மனம் மகிழப் பேசுங்கள்.
உரையாடல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
உள்ளம் உணர்ந்து கவனமாகப் பேசுவதன் வழியாக இதைச் சாதிக்க முடியும்.
நாம் பேசும் (எழுதும்) வார்த்தைகள் நமது குணத்தை வெளிப்படுத்துகிறது. ஆசையைச் சொல்கின்றன. விருப்பங்களைக் கோடிட்டுக் காண்பிக்கிறது. தகுதியைப் பிரதிபலிக்கிறது.
ஆகப் பேச்சு என்பது சுபாவத்தின் வெளிப்பாடு. தொடர்ந்து கவனமாகப் பயிற்சி செய்வதன் மூலமாக உறவுகள் மேம்படுத்தும் வகையில் பேச முடியும்.
ஒருவர் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தால் பேச்சும் தரமானதாக இருக்கும். தேவையில்லாமல் பேசிவிட்டோமே எனப் பின்னர் வருந்த நேரிடாது.
சொற்கள் குறைவாகவும், செறிவாகவும் இருப்பது மேன்மை.
எப்படிப் பேச வேண்டும் எனப் பல மதிப்பு மிக்க நூல்கள் கற்றுத் தருகிறது.
அவற்றில் சிலவற்றைத் தொகுத்து அளித்துள்ளேன். முயற்சி செய்து பார்க்கலாம்.
- தாய், தந்தையுடன் குரலைத் தாழ்த்தி மதிப்புடன் பேச வேண்டும். சப்தம் உயர்த்திப் பேசக்கூடாது. பொறுமையுடன் கேட்பது முக்கியம். பதில் வார்த்தைகள் அன்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
- வாழ்க்கைத்துணையுடன் உண்மையை மட்டும் பேச வேண்டும். அப்பொழுது உறவு உறுதிப்படும். பொய் பேசக் கூடாது. வாழ்க்கை நாடகமாக மாறி விடும்.
- உடன் பிறந்த சகோதரரிடம் உள்ளார்ந்த மனதுடன் உரையாடுதல் அவசியம்.
- உடன் பிறந்த சகோதரியுடன் நேசத்துடன் பேச வேண்டும். இனிய வார்த்தைகளில் ஆதரவு வெளிப்படட்டும். அது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
- குழந்தைகள் பேசும் போது அதைக் கவனமுடன் கேட்க வேண்டும். இடை மறித்துப் பேசக்கூடாது. அவர்களது விருப்பங்கள், எண்ணங்கள், நோக்கங்களைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானது. அவை அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்த உதவும்.
- உறவினர்களிடம் கரிசனையுடன் பேச வேண்டும். உதவியை எதிர்பார்த்து வருபவர்களிடம் எந்தளவு உதவ முடியும் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கக் கூடாது. முடியாத வாக்குறுதிகளை வழங்கக் கூடாது.
- நண்பர்களுடன் இயல்பாகப் பேச வேண்டும். முகமூடி தேவையில்லை.
- உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனமும், கண்ணியமும் தேவை. அவர்கள் நகைச்சுவை ததும்பப் பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசக் கூடாது. கேட்கப்படும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது போதும்.
- வியாபாரங்களில் கண்டிப்புடன் பேச வேண்டும். வெளிப்படையாகத் தேவைகளைச் சொல்ல வேண்டும். உரையாடலில் நேர்மை முக்கியமானது. தெளிவான புரிதல் மிக முக்கியம். எச் சூழ்நிலைகளிலும் சொன்ன சொல்லை மாற்றிப் பேசக்கூடாது.
- கீழ் பணிபுரிபவர்களிடம் பரிவுடன் பேச வேண்டும். அவர்கள் தவறிழைக்கும் போது தனித்து அழைத்துக் கண்டித்து உணர்த்தவும். மதிப்புடனும், மரியாதையுடன் நடத்த வேண்டும்.
- எந்த உறவாக இருப்பினும் போலித்தனமான உணர்வு, மிகைப்படுத்திப் பேசுவது நீண்ட காலம் செல்லுபடியாகாது. அவை எப்படியும் வெளிப்பட்டு விடும். அது அவநம்பிக்கை ஏற்படுத்தும். உறவை, நட்பைக் கொன்று விடும்.
இன்றைக்கு நாம் உறவுகள் சிதைவுப்பட்ட காலத்தில் வாழ்கிறோம். எங்கும் சுயநலம் மிகுதியாக உள்ளது. உறவுகள் பெரும்பாலும் பயன் கருதியே நீடிக்கின்றன.
பலர் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவே பழகுகிறார்கள்.
இத்தகைய சூழலில் எச்சரிக்கையுடன் பழகவும், கவனமாகப் பேசவும் வேண்டும்.
உணர்வு நிலை தவறிப் பேசும் மதியீனமான பேச்சுகள் இறுதியில் மனதிற்கு கடும் துயரத்தையே தரும்.
இறுதியாகக் குறைவாகப் பேசுவது நல்லது. எப்போதும் உள்ளம் உணர்ந்து கவனமாக உண்மையுடன் பேசுவது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கும்.
படம் இணையத்திலிருந்து நன்றியுடன்
True sir
பதிலளிநீக்குநன்றி ஜெயச்சந்திரன்
நீக்குஅருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குNalla aalosanai. Muyarchi cheyya vendum
பதிலளிநீக்குThank you Dr.
நீக்குபேசுதல் மெல்லினமாய் இருந்தால் நன்று. நன்றி.
பதிலளிநீக்குநன்றி ரவி.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமிக நன்று. மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய கருத்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு