முண்ட கோபநிஷத் - பகுதி 3
🔸மையப் பொருள் :
இறைவன் நம் இதயத்தில் வீற்றிருக்கிறார். தோன்றுபவை அனைத்தும் வெறும் தோற்றமே. இப்படிப்பட்ட அறிவை அடைபவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்.
🔹 அறிமுகம் :
முண்டகோபநிஷத்தில் இஃது இரண்டாவது அத்தியாயம். இரண்டாம் அத்தியாயத்தில் இரு பகுதிகள் உள்ளன. இங்கு முதல் பகுதி விளக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பத்து வசனங்கள் உள்ளது. இதன் சாரமாக தொகுத்திருப்பது எனது புரிதல் அடிப்படையில் மட்டுமே.
வசனங்களைத் திரும்ப திரும்ப வாசிப்பதன் மூலம் மேலும் தெளிவான கருத்தை அறிந்து கொள்ளலாம்.
🌺 சாரம் :
அனைத்து உயிரினங்களின் மூல ஆதாரம் இறைவன். அவை அனைத்தும் அவரிலிருந்து பரிணமித்து அவருக்குள் சங்கமிக்கின்றன.
இறைவனின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளது. அவரிலிருந்து தோன்றியவை சில பட்டியலிடப்பட்டுள்ளன. உயிரினத்தின் உணர்வு தன்மை, அறிவு இவற்றுள் மறைந்திருக்கும் தெய்வீகம் சொல்லப்படுகிறது.
இந்த அந்தராத்மாவை உணர்வதும், தோற்றங்களின் மாயை அறிந்து கொள்ளும்போதும் ஒருவர் அறியாமையிலிருந்து விடுதலை அடைவதாகவும் அவரின் பேதைமை அழிவதாகவும் உரைக்கிறது.
🌺 முண்ட கோபநிஷத் அத்தியாயம் 2 / பகுதி 1. வசனங்கள் :
1. இது முற்றிலும் உண்மை. பிரியமானவனே! எவ்விதம் ஒளிர்கின்ற நெருப்பினிடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபமுடைய நெருப்புப் பொறிகள் தோன்றுகின்றனவோ, அவ்விதம் அழியாதவனிடமிருந்து பலவித உயிரினங்கள் தோன்றுகின்றன. அதனிடத்திலேயே ஒடுங்குகின்றன.
2. அந்தப் புருஷர் சுயமாகப் பிரகாசிப்பது.
உருவமற்றது.
உள்ளும் புறம்பும் உள்ளது.
பிறப்பற்றது.
பிராணனற்றது.
மனமற்றது.
தூய்மையானது.
மேலான மாயையைக் காட்டிலும் மேலானது.
3. இதனிடமிருந்து உயிர், மனம், அனைத்து இந்திரியங்கள் (கண், செவி, வாய், நாசி, உடல் மூலம் அறியப்படும் உணர்வுகள்), ஆகாசம், காற்று, நெருப்பு, நீர் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பூமி ஆகியவை தோன்றுகின்றன.
4. இதுவே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது.
இதன்
தலை = ஒளி
கண்கள் = சூரியன், சந்திரன்
செவிகள் = திசைகள்
வாக்கு = பிரசித்தமான வேதங்கள்
ப்ராணன் = காற்று
மனம் = உலகம்
கால்கள் = பூமி.
(இறைவன் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளவர் எனும் மையக் கருத்தை விளக்குவதற்காக முக்கியப் படைப்புகளை இறைவனின் உடலில் அமைந்த உறுப்புகளாக அமைத்து அவரது வியாபித்திருத்தல் இதன் வழியாக விளக்கப்பட்டுள்ளது.).
5. ஒளியினிடத்திருந்து சூரியன் தோன்றியது. நிலவிலிருந்து மேகங்கள் தோன்றின. பூமியில் தாவரங்கள் தோன்றின. ஆண் பெண்ணிற்குள் வீரியத்தைக் கொடுக்கிறான். இவ்விதம் பல உயிரினங்கள் தோன்றின.
6. அதனிடமிருந்து ரிக் வேதம், யஜும்ஷி வேதம், ஸாம வேதம், நெறிமுறைகள், அனைத்து யாகங்கள், பலி செலுத்துதல், காணிக்கைகள், வருடம், தலைவன், எந்த லோகத்தை நிலவு தூய்மைப்படுத்துகிறதோ, எந்த லோகத்தைச் சூரியன் தூய்மைப்படுத்துகிறதோ அந்த லோகங்கள் தோன்றின.
7. அதனிடமிருந்து பலவித தேவர்கள் அசுரர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ப்ராணன், அபானன், நெல், பார்லி, தவம், நம்பிக்கை, வாய்மை, ஒழுக்கம், யாகங்களைச் செய்யும் முறை ஆகியவை தோன்றின.
8. அதனிடமிருந்து ஏழு இந்திரியங்கள், ஏழு அறியும் சக்திகள், அறியும் பொருள்கள், ஏழு விதமான அறிவுகள், எந்த இடங்களில் இருந்து கொண்டு இந்திரியங்கள் செயல்படுகின்றனவோ அந்த ஏழு இந்திரியங்களுக்கான இடங்கள் தோன்றின. இருதயத்தில் ஒடுங்குகின்ற இந்திரியங்கள் ஏழெழுவிதமாக ஒவ்வொரு உயிரிலும் வைக்கப்பட்டுள்ளன.
(இங்கு ஏழு இந்திரியங்கள் எனக் குறிப்பிடப்படுவது நம் முகத்தில் அமைந்துள்ள துவாரங்கள். கண்கள் இரண்டு. செவிகள் இரண்டு. நாசியில் இரண்டு. வாய். ஏழு துவாரங்களில் அமைந்துள்ள அறியக்கூடிய சக்தி, அவற்றால் அறியப்படும் பொருள், போன்றவை அதிலிருந்தே தோன்றின.)
9. அதனிடமிருந்து அனைத்துக் கடல்களும், மலைகளும் எல்லாவிதமான ஆறுகளும் தோன்றின. அதனிடமிருந்தே அனைத்துத் தாவரங்களும், அந்தத் தாவரத்தில் மறைந்திருக்கும் இந்த உடலையும், அந்தராத்மாவையும் போஷிக்கக்கூடிய சக்தியும் தோன்றின.
10. பிரியமானவனே செயல், தவம் இவற்றின் பலனாக உள்ள இந்த உலகம் இறைவனாக உள்ளது. யார் இந்த மேலான அழியாத ப்ரஹ்மனை இருதயத்தில் குடிகொண்டுள்ளதை அறிகிறானோ அவன் இங்கேயே அறியாமையின் முடிச்சை அழிக்கிறான்.
முண்ட கோபநிஷத் இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி நிறைவுற்றது.
துணை நின்ற நூல் : உபநிஷத்துக்கள் ஸ்வாமி குருபரானந்த எழுதியது.