திங்கள், 25 செப்டம்பர், 2017

ஒரு அழகிய மரண வாக்குமூலம்.

ஒரு அழகிய மரண வாக்குமூலம்.


Tuesdays with Morrie : an old man, a young man and life's great lesson By Mitch Albom.


வாசிப்பும் - சுவாசிப்பும்.


மனதைத் தொடும் ஒரு புத்தகத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்போது அவை நம் நம்பிக்கையில் மாற்றங்களை உருவாக்குகின்றன. 

அதின் தொடர்ச்சியாக நம் வாழ்வில் எடுக்கும் தீர்மானங்கள், தெரிந்தெடுப்பு இவற்றை முடிவு செய்வதில் இவைப் பெரும் தாக்கத்தை நிகழ்த்துகிறது.

அன்பை, மனிதநேயத்தை, உறவுகளைச் செழுமைப்படுத்த, புத்தகங்கள் கற்றுத் தருகின்றன. 

இயற்கையை நேசிக்க, பாதுகாக்க, சக உயிரினம் வாழ்வதற்கு உதவிட எனப் பலவகைகளில் நல்ல கருத்துகள் புத்தகங்கள் வாயிலாக மனதினில் விதைக்கப்படுகின்றன.

அதேவேளையில் வெறுப்பு, துவேஷம், பிரிவினை கருத்துக்கள் உமிழ்கின்ற பல நூல்கள் அரசியல், மத, இன, சாதீய அதிகாரவெறிப் பீடித்த குழுக்களால், சுயநலவாதிகளால் பரப்பப்படுகின்றது.

சிறந்த புத்தகங்கள் உங்கள் கரங்களுக்கு வருவது ஒரு கொடுப்பினை. ஆசீர்வாதம். 


எது சிறந்த புத்தகம்? 


சிறந்ததொருப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன், அஃது உங்கள் உணர்வுகளில் ஏக்கத்தை ஏற்படுத்தும். உணர்வுகளில் அன்பை, கருணையை மேலோங்கிடச்செய்யும். 

நல் செயல்களைச் செய்யத் தூண்டும். நம் வாழ்வின் குறைகள், தவறுகளைச் சுட்டிக்காட்டி உணர்த்தும். கலாச்சாரம், பண்பாடு, மூத்தோர் அறிவுரைகள் இவற்றின் உண்மையானப் பொருள் உணர உந்துதல் அளிக்கும்.

அதைவிட மேலும் சிறந்த புத்தகங்களைப் படித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும்.


அப்படிப்பட்ட சிறந்ததொரு புத்தகம் : Tuesdays with Morrie : an old man, a young man and life's great lesson By Mitch Albom.


எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் சம்பவிக்கும். இஃது அறிவு. ஆனால் ஒருவரும் இதை மனதில் நம்புவதில்லை. 


நமது தேடல்களும், விருப்பங்களும், நாம் என்றென்றும் சாசுவதமாக வாழ்வோம் என்கிற ஆழமான விசுவாசத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.


மீதமுள்ள வாழ்க்கை இவ்வளவு மாதங்கள்தான் என அறுதியிட்டு நிர்ணயம் செய்து அறிவித்தால், நமது மனநிலையில் விருப்பங்களும், தெரிந்தெடுப்புகளும் என்னவாக இருக்கும்?


இதுதான் இந்த நூல். 

நரம்பு சம்பந்தப்பட்ட (ALS), குணப்படுத்த இயலாத, மரணத்தை நேருக்கு நேர் எதிர் நோக்கியபடி வாழும் பேராசிரியர்  மோரி.

வெற்றிகரமான வாழ்க்கைபோல் தோற்றமளித்தாலும், மன அமைதியற்ற, வாழ்வின் உண்மையான அர்த்தம் தேடும் பிரபலமான விளையாட்டு வர்ணனையாளர் மிட்ச் ஆல்பம்.

இவர்கள் இருவருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை தோறும் நிகழும் உரையாடல்களே இந்தப் புத்தகம்.

மரணத்தை எதிர்நோக்கும் மனிதனின் மனநிலையில் இருந்து எழும்பொருள் பொதிந்த பார்வையில் பல்வேறுத் தலைப்புகளில் இருவருக்கும் இடையில் உரையாடல் நிகழ்கிகறது. 


செவ்வாய்கிமை தோறும் நிகழும் இச்சந்திப்புகள் அவர் மரணம் வரை தொடர்கிறது. அஃது ஒரு குரு - சீடன் உரையாடல்போல இருக்கிறது. 


1. உலகம் - World 
2. சுய பச்சாதாபம் - Feeling Sorry for yourself
3. வருத்தங்கள் - Regrets
4. மரணம் - Death
5. குடும்பம் - Family
6. உணர்வுகள் - Emotions
7. முதிர் வயதின் அச்சம் - Fear of Aging
8. செல்வம் - Money
9. அன்பு  - Love
10. திருமணம் - Marriage
11. பண்பாடு - Culture
12. மன்னிப்பு - Forgiveness
13. இறுதி நாள் - Perfect day
14. பிரிவு - Goodbye

இந்தச் சுவாரஸ்யமான வாழ்வியலோடு இனைந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களை எவ்விதம் அணுகுவது சிறந்தது என்று தெளிவாக விவரிக்கிறது.

இப் புத்தகத்தை நம்மால் இலகுவாக வாசித்து முடித்துவிட முடியாது. இது வாழ்க்கையின் உண்மையான அனுபவங்கள். ஏறக்குறைய இஃது ஒரு அழகிய மரண வாக்குமூலம். 

இப்படி வாழ்வதுதான் சிறந்தது என வெளிச்சம் போட்டு கற்றுக் கொடுக்கிறது.

இழந்துப்போன  பார்வையை இவ் உரையாடல் வாயிலாக நம்மால்  மீட்டுக் கொள்ளமுடியும்.

கற்றுக்கொள்வது என்பது வாசிப்பதினால் நிகழ்வதில்லை. அதைப் புரிந்து கொள்வது, ஏற்றுக் கொள்வது மற்றும் உறுதியாக கடைப்பிடித்து பயணிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது.


2 கருத்துகள்:

  1. அருமையான ஒரு புத்தகம் என்று தெரிகிறது....

    கீதா: என் தாய் மாமா als வந்து துன்புற்று மாண்டார்....இந்த நோய் வந்த 7 வருடங்களுக்குள் நோயாளி இறந்துவிடுவார்.....என் மாமா 5 வருடங்களுக்குள் இறந்துவிட்டார்....அதன் தாக்கத்தை நான் ஒவ்வொரு ஸ்டேஜ் ம், படிப்படியாய் உறுப்புகள் செயல் இழப்பும் அறிவேன். அவரை என் வீட்டிலும் வைத்திருந்து சில நாட்கள் பார்த்த்துக் கொண்டேன்...மூளையின் செல்கள் இறக்கத் தொடங்கிவிட்டால் அவை மீண்டும் உயிர்ப்படையா.....மரணத்தை நோக்கி ஒவ்வொரு நொடியும் நகரும் அந்த உணர்வுகள்...யாருக்கும் வரக்கூடாது என்று பிரார்த்திப்பேன்.....

    நல்லதொரு புத்தகம் அறிமுகத்திற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவ பகிர்வுக்கு நன்றி. எங்கள் நெருங்கிய உறவில் இதே போன்ற கடினமான சூழலை கடந்து வந்ததால், உங்களுடைய துயர உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

      மரணத்தை எதிர் நோக்கும் மனிதரின் பார்வையில் "வாழ்வில் எது பிரதானம்" என்பதே இந்நூலின் சாரம்.

      வாசித்துப் பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு