சனி, 8 ஜூலை, 2017

கடந்து வந்த பாதை : கவனித்துப் பாருங்கள்.

கடந்து வந்த பாதை : கவனித்துப் பாருங்கள்.




"Nobody can go back and start a new begining, but anyone can start today and make a new ending."


வருடத்தின் ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டது. பொதுவாக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யும் காலம். இலாபம் நஷ்டங்களைப் பரிசோதித்து நிறுவனத்தின் செயல்பாடுகளை மறு சீரமைப்பர்.

தனிப்பட்ட நமது வாழ்விலும் குறிப்பிட்ட கால இடைவெளியில், நமது செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது சாலச்சிறந்தது.

பாரபட்சமற்ற சுய பரிசோதனை நமது மீதமுள்ள வாழ்க்கைப் பயணத்தை எதிர்கொள்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும்.

ஒரு கப்பல் பயணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம் இஃது. அது நீண்ட தூர நெடிய பயணம். பயணிகளில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாகக் குடித்து, நடனமாடி, களித்து,  இன்புற்று பொழுது போக்குகின்றனர்.

தீடிரென இயற்கை சூழல் மாறுகிறது. கடும் சூறைக்காற்று வீசுகிறது. அலைகள் சீறி எழும்புகின்றன. இடியுடன் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

கப்பலின் மாலுமி செய்வதறியாது திகைக்கிறார். கப்பல் பயணிகளின் ஒட்டுமொத்த மனோபாவமும் மாறுகிறது.

எங்குப் பார்த்தாலும் பயணிகள் எவ்வித பேதமுமின்றி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். பரஸ்பரம் நம்பிக்கை, அன்புகூர்தல், அனுசரணை பெருகுகிறது. பஜன்களின் ஒலியும், தொழுகையின் பாடல்களும் ஒலிக்கின்றன. புனித நூல்கள் வாசிக்கப்படுகின்றன. மதுவின் வாசமே இல்லை. ஏறக்குறைய அது புனிதப் பயணம் போல மாறிவிட்டது.

ஒரு வாரக் காலத்தில் மெல்ல மெல்லக் காற்றும், மழையும் அமரத் தொடங்குகின்றன. இயல்பு நிலை மெதுவாக திரும்பத் துவங்குகிறது. மக்களின் அச்சவுணர்வு அகலத் தொடங்குகிறது.

அவர்களது முகங்களில் திரும்பவும் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பிறக்கின்றன. ஒருவரையொருவர் ஆரத்தழுவி கடவுளைத் துதித்துப் புகழ்ந்து போற்றுகின்றனர்.

மூன்று நாள் கழித்து அந்தச் சூழல் மீண்டும் குடியும், களிப்பும், வெறிப்புமாக மாறியது.

இது மகாத்மா காந்தியின் சுயசரிதையில் அவரால் வேதனையோடு எழுதப்பட்டுள்ள ஒரு உண்மைச் சம்பவம்.

துன்பமும், ஆபத்தும் நேரும்போது மாத்திரம் கடவுளை கருத்தாய் தேடுவதும், உண்மையுள்ளவராக வாழ முற்படுவதும் மாய்மாலம்!! 

எத்து வேலை!! 

இது சுயநலத்தின் மறு உருவம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

நம்மைப் பாரபட்சமின்றி சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

வாழ்வில் மாற்றங்கள் என்பது ஆழமான புரிதலினாலும், உள்ளான மனம் திரும்புதலினாலும் ஏற்பட வேண்டும்.

தவறுகளை, குறைகளை மறைக்கவும், சுய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூக மரியாதையை பெற்றுக் கொள்ளவும், இழிவான பண ஆதாயத்தை அடையவும் நல்ல மனிதர்கள் போல வெளி வேடமாக நம் வாழ்க்கை இருக்கிறதா?

அல்லது

நமது ஆசை, சிந்தனை, சொல், செயல் ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறதா?

தற் பரிசோதனையின் சாராம்சம் இது தான்.

நமது உண்மையான இயல்புக்கும்,  இந்தச் சமூகத்திற்கு நம்மை நாம் அடையாளப்படுத்த முற்படுத்துவதற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு!

இறுதியாக ஒரு சின்ன மதிப்பீடு!


கடந்து சென்ற இருபது வருட கால இடைவெளியில் நம்மைச் சுற்றி நிகழ்ந்த மாற்றங்களைச் சற்று உற்றுப் பார்ப்போமா?

தானும், தான் சார்ந்த குடும்பமும் மட்டுமே வாழ வேண்டும் என எண்ணி அகந்தையோடு நெறிதவறி  வாழ்ந்த உறவினர், நண்பர், அயலார் வாரிசுகளின் தற்போதைய நிலை என்ன?

அற்பமாக எண்ணப்பட்ட, சிறுமையும் எளிமையுமான கடவுளைப் பற்றி வாழ்ந்த குடும்பங்களின் சந்ததியினரின் குழந்தைகள் எங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

ஒற்றை வரியில் பதில் கூறிவிடலாம்.

உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான்.

நம் வாழ்வைச் சீர் தூக்கிப் பார்த்துக் குறைகளை களைந்து, பொறுமையுடன் முன்னேறுவோம். வாழ்வு நீண்ட நெடிய பயணம். அற்ப ஆதாயத்திற்காக வழி பிறழாதிருப்போம்.

ஒவ்வொரு செயலும் அதின் எதிர் விளைவைக் கட்டாயம் ஏற்படுத்தும். அதை மனதில் எப்போதும் நிறுத்துவோம். கவனமுடன் செயலாற்ற கடவுளின் அருள் வேண்டித் தொடர்ந்து பயணிப்போம்.

உள்ளத்தால்  பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

6 கருத்துகள்:

  1. அருமையான கருத்துக்கள் + முடிவில் சிறப்பான குறளோடு...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும்,உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி கவிஞர்
      திரு. மீரா செல்வகுமார்.

      நீக்கு
  3. உண்மை நண்பா....காந்தியின் வருத்தம் மாறும் நிலை வராமல் போய்விடுமோ என்கிற அச்சம்.... எனினும் அடுத்த தலைமுறை அதை உண்டாக்கும் என்று நம்புவோம்..

    பதிலளிநீக்கு