நாலடியார் : நான்கு பாடல்கள்
1 . செல்வம் நிலையற்றது.
பாடல்:
தகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க
அகடு உற யார் மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
பொருள்:
ஏரில் எருதைப் பூட்டி நிலத்தை உழுது விவசாயம் செய்கிறார். அதில் குற்றமற்ற செல்வம் விளைகிறது.
அச் செல்வத்தையும், பலரோடும் கூடிப் பகிர்ந்து மகிழ்வாக உண்டு வாழ வேண்டும்.
ஏனெனில், செல்வமானது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருப்பது இல்லை.
அது அகலமாகக் கால் பரப்பிக்கொண்டு ஓடும் வண்டிச் சக்கரம் போல இடம் மாறிக் கொண்டே இருக்கும்.
2. தொடர்வது
பாடல்:
'நின்றன நின்றன நில்லா' என உணர்ந்து,
ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து,
உடன் வந்தது வந்தது, கூற்று.
பொருள்:
உறவுகள், பொருட்கள், செல்வம், அதிகாரம், புகழ் இவை எதுவும் நம்முடன் என்றும் இருக்கப் போவதில்லை. இதனை நன்கு உணர்ந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியெனில், எது நம்முடன் என்றும் நிலைத்துத் தொடர்ந்து வரும்?
நாம் செய்யும் செயல்களின் பயன்கள் மட்டுமே. அவை நம்மை விட்டுப் பிரியாமல் நிலையாகத் தொடர்ந்து வருபவை.
கூற்றுவன் வேலை உடலையும், உயிரையும் பிரிப்பது ஆகும்.
அவர் ஒவ்வொரு நாளையும் அழித்துக்கொண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
ஆகவே நம்முடன் நிலைத்து நிற்கும் அறச் செயல்களை விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
3. விட்டுவிடுதல்
பாடல்:
என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால்,
பின் ஆவது என்று பிடித்து இரார்,
முன்னேகொடுத்தார் உயப் போவர் கோடு இல் தீக் கூற்றும்.
தொடுத்து ஆறு செல்லும் சுரம்.
பொருள்:
நல்லவர்கள் கையில் எவ்வளவு மிகச் சிறந்த ஒன்று கிடைத்தாலும் கூட, அது தனக்குப் பின்னர் பயன்படும் என்று, தங்களது கைவசம் அதைப் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்.
மாறாக, அவர்கள் வாழும் காலத்திலேயே அதைத் தேவையுள்ளவர்களுக்குப் பயன்படும்படி கொடுத்து விடுவார்கள்.
இதன் மூலம் தாம் மறைந்த பிறகும் வாழும்படியான புகழை நிலைநாட்டி விட்டு, நேர்மையாக நடந்து கொள்ளும் கூற்றுவன் அழைத்துச் செல்லும் வழியில் செல்வர்.
4. அறிவுடைமை
பாடல்:
வெறி அயர் வெங் களத்து வேல்மகன் பாணி
முறி ஆர் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க,
மறி குளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடையார் கண் இல்.
பொருள்:
இறைவனுக்குப் படைத்துக் கொண்டாடும் விழா அங்கு நடக்கிறது.
ஓர் ஆட்டுக் குட்டி பலி கொடுக்க கட்டப்பட்டுள்ளது.
அதைப் பலியிடும் பூசாரி உடுக்கு அடித்துக் கொண்டு பாட்டுப் பாடுகிறார். அந்த ஆட்டுக் குட்டியின் கழுத்தில் இலை தழையால் கட்டிய மாலை தொங்கவிடப் பட்டிருக்கிறது.
ஆட்டுக்குட்டி தனக்கு நிகழ்வது குறித்து எதுவும் அறியாமல், மாலையில் உள்ள அந்தத் தழையை மகிழ்ச்சியுடன் உண்கிறது.
அது போன்ற பேதைமையில் அடையும் மகிழ்ச்சி அறிவுடையவர்களிடம் இல்லை.