செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

முண்ட கோபநிஷத் - பகுதி 1

முண்ட கோபநிஷத் - பகுதி 1


அறிமுகம் 

இன்று சுதந்திரதினம். பலரின் தியாகம், அர்ப்பணிப்பு இவற்றை நினைவுபடுத்தும் திருநாள். சுதந்திரத்திற்கு எதிர்ப்பதம் அடிமைத்தனம் அல்ல. பயம்.

எல்லாவிதமான அச்சத்திலிருந்தும் பரிபூரணமாக அடையும் விடுதலையே முக்தி.

அக விடுதலையே மெய்யான விடுதலை. உலக வாழ்வில் உண்மையாக விடுதலை அடைதல் என்பது எது?

1. தன்னுடைய உள்ளத்தில்  குடிகொண்டிருக்கும் தெய்வத்தன்மையுடைய ஆத்மாவிற்குத் தீங்கு நேரிடாமல் தூய்மையாக வைத்துப் பாதுகாப்பது.

2. சுகத்திற்கும், துக்கத்திற்கும் மேலாக ஆத்மாவை நிறுத்தி வைப்பது. இந்த இரு நிலைகளையும் வருத்தமின்றி முழுநிறைவுடன் ஏற்றுக்கொள்வது.

3. பயனில்லாச் சொல், கபடம், காமம், மோகம், பெருமை, பேராசை, சுயநலம், ஆணவம் இவற்றை நீக்குதல்.

4. சாந்த சித்தத்துடன் மரணத்தை எதிர்கொள்வது.

இதை அடைவதே ஞானம். இந்த ஞானத்தை அடையும் வழியை உபதேசிப்பது உபநிஷத்.

முண்ட கோபநிஷத்


இந்த உபநிஷத் அதர்வண வேதத்தில் அமைந்துள்ளது. முண்டகம் என்ற சொல்லிற்கு இரண்டு பொருள்கள் உள்ளன.

1. தலை (சீர்ஷம்)
2. முக்கியம் (ப்ரதானம்)

இந்நூலில் மூன்று அத்தியாயங்கள் அடங்கியது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தநூலை  ஆறு பகுதிகளாக பிரித்துக் கற்றுக் கொள்வது எளிது. ஆறு பகுதியை முடிக்கும்போது ஓர் உபநிஷத் நமக்கு அறிமுகமாகிவிடும். 

இதைக் கற்பது மனதைத் தூய்மையை நோக்கி நகர்த்துவதை உணரலாம். சில இடங்களை வாசிக்கும்போது அதன் பொருள் எளிதில் பிடிபடாது. சில விளக்கங்கள் தெளிவற்றதாக தோற்றமளிக்கும். திரும்பத் திரும்ப வாசிப்பதே புரிவதற்கு உதவும். உபநிஷத்தின் சாரத்தை மாத்திரமே இங்குப் பகிர்ந்துள்ளேன்.

அத்தியாயம் 1 / பகுதி 1


இந்தப் பகுதி ஞானத்தின் பெருமையை கூறித் துவங்குகிறது. எல்லாப் புத்திக்கும் ஞானமே ஆதாரம். ஞானத்தின் தன்மை, அது வாழ்வில் தரும் நிறைவு இதுவே இந்தப் பகுதியின் மையப் பொருள்.

சீடன் குருவிடம் கேட்கும் வினா 


"இறைவா, எதை அறிவதனால் இவை அனைத்தும் அறிந்தது ஆகும்? "


ஒன்றைப்  பற்றி புரிந்து கொள்வதன் மூலம் மற்ற அனைத்தும் எப்படிப் புரிந்ததாகும் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா?

ஒன்றைப் பற்றி அறிவால் மற்ற அனைத்தைப் பற்றிய ஞானமும் அடையவேண்டும் என்றால் அந்த ஒன்று மற்ற அனைத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக விதவிதமான உருவில் உள்ள பானைகளுக்கு களிமண் மூலகாரணமாகிறது. களிமண்ணைப் பற்றிய அறிவு மூலமாகப் பானைகளின் தன்மை அறியப்படுகிறது.

