புத்தகம்/வாசிப்பனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம்/வாசிப்பனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஏப்ரல், 2023

ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

வாழ்வு மேம்பட..,


புதிய தரிசனங்களைக் கண்டடைய, மேம்பட்ட நிலையை அடைந்திட, உதவி செய்யும் ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

1. Ikigai: வாழ்வின் நோக்கம்:

உங்கள் நோக்கம் என்ன?

''Ikigai'' எனும் ஜப்பானியச் சொல்லிற்கு, "நமது இருப்பிற்கான காரணம்" அல்லது "வாழ்க்கையில் நோக்கம்" எது; என ஆராய்ந்து பார்ப்பது என்று புரிந்து கொள்ளலாம். 

தினமும் காலையில் எழுந்தவுடன், இன்று என்ன செய்யப் போகிறோம் எனும் சரியான நோக்கத்தை அறிவது.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதைச் செய்வதில் சிறந்தவர், அதனால் இந்த உலகிற்கு என்ன பயன், அதன் வழியாக வருமானம் கிடைக்குமா என்பதன் கூட்டுச் சேர்க்கை இது.



உங்கள் ''இகிகாயை'' அடையாளம் காண்பதன் மூலம், நீங்கள் பயணிக்க வேண்டிய திசையை உங்களால் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தைக் கண்டறியவும்.
  • ஒவ்வொரு காலையிலும் நீங்கள் விழிப்பதற்கான சரியான காரணத்தை உறுதி செய்து கொள்ளவும். 
  • உங்கள் பலம், உணர்வுப்பூர்வமான ஈடுபாடு (Passion) இருக்கும் ஒரு பணியைத் தெரிவு செய்யவும்.
  • அது உலகத்தின் தேவைகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
  • அந்த பணி, வருமானத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.
  • அப்போது வாழ்க்கை அர்த்தம் அடைகிறது.

2. Shikata ga nai: மாற்ற இயலாதவை:

''Shikata ga nai'' என்பதற்கு, "அதற்கு மேல் அதை ஒன்றும் செய்ய முடியாது" அல்லது "இதற்கு எந்த மாற்று வழியும் இல்லை" என்று பொருள்.

இது நம்மால் மாற்ற முடியாத துன்பங்களை எதிர்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 

ஆனால், இது பொறுப்புகளைத் துறந்து தப்பி ஓடுவது அல்ல. 

சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்வது. 

அத்துடன், அதை ஏற்றுக் கொண்டு, அச் சூழலைக் கடந்து, முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது.

  • உங்களால் மாற்றமுடியாத மனிதர்கள், விஷயங்களை விட்டு விடுங்கள்.
  • சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 
  • அதனால் குறையொன்றுமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.
  • உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதைத் திறம்பட நிர்வகியுங்கள். 
  • உங்களால் எதைச் சிறப்பாக மாற்றி அமைக்க முடியுமோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள்.

3. Wabi-Sabi: குறைகளில் வசீகரம்:


இந்த கருத்து, முழுமை அற்றதில் உள்ள அழகியல் (beauty of imperfection), நிலையற்ற தன்மை (transience) மற்றும் இயற்கை உலகின் படைப்புகள், ஆகியவற்றை அவை இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை (attitude)  குறிப்பிடுகிறது.

இது, ஆபூரண (imperfect), முழுமையற்ற (incomplete) மற்றும் கடந்து செல்லும் நிலையற்றவற்றில்  (transience)  உள்ள அழகைக் கண்டறிவது.

வாழ்க்கையின் எளிமையான, அலங்காரமற்ற மற்றும் இயற்கையான கூறுகளை மதித்து, அவற்றைப் பாராட்ட ''வாபி-சபி'' நம்மை ஊக்குவிக்கிறது.


Wabi Sabi

  • அபூரணத்தில் அமைதியைக் கண்டறியவும்.
  • வாழ்க்கையில் எதுவுமே பரிபூரணமானதல்ல என்பதை உணருங்கள். இதில் நாம் அனைவரும் அடக்கம்.
  • எதுவும் நிலையற்றது; நிரந்தரமற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • குறையற்ற தன்மை அடைய வேண்டும் எனப் பாடுபடுவதற்குப் பதிலாக, வாழ்க்கையைத் தனித்துவமாக்கும் குறைபாடுகளில் மகிழ்ச்சியைக் காணவும்.

4. Gaman: எதிர்வினை: 


"காமன்'' என்பது கடினமான சூழ்நிலைகளிலும் கூட விட்டுக்கொடுக்காமல் வலுவாக இருப்பது. 

சகிக்க முடியாத சூழலில், அதைப் பொறுமையுடன் கண்ணியத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர் கொள்வது என்றும் புரிந்து கொள்ளலாம். 

“Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth and our freedom."  - Viktor E. Frankl. (in his book Man's Search for Meaning).

"பிறர் தூண்டுதல் மற்றும் அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை இவற்றிற்கு இடையே ஒரு சிறு கால இடைவெளி உள்ளது. அந்த நேரத்தில், நமது மிகச் சிறந்த பதிலைத் தேர்ந்தெடுப்பதுவே சக்தி. அந்தப் பதிலில் தான் நமது வளர்ச்சியும் சுதந்திரமும் இருக்கிறது." - Viktor E. Frankl.

இந்த கோட்பாடு, கஷ்டங்கள் அல்லது துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வுறாது, விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என கற்றுத் தருகிறது. 

அத்துடன் பின்னடைவை வலிமையாக எதிர் கொள்வது மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், உங்களை வழி நடத்தும் மன வலிமை மற்றும் தைரிய உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
  • கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதைக் கவனித்து, தேவையெனில் கட்டுப்படுத்தவும்.
  • நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, பொறுமையுடனும் அணுகவும்.
  • உங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்கவும்.
  • வெட்கத்தை எதிர்கொண்டாலும், உணர்ச்சிவசப்படாமல், முதிர்ச்சியையும், சுயக்கட்டுப்பாட்டையும் உங்கள் நடத்தையில் வெளிப்படுத்தவும்.
  • நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் அணுகுமுறையையும், நீங்கள் பதில் சொல்லும் விதத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
  • பொறுமை, மீண்டு எழும் உத்வேகம், புரிந்து கொள்ளும் திறன், இவற்றை எப்போதும் விட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. Oubaitori: தனித்துவம்:


இது ஒரு ஜப்பானிய பழமொழியாகும். வசந்த கால மரங்களில் பூக்கும் செர்ரி, பிளம், ஆப்ரிகாட் மற்றும் பீச் ஆகிய நான்கு மரங்களின் வேறுபட்ட தன்மையிலிருந்து உருவான கருத்தாக்கம். 

நீங்கள் ஒருபோதும் உங்களை வேறொருவருடன் ஒப்பிடக் கூடாது. அதற்கு அவசியம் இல்லை என்பது அதன் சாரம்சம். 

ஒவ்வொரு பூவும் அதன் சொந்த நேரத்தில் பூக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. அதுபோல, ஒவ்வொரு நபரும் தனது சொந்த பாதையைத் தீர்மானித்து, உத்வேகம் பெற்று,
தமது பயணத்தைத் தொடர வேண்டும்.

  • உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். 
  • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காலவரிசை மற்றும் தனித்துவமான பாதை உள்ளது.
  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை அளவிட முயல்வதை விட, உங்கள் சொந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, உங்களது பாதையில் பயணிப்பது முக்கியம்.

6. Kaizen: தொடர் மேம்பாடு:


"கைசென்"  என்றால், "தொடர்ந்து முன்னேறுதல்" என்று பொருள்.

இது தனிப்பட்ட வளர்ச்சி முதல் அலுவலக செயல்பாடுகள் வரை, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், நீங்கள் அடைய விரும்பும் நீண்ட கால முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், சிறு, சிறு மாற்றங்கள் அல்லது நிலையான மேம்பாடுகளைத் தொடர்ந்து செய்வதன் வழியாகச் சாதிக்க முடியும் எனும் கருத்தாக்கம்.
  • நீங்கள் மேம்படுத்த விரும்பும் பல பகுதிகளைக் கண்டறியவும்.
  • ஒரே நேரத்தில் அவற்றில் பெரிய மாற்றங்களை அடைய முயல்வதை விட, முக்கியமாக அடைய வேண்டிய ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் இலக்குகளைச் சிறிதாகவும், நிறைவேற்றக்கூடிய சிறு, சிறு செயல்களாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
  •  அவற்றில் தொடர்ந்து கவனமாக ஈடுபட்டு அச் செயல்களை முடியுங்கள். 
  • அடையும் வெற்றிகளைக் கொண்டாடி, அவற்றைத் தொடர் உந்துதலாகப்  பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் முன்னேற முயலுங்கள். 
  •  சிறிய மாற்றங்கள் கூட காலப்போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

7. Shu-Ha-Ri: கற்றுக்கொள் - பரிசோதித்து பார் - சிகரம் தொடு.

Shu-Ha-Ri என்பது தொழில், கல்வி மற்றும் தனிப்பட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தற்காப்புக் கலைக் கருத்தாகும். 

இது ஒரு நுட்பத்தை எவ்வாறு கற்றுக்கொள்வது, அதில் எவ்விதம் தேர்ச்சி அடைவது, அதன் உன்னத நிலையை அடையும் வழிமுறைகள் பற்றிய பல்வேறு  நிலைகளைக் குறிக்கிறது.

Shu-Ha-Ri மூலம், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கக் கூடும். அதே வேளையில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பான தேர்ச்சியும் பெறலாம். 

அந்த உன்னத ஞானத்தை அடைவதற்கு மூன்று அறிவு நிலைகள் உள்ளன. 

1.  Shu: Follow the Rules: விதிகளைப் பின்பற்றவும்:

முதல் நிலையில், ஒருவர் தனது சொந்த வழிமுறை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, பாரம்பரியத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். 
  • இது ஒரு குருவின் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படை உபதேசங்களைக் கற்றுக்கொள்ளுதல். 
  • மகா குருக்களைப் பிரதிபலிப்பதும் இந்த கட்டத்தில் நிகழ்கிறது.
2. HA: Break the Rules: விதிகளை உடைக்கவும்:

இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது துறையின் அடிப்படைகளை கற்று தேர்ச்சி பெறுவது. 

ஓர் உறுதியான அடித்தளத்தை பெற்றவுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் மேம்படுத்தும் யோசனைகளை பரிசோதித்து ஆராயத் தொடங்குவது. 
  • குருவிடமிருந்து கற்று தேர்ச்சி பெறுதல்.
  • அதை  ஒருங்கிணைத்து பயிற்சி செய்தல்.
  • மேம்படுத்த புதிய வழி முறைகளை ஆராய்தல்.
3. RiTranscend the Rules: உங்கள் சொந்த விதிகளை உருவாக்கவும்:

இறுதியாக, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், உங்களுடைய தனித்துவமான பாணி அல்லது அணுகுமுறையை உருவாக்குங்கள். 

இந்த நிலை, நீங்கள் கற்றதைப் பல வகைப்பட்ட மாணவர்களும், பயன் படுத்தும் விதமாக, புதிய யுக்தியை உருவாக்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர் தயாராக இருக்கும்போது ஆசிரியர் தோன்றுவார். மாணவர் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கும் போது ஆசிரியர் மறைந்து விடுவார். -Tao Te Ching.

படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

வெள்ளி, 11 அக்டோபர், 2019

The Alchemist




வளர் இளம் பருவத்தில் Fantasy நாவல் வாசிப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

ஆனால் நடுத்தர வயதில் ஏன் முதிர் வயதில் அத்தகைய நாவல் வாசிப்பு சுவாரஸ்யம் தருமா?

Paulo Coelho அவர்கள் எழுதிய The Alchemist அதற்குப் பதில் தருகிறது.

1988 ஆம் ஆண்டு இந்த நாவல் போர்த்துகீசிய மொழியில் வெளியிடப்பட்டது.

8.5 கோடி பிரதிகள் விற்பனை! 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு!

தமிழிலும் "ரசவாதி" எனும் தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

எனக்கு தமிழ் மொழியாக்கம் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. தமிழில் வாசிக்க வேண்டும் எனும் விருப்பம் உண்டு.

இது ஒரு மாயாஜாலக் கதை போல் தோற்றமளித்தாலும் வாசிப்பவரின் கற்பனைகளை விரியச் செய்யும் மறைபொருள் தத்துவங்களை உள்ளடக்கியது.

 Paulo Coelho

கதை மிக எளிமையானது.

Spain தேசத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆடு மேய்க்கும் Santiago என்னும் மனிதனின் கதை இது. அது மலைகள் பசும் புல்வெளி சூழ்ந்த கிராமம்.

ஒரு பாழடைந்த தேவாலயம் அவனது வசிப்பிடம். அவன் அடிக்கடி ஒரு கனவு காண்கிறான். அதில்  எகிப்தில் உள்ள பிரமிடுகளைப் பார்த்தால் மிகப் பெரிய தங்கப் புதையல் கிடைக்கும் என்பதாகக் கனவு வருகிறது.

அவனது கனவு நிச்சயம் நிறைவேறும் என நாடோடி குழுவின் பெண்ணொருத்தி  எகிப்தை நோக்கிப் பயணப்பட உற்சாகப்படுத்துகிறாள்.

"நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், இந்த பிரபஞ்சத்தின் சக்தி அத்தனையும் அதை அடைவதற்குரிய சூழலை உருவாக்கி உனக்கு உதவும்" என ஒரு அரசனும் ஊக்கப்படுத்தி இரண்டு மாணிக்கக் கற்களைப் பரிசாக அளிக்கிறான்.

Spain இலிருந்து சான்டியாகோ Morocco பயணமாகிறான். அங்கு அவனது பணம் திருடப்படுகிறது. நிர்க்கதியான நிலையில் ஒரு அலங்கார கண்ணாடி கடையில் பணியில் சேர்கிறான். பயணத்திற்கான பணத்தை சில மாதங்களில் சேர்க்கிறான். அக்கடை  உரிமையாளர் வருந்தி அவருடன் இருக்குமாறு கேட்டும், தயவாய் மறுத்து எகிப்து நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறான்.

பாலைவனம் வழியான பயணத்தில் ஒரு ஆங்கிலேயரின் நட்பு கிடைக்கிறது. அவர் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இரசவாதியைச் சந்திக்கும் வேட்கையில் பயணிப்பவர். அவர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல் தத்துவார்த்தமானது.

பாலைவனப் பயணம் நீண்ட நாளாகத் தொடர்கிறது. அங்கு இரு நாடோடி குழுக்களுக்கிடையில் போர் நடக்கிறது. அவர்கள் ஒரு பாலைவனச்சோலையில் தங்குகின்றனர். அங்கு ஒரு நாடோடி குழுவின் தலைவர் மகள் ஃபாத்திமாவுக்கும், சான்டியாகோவுக்கும் காதல் மலர்கிறது.

சான்டியாகோ வின் எச்சரிப்பால் மாற்று இனக் குழுவின் யுத்தத்திலிருந்து பாலைவனச்சோலை காப்பாற்றப்படுகிறது. அந்த நாடோடிக் குழுவின் ஆலோசகராக சான்டியாகோ நியமிக்கப்படுகிறான்.

நிம்மதியான சுகவாழ்வு, அழகிய காதலி என அமைந்தாலும் தனது கனவை நிறைவேற்ற மீண்டும் பயணத்தைத் தொடரப் போவதாகக் கூறுகிறான்.

அதுதான் பாலைவனப் பெண்களின் காத்திருக்கும் கனவு வாழ்க்கை எனக் கூறும் ஃபாத்திமா, அவனது மீள் வருகைக்காகக் காத்திருப்பதாகக் கண்ணீரோடு கூறுகிறாள்.

அந்த தொடர் பயணத்தில் இரசவாதி இவனுக்கு எதிர்ப்படுகிறார். இவனுக்கு எகிப்து பிரமிடுகளை நோக்கிப் பயணப்பட உதவுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடல் அற்புதமானது.

இறுதியில் அவன் புதையலை கண்டடைந்தானா? எது உண்மையான புதையல்? அது எங்கிருந்தது?  என்பதை அழகாகச் சொல்லியிருப்பார் Paulo.

இந்த கதை எளிமையாக தோற்றமளித்தாலும் வாக்கியங்களுக்கிடையில் எழுதப்படாமல் மறைந்திருக்கும் மறைபொருளை கண்டறிவதுதான் சுவாரஸ்யம். 



ஒவ்வொருவருக்கும் ஒரு அழகிய கனவு உண்டு.

ஆனால் பயணத்தின் நடுவில் கிடைக்கும் அற்ப சுகத்தில் அல்லது கடும் போராட்டத்தில் கனவைத் துறந்து அங்கேயே பலர் தரித்து விடுகின்றனர்.

ஆனால் இதயத்தின் குரலுக்கு மட்டும் செவி சாய்த்து இழப்பு, காதல், சுகவாழ்வு, உயிர் போராட்டம் எதுவரினும் மயங்காது, தயங்காது, போராடி முன்னேறுபவருக்குப் பிரபஞ்சமே வந்து வழி அமைத்துக் கொடுக்கும்.

மனிதாபிமானம், அன்பு, குழந்தை மனம், தூய்மை மட்டும் இருந்தால் போதும். கனவு மெய்ப்படும்.

கனவை அடைய ஆசைப்படுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு Fantasy நாவல் இது.

சனி, 18 ஆகஸ்ட், 2018

அகந்தை செய்யும் மாயம்.

🌺 அகந்தை செய்யும் மாயம். 



(Excerpts from the book of  "Cutting through Spiritual Materialism".)
by Chogyam Trungpa.

The problem is that ego can convert anything to its own use, even spirituality.


▪ நாம் எதிர்கொள்ளும் மனதின் எரிச்சல்களைத் தவிர்க்கவும், தன்னை பாதுகாப்பாகத்  வைத்துக் கொள்வதும் அகந்தையின் இயல்பான தன்மையாக இருக்கிறது.

▪ அகந்தையின் ஆளுகையால் மனம் புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கப்படுகிறது.

▪ அகந்தை தன் அடையாளத்தை இழக்க நேரிடும் எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை.

▪ ‘சமயம்’ என்பதன் மூலம் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ளலாம் என்று அகந்தை நினைப்பதால், அஃது அந்த வழியில்  பயணிக்கிறது.

▪ ஆன்மிகத் தேடல் என்பதை வீரதீரமான செயல்களை செய்வதன் வழியாகவே நிறைவேற்ற அகந்தை விரும்புகிறது.

▪ நமது தனித்துவத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கான  முயற்சிகளை செய்யவே மனதில் மறைந்திருக்கும் அகந்தை இடைவிடாமல் விழிப்புடன் போராடுகிறது.

▪ நாம் இதன்மூலம்  அகந்தை ஆன்மாவை விட்டு வெளியேறும் அனைத்து முயற்சிகளையும்  கட்டுப்படுத்துகிறோம்.

▪ இந்த மாதிரியான செயல்கள் நமக்கு ஆன்மிகப் பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒருவிதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். ஆனால், உண்மையில் அப்போதும் நாம் போலியான நாமாக மட்டுமே இருக்கிறோம்.

▪ வாழ்க்கையின் யதார்த்தங்களை சந்திக்க நாம் பயப்படுகிறோம். எனவே அதிலிருந்து தப்பிப்பதற்காக அவற்றைக் கருத்தாக்கங்களாக வகைப்படுத்தவும், எளிதில் புரியாத பாசாங்குகளாகவும் மாற்றிடவும் அகந்தை விழைகிறது.

▪ நாம் வாழ்க்கையின் சூழ்நிலைகளை அதன் போக்கில் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அதை ஆன்மிகமாகவோ மறைபொருளாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை.

🔹உண்மையில் ஆன்மிகம் என்பது நமது நடத்தை, விழிப்பைக் கையாளும் அகந்தையின்  நிலைகளிலிருந்து விலகியிருப்பதே ஆகும்.

🔸இயல்பாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே ஆன்மீகம்.

🔹உண்மையான ஆன்மிகப் பயணத்தில் பயணிக்கும்போது நமது பாசாங்குத்தனத்தைப் பார்த்து நம்மால் சிரிக்கமுடியும். ஆனால், போலியாக அகந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது நகைச்சுவை உணர்வை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள்.

🔸 உண்மையான ஆன்மிகம் மிகவும் சாதாரணமானதும் கடினமானதுமாகும்.
அதில் நமது நம்பிக்கைகளை ஒப்படைத்துவிட்டு ஏமாற்றங்களுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்வது அறிவின் அடையாளமாகும். ஏனென்றால், அது நமது அகந்தை, கனவுகளின் இருப்பை நிராகரிக்கிறது.


(என். கௌரி அவர்கள் இந்து நாளிதழ் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

வெள்ளி, 22 ஜூன், 2018

ஒரு நேரத்தில் ஒரு செயல்

🌸 ஒரு நேரத்தில் ஒரு செயல்.

Thich Nhat Hanh



(இந்து நாளிதழ் (22-06-2018)  என். கௌரி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சாரம்)

Thich Nhat Hanh வியட்நாமில்  வாழ்ந்த பவுத்த சமய துறவி.

இவரின் மிகச் சிறந்த வழி காட்டும் நூல்:
‘The Miracle of Mindfulness: An Introduction to the Practice of Meditation’ என்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தில் அன்றாட வாழ்க்கையில் நமது எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறார்.

🔹 தற்கண உணர்வு:

(நிகழ்காலத்தில் வாழ்தல் - Living at the moment).

மனிதர்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு தற்கண உணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படவில்லை.

தற்கண உணர்வே இல்லாமல் பொறுமையின்மை, கோபம் போன்றவற்றுடன் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு நேரத்தில் ஒரே ஒரு செயலை மட்டும் செய்வதன் மூலம் தற்கண உணர்வைக் கைக்கொள்ள முடியும்.

இதன் வழியாக அமைதியை உடனடியாகக் கண்டடைய முடியும்.

🔸 தற்கண உணர்வை அடையும் வழிகள்.


தற்கண உணர்வோடு வாழ்வதற்கு எதிராக இருப்பது எது என்றால் மனதில் எழும் நிலையற்ற தன்மையும், மறதியும்.

நம் எண்ணங்கள் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். 

இந்த அலைபாய்ச்சல் நமது சிந்தனையை தடம் புரள செய்யும்.
 
இப்படி மாறி மாறி சிந்தனையை சிதற விடாமல் தற்கண உணர்வைத் தக்கவைப்பதற்கான சிறந்த வழிகள்

▪ மூச்சுப் பயிற்சி

▪ சுய கண்காணிப்பு

▪ புன்னகை

🔹 மூச்சுப் பயிற்சி:


சுவாசத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால், நம் உடல்களையும் மனங்களையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாக அர்த்தம்.

சுவாசத்தின் மீது கவனத்தைத் திருப்பும்போதே மன அலைச்சல் இருந்து படிப்படியாக விடுபட்டுவிட முடியும்.

மூச்சுப் பயிற்சியைச் சரியாக மேற்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும்.

எண்ணங்கள் தலையில் கூட்டம் கூட்டமாகத் தோன்றிக் கொந்தளிக்கும்போது, உடலுக்குக் கவனத்தைத் திருப்பி பிரக்ஞையுடன் சுவாசத்தை மேற்கொண்டால், மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் ஏற்படுவதை உணர முடியும்.

🔸 சுய கண்காணிப்பு:


விழிப்புணர்வு என்பது தியானப் பயிற்சியின்போது மட்டும் இருப்பதில்லை. அது இருபத்துநான்கு மணிநேரமும் நம்மிடம் இருப்பது.

எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும் நமக்குத் தற்கண உணர்வு இருக்க வேண்டும்.

உங்களது எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு நீங்களே அமைதியாக விளக்க வேண்டும்.

உதாரணமாக, “நான் இந்தப் பாதையின் வழியாக என் கிராமத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லும்போது, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியின் அற்புதத்தையும் உங்களால் பாராட்ட முடியும்.

🔹 புன்னகை


காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே புன்னகையுடன் விழிப்பது தற்கண உணர்வை அடைவதற்கான சுவாரசியமான வழி.

இந்தப் புன்னகையை நாள் முழுவதும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

கோபமாக இருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இசை கேட்கும் மன நிலையில் இருந்தாலும் சரி,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் புன்னகையுங்கள்.

இப்படிப் புன்னகை புரிவதன் மூலம் உங்கள் துக்க அல்லது சந்தோஷ உணர்வுகளில் நீங்கள் கரைந்து விடாமல் உங்களது தற்கணத்தில்  மனதை இருத்த உதவும்.

விழிப்புணர்வுடன் ஒரு நாள்:


ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தற்கண உணர்வைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் நாட் ஹான்.

அந்த நாளில் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது என எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலைப் பொறுமையாகவும் விருப்பத்துடனும் அனுபவித்தும் செய்யச் சொல்கிறார் அவர்.

வாரத்தில் ஒரு நாள் இந்தத் தற்கண உணர்வுப் பயிற்சியை மேற்கொண்டால் அது வாரம் முழுவதும் பெரும் பயனைத் தரும் என்கிறார் அவர்.

♦ இக்கணமே சிறந்தது (டால்ஸ்டாயின் மூன்று முத்தான சிந்தனைகள்)

இந்தப் புத்தகத்தில், டால்ஸ்டாய் சிந்தனையை  Thich  Nhat Hanh மேற்கோள் காட்டுகிறார்.

ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும்:


  • எது சிறந்த நேரம்? 
  • ஒரு பணியை இணைந்து மேற்கொள்வதற்கான முக்கியமான நபர்கள் யார்?
  • எப்போதுமே செய்ய வேண்டிய முக்கியமான பணி எது?


▪ மிகச் சிறந்த நேரம் என்பது இக்கணம்தான். 

▪ மிக முக்கியமான நபர் என்பவர் எப்போதும் உங்களுடன் இருப்பவர்தான். 

▪ மிக முக்கியமான பணி என்பது உங்களுடன் சேர்ந்து பயணிப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இப்போதும் நாம் இருக்கும் நிலையில், நம் அருகிலிருப்பவர்களுக்கு எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்வதே சரியான செயல்.

நமக்கு அருகிலிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்யாமல் நம்மால் உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியாது.

திங்கள், 25 செப்டம்பர், 2017

ஒரு அழகிய மரண வாக்குமூலம்.

ஒரு அழகிய மரண வாக்குமூலம்.


Tuesdays with Morrie : an old man, a young man and life's great lesson By Mitch Albom.


வாசிப்பும் - சுவாசிப்பும்.


மனதைத் தொடும் ஒரு புத்தகத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்போது அவை நம் நம்பிக்கையில் மாற்றங்களை உருவாக்குகின்றன. 

அதின் தொடர்ச்சியாக நம் வாழ்வில் எடுக்கும் தீர்மானங்கள், தெரிந்தெடுப்பு இவற்றை முடிவு செய்வதில் இவைப் பெரும் தாக்கத்தை நிகழ்த்துகிறது.

அன்பை, மனிதநேயத்தை, உறவுகளைச் செழுமைப்படுத்த, புத்தகங்கள் கற்றுத் தருகின்றன. 

இயற்கையை நேசிக்க, பாதுகாக்க, சக உயிரினம் வாழ்வதற்கு உதவிட எனப் பலவகைகளில் நல்ல கருத்துகள் புத்தகங்கள் வாயிலாக மனதினில் விதைக்கப்படுகின்றன.

அதேவேளையில் வெறுப்பு, துவேஷம், பிரிவினை கருத்துக்கள் உமிழ்கின்ற பல நூல்கள் அரசியல், மத, இன, சாதீய அதிகாரவெறிப் பீடித்த குழுக்களால், சுயநலவாதிகளால் பரப்பப்படுகின்றது.

சிறந்த புத்தகங்கள் உங்கள் கரங்களுக்கு வருவது ஒரு கொடுப்பினை. ஆசீர்வாதம். 


எது சிறந்த புத்தகம்? 


சிறந்ததொருப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன், அஃது உங்கள் உணர்வுகளில் ஏக்கத்தை ஏற்படுத்தும். உணர்வுகளில் அன்பை, கருணையை மேலோங்கிடச்செய்யும். 

நல் செயல்களைச் செய்யத் தூண்டும். நம் வாழ்வின் குறைகள், தவறுகளைச் சுட்டிக்காட்டி உணர்த்தும். கலாச்சாரம், பண்பாடு, மூத்தோர் அறிவுரைகள் இவற்றின் உண்மையானப் பொருள் உணர உந்துதல் அளிக்கும்.

அதைவிட மேலும் சிறந்த புத்தகங்களைப் படித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும்.


அப்படிப்பட்ட சிறந்ததொரு புத்தகம் : Tuesdays with Morrie : an old man, a young man and life's great lesson By Mitch Albom.


எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் சம்பவிக்கும். இஃது அறிவு. ஆனால் ஒருவரும் இதை மனதில் நம்புவதில்லை. 


நமது தேடல்களும், விருப்பங்களும், நாம் என்றென்றும் சாசுவதமாக வாழ்வோம் என்கிற ஆழமான விசுவாசத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.


மீதமுள்ள வாழ்க்கை இவ்வளவு மாதங்கள்தான் என அறுதியிட்டு நிர்ணயம் செய்து அறிவித்தால், நமது மனநிலையில் விருப்பங்களும், தெரிந்தெடுப்புகளும் என்னவாக இருக்கும்?


இதுதான் இந்த நூல். 

நரம்பு சம்பந்தப்பட்ட (ALS), குணப்படுத்த இயலாத, மரணத்தை நேருக்கு நேர் எதிர் நோக்கியபடி வாழும் பேராசிரியர்  மோரி.

வெற்றிகரமான வாழ்க்கைபோல் தோற்றமளித்தாலும், மன அமைதியற்ற, வாழ்வின் உண்மையான அர்த்தம் தேடும் பிரபலமான விளையாட்டு வர்ணனையாளர் மிட்ச் ஆல்பம்.

இவர்கள் இருவருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை தோறும் நிகழும் உரையாடல்களே இந்தப் புத்தகம்.

மரணத்தை எதிர்நோக்கும் மனிதனின் மனநிலையில் இருந்து எழும்பொருள் பொதிந்த பார்வையில் பல்வேறுத் தலைப்புகளில் இருவருக்கும் இடையில் உரையாடல் நிகழ்கிகறது. 


செவ்வாய்கிமை தோறும் நிகழும் இச்சந்திப்புகள் அவர் மரணம் வரை தொடர்கிறது. அஃது ஒரு குரு - சீடன் உரையாடல்போல இருக்கிறது. 


1. உலகம் - World 
2. சுய பச்சாதாபம் - Feeling Sorry for yourself
3. வருத்தங்கள் - Regrets
4. மரணம் - Death
5. குடும்பம் - Family
6. உணர்வுகள் - Emotions
7. முதிர் வயதின் அச்சம் - Fear of Aging
8. செல்வம் - Money
9. அன்பு  - Love
10. திருமணம் - Marriage
11. பண்பாடு - Culture
12. மன்னிப்பு - Forgiveness
13. இறுதி நாள் - Perfect day
14. பிரிவு - Goodbye

இந்தச் சுவாரஸ்யமான வாழ்வியலோடு இனைந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களை எவ்விதம் அணுகுவது சிறந்தது என்று தெளிவாக விவரிக்கிறது.

இப் புத்தகத்தை நம்மால் இலகுவாக வாசித்து முடித்துவிட முடியாது. இது வாழ்க்கையின் உண்மையான அனுபவங்கள். ஏறக்குறைய இஃது ஒரு அழகிய மரண வாக்குமூலம். 

இப்படி வாழ்வதுதான் சிறந்தது என வெளிச்சம் போட்டு கற்றுக் கொடுக்கிறது.

இழந்துப்போன  பார்வையை இவ் உரையாடல் வாயிலாக நம்மால்  மீட்டுக் கொள்ளமுடியும்.

கற்றுக்கொள்வது என்பது வாசிப்பதினால் நிகழ்வதில்லை. அதைப் புரிந்து கொள்வது, ஏற்றுக் கொள்வது மற்றும் உறுதியாக கடைப்பிடித்து பயணிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது.


வியாழன், 8 ஜூன், 2017

வெற்றி வாழ்க்கைக்கு உதவும் மிகவும் பயனுள்ள சில பண்புகள்.

வெற்றி வாழ்க்கைக்கு உதவும் மிகவும் பயனுள்ள சில பண்புகள். 




நமது வாழ்வில் முன்னேற உதவிய குரு,  பெற்றோர், ஆசிரியர், நண்பர், உறவினர்  வரிசையில் புத்தகங்களுக்கும் கட்டாயம் ஓர் இடம் உண்டு. 

அடுத்து எழுதப்பட்டிருக்கும் சில வரிகள் எனது வாழ்க்கையைச் செப்பனிட உதவிய அற்புதமானதொரு நூலுக்கு ஒரு நன்றியறிதலே.

1989 ம் ஆண்டு Dr. Stephen R. Covey அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட சுய உதவி முன்னேற்றப் புத்தகம் "The 7 habits of highly effective people ". 


இப் புத்தகம்  1 Million Audio versions மற்றும் 25 million புத்தகங்கள் விற்பனையாகி US publishing வரலாற்றில்  ஒரு மகத்தான சாதனை புரிந்தது.

பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் ஏழு இன்றியமையாத உயர்ந்த பண்புகளைக் குறித்து மிக மிக விவரமாக இந்த நூல் விளக்குகின்றது. 

நம்முடைய குணங்கள், புரிதல்கள் எவ்வளவு தூரம் வாழ்க்கையின் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என நாம் நன்கு அறிவோம்.

இப் புத்தகம் நம் குணங்களை,  முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் எவ்வாறு மாற்றிப் புதுப்பிக்க முடியும் என்பதை விஸ்தாரமாக, தெளிவாக, எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறது.

நல்ல தரமான விதைகள் சிறந்த மகசூலை அளிக்கும் . ஆரோக்கியமான கோழி அதிக முட்டைகளைத் தரும். சிறந்த பலன்களைப் பெற  நல்ல பராமரிப்பு மிகவும் அடிப்படையான தேவை. 

அதுபோல மேன்மையான வாழ்விற்கு அடிப்படை மாசற்ற மனமும் உயர்ந்தப் பண்புகள் நிறைந்த சிந்தனையும்.

இப் பிரபஞ்சம் சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஒரு வரையறைக்குள் இயங்குகின்றது. இது பிரபஞ்சத்தின் லயம்.

மனித மனங்கள் அறநெறி சார்ந்து இயங்கும் போது மட்டுமே பிரபஞ்ச லயத்துடன் இனைந்து மகத்தான சாதனைகளை நிகழ்த்தும்.

அறநெறி சார்ந்த வாழ்வு உள்ளான மனித மனங்களின் மதிப்பீடுகளை உயர்த்துகிறது. நம்பிக்கை மற்றும் மன உறுதியை மேம்படுகிறது.

நமது மதிப்பீடுகள் நம்மை ஆளுகை செய்கின்றன. மதிப்பீடு என்பது அகநிலை. 
மதிப்பிடுதல் சீரமைக்கப்படும் போது ஆளுமைத்திறன் மேம்படுகிறது.

Covey வலியுறுத்தும் ஏழு பண்புகள் நிர்வாகத்திறனை மேம்படுத்து உதவும் சில பயிற்சி முறைகள் அல்ல.

இவை அறவழி நெறிமுறைகள் வழியாகத் தொடர்ச்சியான கட்டுப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களின் மூலம் சார்பு நிலையிலிருந்து (From the Dependence), கூட்டுறவான வாழ்வை நோக்கி ( Towards the  State of Interdependence)  சுதந்திரமான பாதையின் வழியாக (Via the path of Independence) வழிநடத்துகிறது.

7 - பண்புகள்.


1. Be Proactive.

2. Begin with the End in mind.

3. Put first things first.

4. Think Win - Win.

5. Seek first to Understand, Then to be Understood.

6. Synergies (Principles of creating co -operation).

7. Sharpens the Saw (Principles of balanced Self-renewal).


முதல் மூன்று பண்புகள் தனிமனித குணங்களை மாற்றவும், புதுப்பிக்கவும் உதவும்  வழிமுறைகளை விளக்குகின்றது.


மனித மனதின் தவறான புரிதல்களை உணரவும், அவற்றை எவ்விதம் களைவது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகள் மூலம் போதிக்கப்பட்டுள்ளது. நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள இப் பாடங்கள் உதவும்.

நமது சக்தி மற்றும் ஆற்றல் சரியான பாதையில் பயணித்திட வழி காட்டும். 

கரிசனை உடையக் கவலை தரும் விஷயங்கள் (Concerned matters) கடந்து, நம்மால் செயலாற்றக்கூடிய, தாக்கம் ஏற்படுத்தும் காரியங்களில் (Influenced matters) மட்டும் நமது சக்தி செலவிடப்படக் கற்றுக் கொள்ளலாம்.

வாழ்வில்

எது முக்கியம் (Important) 
எது அவசரம் (Urgent)
எவை முக்கியமற்றவை (Not Important)
எவை அவசரமற்றவை (Not Urgent) 

என வகைப்படுத்திக் காரியங்களை வரிசைப்படுத்திச் செயலாற்ற இப் புத்தகம் அருமையாக வழி காட்டுகிறது.

நாம் கருதும் பல முக்கியமானவை உண்மையில் வாழ்க்கைக்கு அவ்வளவு அத்தியாவசியமானது அல்ல என்கிற தெளிவும் கிடைக்கலாம்.!

நான்கு மற்றும் ஐந்தாவது பண்புகள் சமூகத்துடன் நாம் இனைந்து வாழக் கற்றுத்தருகிறது.

வெற்றி என்பது இனைந்து அனுபவித்தல்!

ஆம் பிறரது தோல்வியில் அல்ல, நம்முடன் இனைந்து வாழ்பவர்களின் முன்னேற்றமும் இனைந்தது தான் வெற்றி.

நாம் பிறரால் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை விட, பிறரது உணர்வுகளைப் புரிந்து செயல்படுவதன் முக்கியத்துவம் பற்றி மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பயிற்சி மூலம் மிகச்சிறந்த இசை வித்துவானாக, விளையாட்டு நிபுணராக,  கலைஞராக மாறமுடியுமோ அதுபோல இப்பண்புகளை வாழ்வில்     சிரத்தையுடன் கடைப்பிடித்தால் மேன்மையான வாழ்வு நிச்சயம்.

சனி, 29 ஏப்ரல், 2017

புத்துயிர்ப்பு by Leo Tolstoy.(1899) .

வாசிப்பனுபவம்:


 புத்துயிர்ப்பு by Leo Tolstoy.(1899) .


1996 ம் வருடத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எனது முதுநிலை பொறியியல் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். சிதம்பரத்தின் நடை பாதைளின் ஓரமாக உபயோகித்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிற்கும். மிகச்சிறந்த புத்தகங்களை அழகாக வரிசைப்படுத்தி வைத்திருப்பார்கள்.

புத்தகங்களுக்கான விதி ஒன்று உண்டு !!!

நாம் எந்தவொருப் பொருளைக் குறித்து தேடுதலும் ஆழ்ந்தவறிவும் அடைய விரும்புகிறோமோ, அக்கருத்துக்கள் அடங்கிய. நூல் எவ்வகையிலாவது நமது கரங்களை வந்தடையும்.

இது புத்தகங்களுக்கான விதி!!!

வாழ்வில் அதிகமான குற்றவுணர்வும், குழப்பமான மனநிலையும் அப்போது என் மனதை ஆட்டிப்படைத்த காலகட்டம்! வாழ்க்கையின் உண்மையான பொருள் என்ன என்பதே அப்போதைய தேடலாக இருந்தது. புத்தக வாசிப்பு தான் சுவாசம்.

அது சரி சிறந்த புத்தகங்கள் என்பதற்கு எது வரையறை?

Loui Sinter Johnson ன் மிகச் சிறந்த நூலான "உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள் " என்ற புத்தகத்தில், சிறந்த நூல்கள் பற்றிய சில குறிப்புகள் தருகிறார்.

🔸சிறந்த புத்தகங்கள் நமது விருப்பங்கள், எண்ணங்கள், வாழ்க்கை முறை,
உணவு, உடை வகைகள், நட்புணர்வு ஆகியவற்றில் சரியான புரிதல்களையும்,
அக்கறையுள்ள நேர்மறையான மாற்றங்களையும் பண்பாடு சார்ந்து ஏற்படுத்தும்.

🔹 சிறந்த புத்தகங்கள் எப்பொழுதும் அதைவிட மேலும் சிறந்த நூல்களை
கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தாகத்தை நமக்குள் உருவாக்கும்.

🔸 சிறந்த புத்தகங்களின் பக்கங்களை எளிதில் வாசித்துக் கடந்து விடமுடியாது. இரண்டு வாக்கியங்களிடையே மறைந்து இருக்கும் அதின் உட்கருத்து கண்டு உணரும் மட்டும் கண்களும், மனமும் நிலைக்குத்தீ நிற்கும்.

🔸 நகைச்சுவை, எள்ளல், கோபம், ஆற்றாமை, காதல், வீரம், ஞானம், அழுகை, கண்ணீர், அன்பு, கருணை, ஏக்கம், கையறுநிலை, இயலாமை என மனதில் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகளும் மாற்றங்களும் அளவிடமுடியாதவை.

அன்று சிதம்பரத்தில் நடைபாதை புத்தக கடையில் நான் வாங்கிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல் Leo Tolstoy's அவர்களின்  மிகச்சிறந்த நாவலான. புத்துயிர்ப்பு (Resurrection).

"அறம் சார்ந்த புத்தகத்தின் கருத்துக்களை நம்பி அதை நாம் ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்கும் போது அந்த நூல் நமது வாழ்வின் பாதைகளையும், அதின் திசைகளையும் தீர்மானிக்கின்றது". 

வாழ்வில் நம்முடைய பல மதிப்பீடுகளை அது தலைகீழாக மாற்றுகிறது.

பொதுவாகப் புத்தகங்களை நாம் வாசிப்போம். ஆனால் சிறந்த நூல்கள் நம்மை வாசிக்கும்.

கண்ணாடியில் முகம் பார்ப்பது போல நமது மன உணர்வுகளையும், விருப்பங்களையும் சிறந்த புத்தகங்கள் நமக்கு துல்லிமாகஅடையாளம் காட்டும்.

புத்துயிர்ப்பு கதையின் உள்ளடக்கம்


தன் சொந்த சுயநலம், சமூகத்தின் அநீதிகள் இந்த இரண்டு மனநிலைகளுக்கு  இடையில் சிக்கி தவிக்கும் / போராடும் -                       
ஒரு மனிதன் வாழ்க்கை கதை தான் புத்துயிர்ப்பு. 

Leo Tolstoy அவர்கள் தன் முதிர்ந்த வயதில் எழுதிய மிகப்பெரிய நாவல்.

நெக்லுதொவ் (Nehkludev ) சக நீதிபதிகளுடன் விசாரணை மன்றத்தில் அமர்ந்திருக்கிறார். அன்றைய விசாரணை ஒருவிபச்சார விடுதியில் நடந்த கொலை வழக்கு பற்றியது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் அங்கே பிடிபட்ட விபச்சாரி.

குற்றவாளியைக் கண்டதும் நெக்லுதொவ் திடுக்கிடுகிறார். அவரது நினைவுகள் பின்னோக்கி பயணிக்கிறது.

நெக்லுதொவ் தன் இளம் வயதில் விடுமுறைக்காக தன் அத்தை வசிக்கும் எஸ்டேடட்டுக்கு செல்கிறார். அங்கு வீட்டில் பணிபுரியும் மாஸ்லாவோ (Maslova) எனும் இளம் அழகு நங்கையை  சந்திக்கிறார். மாசறுவற்ற அவ் இளம்பெண் இவரது காதல் வலையில் சிக்குகிறாள். மயங்கிய அப்பெண்ணுடன் உறவு கொண்டு சில நாட்கள் வாழ்ந்து, எவ்விதகுற்றவுணர்வும் இன்றி போலி வாக்குறுதிகளை அளித்து விட்டு அவ்விடம் விட்டுக் கடந்து செல்கின்றார்.

மாஸ்லாவோ கர்ப்பமாகின்றார். தூற்றப்படுகின்றார். வீட்டு வேலை செய்யும் ஏழைப்பெண் ஒரு பண்ணை முதலாளியைத்  திருமணம் செய்வது என்பது
கூடாத காரியம் என உறவினர்கள் கூறுகின்றனர்.

கருவைக் கலைத்துவிட ஆலோசனை தருகிறார்கள். மாஸ்லா ஏற்கமறுக்கிறார். நெக்லுதொவ் வார்த்தைகளை குழந்தைபோல் நம்பி அவரைத் தேடி பட்டணம் செல்கிறாள். ஏமாற்றப்பட்டதை உணருகிறாள். குழந்தை பிறந்து மரிக்கிறது. விபச்சார விடுதியில் இனைகிறாள். மனசாட்சியை மறக்கடிக்கக் குடிப்பழக்கமும் தொடங்குகிறது.

இன்று ஒரு கொலைக்  குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் தன் முன்னாள் காதலன்  முன், தன் வாழ்வை பாழ் படுத்தியவனே நீதிபதியாக அமர்ந்திருக்கிறான் என அறியாது குற்றவாளி கூண்டில் நிற்கிறாள்.

இளைய வயதில் எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றியவன் தற்போது முதிர்வயதில்  மனசாட்சியால் கடிந்து கொள்ளப்பட்டு பிராயச்சித்தம் தேடுவதுதான் இக்கதையின் பயணம். 

விபச்சாரம், போதையினால் தன்னையே மறக்கடித்து வாழும் பெண்
மனதை உயிர்ப்படையச் செய்வதும், 

அந்த நெடிய பிராயச்சித்தப் பயணத்தில் நெக்லுதொவ் புத்துயிர் அடைவதும்தான்  புத்துயிர்ப்பு.

மறுபடியும் புதிதாய் பிறத்தல்!

இது ஒரு உலகப்புகழ் பெற்ற Leo Tolstoy அவர்களின் ஓர் Classical படைப்பு !!!

கதையின்  பயணத்தில் Maslov எழுப்பும் ஒரு கேள்வி நம்மை உலுக்கிவிடும்!!!

At the young, You had your pleasures from me in this world, and now you want to get your salvation through me in the world to come? 

21 வருடங்கள் கடந்து  இந்தப் படைப்பு குறித்து நினைக்கையில் எவ்வளவு தூரம் என் சிந்தனைகளில், நம்பிக்கைகளில் என்னைறியாலேயே அது ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் எற்ப்படுத்தி என்னை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது என்பதை உணரமுடிகிறது.

இந்தப் பகிர்வு ஒருவித நன்றியறிதலே..,

வாழ்வின் திசைகளை மாற்றும் வலிமை வார்த்தைகளுக்கு உண்டு!!!