ஞாயிறு, 13 ஜூன், 2021

தகவல் சுமை

தலையில் ஏற்றப்படும் தகவல் சுமைகள்.

இன்றைய உலகம் ஓர் தகவல் தொடர்புலகம். Instagram, Facebook, Linked in, What's app, blogs, vlogs, videos,  messengers, podcasts, online news, OTT தளங்கள் , Radio, TV,  email and now clubhouse.. என இணையம் சூழ் உலகில் வாழ்கிறோம். 

ஒவ்வொரு நாளின் மணித்துளிகளிலும் இணையத்தின் வழியாகப் பல ஆயிரம் தகவல்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. 

'"இவ்விதமாக் கொட்டப்படும் தகவல் சுமைகள்" நமது சிந்தனைத் திறனில் எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

நமது மூளை ஒரே நாளில் இத்தனை ஆயிரமாயிரம் தகவல்களைப் பிரித்துச் செயல்பட இயலாது.  இந்த துரித பரிணாம வளர்ச்சி வடிவமைப்பு நமக்கு கிடையாது. 

நியோன்தர் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தம் வாழ்நாள் முழுமையாக அறிந்த விஷயங்களை விட, நாம் ஒரு மணித்துளியில் வாசிக்கும், பார்க்கும், கேட்கும் தகவல்கள் மிக மிக அதிகம்.

ஒரு துறவி பத்தாண்டுகளில் தேடித் தேடி வாசிப்பதன் மூலம் பெறும் தகவல்களை விட ஒரு மணி நேரத்தில் நம்மை வந்தடையும் தகவல்கள் அதிகம்.

இப்படி நம் மீது திணிக்கப்படும் தகவற் சுமை ஓர் தீவிரமான மன பாதிப்பை நம்மையறியாமல் நமக்குள் உருவாக்குகிறது. 

ஆனால் துரதிர்ஷ்டவசமாகப் பலர் இதைச் சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்துகின்றனர். 

தகவற் சுமை தீவிரமான உணர்வுகள் சார்ந்த மனச்சிக்கல்களை உருவாக்குகின்றது. 

அதீத எதிர்பார்ப்புகள், கவலை, படபடப்பு, மனக்கிலேசம், பிடிப்பற்றத் தன்மை, மனச் சோர்வு, கையறு நிலை, ஏமாற்றம், விரக்தி  இத்தகைய மன உணர்வுகளை இவைத் தூண்டுகிறன.

அத்துடன் இயல்பாகச் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கின்றன. 

உதாரணமாக வெகு திரள் மக்களின் அபிப்பிராயத்தின்படி நம்மை அவசரமாக முடிவெடுக்கும்படி இவை தூண்டுகின்றன. 

அத்துடன் நமது இயல்பாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை மட்டுப்படுத்துகின்றன.

இந்த ஏராளமான தகவல் குப்பைகள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்பதைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லை. ஆனால் அவைகள் நம் மீது திணிக்கப்படுவதை  நம்மால் மட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்தவும் கூடும்.

1. புறக்கணிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நம் மீது வீசப்படும் எல்லா தகவல்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது எனும் அவசியமில்லை. தேவையற்ற, அர்த்தமற்ற தகவல்களை உதாசீனப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகக் குற்றவுணர்வு படத் தேவையில்லை. இது தவறுமல்ல. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள நாம் கடவுள் அல்ல.

2. தெரிவு முக்கியம்

வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக மாற்றும் பொருள் பொதிந்த தகவல்களைத் தேடித் தெரிவு செய்து வாசிக்கவும். நம் மீது வீசப்படும் தகவல்களில் 65% குப்பைகள் என ஆய்வுகள் சொல்கிறது. நாம் ஒன்றும் குப்பைக் கிடங்கல்ல.

3. நேர நிர்வாகம்

இணையத்தைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து  தங்களை மறந்து அதில் மூழ்கி இருக்கும்படியாக தளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாய வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 

ஒரு நாளில் இரண்டு மணி நேரம் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக இணைய தளங்களில் செலவிடுவது  போதுமானது. அதிக பயன்பாடு நேர விரயம். 

எச்சரிக்கையுடன் இணையத்தைப் பயன்படுத்துவது மன.  ஆரோக்கியத்திற்கு மிக உசிதம்.

4. தடைசெய்ய கற்றுக் கொள்ளவும்.

ஒவ்வொரு சமூக வலைத்தளத்திலும் செயல்படாமல் ஒதுங்கி இருக்க சில  வடிவமைப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துங்கள். சில காலம் ஓய்வாக ஒதுங்கி அமைதியாகத் தளங்கள் செயல்படுவதைக் கவனியுங்கள். 

அதனால் இணையதளங்களில் நமது இருப்பு அத்தனை முக்கியமானது இல்லை எனும்  தெளிவை அதுக் கற்றுத் தரும். நாம் இல்லையென்றாலும் அவை வழமையாக இயங்கும். 

5.  இணையத்தளம்  உங்கள் அடையாளம் அல்ல.

இணைய தளங்களில் நமது செயல்பாடுகளை நிறுத்தி விட்டால் நம்முடைய  இருப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சம் நம்மையறியாது ஆட்டிப் படைக்கிறது. அது உண்மை கிடையாது. 

உண்மையில் தகவல்களை, தொடர்புகளை நாம் தவற விட்டு விடுவோமோ எனும் பயத்தை  இணையம் நம்மையறியாது  நமக்குள் விதைக்கிறது. 

Updated ஆக இருக்க மாட்டீர்கள் எனும் அச்சத்தையும் அது ஊக்குவிக்கிறது. இந்தப் போலி அச்சம் வீழ்த்தப் பட வேண்டும்.

சில நாட்கள் சமூக ஊடகங்களினின்றும் விலகியிருந்து குடும்பம், நட்பு, பணி என நிஜ உலகுடன் அதிகமான சமயம் செலவிடுவது நன்மை தரும். அது தவறல்ல. அது இயல்பானது. சாதாரணமானது. அவை புத்துணர்ச்சி அளிக்கும். இதனால் நாம் எதையும் இழந்து போகவும் மாட்டோம். மாறாக அவை நம் மனதை மேம்படுத்தும்.

இணையம் ஒரு காட்டாறு. வரும் காலத்தில் மேலும் பல பல புதிய தளங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். பல பழையத் தளங்கள் அழிந்து மறைந்தும் போகும். 

புதிய புதிய பதிவுகளும், தகவல்களும் புற்றீசலாக உருவாகி வந்து கொண்டே இருக்கும். 

எனினும் அவற்றிற்கும்  நமது இருப்பின் அடையாளத்திற்கும், அறிவின் வளர்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

மனவளம், சிந்திக்கும் திறன் இவை இரண்டும் உயர்த்த உதவும் வகையில் இணையத்தைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவோம். அது மிகவும் அத்தியாவசியமானது.

Translated Message with thanks from Ritam Bhatnagar, (linktr.ee/ritambhatnagar) email: (ritam@indiafilmproject.co)


8 கருத்துகள்:

  1. நல்ல அறிவுரை,இப்போதைய இளைஞர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை.நாமும் கட்டுப்பாடுடன் முகிர பயில்வோம். நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. இவற்றிலிருந்து விலகி இருந்தாலே உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். நல்லவற்றை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மன கட்டுப்பாட்டுடன் முறையாகப் பயன்படுத்துவோம். நன்றி குமரவேல்

      நீக்கு
  3. சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு. கவனத்தில் கொள்வோமாக!

    பதிலளிநீக்கு