ஆகவே மூலகாரணத்தை அறிவதால், அதிலிருந்து தோன்றிய அனைத்துக் காரணங்களும் அறியப்படுகின்றன.

இரண்டுவிதமான அறிவு :

இவ் உபநிஷத் அறிவை இரண்டு நிலைகளாகப் பிரிக்கிறது.

முதலாவது அழிவற்ற பரம்பொருளை  அடையப்படுவது பற்றி அறிவது பரா வித்யா. இது காரண ஞானம், ப்ரஹ்ம ஞானம்.

இரண்டாவது அபரவித்யா. சர்வ வல்லமை உடையக் கடவுளை அடைய உதவும் சாதனங்கள். ரிக் வேதம், ஸாம வேதம், அதர்வண வேதம், உச்சாரண சாஸ்த்ரம், யாகவிதியைப்பற்றிய சாஸ்திரம், இலக்கணம், சொல்லின் தோற்றத்தை ஆராயும் சாஸ்திரம், ஜ்யோதிடம் என்பவை அபராா வித்யா. இவற்றைக் கற்பதன் மூலம் பரம்பொருள் உணரலாம்.

கடவுளின் தன்மை :

உபநிஷத் பரம்பொருளைப் இப்படியாக வர்ணிக்கிறது.


அந்த ப்ரஹ்மன் ஞானேந்திரியங்களால் (மனம்) பார்க்கப்படாதது. 


ஞானேந்திரியங்கள் ஐந்து :

சுவை

ஒளி 

ஊறு

ஓசை

நாற்றம் (வாசனை) 

கர்மந்திரியங்களால் (ஜம்புலண்களால்) அடைந்துவிட முடியாதது. 

கர்மேந்திரியங்கள்  ஐந்து

வாய்
கை
கால்
மலவாய்
கருவாய்

காரணமற்றது.

காரணங்கள் நான்கு

மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்.

குணமற்றது. 

குணங்கள் மூன்று

சத்வீகம்
ரஜஸ்
தாமஸ

கண்களும் செவிகளும் அற்றது. 
அது கைகளும் கால்களும் அற்றது. 
எப்போதும் உள்ளது. 
அனைத்துமாகத் தோற்றமளிப்பது. 
அனைத்தையும் வ்யாபிப்பது. 
மிகவும் ஸு௯ஷ்மமானது. 
அது அழிவற்றது. 
உலகத்தின் படைப்புகள் அனைத்துக்கும் மூலகாரணமானது. 

இப்படிப்பட்ட பரம்பொருளைத் தீரர்கள் எங்கும் காண்கின்றனர்.

உலகத் தோற்றம்.


எவ்விதம் சிலந்தி வலையை உற்பத்தி செய்கிறதோ, தனக்குள் மீண்டும் எடுத்தும் கொள்கிறதோ, எவ்விதம் மரங்கள் பூமியில் தோன்றுகின்றனவோ, எவ்விதம் உயிருடன் இருக்கிற மனிதரிடத்திலிருந்து தலையிலும், உடலிலும் முடிகள் தோன்றுகின்றனவோ, அவ்விதம் அழியாத  பரம்பொருளிலிருந்து இங்கு உலகம் தோன்றுகிறது.

ப்ரஹ்மன் அறிவால் ஸ்ருஷ்டிக்கும் ஆற்றலில் இருந்து படைக்கும் சக்தி உருவாகுகிறது. படைக்கும் சக்தியிலிருந்து கண்ணுக்குப் புலனாகாத (ஸு௯ஷம) ப்ரபஞ்சம் உருவாகிறது. அதிலிருந்து மனமும், காண்கிற உருவங்களும் (ஸ்தூல பூதங்கள்) , உலகங்ம்களும், செயல்களும் தோன்றுகின்றன. செயல்களிலிருந்து கர்ம பலன்கள் உதிக்கின்றன.

அத்தியாயம் 1 பகுதி 1 நிறைவுற்றது.

4 கருத்துகள்: