மனமுதிர்ச்சி ஏன் முக்கியம்?
மனமுதிர்ச்சி என்பது அடிப்படையில் மன வளர்ச்சி அல்லது ஞானத்தின் ஒரு நிலை. இது ஒரு மனிதரின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக அவரது நடத்தை (behavior) முதல் மற்றவர்களுடனான அவர்களது உறவு (Relationships) வரை அனைத்திலும் பங்கு வகிக்கிறது.
மனமுதிர்ச்சி என்பது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சுய மதிப்பை மேம்படுத்தவும், உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.
மனமுதிர்ச்சி என்பது சிறிய விஷயங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது துவங்குகிறது.
ஊக்கம் மற்றும் சுய உதவி புத்தகங்களைப் படிப்பதால் மனமுதிர்ச்சி வருவதில்லை, மாறாக நிலைத் தன்மையையும் (Consistency), ஒழுக்கத்தையும் (Character), இடை விடாமல் பின்பற்றுவதால் நிகழ்கிறது.
மனமுதிர்ச்சி பெறும் போது, வாழ்க்கை மிகவும் நிலையானதாகவும், அதன் விளைவாகச் சிக்கல்களைக் கையாளுவது எளிதானதாகவும் மாறுகிறது.
மனமுதிர்ச்சியானது புத்திசாலித்தனமான நல்ல முடிவுகளை எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. நிதானத்துடன் முடிவுகளை எடுக்க உதவுகிறது. அதன் மூலம் ஒட்டு மொத்தமான வாழ்க்கை அதிக ஸ்திரத்தன்மை அடைகிறது.
மனமுதிர்ச்சி அடைவதால், மோசமான உறவு முறிவுகள், குழப்பமான முடிவுகள், கொந்தளிப்பான மனநிலை மற்றும் கடுமையான வேலைப்பளு போன்ற வாழ்வின் சலசலப்புகள் முடிவடைகின்றன.
மனமுதிர்ச்சி என்பது வயதுடன் தொடர்புடையது அல்ல, மாறாக பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு எவ்விதம் பதிலளிக்க வேண்டும், எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படுகிறது.
மனமுதிர்ச்சி என்பது உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை. நீங்கள் நினைப்பது போலவே, மற்ற எல்லோரும் நினைப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அதாவது, மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
மனமுதிர்ச்சி என்பது நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விட்டு விடுதல்.
மனமுதிர்ச்சி என்பது உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, பிறரை வாதங்களில் வெற்றிபெற அனுமதித்தல்.
மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களின் விமரிசன கருத்தால் நீங்கள் பாதிக்கப் படுவதில்லை.
மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விட்டு விடுதல்.
மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.
மனமுதிர்ச்சி என்பது உங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்படி யாரையும் வற்புறுத்துவதில்லை. மாறாக, அவரவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய அனுமதித்தல்.
மனமுதிர்ச்சி என்பது மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு நம்மைத் திருத்திக்கொள்வது.
மனமுதிர்ச்சி என்பது வாழ்க்கையில் எவ்வித இலட்சியம் இல்லாத குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களை மகிழ்விக்க இனி நீங்கள் முயல்வதில்லை.
மனமுதிர்ச்சி என்பது உங்களது இலக்குகளை அடையத் தடையாக உள்ள தற்காலிக சுகங்களைப் புறம் தள்ளுதல்.
மனமுதிர்ச்சி என்பது காரியங்கள் திட்டமிட்ட படி நடக்காத போதும் அமைதியாக இருக்க உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.
மனமுதிர்ச்சி என்பது நான் பிறருடைய மகிழ்ச்சிக்குப் பொறுப்பல்ல என்பதை உணர்ந்து கொள்தல்.
மனமுதிர்ச்சி என்பது துயரங்கள் உங்களை அழிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அதன் வலியிலிருந்து உங்கள் வலிமையை உருவாக்குதல்.
மனமுதிர்ச்சி என்பது சரியான நேரத்துக்குக் காத்திருக்காமல் செயலில் ஈடுபடும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெறுதல்.
மனமுதிர்ச்சி என்பது வெற்றுச் செய்திகள், அரசியல், மலிவான இணையதள பொழுது போக்குகள், பிறரது அந்தரங்க நிகழ்வுகள், பயனற்ற சமூக உரையாடல்; இவை உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் முன்னேற விடாமல் திசைதிருப்பும் மிக மோசமான வஞ்சக வலை என்பதை உணரும் அளவுக்குப் புத்திசாலியாக இருத்தல்.
மனமுதிர்ச்சி என்பது உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எதையும் தனிப்பட்ட முறையில் எடுக்காமல் உங்கள் மனதைப் பயிற்றுவித்தல்.
உங்களைப் பற்றி யாருக்கும் அதிகமாகத் தெரியாதபோது, வாழ்க்கை இலகுவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மனமுதிர்ச்சி.
படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..