இனிமையான பொய்களைப் பேசாதே.
( ஆத்திசூடி - சகர வருக்கம்)
சித்திரம் பேசேல்: பொய்யான வார்த்தைகளை உண்மை போலத் தோன்றும் வண்ணம் பேசாதே.
சித்திரம் என்பது மனதில் உள் வாங்கிய ஒரு காட்சியை, கற்பனை எண்ணங்கள் கலந்து பார்ப்பவர் மனதைக் கவரும் விதத்தில் ஒரு அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்துவது.
"சித்திரம் பேசேல்" என்பது அது போல ஒரு நிகழ்வோடு தன் கற்பனை எண்ணங்களைக் கூட்டி, கேட்பவர் கவரும் வகையில் உண்மை போலப் பேசுக் கூடாது எனக் கற்றுத் தருகிறது. உள்ளதை உள்ளபடியே பேச வேண்டும். கூட்டிக் குறைத்துப் பேசக்கூடாது.
துரதிர்ஷ்டவசமாக ஒருவருக்குப் பிடித்த விதமாக உண்மையைத் திரித்துப் பேசி, தனது தேவையைப் பூர்த்தி செய்து சாதித்துக் கொள்ளுவது, இன்றைக்குச் சாமர்த்தியம் என்று பாராட்டப் படுகிறது.
ஆசாரக்கோவை:
ஏன் திரித்துப் பேசுகின்றனர்?
உண்மையைத் திரித்துப் பேசப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாகப் பணம், பதவி மற்றும் முதன்மையாக இருக்க வேண்டும் எனும் விருப்பங்கள்.
அதிகார ஆசை: தான் முதன்மையாக இருக்க விரும்பி உண்மையைத் திரித்துப் பேசுவது.
பெருமை: முதன்மையான இடத்தை அடைந்து விட விரும்பி பிறரைத் தாழ்த்தி பேசுவது.
பொருள் ஆதாயம்: வசதியான வாழ்க்கை விரும்பி உண்மையை மாற்றிப் பொய் பேசுவது. மேல் அதிகாரிகளிடம் அவர்கள் விரும்பும் வகையில் மிகைப்படப் பேசி விரும்பும் காரியத்தைச் சாதித்துக் கொள்வது.
பொறாமை: பிறர் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மையை மாற்றி அபாண்டமாகப் பழி பேசுவது.
ஆனால் பொய் வேஷம் கலைந்து உண்மை தெரிய வரும் போது அது பாதிக்கப்பட்டவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உறவுகள் முறிந்து விடும். அந்த உறவுகள் திரும்பவும் முன்பு போல இணைவது கடினம்.
செய்ய வேண்டியவை:
நமக்கு நன்கு உறுதிப்படத் தெரிந்த விசயங்களை மட்டும் பேச வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்பட அறியாத தகவல்களைப் பேசக் கூடாது. கவனமாகப் பார்த்துப் பேசுவது அமைதியை அளிக்கும். அதனால் பின்னர் அவசரப்பட்டுப் பேசி விட்டோமே என வருந்தத் தேவையில்லை. தேவையான பொழுது பேசுவது முதிர்ச்சி.
ஒரு செய்தியைப் பகிரும் முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வது அவசியம். ஒரு செய்தியை முதலில் பகிர வேண்டும் எனும் ஆசையில் அதை ஆராய்ந்து பார்க்காமல் பகிர்வது பல தவறான செய்திகள் பரவ ஏதுவாகிறது. பயனுள்ளது எனக் கருதினால் மட்டும் பகிர்வது நல்லது.
ஆதாயத்திற்காக ஒருவரைக் கவரும் வகையில் உண்மையைத் திரித்துப் பேசுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி அடையும் எதுவும் ஒருபோதும் மகிழ்ச்சியை தராது. கால ஓட்டத்தில் அப்படி அடைந்தவை தீராத துன்பத்தைத் தரும்.
எச்சரிக்கை தேவை:
செய்தி ஊடகங்களில் வரும் பல செய்திகள் அச்சிடப்பட்ட பொய்கள். அதை ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு செய்திக்கு பின்பும் ஒரு வியாபாரம் (Marketting - சந்தைப்படுத்துதல்) உள்ளது. காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.
கூடுமானவரை சமூக ஊடகங்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலிருந்து தள்ளி நிற்பது மனதிற்கு நன்மை தரும். மனதை நல் வழிப் படுத்தும், சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களை, கட்டுரைகள் வாசிப்பது சரியான வழியில் சுய சிந்தனையுடன் வாழ உதவும்.
இன்றைக்கு ஆதாயம் இல்லாமல் பழகுபவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒருவர் உங்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேசும் காரியங்களில் கவனம் தேவை.
பிறர் குறித்து தவறான செய்திகளை ஒருபோதும் விரும்பி ஆவலுடன் கேட்காதீர்கள். அது ஒரு இழிச் செயல். ஒருவரை குறித்து அவர் இல்லாத போது குறை கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களைக் குறித்தும் வேறு இடத்தில் தவறாகப் பேசுவார்கள்.
இறை நூல்களிலிருந்து:
தனக்கு வேண்டுபவை குறித்து அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் இந்தப் பாடலில் எழுதியுள்ளார்.
ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்.
மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு விதமாக இனிமையாகப் பேசும் கயவர்கள் உடன் ஒரு போதும் பழகக் கூடாது.
குறள் விளக்கம்:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும். (விளக்கம்: மு.வரதராசனார் அவர்கள்).
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது நம் மனமே நமக்கு வேதனை தரும்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உலகத்தில் வாழும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடி இருப்பான்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். (விளக்கம்: சாலமன் பாப்பையா அவர்கள்)
பேசுவதைக் குறித்த மனுஸ்ம்ருதியில் எழுதப்பட்ட வரிகள் எனக்கு மிக பிடித்தமானது.
சத்யம் ப்ரூயாத்
ப்ரியம் ப்ரூயாத் ந
ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத்
(மனுஸ்ம்ருதி 4-138).
உண்மையைப் பேசு.
இனிமையாகப் பேசு.
கசப்பான உண்மையைச் சொல்லாதே.
கேட்பவர் விரும்பி கவனிக்க வேண்டும் என்பதற்காக இனிமையான பொய்களைப் பேசாதே.
படங்கள்: இணையத்தலிருந்து நன்றியுடன்..,
அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு