வெள்ளி, 10 ஏப்ரல், 2020

புனித வெள்ளி

இயேசுவின் சிலுவைப் பாதை.



இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த தினம் கிறிஸ்தவர்களால்  "புனித வெள்ளி" என்று அனுசரிக்கப்படுகிறது. 

அவர் சிலுவையில் அறையப்பட்டது காலை 9 மணி (St.Mark 15:25) ஆகும். அவர் உயிர் பிரிந்தது மாலை 3 மணி ( St. Mark 15:34). இயேசு சிலுவையில் தொங்கியபோது ஏழு வாசகங்கள் பேசினார். கிறிஸ்தவ ஆலயங்களில், "புனிதவெள்ளி" ஆராதனையில் இந்த ஏழு வாக்கியங்களும் தியானிக்கப்படும்.

இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? 


இயேசு தம் வாழ்நாள் முழுமையும் கடவுளுக்கு முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்ந்தவர். அவர் தமது உபதேசங்களில், "கடவுளை" தம்முடைய தந்தையென்றே எப்போதும் குறிப்பிட்டார். இயேசு தாம் தந்தையை விட்டு ஒருபோதும் பிரிந்திருப்பதே இல்லை என்றார். இவ்விதம் இறைவனை தமது சொந்தத் தந்தை போல அவர் பாவித்தது யூத சமயத் தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 


இயேசு போலித்தனமாகக் கடைப்பிடிக்கப்படும் யூத சமய சடங்குகளை வன்மையாகக் கண்டித்தார். ஊருக்காக வெளிவேஷம் போடும் அற்பத்தனமான சமயத் தலைவர்களின் பாசாங்கு நிறைந்த வாழ்க்கையைக் கேள்வி கேட்டார். 

அத்துடன் அவர் பல அற்புதங்களை எல்லோரும் பார்க்கும்படி செய்ததால் வெகு திரள் மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. இதனால் இயேசுவுக்கு மக்களிடம் செல்வாக்கும், ஆதரவும்  அதிகரித்தது. 

இதைக் கண்டு பயந்த யூத சமயத் தலைவர்கள், "ரோமப் பேரரசில் தங்களுக்கிருக்கும் அதிகாரம்  இவரது வளர்ச்சியால் பறி போய்விடுமோ" எனும் அச்சம் அடைந்தனர்.

அத்துடன் அவருக்கு மக்களிடமிருந்த புகழும் செல்வாக்கும் அவர்களுக்குள் பொறாமைத் தீயை வளர்த்தது. எனவே இயேசுவைக் கொல்வதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். அவர் யூத மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைக்கு விரோதமாகச்  செயல்படுவதாகவும், கடவுளை அவமதிப்பு செய்வதாகவும் வீண் பழி சுமத்தி மக்களிடம் அவருக்கு எதிர்ப்பு ஏற்படுத்த வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்தனர். 


மதத் தலைவர்களின் சூழ்ச்சி :


யூதர்களுக்கு முக்கியமான பண்டிகை பஸ்கா. அந்த பண்டிகை முதல் நாள் இரவில் இயேசுவைக் கைது செய்தனர். ஒரே நாளில் தீவிர விசாரணைக்கு வழிதராமல் அவரைக் கொன்றுவிடுவது எனச் சதித் திட்டம் தீட்டினர். பண்டிகைக்கு முன்பாக இதை முடித்துவிட வேண்டும் எனத் தீவிரமாகச் செயல் பட்டனர்.

இயேசுவின் மீது அவர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு, பிறப்பால் இவன் ஒரு "தச்சனின் மகன்" ஆவான். ஆனால் தற்போது தன்னை "கடவுளின் மகன்" என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறான் என்பதாகும். 

இரண்டாவதாக, "யூத சமயத்தின் முன்னோர்கள் ஏற்படுத்திய பல உபதேசங்களிற்கும், சடங்குகளுக்கும் வேறுவிதமாக விளக்கங்கூறி மக்களை வஞ்சித்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்துகிறான்" என்பதாகும். 

அத்துடன், "எதிர்காலத்தில் அமைய இருக்கும் இறையரசுக்கு தன்னை அரசன் எனச் சொல்லி" ரோமப் பேரரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகிறான் எனவும் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

ரோம நீதிமன்றம் இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்கவில்லை. யூத சமயத் தலைவர்களின் தந்திரங்களை உணர்ந்தனர். அவர்கள் இயேசுவை விடுவித்துவிடவும் முயன்றனர். 

ஆனால் யூத சமயத் தலைவர்களோ "இயேசுவைச் சிலுவையிலறைய வேண்டும்" என மக்களைக் கூக்குரலிடும்படித் தூண்டினர்.  அவருக்கு எதிராகப் பலர் சாட்சி சொன்னார்கள். ஆனால் அது பொருத்தமாக இல்லை.

கடைசியாக ரோம நீதிமன்றம் "ஏன் இவரைச் சிலுவையிலறைய வேண்டும்?" எனக் கேட்டபோது, இவன் தன்னை "கடவுளின் மகன்" எனக் கூறி இறைவனை இழிவு படுத்துகிறான். எனவே இப்படிப்பட்ட பொல்லாத வஞ்சகன் சாகவே வேண்டும் எனக் கூக்குரலிட்டனர்.

அப்போது ரோம நீதிபதி அவரைப் பார்த்து "நீ கடவுளின் குமாரனா?" எனக் கேட்டார்.

இயேசு ஆம் என்றார்.

உடனே யூத மக்கள் கூட்டம் கொதித்தெழுந்தது. கூக்குரல் அதிகமாகி கலவரச் சூழல் ஏற்பட்டதால், ரோம நீதிமன்றம் தங்கள் கைகளைத் தண்ணீரில் கழுவி யூத சமயத் தலைவர்கள் வசம் இயேசுவை ஒப்படைத்தனர்.



சிலுவைப் பாதை :

ரோமப் பேரரசில் சிலுவை மரணம் என்பது கொடூரமான குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை ஆகும். அப்படி ஒருவருக்கு மரணம் சம்பவிப்பது இகழ்ச்சியும் அவமானம் நிறைந்ததாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரது வலது புறத்திலும் இடது புறத்திலும் இரண்டு கொடூரமான குற்றவாளிகளும் உடன்  சிலுவையில் அறையப்பட்டனர். 

அவரது சீடர்களில் ஒருவரைத் தவிர மற்றெல்லாரும் உயிருக்குப் பயந்து அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர் மிகவும் பரிதாபகரமான கைவிடப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கினார். 

அவரைச் சுற்றி இருந்த மக்கள் கேலி செய்தனர். பரியாசமாகப் பேசி நிந்தித்தனர். "நீ இறைவனது மகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா பார்ப்போம் " எனப் பகடி பேசினர். 

அவர் முகத்தைத் துணியால் மூடி அடித்து, "நீ தீர்க்கதரிசி என்றால், உன்னை அடித்தது யார்? எனச் சொல் பார்ப்போம்" எனப் பரிகசித்தனர்.

"பிறரது வாழ்வில் எவ்வளவோ அற்புதங்களைச் செய்தான், ஆனால் இப்போது அவன் தன்னைதான் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் சிலுவையில் தொங்குகிறான். இவன் கடவுளின் மைந்தன் என்பது உண்மையெனில், இப்போது அவன் சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்போது அவனை நாம் கடவுளின் மைந்தன் என நம்புவோம்" என இகழ்ந்து அசட்டையாகப் பேசினர்.

ஏழு வாசகங்கள் :


அந்தச் சூழலில் சிலுவையில் தொங்கியபடி இயேசு சொன்ன முதல் வார்த்தை :

1. "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்கள் உணராமல்  இப்படிச் செய்கின்றனர்"  (St. Luke 23:34) என்றார்.


இரண்டு குற்றவாளிகளுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தார். அதில் ஒருவன் அவரை கேலி செய்து அவமதிப்பாகப் பேசினான். "நீ கடவுளின் பிள்ளை என்றால் உன்னையும் காப்பாற்றிக் கொள். எங்களையும் விடுதலையாக்கு பார்ப்போம்" என இகழ்ந்தான்.

மற்றொருவன் அவனைப் பார்த்து, "நாம் குற்றம் செய்ததால் தண்டிக்கப்படுகிறோம். இவர் குற்றவாளியல்ல. இந்த மரண நேரத்தில்கூட உணக்கு உணர்வு இல்லையா?" என வேதனையோடு அவனைப் பார்த்துப் பேசினான்.

பின்பு இயேசுவைப் பார்த்து "இறைவனின் மைந்தனே, உமது இறையரசு ஒருநாள் நிச்சயம் அமையும். அப்போது என்னை மறக்காமல் சேர்த்துக் கொள்ளும்" என்று வேண்டினான்.

அப்போது இயேசு சொன்ன இரண்டாவது வார்த்தை :

2. "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என்பதை உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"  (St. Luke 23:43) என்றார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய சீடர்களில் புனித யோவான் (St. John) மட்டுமே அருகிலிருந்தார். அவருடைய தாயாரும் அவருடன் பணிசெய்த சில பெண்களும் உடனிருந்தனர். அந்த துயர நேரத்திலும் இயேசு தமது தாயாரின் எதிர்கால பராமரிப்பைக் குறித்து கரிசனையுடையவராய் இருந்தார். 




அப்போது இயேசு கூறிய மூன்றாவது வார்த்தை :

அவர் தமது அன்பான சீடனைப் பார்த்து, தனது அம்மாவைச் சுட்டிக்காட்டி 

3. "இவரே  உன் தாய்" என்றார். பின்பு தனது தாயிடம்  "அதோ உன் மகன்" (St.John 19: 26 & 27) என்றார்.

நான்காவது அவர் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது; அவர் சொன்னது 

4. "என் தந்தையே, என் தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்?" (St.Mathew 27:46)

இது ஒரு பரிதாபகரமான கைவிடப்பட்டதொரு ஏமாற்றம் நிறைந்த கதறுதலைப் போலத் தோன்றும்.  ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது நடக்காததால் ஏற்பட்ட அவலக்குரல் போலவும் இருக்கிறது. 

ஆனால் இதற்குப் பின்பு அவர் கூறிய இறுதி வார்த்தைகள் அவர் முடிவுவரை இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறை சாற்றுகிறது.

பாவம் செய்தால் கடவுளின் பிரசன்னம் தங்களை விட்டு நீங்கி விடும் என்பது யூதர்களின் வரலாற்று அனுபவம். அது யூத சமயத்தின் நம்பிக்கை. எனவே அவர்கள் பாவம் செய்ததாக உணர்ந்து வேதனைப்படும்போது கடவுளின் தண்டனையிலிருந்து  தப்பிக்க மிருகங்களைப் பலியிடுவது வழக்கம். 

அவ்விதம் குற்றமற்ற இயேசு மக்களின் பாவங்களுக்குப் பலியானார். அவ்வித பலி நேரத்தில் இறைவனின் பிரசன்னத்துக்கும் இயேசுவுக்கும் இடைவெளி ஏற்பட்டது. தந்தையின் பிரசன்னத்தை இழந்த அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் இயேசுவிடமிருந்து வெளிப்பட்ட கதறலே இந்த வாசகம் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

ஐந்தாவதாக அவர் சொன்ன வார்த்தை :

5. "தாகமாயிருக்கிறேன்"( St. John 19:28) என்பதாகும்.

முன்னிரவு தொடங்கி ஏறக்குறைய காலை 9 மணிக்குச் சிலுவையில் அறையப்படும் வரை விசாரணைக்காக அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்பட்டார். அதின் பின்பு கசையடி, தலையில் முள் முடி சூட்டப்படுதல், சிலுவையைச் சுமந்து ஊர்வலம், பரியாசம், கேலி, அவமானம் என உடலாலும், மனதாலும் சிறுமைப் படுத்தப்பட்டார். 

அந்த கோரச் சூழலில் அவர் தாகத்தால் தவிப்பதைக் கண்டு  சிலுவையில் அறையப்படுபவர்கள் வலி தெரியாமலிருக்கக் கொடுக்கப்படும் மயக்கம் தரும் காடிநீரைப் பஞ்சில் தோய்த்து ஒரு கோலில் வைத்து அவரிடம் நீட்டினர். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு ஆறாவதாகச் சொன்ன வார்த்தை :

6. "நிறைவேறியது" என்றார். (St.John 19:30). 

சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கையின் நோக்கம், எதற்காக வாழ்கிறோம் என்பது தெளிவாகத் தெரியாது. ஆனால் இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்வின் நோக்கம் இதுதான் எனப் பலமுறை தெளிவாகக் கூறினார். அவர் இப்படித்தான் மரணமடைவேன் எனக் கூறிய போது அவருக்கு நெருக்கமான சீடர்கள் அதைக் கோபத்துடன் எதிர்த்தனர். ஆனால் இயேசு அவர்கள் எதிர்ப்பை கண்டித்தார். 

தமது மரணம் இவ்விதம் தான் நிகழும் என அவர் கூறியது போலவே நிறைவேறியது. 




இறுதியாக ஏழாவது வார்த்தையாக மாலை மூன்று மணியளவில் சொன்னது :

7. " தந்தையே, உமது கரங்களில் எனது உயிரை ஒப்படைக்கிறேன்"  
(St. Luke 23:46) என்று உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

படங்கள் இணையத்திலிருந்து

2 கருத்துகள்: