வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

Salalah - அழகிய நகரம்.

Salalah  




சலாலா ஓமான் தேசத்தின் தெற்கில் அமைந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து ஏறக்குறைய 1100 கி.மி. தெற்கு நோக்கிப் பயணிக்க வேண்டும். ஏமன் தேசத்தின் அருகில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். தற்போது அரசாளும் மன்னர் பிறந்த ஊர். ஒரு புறம் கடல் மற்ற மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கு.

சலாலாவின் சிறப்பு " kareef" எனும் சாரல் மழை தூவும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான வசந்த காலம்.

அரபு தேசத்தின் தகிக்கும் உஷ்ண காலத்தில் இந்தப் பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் இது ஒரு பாலைவன சோலையாக, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

இது ஒரு சிறிய நகரம். ஊரைச் சுற்றி தென்னந்தோப்பு, வாழை மரம், பழத் தோட்டங்கள் என கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்தை நினைவு படுத்தும்.



சுற்றுலாத் தலமாக இருப்பதால் திரும்பிய திசை எல்லாம் உணவகங்கள் தான். மிகச் சிறந்த தென் இந்திய சைவ உணவகங்கள் உள்ளன. "Karref" இன் மூன்று மாதங்கள் முழுவதும் சாலை முழுவதும் சேறும் சகதியும் பூசப்பட்ட வாகனங்கள் அணிவகுப்பு தான்.

அந்த மூன்று மாதங்களும் மலையில் இருந்து வழியும் அருவிகள், சிற்றோடை, ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள், பசுமையான மலைகள் எனக் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்.



இங்கு விளையும் சாம்பிராணி வாசனைப் பிசின் மிகப் பிரசித்தமானது. இது மிகப் பழமையான ஒரு வியாபார ஸ்தலம்.  தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் archeological sites உள்ளது.

Khor Rorī எனும் இடத்தில் பழங்கால மக்கள் (BC 2 nd Century)   உபயோகம் செய்த மட் பாண்டம், குளியறை கல் தொட்டிகள், கல் அரவை இயந்திரம் எனப் பல பொருட்கள் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.


அவர்கள் வாழ்ந்த இடங்கள் அதே விதத்தில் மிக அழகாகப் பராமரிக்கப்படுகின்றன.

Salalah வில் இந்து கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள் உண்டு.  எல்லாச் சமய நம்பிக்கை உடையவர்கள் தங்கள் மொழிகளிலேயே  வழிபாடு செய்ய அனுமதி உண்டு.


இங்கு யோபு என்னும் இறைத்தூதர் வாழ்ந்து மரித்தார் எனக் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை உடையவர்கள் நம்புகிறார்கள். அவரது கல்லறை புனித இடமாக, வழிபாடு ஸ்தலமாக விளங்குகிறது.

ஓமான் தேசத்தின் முக்கிய துறைமுகங்களில் சலாலா துறைமுகம் ஒன்று.

மிக நவீனமான வசதிகள் உடைய அழகிய பன்னாட்டு விமான நிலையம் உண்டு. திருவனந்தபுரம், கொச்சின் நேரடி விமான சேவையும் உள்ளது.

2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு பெற்று இந்தப் பகுதிக்கு மாறுதல் ஆகி வந்தேன். இறைவன் அருளால் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் வரை இங்குப் பணியாற்றவும் எனது பொறுப்பில் வழங்கப்பட்ட திட்டப்பணிகள் முடிக்கவும் கடவுள் உதவினார்.

நல்ல நண்பர்கள், ஆலயங்கள், சீதோஷ்ண நிலை, உணவகங்கள், தோப்புகள், தோட்டங்கள், சாரல் மழை என நமது ஊரில் வசிப்பது போலவே ஒரு தோற்றம்.

ஆஸ்திரேலியாவில் எனது மகனின் மேல்படிப்பு, மகள் பல் மருத்துவ படிப்பு, மகனின் திருமணம், புதிய பேத்தியின் வரவு, மகன் குடும்பமாக ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் என இந்தக் காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும்எனது மனதுக்கு மிக நெருக்கமானது.


வாழ்க்கை ஒரு நெடிய பயணம். அது மகிழ்வைத் தேடி ஓடும் பயணம் அல்ல.  அந்தப் பயணத்தில் அடையும் அனுபவங்களே துயரங்களும் மகிழ்ச்சியும்.

ஏமாற்றுபவர்கள் வழியாகத் தான் நல்ல நட்புகளின் அருமை புரிகிறது.

துயரமான இடங்களில் பணி புரியும் போது தான் சிறந்த இடங்களுக்கான வாசல்கள் திறக்கின்றன.

ஏழ்மையும் வறுமையில் வாழ்ந்த தருணங்கள் தான் பணத்தின் மதிப்பை கற்றுத் தந்தது.

தோல்விகளும் தனிமையும் தான் வெற்றியில் அடக்கத்தையும் பணிவையும் சொல்லித் தருகிறது.

தவறுகள் மன்னிக்கப்பட்ட போது தான் அன்பின் அர்த்தம் புரிகிறது.

உதவி செய்தும் மறக்கப்படும் போது தான் நமக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பு வளர்கிறது.

புதிய இடம் நோக்கி தெற்கு எல்லையிலிருந்து வடக்கு எல்லை நோக்கி மீண்டும் அடுத்த பயணம்.

அதுவும் ஒரு சுற்றுலா தலமாகும்..

வாழ்க்கை என்பது நகர்தல். அதுவே சுவாரசியம்.

6 கருத்துகள்:

  1. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இனிதே பணியையும், அதே நேரத்தில் குடும்பப் பொறுப்புகளையும் நிறைவேற்றியுள்ளீர்கள். இறுதி வாசகங்கள் அத்தனையும் உண்மை, சிந்திக்க வைக்கின்றன. புதிய இடத்திலும் எல்லாம் இனிதே அமைய வாழ்த்துகள்!

    படங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.பல கடினமான பாதைகளைக் கடக்க நேரிட்டாலும் இப்போது திரும்பிப் பார்த்தால் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் கவனமாக நேரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூட தோன்றுகிறது. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
  2. மஸ்கட் வந்து இருக்கிறேன் சலாலாஹ் செல்ல நேரமின்றி திரும்பி விட்டேன்.
    படங்கள் அருமை நண்பரே
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரபு தேசத்தில் நீண்ட வருடங்களாக வசிப்பவர்களுக்கு Salalah ஒரு பாலைவனச்சோலை. நன்றி கில்லர்ஜி..

      நீக்கு