செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

41. கொள்ளை விரும்பேல்

கொள்ளை விரும்பேல்: 

 (ஆத்திசூடி - ககரவர்க்கம்) 


பிறர் பொருளை அபகரிக்க ஆசைப்படாதே என்பது இதற்கான பொதுவான விளக்கம்.

பொதுவாக ஒரு குழுவாக இணைந்து ஈடுபடுவது கொள்ளை. ஆகத் தீய வழியில் பொருள் ஈட்ட விரும்பும் மனிதர்களுடன் சேர்ந்து தவறான வழியில் பொருள் சேர்க்க ஆசைப்படாதே எனவும் இதைப்  புரிந்து கொள்ளலாம்.

திருமறையில் அரசர் சாலமன்  எழுதிய நீதி மொழிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள்:

என் மகனே, தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே. 

அவர்கள் உன்னைப் பார்த்து, 

“எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்; பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; 

படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழுமையாக விழுங்குவோம். 

எல்லா வகையான விலையுயர்ந்த அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம். நீ எங்களோடு சேர்ந்துகொள்; எங்களோடே பங்காளியாயிரு;  நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும்" 

என்று அவர்கள் சொல்வார்களாகின்;

என் மகனே, அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; பாவிகள் உனக்கு  நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.

அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன. அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.

எவ்வகையான பறவையானாலும் சரி, அதைப் பிடிக்க, அதன் கண்முன்னே வலையை விரிப்பது வீண். மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.

ஆனால் அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே  ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும். 

தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் அதை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.