திருவாசகம் - தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
49. நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
50. மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை 51. மறைந்திட மூடிய மாய இருளை
52. அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
53. புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
54. மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
55. மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
56. விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
57. கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
58. நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
59. நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
60. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
61. தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
பொருள் :
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
பிரபஞ்சம் ஐந்து பூதங்களின் சேர்க்கை. ஒவ்வொன்றிற்கும் ஒரு நிறம் உண்டு.
மண் - பொன்னிறம்
நெருப்பு - சிவப்பு
காற்று - கருமை
நீர் - வெண்மை
ஆகாயம் - புகை
இந்த ஐம்பூதங்களிலும் இறைவன் மறைந்திருக்கிறான்.
இறைவனை அகக் கண்களால் பார்க்க முடியாது. அந்த இறைவனை விண்ணில் வசிக்கும் தேவர்கள் எப்போதும் போற்றித் துதிக்கின்றார்கள்.
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
மனம் புலன்கள் வசப்பட்டு இன்பம் தரும் என நம்பி பல தீயச் செயலில் ஈடுபடுகின்றன. அவை தரும் இன்பம் தற்காலிகமானது. அது பின்பு துயரமாக மாறுகிறது.
அறச் செயல்கள் நல்லது. எனினும் அவையும் மீண்டும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கிறது.
புண்ணியம், பாவம் என்னும் இரு வினைகளின் அறுக்க முடியாத கயிற்றால் மனம் கட்டப்பட்டு அறியாமை என்னும் மாய இருளில் சிக்கித் தவிக்கிறது.
புறந்தோல்போர்த் தொங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
உடல் உயிர் தங்கும் வீடு. அதன் வெளித் தோற்றம் அழகாக இருக்கலாம்.
ஆனால் உட்புறம் எங்கும் அது காண்பதற்கு அருவருப்பானது. அந்த அழுக்கை அழகிய தோல் மூடியுள்ளது.
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
விலங்குகள் முற்றிலும் உணர்வால் செயல்படுபவை. பசியும், காமமும் வந்தால் தன்னிலை மறந்து தன்னிச்சையாகச் செயல்படும்.
மனிதனுக்கு மட்டுமே இது நன்மை, இது தீமை என மனதில் எழுதப்பட்டுள்ளது. இதுவே புத்தி. இது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடையது.
எனினும் புலன் ஐந்தும் செய்யும் சூழ்ச்சியால் மனித மனம் மயங்கி அதன் விழிப்புணர்வை இழந்து விலங்கு போல் ஆகிறது.
இந்தப் புலன் தரும் மயக்கத்தில் இன்பமாகத் தோன்றி துன்பத்தைத் தரும் கவர்ச்சியில் மனம் இழுப்புண்டு மதி மயங்கி மனிதன் விலங்காகி விழுகிறான்.
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
இறைவன் மீது ஏற்பட்ட அன்பால் என் மனம் கசிந்து உருகுகிறது. என்னிடம் சிறிதளவுகூட நல்ல குணம் இல்லை. நீயோ மிகத் தூய்மையானவன். மாசற்றவனே! என் மீது கருணை புரிந்து பூமியின் மீது எழுந்தருள்வாய். உமது நீண்ட திருவடிகளை நான் பற்றிக்கொள்வேன்.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
நாய் நன்றியுடையது. தனது எஜமான் யார் என்கிற உணர்வு உண்டு. தலைவனுக்குக் கீழ்ப்படியும். ஆனால் மனிதன் எளிதாக நன்றி மறக்கும் இயல்புடையவன். கீழ்ப்படிய மாட்டான். தனது சுக வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதால் இறைவனையும் ஏற்க மாட்டான்.
நான் நாயினும் கீழாக இருப்பவன் . நீயோ தாயினும் மேலாகிய அருள் நிறைந்த உண்மைப்பொருள்.
சாரம்:
எனவே மாணிக்க வாசகர் தன்னை மனிதனாக அல்ல; நாயினும் கீழாகத் தாழ்த்துகிறார்.
அறியாமை இருள் அகல மாசற்ற இறைவனை வேண்டுகிறார். பாவம், புண்ணியம் எனும் அறுக்க முடியாத கயிற்றால் கட்டப்பட்ட உயிரை விடுவிக்க மன்றாடுகிறார்.
உடல் தோலால் மூடப்பட்டு உள்ளே அருவருப்பு நிறைந்ததை உணர்ந்து புலன் மயக்கம் நீங்க முறையிடுகிறார்.
ஆகக் கடவுள் தன்னை தாயன்புடன் குருவாக இருந்து போதித்து பாவ புண்ணியங்களை நீக்கி முக்தி பாதையில் வழி நடத்துவதாக நன்றியுடன் பாடுகிறார்.
நன்றி
பதிலளிநீக்குவணக்கம் ரவி.
நீக்குYour explanation is crystal clear. Very happy reading it. Subramanian Ramanathan
பதிலளிநீக்குThank you.
நீக்கு