நம் சிந்தைகளின் நிறைவு வார்த்தைகளில் வெளிப்படுகிறது. பேசுவதைக் குறித்த சில நீதி மொழிகள்:
அளவுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.
வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.
தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர்,
வாழ்க்கையில் சில கடினமான சூழல்களை தவிர்க்க முடியாது. நாம் மனம் திறந்து பேசும் படி நிர்ப்பந்திக்கப்படும் அத்தகைய தருணங்களை அடையாளம் காணவும், அதைக் கவனமாக எதிர் கொள்ளவும் உதவும் சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு.
1. குழப்பமான மனநிலையில்:
உங்களுக்குத் தெளிவாகச் சிந்திப்பதில் சிக்கல் இருக்கும்போது பேசாமல் இருப்பது நலம்.
குழப்பமான மன நிலைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். சோர்வாக இருக்கக் கூடும். வேறு ஒருவர் ஆதிக்கத்தின் நிர்ப்பந்தமாக இருக்கலாம். கோபம், கவலை, பதற்றம் போன்ற காரணமாகவும் இருக்கலாம்.
இவ்வித தெளிவற்ற குழப்பமான சூழ்நிலைகளில், மனதைத் திறந்து பேசுவதற்கு முன்பாக சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லது. அவ்வாறு செய்யவில்லை என்றால், ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்பட நேரிடும்.
உங்கள் யோசனைகள் முதிர்ச்சியடைய சில காலங்கள் எடுத்துக் கொண்டு, அதன் பின்னரும், உங்கள் கருத்து மாறாதிருந்தால் அவ்விதமாகவே பேசலாம், ஆனால் நீங்கள் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது வேறு வழிகளில் சமரசம் செய்ய நிர்ப்பந்திக்கப் படும் சூழலில் மௌனமே சிறந்த பதில்.
2. பிறரை புண்படுத்தும் சூழலில்:
உங்கள் வார்த்தைகள் பிறருக்குப் பயனுள்ளதாக இருப்பதைத் தாண்டி, அவரை புண்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் பேசுவதைத் தவிர்க்கவும்.
சில சந்தர்ப்பங்களில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. அப்போது அதில் சம்பந்தப்பட்ட நபர் வருத்தப்படாதவாறு பேச முடியாது தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எப்போதோ ஒரு முறை வெகு அரிதாகவே வருகின்றது.
ஆகவே, நீங்கள் பேச விரும்பும் வார்த்தைகள் பயனுள்ளதாக இருக்குமா அல்லது மற்றவரைப் புண்படுத்தும் வகையில் இருக்கப் போகிறதா எனப் பேசுவதற்கு முன்பாக சிந்தியுங்கள். ஒரு சந்திப்பு கசப்பான அனுபவத்தில் முடிவதை விட மௌனமாக இருப்பதே நலம்.
3. பொருந்தா சூழலில்:
உங்கள் கருத்து மதிப்பற்றதாக இருக்கும் இடத்தில், பொருத்தமில்லாமல் பேசாதீர். இதை ஒப்புக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் எளிதல்ல. உங்கள் சுய மதிப்பு ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இது மிகவும் முக்கியமானது.
ஒரு சூழ்நிலையைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியாதபோது, அல்லது அதைக் குறித்து அறிந்த நிபுணர்கள் அவ்விடத்தில் சூழ இருக்கும்போது, அல்லது உங்கள் கருத்து மற்றவர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத போது, அமைதியாக இருப்பது நல்லது. அதுவே புத்திசாலித்தனம்.
உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பற்ற இடத்தில் மௌனமே சிறந்த பதில்.
4. போதுமான சான்றுகள் இல்லாத போது;
சில சந்தர்ப்பங்களில் நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஊகிக்கவும், பேசவும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும், இதைக் கடைப்பிடிப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும்போது அது நம்மையறியாது மற்றொரு நபருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, ஒரு நபரின் உடல் மற்றும் மன நலன் குறித்த உறுதியான தகவல்களை அறியாமல் அதைப் பற்றிப் பேசக்கூடாது. சில சூழல்களில் செவிவழிச் செய்திகள் உண்மையாக இருக்கலாம், ஆனாலும் நாம் கேட்ட செவிவழி தகவல்கள், ஒரு பெரிய முடிவை மாற்றக் கூடியதாக இருக்குமானால், அதைக் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது.
உதாரணமாக, ஒரு நபர் தனக்கு உதவக்கூடிய மருந்தைப் பயன்படுத்தலாமா என்று பரிசீலித்து வருகிறார். அதே மருந்தைப் பயன்படுத்திய உங்கள் நண்பரின் நண்பரைப் பற்றிய சிகிச்சை குறித்து சில வதந்திகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அது வதந்தி அல்ல, உண்மைதான் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் எனச் சொல்லாமல் இருப்பது நல்லது.
5. பேசாதே என்று அறிவுறுத்தப்படும்போது:
சில சூழல்களில் நாம் பேச வேண்டாம், அமைதியாக இரு எனக் கட்டுப்படுத்த படுவோம். அதனால் அவமதிக்கப் பட்டதை போல உணரக்கூடும். அது கோபத்தைத் தூண்டலாம். எனினும், அந்த மன தூண்டுதலைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக ஏன் நம்மைப் பேசக்கூடாது எனச் சொல்கிறார்கள்? என ஆழ்ந்து சிந்திப்பது சிறந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கவனிப்பதும் மற்றும் நம்மை நாமே ஆராய்ந்து கற்றுக்கொள்வதும் நல்லதாக இருக்கும்.
6. சொல்வதற்கு எதுவும் இல்லாத போது:
நாம் அனைவரும் எதையாவது ஒன்றைப் புதிதாகச் சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனாலும் அதற்காக, ஒரு அர்த்தமற்ற சிந்தனையை வலிந்து உருவாக்கிப் பேசக்கூடாது.
சில தருணங்களில் உங்களிடம் சொல்ல எதுவும் இல்லாதிருக்கலாம். அதைச் சொல்வதற்கு வெட்கமாகக் கூட இருக்கலாம். ஆனால் சொல்வதற்கு எதுவும் இல்லாதபோது, பேச வேண்டும் என்பதற்காக உளருவதை விட அமைதி காப்பது சிறந்தது. அத்தகைய சூழலில் பிறர் கூறுவதைக் கவனமாகக் கேட்பதும், வேறு ஒருவர் சொல்லும் நல்ல கருத்தை ஆதரித்தும் பேசலாம்.
உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள், தவறுதலாகப் பேசி விட்டால், அவை மன்னிக்கப்படலாம், ஆனால் மறக்கப்படாது. பல தருணங்களில் மௌனமாக இருப்பது எப்போதும் நமக்கு நன்மையைத் தரும்.
படம் இணையத்திலிருந்து நன்றியுடன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக