நல்லவர்களை நாடு.
Tell me your friends are and I will tell you who you are - Proverb.
சேரிடமறிந்து சேர்:
சேரிடமறிந்து சேர்: நீ பழகும் நண்பர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து, அதற்குப் பின்பு அவர்களுடன் பழகு.
ஒரு புதிய இடத்திற்குச் செல்வதற்கு முன்பு அந்த இடத்திற்கு எந்த வகையில் செல்வது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனத் தெரிந்து, அதற்கேற்ற வகையில் பயண முறையை முடிவு செய்வோம்.
அங்குக் கிடைக்கும் உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்ற விபரங்களை அலசி ஆராய்வோம். அங்குள்ள கால சூழ்நிலை அறிந்து அதற்கு தக்கவாறு ஆயத்தப்படுவோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக அங்கிருக்கும் மக்களின் மனநிலை, பாதுகாப்பு போன்ற விவரங்களைத் தெரிந்த பிறகே அங்குப் பயணப்படுவோம்.
ஒரு இடத்திற்குச் சென்று சேர வேண்டியதற்கே இத்தனை முன்னேற்பாடு செய்வீர்கள் என்றால், நாம் பழகும் நபர்கள் நல்ல குணமுடையவர்களா என ஆராய்ந்து பார்த்து அதன் பின்பு அவர்களுடன் ஆழ்ந்த நட்பு பாராட்ட வேண்டியது அதை விட எத்தனை அதிக முக்கியம் என்கிறார் ஔவையார். சேரும் இடம் அறிந்து சேர்.
திருக்குறள் நாம் பழக வேண்டிய நபர்கள், நட்பு பாராட்ட வேண்டிய விதம் குறித்து சில அதிகாரங்கள் வழியாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக
1. பெரியாரைத் துணைக் கோடல்
2. சிற்றினம் சேராமை
3. நட்பு
4. நட்பு ஆராய்தல்
5. தீ நட்பு
6. கூடா நட்பு ஆகிய அதிகாரங்களைக் குறிப்பிடலாம்.
நட்பு சிந்தனையைப் பாதிக்கும்:
நீர் தான் சேரும் நிலத்தின் இயல்புக்கு ஏற்ப அதன் நிறம் மாறும். அதன் சுவை மாறும். அதன் தன்மை மாறும். அது போல நாம் பழகுபவர் இயல்புக்கு ஏற்ப நம் சிந்தனை மாறும். அவர்களது இயல்பு நம்மையறியாது நம்முடன் வந்து ஒட்டிக் கொள்ளும். நம் குணம் மாறும். நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களைப் பிரதிபலிப்போம். நமது உணவு, உடை, பேச்சு, பாவனை, செயல் என அனைத்திலும் அது வெளிப்படும்.
ஆதலால், நல்லவர் சேர்க்கையிலும் சிறந்த துணை இவ்வுலகில் வேறு இல்லை. தீயவருடன் பழகுவதால் ஏற்படும் துன்பம் தரும் கொடிய பகை போல வேறு எதுவும் இல்லை.
ஆகவே, சிறந்த அறிவுடையவர்கள் நட்பை எவ்விதம் பெறுவது என ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பும் செயல்கள் அறிந்து, அதைச் செய்தால், அவர்களோடு இணைந்து கொள்ள முடியும்.
அவர்கள் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகக் கூடாது. உண்மையில் அவர்களது கடினமான அறிவுரைகள் பின்பற்றுபவர், வாழ்வில் எதிர் கொள்ளும் துன்பத்தால் வீழ்ந்து போக மாட்டார்கள்.
மாய மான்:
ஒருவர் பேசுவது அல்லது எழுதுவதை வைத்து அவரது குணத்தை நிதானிக்க முடியாது. அவரது செயல்களை வைத்தே அதைக் கண்டு பிடிக்க முடியும். சமூக வலைத்தள உறவுகள் கருத்துப் பகிர்வுகளுக்கு மட்டுமே உதவும். அதைக் கடந்து நேரடி பழக்கத்தில் மட்டுமே உண்மை சுபாவம் வெளிப்படும்.
வாழ்நாள் வலி:
ஒருவருடன் நட்பாகப் பழகிய பிறகு அவர் தீயவர் என உணர்ந்தாலும், அவ்வளவு எளிதாக விலகி விட முடியாது. ஆதலால் ஆராயாமல் நட்பு செய்வதைப் போல் கேடு தருவது வேறு இல்லை. எந்த மனிதராலும் நீண்ட காலம் நடித்து ஏமாற்ற முடியாது. எனினும் தீய நபர்களது குறுகிய கால உறவும் கூட வாழ்நாள் வலியைத் தந்து விடும்.
உரைகல்:
வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களினால் சில நன்மைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது, நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் யார் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். நமது தேவையில் உதவாத வாய்ச் சொல் வீரர்களை அப்போது எளிதாக இனம் காண முடியும்.
பொருளையே குறி வைத்து ஏமாற்றிப் பழகும் நட்பு இருந்தாலும், இழந்தாலும் ஒன்று தான். அது போல ஆபத்தில் நம்மை விட்டுவிட்டு ஓடுபவர் உறவை விடத் தனிமையாக வாழ்வது மிகவும் சிறந்தது.
நமக்குத் துயரம் வரும் போது நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வரும் பத்து கோடி மடங்கு தீமை மிக நல்லது. ஆதலால் நம்மைக் கண்ட போது முகத்தால் இனிதாகச் சிரித்து. மனத்தால் துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை விட்டுவிட வேண்டும்.
விளைவு:
அறிவுடையவர் நட்பு பிறைச்சந்திரன் வளர்வது போல் நாள் தோறும் வளர்ந்து பெரும் பயன் தரும். தீயவர் நட்பு முழு நிலவு பின்னர் தேய்வது போல நாள் தோறும் தேய்ந்து முடிவில் நம்மை இல்லாது அழித்துவிடும்.
படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..,
அருமையாகச் சொல்லி உள்ளீர்கள். நல்ல பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு