சனி, 13 ஜூன், 2020

கவனித்துப் பாருங்கள்

  தகவமைப்பு.  

 

  
வறண்ட வெறுமையான 
ஊளையிடும்
பாலை நிலத்தின்
அவாந்தர வெளியில்
அழகியதொரு சப்பாத்திக்கள்ளி  

சூழல் குறித்து 
முறுமுறுக்காது 
தன்னைத்தான் பொருத்தி
நீர் ஆவியாகாவண்ணம் 
கிளைகள் நீக்கி 
இலைகள் துறந்து  
தண்டில் பாத்திகட்டிப்
பனி நீரை 
வேருக்குப் பாய்ச்சி 
பாதுகாக்க
முட்களைச் சூடி 
வறண்ட நிலம் மகிழக்
கடுவெளி களிக்கப் 
புஷ்பம் பூத்துச் சிரிக்கிறது

வான வீதியில்
உல்லாசமாக
உலாவருகின்றன
சில பறவைகள்

அவை
விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை

அவைகளுக்குக்
களஞ்சியமுமில்லை
பண்டகசாலையுமில்லை
அதற்காக அவைக்
கவலைப்படுவதுமில்லை

கூடித் திட்டமிட்டு 
சிறகை விரித்துச்
சோர்வின்றி பறந்து 
உணவைத் தேடிக் 
கண்டடைந்து 
களிக்கின்றன

அடர் வனத்தில்
உயர்ந்ததொரு மரம்

அவை
நூல் திரிப்பதுமில்லை
ஆடை நெய்வதுமில்லை

எனினும்
மகிமை பொருந்திய
மன்னர் அணியும்
மெல்லிய ஆடையினும்
மெலிதான மலரை
அணிந்து அழகுடன்
மிளிர்ந்து, கவர்ந்து
சந்ததியைக் கடத்துகிறது

இயற்கையோடு 
இயைந்தவை
சுயமதிப்பை,  
இருப்பை, 
மகிழ்ச்சியை 
எச் சூழலிலும் இழப்பதில்லை

அவை 
தம்மைத்தாமே
தகவமைக்கின்றன. 
மறைகின்றன.
மறுரூபமாகின்றன.

அதிகாலைப் பனித்துளி 
புல்லின் முனையில் பூ
காற்றில் தொலைந்த மேகம்
வெட்டி மறையும் மின்னல்

தோற்றமும் மறைவும்
நீர்க்குமிழி எனினும் 
தத்தம் கடமையை 
நிறுத்துவதில்லை

வாழ்வின் இருப்பை 
எது இறுதி செய்கின்றன?  
உண்மையை யார் உணர்வார்?

தகவமைப்பு 
உயிர்களின் வாழ்வியல் 
ஓர் புரிபடா சுழற்சி 

தேடல்
கூர்ந்து கவனித்தல்  
இயல்பைப் புரிதல்
தெரிந்து கொள்ளுதல் 
சோர்வின்றி உழைத்தல் 
அடைதல் 
அனுபவித்தல்
உண்மை உணர்தல்
பயணித்தல் அன்றி விலகல்
தன் வினை உணர்தல் 
சீர் செய்தல் 
மீண்டும் ஓர் புதிய தேடல்

புகையாக 
வாழ்க்கை கரைகிறது 
வாசனைகள் மட்டும் 
எச்சமாகக்
காற்றோடு காற்றில் 
கண்ணுக்குப் புலப்படா
நுண் துகளாக

வாழ்வுக்கேற்ற வாசனை 
வாசத்துக்கேற்ற மீள் வாழ்வு

தகவமைப்பு : மாறுகின்ற சூழலுக்கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்கின்ற திறன்.  

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

6 கருத்துகள்:



  1. தோற்றமும் மறைவும்
    நீர்க்குமிழி எனினும்
    தத்தம் கடமையை
    நிறுத்துவதில்லை

    வாழ்வின் இருப்பை
    எது இறுதி செய்கின்றன?
    உண்மையை யார் உணர்வார்?

    அருமை.. நன்றி..


    பதிலளிநீக்கு
  2. இயற்கையோடு இயைந்து வாழ பழகி விட்டால் துன்பம் நம்மை அண்டாது, ஆனால் மனிதன் தமக்கு ஏற்றபடி இயற்கையை மாற்றுவதால் தான் துன்பத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

    🙏 நன்றி பாண்டியன் 🙂

    பதிலளிநீக்கு
  3. வாழ்வின் தத்துவத்தை உதாரணங்களுடன் சிறப்பாகச் சொல்லிச் செல்கிறது அழகிய இக்கவிதை.

    /அவை
    தம்மைத்தாமே
    தகவமைக்கின்றன.
    மறைகின்றன.
    மறுரூபமாகின்றன./

    பாடம் சொல்லும் விந்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருமாற்றத்தின் விந்தையைப் புரிந்து கொள்ள முயல்வது வாழ்வைச் சுவாரஸ்யம் ஆக்குகிறது :). நல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மேடம்.

      நீக்கு