வெள்ளி, 7 அக்டோபர், 2022

45. சான்றோர் இனத்து இரு

அறிஞர்களின் குழுவிலே இரு.

( ஆத்திசூடி - சகர வருக்கம்)


45. சான்றோர் இனத்து இரு:

நற்குணங்கள் நிறைந்த பெரியோர்களுடன் இரு. 

பலவித நற்‌குணங்கள்‌ நிறைந்த வாழ்க்கை வாழ்பவர் சான்றோர். அந்த நற்குணங்கள் எதுவும் தம்மை விட்டு நீங்கி விடாமல், அறம் சார்ந்த ஒழுங்கு முறையுடன் தங்கள் மனதை அடக்கி காப்பவர்கள்.

ஒருவரது குணம் அவர் யாருடன் சேர்ந்து பழகுகிறார் என்பதைப் பொறுத்து அமையும். 

இன்றைக்குத் துரதிர்ஷ்டவசமாக, முகம் அறியாத நண்பர்கள் உடன் பழகும் போக்கு அதிகரித்து வருகிறது. உண்மை சுபாவம் தெரியாது பழகி வாழ்வை இழந்தவர்கள் அதிகம்.

ஒரு துளி விஷம் உணவில் கலந்தால் அது முழு உணவையும் பாழ் படுத்தி விடும். அது போலத் தீய மனிதர் சேர்க்கை முழு வாழ்வையும் கறை படிந்ததாக்கி விடும். கூடா நட்பு கேடாய் முடியும். எனவே யாருடனும் சேர்ந்து இருக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.

வாழ்க்கைச் சூழல்கள் எப்பொழுதும் ஒரே விதமாக இனிமையாக இருப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாராத கஷ்டங்கள் புயல் போலத் தாக்கும். அதை எதிர்த்துக் கரை சேர சான்றோர் ஆதரவு தேவை. கடினமான காலத்தை எதிர்த்துப் போராடி அதைக் கடந்து வர அது உதவும்.

நல்லவர்களுடன் சேர்ந்து இரு. அவர்கள் சொற்படி நட. அப்பொழுது உனக்கும் சிறந்த வாழ்க்கை அமையும் என ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. 

நல்லவர்கள் இயல்பு மற்றும் பெருமைகள் குறித்து திருக்குறளில் உள்ள 'சான்றாண்மை' எனும் அதிகாரம்  விவரிக்கிறது. 

சான்றாண்மை என்பது 'சான்று+ஆண்மை'.

சான்று என்றால் நிறைந்து எனப் பொருள்படும். 

ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுகை செய்தல் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது பொருள். 

சான்றாண்மை என்பது நற்பண்புகள் நிறைந்த நிறைவானவர் மற்றும் முழு ஆளுமை உடையவர் எனலாம்.

சான்றோர் பற்றி குறள் விளக்கம்: 

சான்றோர் தன்மைகள் குறித்து திருக்குறளில் விவரித்து எழுதப் பட்டுள்ளது. 

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

அனைத்து நற்பண்புகளையும் கடனைப் போல ஏற்றுக் கொண்டு, அந்த கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவது போல நற்செயல்களை இயல்பாகச் செய்வது சான்றோர் குணம்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் 
எந்நலத் துள்ளதூஉம் அன்று.

கல்வி, செல்வம், பதவி போன்றவற்றால் ஒருவர் சான்றோர் ஆவதில்லை. பண்பு என்ற நிறை செல்வமே ஒருவரைச் சிறந்த மனிதராக உயர்த்துகிறது. 

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு 
ஐந்துசால் பூன்றிய தூண். 

அன்பு செய்தல், பழி பாவங்களுக்கு வெட்கப் படுதல், சேர்த்ததைப் பிறர்க்குப் பகிர்ந்தளித்தல், யாவற்றையும் ஆராய்ந்து அறிதல், உண்மை பேசுதல் எனும் ஐந்து பண்புகளும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு. 

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தவம். அடுத்தவரின் தீயச் செயல்களைப் பேசாதிருப்பது சான்றாண்மை

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை. 

திறமையாகப் பணி புரிபவர்கள் தம்முடன் வேலை செய்பவர்களிடம் பணிந்து பேசி, வேலை வாங்கி அதைத் திறம்பட முடிப்பர்; சான்றோர் தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி 
துலையல்லார் கண்ணும் கொளல். 

சான்றாண்மைக்கு வரையறை யாதெனில், தம்மை விடச் சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதே ஆகும்.  

இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு. 

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றாண்மையினால் பயன்தான் என்ன? 

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் ஒருவரிடம் இருந்தால், வறுமை அவருக்கு இழிவாக இருக்காது.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி யெனப்படு வார். 

சான்றோர் சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை போல ஆவார்கள். கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அவர்கள் குணம் எப்போதும் மாறாதது.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் 
தாங்காது மன்னோ பொறை
 
சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் இப்பேருலகம் தன் சுமையையும் தான் தாங்க மாட்டாதது ஆகிவிடும்.

நல்ல பண்புகள் உடையவரோடு நட்பு பாராட்ட ஆத்திசூடி அறிவுறுத்துகிறது. நற்பண்புகள் உடையவர் சொற்படி வாழ்வது சிறந்தது எனப்  போதிக்கிறது. காலத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது நமது கையில்.

சேரிடமறிந்து சேர்.


படம் இணையத்திலிருந்து நன்றியுடன்:

2 கருத்துகள்: