வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

முண்ட கோபநிஷத் - பகுதி 2🔶 இந்தப் பகுதி நூலின் மையக்கருத்து :


கர்மம் மற்றும் உபாசனை ஆகியவற்றின் பெருமை, சிறுமைகள் இந்தப் பகுதியில் பேசப்படுகிறது. 

இவ்விரு தன்மைகளது  உண்மையைப் புரிந்து, சாதகர் தனது ஆன்மீக வாழ்வின் எளியநிலைwயை உணர்ந்து,  இறைவனின் அருளோடு மனத்தாழ்மையாய் குருவிடம் சரணடைவதே பரம்பொருளினை அடைய உதவும் வழி என்பதே இந்தப் பகுதியில்  அழுத்தமாகப் போதிக்கப்படுகிறது.

🔶 கர்மம் - உபாசனை விளக்கம் :


🔷 கர்மம் என்பது வாக்காலும் உடலாலும் செய்யப்படுவது.
🔷 உபாசனை என்பது மனதால் செய்யப்படும் தியானம்.

இந்த நூலில் கர்மம் அதாவது கிரியைகள் மூலமாகவே மட்டும் இறைவனை அடையமுடியாது என்பதை வலியுறுத்தவே கர்மச் செயல்கள் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. கிரியைகள் மட்டுமே சார்வது சுய நீதியையும் கர்வத்தையும் உண்டு பண்ணும். மனக்கண்களைக் குருடாக்கிவிடும்.

ஞானம் என்பது அனைத்தும் உணர்வதல்ல, அதன்பின்பும் மனத்தாழ்மையுடன் பணிவுடன் இருப்பது.

🔶 கர்மம், உபாசனை    பெருமைகள் :

அதற்கான பலன் நிச்சயம்.
அதை அசட்டையாக, கவனக்குறைவுடன் செய்தால் விபரீதமான விளைவுகள் நேரிடும்.
அதைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்.


🔶 முண்டகோபநிஷத் அத்தியாயம் 1 / பகுதி 2 :


 1. இங்குச் சொல்லப்படுவது முற்றிலும் உண்மை. ரிஷிகள் எந்த யாகங்களை மந்தரங்களுக்குள் பார்த்தார்களோ, அவை மூன்று வேதங்களில் பலவிதமாக விரிந்து அமைந்துள்ளன. கர்மபலத்தில் விருப்பம் உடையவர்களே, அந்தக் கர்மங்களை முறையாக அனுஷ்டானம் செய்வீர்களாக. உங்களால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அடைவதற்கு உங்களுக்கு இதுவே மார்க்கமாக உள்ளது.

2. எப்பொழுது நன்கு தூண்டிவிடப்பட்ட நெருப்பில் சுடரானது மேல்நோக்கியுள்ளதோ, அப்பொழுது வடக்குப் பகுதிக்கும் தெற்குப்பகுதிக்கும் இடையில் யாகத்திற்கான பொருள்களை அர்ப்பணம் செய்யவேண்டும்.

3. எவருடைய அக்னிஹோத்ரமானது தர்சம் என்ற யாகம் அற்றதாகவும் பெளர்ணமாஸம் என்ற யாகம் அற்றதாகவும் ஆக்ரயணம் என்ற யாகம் அற்றதாகவும் விருந்தோம்பல் அற்றதாகவும் முறையான காலத்தில் செய்யப்படாததாகவும் வைச்வதேவம் என்ற யாகம் அற்றதாகவும் முறைப்படி செய்யப்படாதாகவும் அமைகிறதோ, அவருக்கு ஏழு உலகங்கள் வரை செல்ல உதவும் புண்யங்கள் அழிகின்றன.

(கர்மத்தை முறையாகச் செய்யவில்லை என்றால் வீபரீதபலன் ஏற்படுகிறது என்ற எச்சரிக்கை மூலம் கவனத்துடன் செய்தல் வேண்டும் என்கிற கருத்து வலியுறத்தப்படுகிறது. யாகங்களின் பெயர்களை அப்படியே தமிழ் படுத்தப்பட்டுள்ளது (Transliterated))

4. கருமையான சுடர், மிக உஷ்ணமான சுடர், மனதைப்போல் வேகமாக அசையும் சுடர், அடர்ந்த சிவப்புச் சுடர், புகையின் வர்ணத்தையுடைய சுடர், பளிச்சிடும் சுடர், பல வர்ணங்களுடன் கூடிய சுடர் என்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற நெருப்பிற்கு ஏழு நாக்குகள் உள்ளன.

(இஃது  ஓர் உருவகமாக ஆன்மா அல்லது பரம்பொருள் அல்லது பரம்பொருளை மறைக்கும் மாயை அல்லது பயணத்தின் பாதையின் தன்மையாக கூடச் சிந்திக்கலாம்)

5. யார் இந்த ஒளிர்கின்ற சுடர்களில், சரியான காலத்தில் யாகத்தைச் செய்கிறானோ, அவனை அழைத்துச் செல்கின்ற இந்தச் சுடர்கள், கதிரவனின் ஒளிக்கதிர்களாக மாறி,  தேவர்களின் தலைவன் ஆளுகின்ற அந்த இடத்திற்கு அ ழைத்துச் செல்கின்றன.

6. கதிரவனின் ஒளிக்கதிர்களாக உள்ள ஒளி பொருந்திய சுடர்கள் அவனை, உங்களுடைய நல்ல செயல்களுக்கான பலனானது இந்த ப்ரஹ்மலோகம் என்று பிரியமான வார்த்தைகளைக் கூறி அவனை வணங்கி அழைத்துச் செல்கின்றன.

7. கர்மகிரியைகள் அற்பமான பலனையே தரும். சாஸ்திரங்கள் கூறும் பதினெட்டு யஞத்திற்கான இந்த வழிமுறைகள் உறுதியற்ற படகுகள். எந்த மூடர்கள் இந்தச் கிரியைகள் தான் பரம்பொருளை அடையும் வழிமுறைகள் என நம்புகிறார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் வயோதிகத்தையும் மரணத்தையும் அடைகிறார்கள்.

8. இவர்கள் தங்களை ஞானிகள் எனக் கருதும் அறிவிலிகள். அறியாமையின் மையத்தில் மூழ்கி இருப்பவர்கள். குருடனாலேயே வழிநடத்தப்படுகின்ற குருடர்கள். வழி அறியாது துயரத்தால் தாக்கப்பட்டவர்களாய் அலைந்து திரிகிறார்கள்.

9. அறியாமையால் தங்கள் கற்பனையில் மூழ்கி, நுட்பமான அறிவை அடையாமல் நாங்கள் மெய்யறிவு அடைந்துள்ளோம் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள். தங்கள் சுய இச்சையால் மனக்குருடராகி பரம்பொருளின் மகிமையும் அறிவதில்லை. அவர்கள் அதினால் துயரப்பட்டவர்களாகி தங்களின் கர்மகிரியைகளின் பலத்தை இழந்தவர்களாகி வீழ்கிறார்கள்.

10. யாகத்தையும் ஸேவையையும் மேலானதாக நினைப்பவர் அறிவிலிகள். இவர்களால் சுவர்க்க சுக அனுபவங்களுக்கு மேலானதை அறியமாட்டார்கள். அவர்கள் தங்கள் கர்மகிரியை மூலமாக கிடைக்கும் புண்ணிய பலன்களை அனுபவித்து, திரும்பவும் இந்த உலகத்தை அல்லது கீழான உலகத்தை அடைகிறார்கள்.


( கருத்தில் பதியவேண்டியது : யாகம், சேவை, கிரியைகள் மூலமாக மட்டுமே நேரிடையாக பரம்பொருளை அடையமுடியும் என்ற கருத்தே நிராகரிக்கப்பட்டுள்ளது. தொழுகை, நற்கிரியை, சேவைகள் போன்றவை நம்மைப்  பண்படுத்த முற்றிலும் அவசியம் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரவேண்டும்.)


11. மனதைத் தியானத்தில் நிறுத்தி, கட்டுப்பாட்டை அடைந்தவர்களாகவும், யாசித்தலை மேற்கொண்டவர்களாகவும், வனத்தில் தவத்தையும், தியானத்தையும் கருத்தாய் கடைபிடிககிறார்களோ அவர்கள் தூய்மையானவர்கள். ஒளியின் வழியில் பயணப்பட்டு பரம்பொருள் தாபரிக்கும் புண்ணியத்தலம் அடைகிறார்கள்.

12. சத்துவ குணத்தை அடைந்த சாதகன், கர்மகிரியையாலும் தியானத்தாலும் தன்னுள் அடையப்பெற்ற மாற்றங்களை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்க்கிறான். அதனால் வைராக்கியம் அடைகிறான். செயலினால் உருவாகாத பரம்பொருளை செயல்கள் மூலம் அடையமுடியாது. தன் இயலாமை உணர்ந்தவனாகப்  பிச்சை எடுக்கும் ஓட்டைக் கையில் ஏந்தியது போன்று ஞானத்தை அடையும் பொருட்டு மரபு வழியில் வந்த, சர்வ வல்லமையும் மகிமையும் பொருந்திய இறைமையில் நிலைபெற்ற குருவை அடைவதுதான் வழி என உணர்கிறான்.

13. அந்த ஞானியானவர், முறையாக அணுகிய இந்திரிய ஒழுக்கத்தையுடைய, மனத்தூய்மையுடைய அவனுக்கு எந்த அறிவால் அழியாத, உண்மையான, ப்ரஹ்மனை குருவானவர் அறிவாரோ, அந்த ப்ரஹ்மனைப் பற்றி அறிவைத் தெளிவாக உபதேசிக்க வேண்டும்.


 ⚫ முதல் அத்தியாயம் / இரண்டாவது பிரிவு நிறைவுற்றது.


🔴 🔵 துணை நின்ற நூல் : ஸ்வாமி குருபரானந்தா அவர்கள் எழுதிய உபநிஷத்துக்கள்.

2 கருத்துகள்: