ஏற்ற விதமாக அணிகிறார்கள்.

தங்களுக்கானது எது என
உறுதிப்படுத்திக் கொண்டு 
சிரிக்கிறார்கள்

பிறரை ஏமாற்ற அழுகிறார்கள்

பிடிக்காதவர்களைச் 
சிறைப்படுத்தி வசை பாட 
வஞ்சகமாக வழி தேடுகிறார்கள்

முன்னேறிச் சென்றால்
இழிவு படுத்தி
மகிழ்கிறார்கள்.

அவர்கள் நாவின் கீழ் 
விரியன் பாம்பின் 
விஷம் இருக்கிறது.

ஆனாலும் 
புனிதர்களைப் போலப்
புன்னகைக்கிறார்கள்.

அவர்கள் எங்கும் 
நிறைந்திருக்கிறார்கள்

வலது புறம் 
இடது புறம் 
முன்பாக 
பின்பாக 

பணிபுரியும் இடத்தில் !

தவிர்த்து விலகி
வாழ இயலாத உறவுகளாக!

துரதிருஷ்டமாகச்
சிலருக்கு இல்லத்திலும்!

முகத்துக்கு முன்பாக 
சிரித்துப் புகழ்ந்து
பின்புறமாக இகழ்ந்து
தூற்றித் திரிகின்றனர்.

எப்படி இவர்களை 
எதிர் கொள்வது?

ஓடி ஒளிய முடியாது

ஒதுங்கிப் பதுங்கவும் 
வழியில்லை

தவறு செய்பவன் 
நன்மை செய்பவனைக் 
குற்றம் சாட்டி 
காயப் படுத்துகிறான்.

வாழ்க்கை இவ்விதம்
முரண்களின் வழியாகவே
பொறுமையையும் 
தைரியத்தையும்
நம்பிக்கையும் 
வைராக்கியத்தையும்
படிப்பிக்கிறது.

மகிழ்ச்சி அல்ல
துயரங்களே 
வாழ்வின் அதி உன்னத 
பாடங்களைப் புகட்டுகிறது.

வார்த்தைகளால் 
காயப்படுத்தி 
மனதை இரணமாக்குபவர்க்கு
மகிழ்ச்சியைப் பரிசளியுங்கள்

அழ வைக்க 
விரும்புபவர்கள் 
முன்பு புன்னகைத்து 
நன்றி சொல்லுங்கள்

சிறுமைப் படுத்துபவரை 
அன்புடன் நேசியுங்கள்.

மூலையில் முடக்கி 
சிறை வைப்பவர்க்கு
முன்பாக சிறகை விரித்துப்
பறந்து செல்லுங்கள்

இகழ்வோர் முன்பாக
வாழ்ந்து காட்டுவதே
மிகச் சிறந்த தண்டனை

தெரிந்தே தவறு செய்பவரை 
ஒரு போதும் திருத்த
முற்படாதிருங்கள்.

அப்படியென்றால் 
துயரங்களுக்கு 
விடிவே இல்லையா?

கொஞ்சம் அமைதி!

ஒவ்வொரு மலரும் 
அதன் நறுமணத்தால் 
உணரப்படுகிறது

நீங்கள் நீங்களாகவே
இருங்கள்.

அவர்கள் அவர்களாகவே 
இருக்கட்டும்

அவர்களை மாற்றுவது
உங்களது பணி அல்ல.

பிறர்க்கின்னா 
முற்பகல் செய்யின் 
தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

நாம் விரும்பும்
பிற்பகல்  அல்ல

அவர்களுக்கெனக்
குறிக்கப்பட்ட பிற்பகல்.

அது தாமதம் போல் 
தோன்றினாலும் 
நிச்சயம் வரும்
ஒரு பொழுதில்

உங்களுக்கு
அதிர்ஷ்டம் இருந்தால் 
வாழும்போதே
பார்க்கலாம்.

அவர்கள் படும்
துயரைத்தைக் கண்டு
சந்தோசப்பட்டு
களிகூறுவதற்கு அல்ல

ஒரு தீய ஆன்மா
நன்மையாக 
உருமாறுவதைத் 
தரிசிக்க மட்டுமே.

பஞ்ச பூதங்களும் 
புன்னகையோடும்
ஆவலோடும்
காத்துக் கொண்டு 
நிற்கின்றன.


ஒளிப்படம் நன்றியுடன் : ராமலக்ஷ்மி ( http://tamilamudam.blogspot.com )

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஒற்றை மரம்

ஒற்றை மரம்.






அந்தி சாயும் நேரம் 
நீண்ட நடை

வழியிலிருந்தது
எனது ஒற்றை மரம்

பாலை நிலத்திலும் 
சளைக்காது போராடிக்
கிளை பரப்பி நிற்கிறது

அந்த மரத்தோடு 
நான் பேசுவேன்
அது என்னுடன் 
பேசியது இல்லை.

ஒருவேளை பேசியிருக்கக் கூடும்.
எனக்குப் புரிந்திருக்காது.

அதை நேசத்துடன் தொட்டுச்  
சுற்றும் முற்றும் பார்த்து 
மென்மையாகத் தடவி
அவசர அவசரமாக 
முத்தமிட்டு 
வேகமாகக் கடந்து 
அருகிலிருந்த 
இருக்கையில் 
அமர்ந்தேன்

மனதில் 
குறுகுறுப்பு 
தொற்றிக் கொள்ளவே
மெல்லத் திரும்பிப் பார்த்தேன்

அதன் இலைகள்  
மெலிதாக அசைந்தது.

அது என்னைப்  
பார்த்து மெலிதாக
புன்முறுவலித்தது 
போலத் தோன்றியது

தாயின் மடி
தந்தையின் ஆறுதல் சொல் 
மனைவியின் அரவணைப்பு 
பிள்ளைகளின் வாழ்த்து
தோழியின் உரையாடல்
தரும் அத்தனை 
மகிழ் நிறை
உணர்வுகளையும்
தருகிறது
அந்த ஒற்றை மரம்



Salalah during Khareef

மரங்கள் எனக்கு எப்போதும் உற்ற தோழர்கள். 

Salalah வில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் (2014 - 2018) வசித்தேன்.

ஸலாலா குன்றுகள் சூழ்ந்த பசுமையானதொரு பள்ளத்தாக்கு.

அங்குச் சாலையில் மற்றும் நடைபாதையின் இருபுறங்களிலும் நிறைய மரங்கள் வைத்து மிக நேர்த்தியாகப் பராமரிப்பார்கள்.

எனது தினசரி நடைப்பயிற்சி முடிந்து திரும்பும் இடத்தில் மூன்று மரங்கள் மிக நெருக்கமாக இருக்கும்.

அந்த இடத்தை அடைந்தவுடன் மனதில் தோன்றும் அமைதி அலாதியானது.





Veeranam house


அப்பா, அம்மா இருவரும் தோட்டப் பிரியர்கள். இருவரும் அரசு ஊழியர்கள். 1991 ஆம் ஆண்டு அப்பா அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு சொந்த கிராமத்திற்குத் திரும்பினார்கள்.

அப்போது இந்த இடம் கருவேல் முட்புதராக இருந்தது. இடத்துக்கு உள்ளே நுழைவதே கடினமாக இருந்தது. அத்தனை முட்புதர்களும் வெட்டி சீரமைப்பு பணி துவங்கியது.






வீடு கட்டத் துவங்கும் முன்பாகவே மரம், செடி, கொடிகள் நடத் துவங்கி விட்டனர். இன்று இந்த இடம் அழகிய சோலை.





இப்போதும் அவர்கள் வெளியூர் சென்றாலும் உடனே திரும்ப வேண்டும் எனத் துடிப்பார்கள்.

அவர்கள் கவலை எல்லாம் மரம், செடி, கொடி, கோழி...,




நடை பாதை இருபுறமும் மரம், பூஞ்செடிகள்.

நள்ளிரவிலும் விழித்திருந்து தாமிரபரணி நீர் பாய்ச்சுவார்கள். 

ஒவ்வொரு மரமும், பழச் செடிகளும், பூஞ் செடிகளும் அவர்களுக்காகவே வாழ்கின்றன. 

இப்போதும் கிராமத்திற்குச் சென்று திரும்பும் போது அத்தனைப் புத்துணர்ச்சி.

அது உயிர்ப்பு நிறைந்த இடம்.