சனி, 15 அக்டோபர், 2022

46. சித்திரம் பேசேல்

இனிமையான பொய்களைப் பேசாதே.

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலத் தோன்றும் வண்ணம் பேசாதே. 

சித்திரம் என்பது மனதில் உள் வாங்கிய ஒரு காட்சியை, கற்பனை எண்ணங்கள் கலந்து பார்ப்பவர் மனதைக் கவரும் விதத்தில் ஒரு அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்துவது. 

"சித்திரம் பேசேல்" என்பது அது போல ஒரு நிகழ்வோடு தன் கற்பனை எண்ணங்களைக் கூட்டி, கேட்பவர் கவரும் வகையில் உண்மை போலப் பேசுக் கூடாது எனக் கற்றுத் தருகிறது. உள்ளதை உள்ளபடியே பேச வேண்டும். கூட்டிக் குறைத்துப் பேசக்கூடாது.

துரதிர்ஷ்டவசமாக ஒருவருக்குப் பிடித்த விதமாக உண்மையைத் திரித்துப் பேசி, தனது தேவையைப் பூர்த்தி செய்து சாதித்துக் கொள்ளுவது, இன்றைக்குச் சாமர்த்தியம் என்று பாராட்டப் படுகிறது.

ஆசாரக்கோவை:

ஆசாரக்கோவை என்னும் நூல் "நல்லோர் எப்படிப் பேசுவார்கள், எப்படிப் பேச மாட்டார்கள்" என்கிற ஓர் பட்டியலைக் கொடுக்கிறது.

விரைந்துரையார் 
மேன்மேலுரையார் 
பொய்யாய பரந்துரையார் 
பாரித்துரையார் –
ஒருங்கெனைத்தும் சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால் 
சொல்லுக செவ்வியறிந்து.

பொருள்:

விரைவாகப் பேச மாட்டார்கள்.
சொன்னதையே திரும்பச் சொல்வதில்லை. 
பொய்யாகத் திரித்துப் பேசவும் மாட்டார்கள்.
மிகைப்படுத்திச் சொல்வதில்லை.

பொருள் முழுவதும் விளங்கும்படி சுருக்கமாகப் பேசுவார். காலத்திற்குப் பொருத்தமாக, எது தேவையோ அதை மட்டும் பேசுவார்.

ஏன் திரித்துப் பேசுகின்றனர்?

உண்மையைத் திரித்துப் பேசப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாகப் பணம், பதவி மற்றும் முதன்மையாக இருக்க வேண்டும் எனும் விருப்பங்கள்.

அதிகார ஆசை: தான் முதன்மையாக இருக்க விரும்பி உண்மையைத் திரித்துப் பேசுவது. 

பெருமை: முதன்மையான இடத்தை அடைந்து விட விரும்பி பிறரைத் தாழ்த்தி பேசுவது. 

பொருள் ஆதாயம்:  வசதியான வாழ்க்கை விரும்பி உண்மையை மாற்றிப் பொய் பேசுவது. மேல் அதிகாரிகளிடம் அவர்கள் விரும்பும் வகையில் மிகைப்படப் பேசி விரும்பும் காரியத்தைச் சாதித்துக் கொள்வது.

பொறாமை:  பிறர் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மையை மாற்றி அபாண்டமாகப் பழி பேசுவது.

ஆனால் பொய் வேஷம் கலைந்து உண்மை தெரிய வரும் போது அது பாதிக்கப்பட்டவர் மனதில்  ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உறவுகள் முறிந்து விடும். அந்த உறவுகள் திரும்பவும் முன்பு போல இணைவது கடினம்.

செய்ய வேண்டியவை: 

நமக்கு நன்கு உறுதிப்படத் தெரிந்த விசயங்களை மட்டும் பேச வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்பட அறியாத தகவல்களைப் பேசக் கூடாது. கவனமாகப் பார்த்துப் பேசுவது அமைதியை அளிக்கும். அதனால் பின்னர் அவசரப்பட்டுப் பேசி விட்டோமே என வருந்தத் தேவையில்லை. தேவையான பொழுது பேசுவது முதிர்ச்சி.

ஒரு செய்தியைப் பகிரும் முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வது அவசியம். ஒரு செய்தியை முதலில் பகிர வேண்டும் எனும் ஆசையில் அதை ஆராய்ந்து பார்க்காமல் பகிர்வது பல தவறான செய்திகள் பரவ ஏதுவாகிறது. பயனுள்ளது எனக் கருதினால் மட்டும் பகிர்வது நல்லது.

ஆதாயத்திற்காக ஒருவரைக் கவரும் வகையில் உண்மையைத் திரித்துப் பேசுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி அடையும் எதுவும் ஒருபோதும் மகிழ்ச்சியை தராது. கால ஓட்டத்தில் அப்படி அடைந்தவை தீராத துன்பத்தைத் தரும்.

எச்சரிக்கை தேவை:

செய்தி ஊடகங்களில் வரும் பல செய்திகள் அச்சிடப்பட்ட பொய்கள். அதை ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு செய்திக்கு பின்பும் ஒரு வியாபாரம் (Marketting - சந்தைப்படுத்துதல்) உள்ளது. காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும் இது பொருந்தும். 

கூடுமானவரை சமூக ஊடகங்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலிருந்து தள்ளி நிற்பது மனதிற்கு நன்மை தரும். மனதை நல் வழிப் படுத்தும், சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களை, கட்டுரைகள் வாசிப்பது சரியான வழியில் சுய சிந்தனையுடன் வாழ உதவும்.  

இன்றைக்கு ஆதாயம் இல்லாமல் பழகுபவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒருவர் உங்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேசும் காரியங்களில் கவனம் தேவை.

பிறர் குறித்து தவறான செய்திகளை ஒருபோதும் விரும்பி ஆவலுடன் கேட்காதீர்கள். அது ஒரு இழிச் செயல். ஒருவரை குறித்து அவர் இல்லாத போது குறை கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களைக் குறித்தும் வேறு இடத்தில் தவறாகப் பேசுவார்கள்.

இறை நூல்களிலிருந்து: 

தனக்கு வேண்டுபவை குறித்து அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் இந்தப் பாடலில் எழுதியுள்ளார்.

ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்.

மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு விதமாக இனிமையாகப் பேசும் கயவர்கள் உடன் ஒரு போதும் பழகக் கூடாது.

குறள் விளக்கம்: 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும். (விளக்கம்: மு.வரதராசனார் அவர்கள்). 

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது நம் மனமே நமக்கு வேதனை தரும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உலகத்தில் வாழும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடி இருப்பான். 

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். (விளக்கம்: சாலமன் பாப்பையா அவர்கள்)

பேசுவதைக் குறித்த மனுஸ்ம்ருதியில் எழுதப்பட்ட வரிகள் எனக்கு மிக பிடித்தமானது.

சத்யம் ப்ரூயாத் 

ப்ரியம் ப்ரூயாத் ந 

ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் 

(மனுஸ்ம்ருதி 4-138).

உண்மையைப் பேசு.

இனிமையாகப் பேசு.

கசப்பான உண்மையைச் சொல்லாதே.

கேட்பவர் விரும்பி கவனிக்க வேண்டும் என்பதற்காக இனிமையான பொய்களைப் பேசாதே.

 

படங்கள்: இணையத்தலிருந்து நன்றியுடன்..,

வெள்ளி, 7 அக்டோபர், 2022

45. சான்றோர் இனத்து இரு

அறிஞர்களின் குழுவிலே இரு.

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


45. சான்றோர் இனத்து இரு:

நற்குணங்கள் நிறைந்த பெரியோர்களுடன் இரு. 

பலவித நற்‌குணங்கள்‌ நிறைந்த வாழ்க்கை வாழ்பவர் சான்றோர். அந்த நற்குணங்கள் எதுவும் தம்மை விட்டு நீங்கி விடாமல், அறம் சார்ந்த ஒழுங்கு முறையுடன் தங்கள் மனதை அடக்கி காப்பவர்கள்.

ஒருவரது குணம் அவர் யாருடன் சேர்ந்து பழகுகிறார் என்பதைப் பொறுத்து அமையும். 

இன்றைக்குத் துரதிர்ஷ்டவசமாக, முகம் அறியாத நண்பர்கள் உடன் பழகும் போக்கு அதிகரித்து வருகிறது. உண்மை சுபாவம் தெரியாது பழகி வாழ்வை இழந்தவர்கள் அதிகம்.

ஒரு துளி விஷம் உணவில் கலந்தால் அது முழு உணவையும் பாழ் படுத்தி விடும். அது போலத் தீய மனிதர் சேர்க்கை முழு வாழ்வையும் கறை படிந்ததாக்கி விடும். கூடா நட்பு கேடாய் முடியும். எனவே யாருடனும் சேர்ந்து இருக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.

வாழ்க்கைச் சூழல்கள் எப்பொழுதும் ஒரே விதமாக இனிமையாக இருப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாராத கஷ்டங்கள் புயல் போலத் தாக்கும். அதை எதிர்த்துக் கரை சேர சான்றோர் ஆதரவு தேவை. கடினமான காலத்தை எதிர்த்துப் போராடி அதைக் கடந்து வர அது உதவும்.

நல்லவர்களுடன் சேர்ந்து இரு. அவர்கள் சொற்படி நட. அப்பொழுது உனக்கும் சிறந்த வாழ்க்கை அமையும் என ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. 

நல்லவர்கள் இயல்பு மற்றும் பெருமைகள் குறித்து திருக்குறளில் உள்ள 'சான்றாண்மை' எனும் அதிகாரம்  விவரிக்கிறது. 

சான்றாண்மை என்பது 'சான்று+ஆண்மை'.

சான்று என்றால் நிறைந்து எனப் பொருள்படும். 

ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுகை செய்தல் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது பொருள். 

சான்றாண்மை என்பது நற்பண்புகள் நிறைந்த நிறைவானவர் மற்றும் முழு ஆளுமை உடையவர் எனலாம்.

சான்றோர் பற்றி குறள் விளக்கம்: 

சான்றோர் தன்மைகள் குறித்து திருக்குறளில் விவரித்து எழுதப் பட்டுள்ளது. 

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

அனைத்து நற்பண்புகளையும் கடனைப் போல ஏற்றுக் கொண்டு, அந்த கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவது போல நற்செயல்களை இயல்பாகச் செய்வது சான்றோர் குணம்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் 
எந்நலத் துள்ளதூஉம் அன்று.

கல்வி, செல்வம், பதவி போன்றவற்றால் ஒருவர் சான்றோர் ஆவதில்லை. பண்பு என்ற நிறை செல்வமே ஒருவரைச் சிறந்த மனிதராக உயர்த்துகிறது. 

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு 
ஐந்துசால் பூன்றிய தூண். 

அன்பு செய்தல், பழி பாவங்களுக்கு வெட்கப் படுதல், சேர்த்ததைப் பிறர்க்குப் பகிர்ந்தளித்தல், யாவற்றையும் ஆராய்ந்து அறிதல், உண்மை பேசுதல் எனும் ஐந்து பண்புகளும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு. 

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தவம். அடுத்தவரின் தீயச் செயல்களைப் பேசாதிருப்பது சான்றாண்மை

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை. 

திறமையாகப் பணி புரிபவர்கள் தம்முடன் வேலை செய்பவர்களிடம் பணிந்து பேசி, வேலை வாங்கி அதைத் திறம்பட முடிப்பர்; சான்றோர் தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி 
துலையல்லார் கண்ணும் கொளல். 

சான்றாண்மைக்கு வரையறை யாதெனில், தம்மை விடச் சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதே ஆகும்.  

இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு. 

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றாண்மையினால் பயன்தான் என்ன? 

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் ஒருவரிடம் இருந்தால், வறுமை அவருக்கு இழிவாக இருக்காது.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி யெனப்படு வார். 

சான்றோர் சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை போல ஆவார்கள். கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அவர்கள் குணம் எப்போதும் மாறாதது.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் 
தாங்காது மன்னோ பொறை
 
சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் இப்பேருலகம் தன் சுமையையும் தான் தாங்க மாட்டாதது ஆகிவிடும்.

நல்ல பண்புகள் உடையவரோடு நட்பு பாராட்ட ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. நற்பண்புகள் உடையவர் சொற்படி வாழ்வது சிறந்தது எனப்  போதிக்கிறது. காலத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது நமது கையில்.

சேரிடமறிந்து சேர்.


படம் இணையத்திலிருந்து நன்றியுடன்: