சனி, 19 ஆகஸ்ட், 2017

🌺 வள்ளுவம் கற்றுத்தரும் வள வாழ்வு நெறி.




நாம் ஒவ்வொருவரும் மதிப்பையும், புகழையும் நிறைந்த வாழ்வை அடையவே விரும்புகிறோம்.

வாசித்த ஒரு சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. "ஒவ்வொரு மனிதரும் பொதுவெளியில் தனது பெயர் உச்சரிக்கப்படும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர் ".

மதிப்பு மற்றும் புகழ்ச்சி இவற்றை ஆசிப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முன்பாக எவை உண்மையான மதிப்பைத் தருபவை, எது நீடித்தப் புகழை அளிக்கும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

பொதுப்புத்தியில் ஆடம்பரமான வீடு, சொகுசான வாகனங்கள், விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள், நவீனமான கருவிகள் மற்றும் பொழுது போக்கும் சாதனங்கள் போன்றவற்றை வைத்திருப்பதே மதிப்பும், சமூகத்தில் செல்வாக்குடைய மனிதர்களது தொடர்புகளை புகழ்ச்சியாகவும் எண்ணுகின்றனர்.

பெரும்பான்மை மக்கள்  இவற்றை அடைவதே தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்து திரிகின்றனர்.

சிலர் தவறான வாழ்க்கை முறையைப் பின்பற்றி செல்வம் ஈட்டினும் மன அமைதியிழந்து போலி பகட்டுடன் வலம் வருகின்றனர்.

நமது அக்கறை எல்லாம் உண்மையில் நீடித்தப் புகழையும், நிலையான செல்வத்தையும், வற்றாத மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் தருவது எது?


வள்ளுவம் கற்றுத்தரும் ஒரு சில வழிமுறைகளை மட்டும் தொகுத்து பதிந்துள்ளேன்.


🔸அறம் ஒன்றே புகழையும், செல்வத்தையும் அளிக்கவல்லது. அறத்தைவிட மேலும் மேலும் உயர வழி எதுவும் இல்லை.

🔹அற வழிகளில் பெறும் இன்பம் மட்டுமே உண்மையான, தூய இன்பம். தீய வழிகளில் அடையும் பொருள் இன்பமோ, மற்றவையோ போலியான, புகழ் அளிக்காத இன்பமாகும்.

🔸மனத்தில் தீய எண்ணமில்லாதிருப்பதே அறம்.

🔹பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாத செயல்களே அறச்செயல்கள்.

🔸 இல்லற வாழ்க்கையின் இலட்சியங்கள் அன்பு என்ற பண்பும், அடுத்தவர்க்கு உதவும் அறமுமே ஆகும்.

🔹அறிவுடைய நல்ல மக்களைப் பெறுவதே, இல்வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வமாகும்.

🔸 அன்பே உயிர். ஒழுக்கம் உயிரினும் பெரிது.

🔹ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர வரவேற்று மனதார இனிய மொழிகள் பேசுவது அறம்.

🔸 ஒருவன் நன்கு தேர்ந்தெடுத்த பிறர்க்கு நன்மையளிக்கும் சொற்களை நயமாகச் சொன்னால் அவனது பாவம் விலகும். புண்ணியம் சேரும்.

🔹பகை, நட்பு பாராமல் நடுநிலையில் நின்று முடிவு சொல்வது என்பது சிறந்த அறமாகும்.

🔸அடக்கமாயிருத்தல் என்பது அறம். ஆமை தன் உறுப்புக்களை ஓட்டுக்குள் அடக்கித் தன்னைக் காத்துக்கொள்வதுபோல, ஒருவன் ஐம்பொறிகளை அடக்கினால் ஏழு தலைமுறைக்கு சிறப்பைச் சேர்ப்பான்.

🔹தீமையான, பயனற்ற சொற்களைப் பேசாதிருத்தல் அறமாகும்.

🔸பிறர் பொருள் இச்சியாது இருப்பது அறம்.

இவை போன்ற பண்புகளை கடைப்பிடிக்கும் போது அவை நமது குணங்களாக மாறுகின்றன.

இந்தக் குணங்கள் நம் சிந்தையை முழுமையாக ஆக்கிரமிக்கும்போது நமது வாழ்வு சீரும், சிறப்பும் நீடித்தப் புகழையும் அடைவது உறுதி.


🔴 திருக்குறள் வாக்கியங்கள் உரையாசிரியர் திரு. ஆர்.பி.சாரதி அவர்கள் மிக எளிய உரை நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

2 கருத்துகள்: