விழுமங்கள் (Ethical Values).
அறம் சார்ந்த விழுமங்கள் எனக் கருதப்படுபவை சமரசம் செய்து கொள்ள முடியாத, விவாதிக்க முடியாத, மாறாத உண்மைகளாகும். அவைகள் நாம் நடந்து கொள்ளும் விதத்தைத் தீர்மானித்து, நம்மை இயக்கும் ஆற்றல் மிக்கவை.
அவை ஊக்கமளிப்பவையும் கூட. நாம் ஒரு செயலை செய்யும் விதம், நாம் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றிற்கு நமது விழுமங்களே பொறுப்பு; அத்துடன் அவை நம்மைக் கட்டுப்படுத்துபவை - அதாவது அவை நாம் நடந்து கொள்ளும் விதத்திற்கு எல்லைகளை வைக்கின்றன.
ஒரு தலைமை பொறுப்பை நீண்ட காலத்திற்கு நிர்வகிக்கத் தேவையான, செயல்திறனுக்கு, அவர்களது நிலையான விழுமங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என இன்றைய தலைமைத்துவத்தைக் குறித்த இலக்கிய நிபுணத்துவ கட்டுரைகள் உணர்ந்து, அதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
''குற்றமற்ற வாழ்க்கையை வாழ விரும்புபவர்'' - ''எப்போதும் இதயத்திலிருந்து உண்மையைப் பேசுபவர்" என்கிற விழுமியம் உடையவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்த நடத்தை ஆய்வுகள் (Value - Driven based behavior's), சில தகவல்களை விவரிக்கிறது.
இவர்கள் தங்கள் இதயத்தில் சத்தியத்தின் வலிமையை மதிப்பதால், அவர்களது வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்துகின்றன.
அவர்கள் கருணையை மதிப்பதால், "தன்னை சுற்றி வாழ்பவருக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் தவறு இழைப்பதில்லை".
அவர்கள் நேர்மையை மதிப்பதால், ''எத்தகைய இழப்பை எதிர் கொள்ள நேரிட்டாலும்'' தாங்கள் சொன்ன வார்த்தையின்படி நடக்கிறார்கள்.
அவர்கள் நீதியை மதிப்பதால் "அப்பாவிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கு'' கைக்கூலி வாங்குவதில்லை.
இத்தகைய விழுமியங்களைப் பின்பற்றுவதால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
தெய்வீக அறம் சார்ந்த விழுமியங்களால் உந்தப்பட்டு வழி நடத்தப்படும் தலைவர்கள் இறைவனிடமிருந்து மகத்தான சக்தியைப் பெறுகிறார்கள். அவர்கள் "எந்த சூழ் நிலையிலும் மனதால் கலங்குவதில்லை". அவர்களைச் சுற்றி என்ன நிகழ்வுகள் நடந்தாலும், முழு நம்பிக்கையுடன் அவர்களால் வாழ முடிகிறது.
அவர்கள் மதிப்பு மிக்கவை எனக் கருதும் விழுமியங்கள், அறம் சார்ந்த கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டவை. ஆகவே அவர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அவைகள் வழி காட்டுகின்றன. இத்தகைய நம்பிக்கை உணர்ச்சிவசப்படாத ஒரு ஆன்மீக ஸ்திரத்தன்மையை அவர்களுக்குக் கொடுக்கும். அவ்விதம் இருந்தவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக இருந்ததை உலக வரலாறும் உறுதிப்படுத்துகிறது.
நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்கும்போது, உங்களை எந்த விதமான விழுமியங்கள் வழி நடத்துகின்றன?
உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் ஆராயும்போது, உங்கள் நடத்தைக்கு உந்துதலாக எத்தகைய மதிப்புகள் இருக்கின்றது?
நீங்கள் நடந்து கொள்ளும்விதம் சிறப்பாக இருக்க எந்த விதமான விழுமியங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தெய்வீக அறம் சார்ந்த விழுமியங்களை முழுமையாக ஒருங்கிணைப்பதை உங்கள் இலக்காக ஆக்குங்கள். வாழ்வில் வெற்றி உறுதி.
படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..