ஞாயிறு, 5 ஜூலை, 2020

38. கெடுப்பது ஒழி

 பிறருக்குத் துன்பம் இழைக்காதே.

(ஆத்திசூடி - ககரவர்க்கம்) 

 


கெடுதல் ஒழி : பிறருக்குக் கெடுதல் தரும் செயல்களைச் செய்யாதே. 

மனதாலும் பிறர்க்குக் கெடுதல் செய்ய நினைத்தல் கூடாது. அது தீமை. பிறரைக் கொடுமைப்படுத்தி இரசிப்பது ஓர் குரூர குணம். அது வாழ்வில் பழியையும் தீரா பாவத்தையும் விளைவிக்கும்.

மனம் ஏன் பிறர்க்குத் தீமை செய்ய விழைகிறது?

"பிறரை அடக்கி ஆள வேண்டும் எனும் வேட்கை",  "ஆதிக்க திமிர் உணர்வு" மனித மரபணுக்களில் பெருமிதத்தின் அடையாளமாக ஆழமாகப் பதிந்துள்ளது. 

அந்த உணர்வு சீண்டப்படும்போது அவை பிறர்க்குக் கெடுதல் விளைவிக்கும்  செயல்களாக வெளிப்படுகின்றது. 

"நான் நினைத்தபடிதான் சகலமும் நடக்க வேண்டும்" எனும் அகந்தை நடத்தைப் பிறர் மனதை நோகச் செய்கிறது. 

"சுய மோகம்" பிறருக்கு அநீதியைச் செய்ய அச்சப்படுவதில்லை.

ஒரு கொள்கையின் மீது உள்ள தீவிர வெறி மனக் கண்களைக் குருடாக்கும். இவை மாற்றுக் கருத்துக்களைப் பேச அனுமதிப்பதில்லை. மாற்றுக் கருத்துடையவரைக் கொடுமைப்படுத்தவும் தயங்காது..





இரு விதங்களில் தீங்கிழைத்தல் நிகழ்கிறது. ஒன்று உடலை 
வன்முறையாகத் தாக்கி 
காயப்படுத்துதல். 

மற்றது உளவியல் ரீதியாக மனதை நோகடித்தல். 

தங்கள் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுபவர் மீது அமிலத்தை வீசுதல், 
சூடு போடுதல், அடித்துக் காயப்படுத்துதல், கொலை செய்தல் 
எனப் பல வகையில், உடல்ரீதியான வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. 

நேரிடையாக கெடுதல் செய்ய இயலாத வலிமையற்றவர்கள் வஞ்சக வடிவில் மறைமுகமாகப் பிறர்க்குக் கெடுதல் செய்கின்றனர். இவை உளவியல் 
தாக்குதல்கள்.

அமில வார்த்தைகளால் பேசிக் காயப்படுத்துதல், அவதூறு செய்திகளைப் பரப்புதல், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல், குழுவாக இணைந்து எதிர்ப்பவரைத் தனிமைப்படுத்துதல், புறக்கணித்தல், 
பேசாதிருத்தல், பொதுவெளியில் அவமதித்தல், காத்திருக்க வைத்தல், நடித்து ஏமாற்றுதல்  போன்றவை உளவியல் தாக்குதல்கள்.  

பிறருக்குத் தீங்கு தரும் செயல்களுக்கு 
உளவியல் பாதிப்புகளும் முக்கியமான காரணமாக இருக்கின்றன. மனதில் மறைந்திருக்கும் வன்ம உணர்வுகள் 
கெடுதலைச் செய்யத் தூண்டுகின்றன. அவை ஒழிக்கப்பட வேண்டும். 

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் சில கற்பனை நிகழ்வுகள் 
விவரிக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு சம்பவங்களின் 
பின்னணியாக மறைந்திருக்கும் உளவியல் பாதிப்பைக் கூர்ந்து கவனிப்பது நல்லது.

சில சம்பவங்கள் :




1. ஆனந்த் திறமையான பணியாளர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரவி இவரை விட மிகத் திறமையாகப் பணி புரிகிறார். ரவி வேலைகளைச் சுறுசுறுப்புடன் கச்சிதமாகச் செய்து முடிக்கிறார். எல்லோரும் அவரைப் பாராட்டுகின்றனர். 

ஆனந்த்தால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தின் பொறாமையுணர்வு ரவியைத் துன்பப்படுத்தத் தூண்டுகிறது. திறமையை அங்கீகரிக்க மறுக்கும் அவரது மனநிலை ரவியைக் குறை கூறு தூண்டுகிறது. அவனது சிறிய அற்ப தவறுகளைக் கூடப் பெரிது படுத்தி அலுவலகத்தில் அவமரியாதை செய்கிறார். ஒரு குழுவாகச் சேர்ந்து ரவியைத் தனிமைப் படுத்தி அகற்ற முயல்கிறார். 

2. சங்கருக்கு வேலையில் போதிய திறமை கிடையாது. தனது வேலையைத் தக்க வைக்க உயர் நிலையில் உள்ளவர்களின் பலவீனத்தை அறிந்து கொள்கிறான். அவர்களது முறையற்ற தேவைகளை மறைமுகமாகப் பூர்த்தி செய்கிறான். அலுவலகத்தில் செல்வாக்கு உடையவனாக வலம் வருகிறான். சங்கருக்கு நேர்மையாக பணிபுரியும் மணியைக் கண்டால் காரணமின்றி எரிச்சல் வருகிறது. மணிக்குத் தொல்லைகள் ஏற்படுத்துகிறான்.

3. ஜோ ஒரு உல்லாசப் பிரியன். பெண் பித்தன். தனது மன உணர்வுகளைத் திருப்தி செய்வதற்காகப் பெண்களை ஏமாற்றுகிறான். தெரிந்தே கெடுதல் செய்கிறான். பல பெண்கள் வாழ்வு பாழாகின்றது. அவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். அவனுக்கு அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. 

4. குமாரும் ராஜியும் மிகச் சிறந்த உடன் பிறப்புகள். இயல்பில் நல்லவர்கள். பாசமாக வளர்ந்தவர்கள். சிறு வயதிலிருந்து ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்தவர்கள். ராஜி குடும்பத்திற்காகக் கடுமையாக உழைக்கிறாள். குழந்தைகளின் வாழ்விற்காகப் பல தியாகங்களைச் செய்கிறாள். ஆனால்  குமாருக்கும் அவர் மனைவிக்கும் பணத்தை சாம்பாதித்தில் மிகுந்த ஆர்வம். பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்க சமயமில்லை. 

வாழ்வின் பிற்பகுதியில் ராஜியின் குழந்தைகள் உயர்ந்தநிலை அடைந்தனர். குமாரின் குடும்பத்தினரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் ராஜியுடன் பேசுவதை நிறுத்துகின்றனர். அவளைப் பற்றி உறவினர்களிடம் அவதூறாகப் பேசி அவளது நற்பெயரைக் கெடுக்கின்றனர். 

5. செல்வனுக்குக் கனவுகள் ஏராளம். அவனுக்குக் கஷ்டப்பட்டு உழைக்க  விருப்பமில்லை. நிரந்தரமாக எந்தவொரு வேலையிலும் தரித்திருப்பதில்லை. ஆனால் உல்லாசமாக வாழ ஆசை. குடும்பத்தை நடத்த போதிய வருவாய் இல்லை. 
வசதியான வாழ்வையும் இழக்க விருப்பமில்லை. இதனால் வீட்டைச் சுற்றி கடன். இந்த இயலாமை மனைவியிடம் வன்முறையாக வெளிப்படுகிறது. குழந்தைகள் அடிக்கப்படுகின்றனர். கொடிய செயல்களைச் செய்கிறான். 

6. மதனுக்குத் தாம்பத்திய உறவில் தோல்வி. அதைச் சரி செய்ய முறையாகச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் வெட்கம் அவனைத் தடுத்தது. இந்த இயலாமையை மறைக்கத் தன்னைச் சுற்றி வாழ்பவர்களிடம் நல்லவனாக நடிக்கத் துவங்குகிறான். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் மனைவியிடம் கொடியவனாக நடந்து கொள்கிறான். 

இயலாமை மனைவியின் நடத்தைக் குறித்த சந்தேகமாக வளர்கிறது. அவை
மனதைப் புண்படுத்தும் கொடும் அமில வார்த்தைகளாக வெளிப்படத் 
துவங்குகின்றன. 

புறக்கணிப்பு, பேசாதிருத்தல், தனிமைப்படுத்துதல், ஏளனம் செய்தல், வன்முறை பிரயோகித்தல் எனக் கொடுஞ் செயல்களாக அவை விரிவடைகின்றன. துன்பப்படுத்தி கண்ணீர் சிந்தவைப்பதை அவனது மனம் ஆளுமையாக எண்ணுகிறது. 

7. மோகனுக்குத் திருமணமானது. அவன் தன்னைக் கை விட்டுவிடுவானோ எனும் அச்சம் மோகனது பெற்றோரை வாட்டியது. தங்களது ஆதிக்கம் பறி போய்விடுமோ எனும் பயம் அவர்களைப் பீடித்தது. மருமகளைப் பற்றிக் குறை கூறுகின்றனர். வீண் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். மகனது அனுதாபத்தைப் பெற நடிக்கின்றனர். 
திருமண வாழ்வு சீர்குலைகிறது. 

8. அன்பு பெற்றோருக்கு ஒரே மகன். நன்கு  படிக்க வைத்தனர். நல்ல வேலை, திருமணம், குழந்தைகள் என வாழ்வு சுகித்தது. அவனது குழந்தைகள் வளர வளரப் பெற்றோரிடம் பேசுவதற்குக் கூட நேரமில்லை. தொலைப்பேசியில் அவனது குரலைக் கேட்பதற்காக அவர்கள் உயிர் வாழ்ந்தனர். அவர்களிடம் பேசக் கூட. அன்பிற்குப் பொறுமையில்லை. எரிந்து விழுகிறான். வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அவனது  வருகைக்காக மட்டுமே கிராமத்தில் பெற்றோரின் உயிர் மிச்சமாக இருக்கிறது. 

இத்தகைய நிகழ்வுகள் நம்மைச் சுற்றி அனுதினம் நடக்கும் காட்சிகள். இங்குப் பிறரைத் துயரப்படுத்துதல் மிகச் சாதாரணமாக நடக்கிறது. 

இதைச் செய்பவர்களுக்கு தாங்கள் பிறருக்குக் கெடுதல் செய்கிறோம் எனும் குற்றவுணர்வு துளியும் இருப்பது இல்லை. 

பெருமை, வஞ்சனை, மோக இச்சை, பொறாமை, சோம்பல், இயலாமை,  விட்டுக்கொடுக்க மனமின்மை, நன்றி மறத்தல் என பல மன உணர்வுகள் தீயெண்ணமாக உருவெடுக்கின்றன. அவைகள் பிறருக்கு தீங்கிழைக்கும் செயல்களாக வெளிப்படுகின்றன.

தனது அதிகாரத்தைத் தக்க வைக்க மனம் செய்யும் விசித்திர நாடகங்கள் மிகத் தந்திரமானவை. அவற்றை நம்மால் எளிதில் இனம் பிரித்து உணர முடியாது. 

உணர்வுகள் தூண்டப்பட்டால் அறிவு செயலிழக்கும். 




நன்மையைச் செய்வோம் :

ஓர் தீய உணர்வை ஒழிக்க அதைவிட வலிமையான நல்ல நம்பிக்கையைத் தரும் நல் உணர்வு மனதில் விதைக்கப்பட வேண்டும். அவை இனிய அனுபவமாக மாற வேண்டும். 

எந்தவொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என்பது பிரபஞ்ச விதி. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். பிறருக்குத் தீமை செய்வது இறுதியில் நமக்கே கெடுதியாக முடியும்  எனும் உண்மை நம் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். 

நமது வாழ்வின் பல அனுபவங்கள் அதை உணர்த்தும். கற்றுத்தரும். அதை மறக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் அதை நினைவில் கொண்டு வர வேண்டும். 

பிறர்க்குத் தீங்கிழைப்போர்க்குத் தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது. 

பிறருக்குத் தீங்கு செய்ய நினைத்தால் தெய்வத்தின் அருள் நம்மைவிட்டு அகன்றுவிடும். 

பிறருக்குத் தீங்கு செய்தவர் நீதிமன்றத்தை வேண்டுமெனில் ஏமாற்றித் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியும். உலகத்தை நடித்து ஏமாற்றலாம். அது தற்காலிகம்.  ஆனால் தெய்வம் நின்று கொல்லும். 

ஒவ்வொரு மனிதரும் தான் செய்த தீமையை உணராமல் மரிப்பதில்லை. ஒரு கணப் பொழுதாவது அது மனதைக் கேள்வி கேட்கும்.

நன்மை செய்தும் தீமையை எதிர் கொள்ள நேர்ந்தால் பொறுமையுடன் இறை சமூகத்தில் அமர்ந்திருப்பது சாலச்சிறந்தது. துயர நேரங்களில் கடந்த காலத்தைச் சீர்தூக்கிப் பார்த்து சிந்தனை செய்தல் சிறந்தது. நமது பிழைகளை உணரவும் சீர் செய்யவும் அவை உதவும். துயரங்கள் நமது நடத்தையைச் சரி செய்ய உதவுகிறது.

கெடுதல் செய்வோரைப் பழிவாங்கத் 
திருப்பி கெடுதல் செய்வது தவறானது. 
எந்த சூழலிலும்  தீமைக்குப் பதிலடியாகத் தீமை செய்வது நல்லதல்ல. அந்தத் தீயவரை விட்டு விலகுதல் நல்லது. 

தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது என்பது தெய்வீக அருள். கெடுதல் செய்தவரை மன்னித்தல் மனதை உறுதிப்படுத்தும். மனதில் பழி வாங்கும் உணர்வை அகற்றும். மனம் அமைதி அடையும். அப்போது பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு மனதில் பிறக்கும்.

மனதில் அன்பும் நல்ல நம்பிக்கையையும் வளர்த்தெடுப்பது அவசியம். நல் நம்பிக்கை அற நூல்களைத் தொடர்ந்து கிரமமாக வாசிப்பதால் உறுதிப்படுகிறது. நல்ல கூட்டுறவு நல்ல நம்பிக்கையைப் பாதுகாக்கிறது. இறை வேண்டலில் தரித்திருப்பது மனதைத் தூய்மையாக்குகிறது.

ஆக வாழ்வின் சிறந்த அறம் எது?

மனதைத் தூய்மையாக வைத்திருப்பதே சிறந்த அறம். பிற உயிர்க்கு மனதால் கூட தீங்கு எண்ணாதிருத்தல் மனத் தூய்மை.

தனது மனதைத் தூய்மையாக மாற்றுவதற்குப் போராடுவதை விடச் சிறந்ததொரு  வாழ்க்கைப் போராட்டம் வாழ்வில் வேறு எதுவுமில்லை.

அதைத் தான் ஔவை இரு வார்த்தையால் சொல்கிறார். 

"கெடுதல் ஒழி".

ஔவை வலியுறுத்திச் சொல்வது : கெடுதலை அழி என்றல்ல; கெடுதல் ஒழி.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

8 கருத்துகள்:

  1. உணர்வுகள் தூண்டப்பட்டால் அறிவு செயலிழக்கும்.

    உண்மை..

    பதிலளிநீக்கு
  2. நமது மனதில் நல்ல உணர்வுகளும், எண்ணங்களும் உண்டாக இறையின் மீது பற்று வைத்து மனதார வேண்டினால் மட்டுமே முடியும் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  3. நமஸ்காரம். நல்லதை மட்டுமே சிந்தித்து நினைத்து உருமாற்றி செயல்படுத்தி இன்பம் பெற வேண்டும். இதை மனிதில் வைத்தே அவ்வை பாட்டி "கெடுதலை ஒழி" என்று ஆணித்தரமாய் வலியுறுத்துகிறார் .கெடுதல் நினைத்தாலே பாவம் எனில் கெடுதல் செய்தால் என்ன நிலை?
    அதனால் அதை ஒழிப்போம் ....அவ்வை பாட்டி சொல் படியே
    .....நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இங்கே சொல்லப்பட்டிருப்பவை சில பேரின் கதைகள். ஆனால் உலகம் முழுவதும் இத்தகு மனிதர்களைப் பார்க்க முடிகிறது. நன்மை நினைப்போம். சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அறம் ஏன் மனிதனுக்கு அடிப்படையானது என்பதைப் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை ஆயிரம் கதைகள் தேவைப்படுமோ? தெரியவில்லை! மிக்க நன்றி.

      நீக்கு