புதன், 3 ஜனவரி, 2018

மண் பறித்து உண்ணேல்.

🌸 மண் பறித்து உண்ணேல்.


23. மண் பறித்து உண்ணேல்.


பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே.  

தன்னுடைய  சுயநலத்துக்காக  பிறர் உடைமைகளை அபகரித்து வாழ நினைப்பது பாவம்.

நிலவுடைமை சமூகத்தில் செல்வந்தர் என்பது நிலவளம், கால்நடைகள் மற்றும் குடும்பத்தின் ஆண் மக்களின் எண்ணிக்கை வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டது.

மண்ணிற்காக நடந்த யுத்தமே மகாபாரதம்.

நிலத்தை அபகரிப்பதற்காக நடந்த ; இன்றும், நடக்கும் கொலைகள் ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.

கடவுளின் பத்து கட்டளைகளில் இரண்டுமுறை இந்தக் கட்டளை வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது.

"களவு செய்யாதிருப்பாயாக"

"பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக".


ஆகாப் என்னும் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு அவன் நிலத்தின் அருகில் இருந்த ஒரு குடியானவனின் திராட்சைத் தோட்டத்தின் மீது கண். அந்த ஏழையை அழைத்து அந்த நிலத்தை விற்கும்படி நெருக்கினான். அந்தக் குடியானவன் அந்த நிலம் தனது மூதாதையரின் பூர்விகமான இடம், எனவே அதை விற்க இயலாது என மறுத்துவிட்டான்.

அரசன் மனமடிவாகி தனது அரண்மளையில் சோர்ந்து துக்கமாக இருந்தான். அவன் மனைவி காரியங்களை அறிந்து, இரண்டு பொல்லாத மனிதர்களை நியமித்து அந்தக் குடியானவன் மீது இராஜ துரோக குற்றம் பொய்யாக சுமத்தி அவனைக் கொலை செய்கிறாள்.

அந்தக் குடியானவன் இறந்த செய்திகேட்ட அரசன் மனமகிழ்ச்சியோடு அந்த நிலத்தை அபகரிக்கிறான். ஆனால் முடிவு என்ன தெரியுமா?

எந்த இடத்தில் குடியானவன் இரத்தம் சிந்தப்பட்டதோ, அதே இடத்தில் அந்த அரசன் மற்றும் அரசியின் இரத்தமும் சிந்தப்பட்டது.

இது வெறும் கதை அல்ல.

பிறரை ஏமாற்றி, அவர் சொத்துக்களை அபகரித்தவர்கள் வம்சங்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

பிறர் நிலத்தை, உடைமைகளை ஏமாற்றி, மிரட்டி அபகரித்த வம்சங்களின் வாரிசுகள் உணவுக்காக வீதிகளில் அலைந்து திரிவதை இன்றும் காணலாம்.

இன்றும்கூட கொள்ளையடித்து கட்டப்பட்ட மாளிகைக்குள் வசிப்பவர்கள் பார்வைக்கு வேண்டுமானால் பகட்டாக தெரியலாம். அது வெளிப்புறத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளே. உண்மையில் அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைக்குள் வாழும் அழுகிய சரீரங்களே.

ஒருபோதும் பிறர் பொருள், உடைமை, சொத்து இவற்றின் மீது ஆசைப்படக்கூடாது.

நமக்கு இருக்கும் செல்வாக்கு, அதிகாரம் மூலம்  தவறான வழிகளில் அதை அடைந்தால், அது  கதற கதற வைத்து நம்மைவிட்டு எடுக்கப்படும்.

நமக்கு கடவுள் அருளும் சம்பத்துக்களுடன் இனிமையாக வாழ்வோம்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக