வெள்ளி, 5 ஜனவரி, 2018

இயல்பு அலாதன செய்யேல்.

🌸 இயல்பு அலாதன செய்யேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்) 


24. இயல்பு அலாதன செய்யேல் :


தீமை பயக்கும் செயல்களைச் செய்யாதே.


எது தர்மம்? 


நமக்கும் பிறர்க்கும் நன்மை தரும் செயல்கள் தர்மம்.

பிற உயிர்கட்குத் தீங்கு இழைக்காத செயல்கள் தர்மம்.

நமது மனம், உடல் மாசுபடாவண்ணம் காத்துக் கொள்வது தர்மம்.

தன்னைப்போல் பிறனைநேசிப்பது தர்மம்.

நமக்குப் பிறர் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அவற்றை மற்றவர்க்கு நாமும் செய்வது தர்மம்.

இயல்பு அலாதன செய்யேல் .


இயல்பாகவே நமக்கு நன்மை அளிப்பது ஏதுவென்று நன்றாகத் தெரிகிறது. அஃது அறிவு ; புத்தி.

ஆனால் பெரும்பாலும் மனம்  நல்லவழியில் நடக்க மறுக்கிறது. இஃது உணர்வு ; சபலம்.

ஒரு செயலை செய்யும்போது அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தாலும், பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாகவே முடிவெடுத்துச் செயலாற்றுகிறோம்.

உணர்வின் ஆதிக்கத்தால், தீமை பயக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் நம்மால் உறுதியாக சில தீய பழக்கங்களை விட்டு விலக முடியவில்லை.

நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் நம்முள் உறைந்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஏதோவொன்று இருந்துகொண்டு நன்மை தரும் செயல்களைச் செய்யவிடாமலும், தீமையான செயல்களைச்  செய்யும்படியும் தூண்டுகிறது”.

இதை மேற்கொள்வது எப்படி?


இறை நம்பிக்கையே அடிப்படை.

நன்மையின் பாதை தற்காலிகமாகத் துன்பத்தை தந்தாலும் இறுதியில் வெற்றியையே தரும் என எல்லாச் சமய வேதங்கள் சொல்வதை உணர்வுப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தீய பழக்கங்கள் தரும் அனுபவம்  இன்பமாக இருந்தாலும், பிற்காலத்தில் தவறான செயல்களின் விளைவு நிச்சயம் துன்பத்தையே விளைவிக்கும் என்பது மனதில் திடமாக பதிய வேண்டும்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது மாறாத விதி.

காரியகாரண சம்பந்தம் உடனே வெளிச்சமாகாவிட்டாலும் செயலின் விளைவிலிருந்து மனிதன் தப்ப முடியாது.

இஃது இயற்கையின் நியதி.

ஆகையால் தீவினை தவிர்க்கப்படவேண்டும். பாபச் செயல்கள் செய்ய அஞ்சவேண்டும். மாறாக அறம் செய்ய விரும்ப வேண்டும்.

தீமை பயக்கும் செயல்களைச் செய்யாதே.

கடவுளுக்குப் பயந்து நடக்கத் தீர்மானிப்பதே ஞானத்தின் துவக்கம்.

புதன், 3 ஜனவரி, 2018

மண் பறித்து உண்ணேல்.

🌸 மண் பறித்து உண்ணேல்.


23. மண் பறித்து உண்ணேல்.


பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே.  

தன்னுடைய  சுயநலத்துக்காக  பிறர் உடைமைகளை அபகரித்து வாழ நினைப்பது பாவம்.

நிலவுடைமை சமூகத்தில் செல்வந்தர் என்பது நிலவளம், கால்நடைகள் மற்றும் குடும்பத்தின் ஆண் மக்களின் எண்ணிக்கை வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டது.

மண்ணிற்காக நடந்த யுத்தமே மகாபாரதம்.

நிலத்தை அபகரிப்பதற்காக நடந்த ; இன்றும், நடக்கும் கொலைகள் ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.

கடவுளின் பத்து கட்டளைகளில் இரண்டுமுறை இந்தக் கட்டளை வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது.

"களவு செய்யாதிருப்பாயாக"

"பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக".


ஆகாப் என்னும் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு அவன் நிலத்தின் அருகில் இருந்த ஒரு குடியானவனின் திராட்சைத் தோட்டத்தின் மீது கண். அந்த ஏழையை அழைத்து அந்த நிலத்தை விற்கும்படி நெருக்கினான். அந்தக் குடியானவன் அந்த நிலம் தனது மூதாதையரின் பூர்விகமான இடம், எனவே அதை விற்க இயலாது என மறுத்துவிட்டான்.

அரசன் மனமடிவாகி தனது அரண்மளையில் சோர்ந்து துக்கமாக இருந்தான். அவன் மனைவி காரியங்களை அறிந்து, இரண்டு பொல்லாத மனிதர்களை நியமித்து அந்தக் குடியானவன் மீது இராஜ துரோக குற்றம் பொய்யாக சுமத்தி அவனைக் கொலை செய்கிறாள்.

அந்தக் குடியானவன் இறந்த செய்திகேட்ட அரசன் மனமகிழ்ச்சியோடு அந்த நிலத்தை அபகரிக்கிறான். ஆனால் முடிவு என்ன தெரியுமா?

எந்த இடத்தில் குடியானவன் இரத்தம் சிந்தப்பட்டதோ, அதே இடத்தில் அந்த அரசன் மற்றும் அரசியின் இரத்தமும் சிந்தப்பட்டது.

இது வெறும் கதை அல்ல.

பிறரை ஏமாற்றி, அவர் சொத்துக்களை அபகரித்தவர்கள் வம்சங்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

பிறர் நிலத்தை, உடைமைகளை ஏமாற்றி, மிரட்டி அபகரித்த வம்சங்களின் வாரிசுகள் உணவுக்காக வீதிகளில் அலைந்து திரிவதை இன்றும் காணலாம்.

இன்றும்கூட கொள்ளையடித்து கட்டப்பட்ட மாளிகைக்குள் வசிப்பவர்கள் பார்வைக்கு வேண்டுமானால் பகட்டாக தெரியலாம். அது வெளிப்புறத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளே. உண்மையில் அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைக்குள் வாழும் அழுகிய சரீரங்களே.

ஒருபோதும் பிறர் பொருள், உடைமை, சொத்து இவற்றின் மீது ஆசைப்படக்கூடாது.

நமக்கு இருக்கும் செல்வாக்கு, அதிகாரம் மூலம்  தவறான வழிகளில் அதை அடைந்தால், அது  கதற கதற வைத்து நம்மைவிட்டு எடுக்கப்படும்.

நமக்கு கடவுள் அருளும் சம்பத்துக்களுடன் இனிமையாக வாழ்வோம்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

செவ்வாய், 2 ஜனவரி, 2018

பருவத்தே பயிர் செய்.

🌸 பருவத்தே பயிர் செய்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


22. பருவத்தே பயிர் செய் :

ஒவ்வொரு செயலுக்கும் அதைச் செய்ய குறிப்பிட்ட காலமுண்டு.
எனவே எந்த ஒரு செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Bible இலிருந்த இந்தப் பகுதி இங்கு மிகப் பொருத்தமானது :


வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு.

கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு.

நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு.

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு.

புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு.

கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு.

தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு.

தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு.

காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு.

கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு.

மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.

சினேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு.

யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

பருவத்தே பயிர் செய் :


ஒவ்வொரு பயிரும் அதிக மகசூலைப் பெறுவதற்கு அதற்கு ஏற்ற உகந்த பருவ சூழலில் விவசாயம்  செய்தால்தான் சிறந்த விளைச்சல் கைகூடி வரும். உழைப்புக்குப் பலன் கிட்டும்.

இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு வயதிலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளது. அந்த வயதில் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற அலட்சியம் செய்தால் பிற்கால வாழ்வில் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். சில தவற விடப்பட்ட வாய்ப்புகளை எத்தனை சிரமப்பட்டு முயற்சித்தாலும் போனது போனதுதான்.

எனவே எந்த வயதில் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவு வேண்டும்.

இளமையிலே கல்வி கற்றுக்கொள்ள முழு கவனம் செலுத்த வேண்டும்.
உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், வருமானம், சேமிப்பு  குறித்து
ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு சரியான திட்டமிடுதல் வேண்டும்.

வாழ்க்கை கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் கற்பது.

வேதங்கள்  வாழ்க்கையின் பிரச்சினைகளுக்காக  கவலைப்படக்கூடாது எனச் சொல்கிறது. அதைக் குறித்து பயப்படாதேயுங்கள் என்றும் அறிவுறுத்துகிறது.

ஆனால் எப்போதும் வாழ்க்கையை சரியாகத் திட்டமிட்டு விழிப்புணர்வுடன் வாழுங்கள் என அறிவுறுத்துகிறது.

இதிகாசங்களின் கதாப்பாத்திரங்கள் எவற்றை வாழ்க்கையில் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று  உணர்த்தப் பயன்படுகிறது. ,

இன்று எந்த வயதில்  நாம் இருந்தாலும்  நமக்கிருக்கும்  வாய்ப்புகள், வலிமை கொண்டு மீதமிருக்கும் காலத்தில் எங்கனம் சிறப்பாக பயனுள்ளதாக வாழமுடியும் என்று திட்டமிடுதல் நல்லது.

திங்கள், 1 ஜனவரி, 2018

நன்றி மறவேல்

🌸 நன்றி மறவேல். 

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


21. நன்றி மறவேல் :

ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒருபோதும் மறக்கக்கூடாது.

ஒருவர் பிறர்க்கு செய்யும் நல்ல செயல்கள் என்றும் நன்மை பயக்கும்.

இத்தகைய நல்ல செயல்களே நன்று என்பதாகும்.

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது.

இவ்விதம் நாம் பிறர் வழியாகப் பெற்ற உதவிகளை, அதன் மூலம் அடைந்த நன்மைகளை மறக்கக்கூடாது.

அவர்களுக்குத் திரும்ப பதில் நன்றி செய்வதற்கு எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும்.

இவ்விதம் திரும்ப செய்யவேண்டும் என்று எண்ணுவதுதான் மறவாமை.

அதற்குப் பெற்றுக்கொண்ட உதவியின் மதிப்பை உணர்வதே  முதல் படி.

அப்படி உணர்ந்தோமேயானால் உதவி செய்தவருக்கு நன்றி பாராட்டுவதும், வேறோருவருக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் நாமே முன்வந்து தேவையான உதவியை செய்வதாகவும் அமையும்.

இதுவே அறம்.

நன்றி என்ற அறம் போற்றும் மற்றுமோரு ஒளவையார் அருளிய செய்யுள் ’மூதுரை’யிலிருந்து

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

நிலைபெற்றுத் சோர்வடையாது வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் பருகிய தண்ணீரைத் தன் மர உச்சியில் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், ஒருவரின் உதவியை நாம் மறவாமல் நன்றி பாராட்டவேண்டும்.

'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:


‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’.

அஃதாவது 'உன்னுடைய செயல்கள் நன்மை செய்வதானால்' அதை யாருக்கு வேண்டுமானாலும் செய்.

‘எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்து கொண்டே இரு’.

அதுவே சுதர்மம்.

நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்றி கெட்டவனுக்குக்கூட செய். 

காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி வருகிறது.

அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.

நன்றி பற்றிய கதை ஒன்று :

தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது.

அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.

அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது.

மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார்.

சந்நியாசி சொன்னார்:

'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'.

அது போல 'நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை'

இதுவே சுதர்மம்.

'நன்றி' பற்றி திருக்குறள் :


'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று  எல்லோருக்கும் செய்யாதே.

யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்.

அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டுமே அக்கணமே மறந்து விடுவது நல்லது!!!


அனைவருக்கும் இனிய அன்பின்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..,