வியாழன், 3 மார்ச், 2022

விட்டு விடுங்கள்.

 மன நிறைவாக வாழ்வதற்கு விட்டு விட வேண்டிய 10 பழக்கங்கள்.

(10 Habits You Must QUIT to be Happy) 


1. இலக்குகளைத் தள்ளிப் போடுவதை நிறுத்த வேண்டும்.

(Quit procrastinating on your goals) 

வெற்றியடைய வேண்டும் எனப் பலர் கனவு மட்டும் காண்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதற்காக விழித்தெழுந்து கடினமாக உழைக்கிறார்கள். 

ஒரு செயலை காலம் தாழ்த்தாமல் தொடங்குவது தான் முன்னேறுவதற்கான ரகசியம். புதிதாக ஒரு செயலை செய்ய முனையும் போது எதிர்ப்பு எழும். ஆனால் அதற்காக அச் செயலை தள்ளிப் போடாது தொடர்ந்து திறமையாகச் செயலாற்ற வேண்டும். 

எனவே எப்படி முடிவடையுமோ எனக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காமல், முதல் அடியை அது மிகச் சிறியதாக இருந்தாலும்  கவனமாக எடுத்து வைத்து முன்னோக்கி நகர வேண்டும்.

2. மற்றவர்களைக் குறை கூறுவதையும், சாக்குப்போக்கு சொல்வதையும் நிறுத்த வேண்டும். 

(Quit blaming others and making excuses) 

ஒரு செயலை செய்ய இயலாமல் போவதற்கு மற்றவர்களைக்  குற்றம் சாட்டி தப்பிக்கக் கூடாது. இவை இல்லாததால் தான் என்னால் இதைச் செய்ய முடியவில்லை எனப் பழி சொல்லி காலம் கடத்தக் கூடாது. அதுபோல, இவை எல்லாம் தடைகளாக இருக்கிறது எனக் குறை கூறுவதும் பயனற்றது. 

அதுபோல, ஒரு செயல் நமக்கு இலகுவாக இருப்பதால் அது சரியானது என முடிவு செய்யக் கூடாது. அல்லது கடினமாக உணர்வதால் பிறரைக் குறை கூறுவதும் தவறு.

நமது செயலுக்கு மற்றவர்களைக் குறை கூறும் போது நாம் நமது பொறுப்பை மறுக்கிறோம். அந்த பிரச்சினையும் தீராமல் தொடர்கிறது. 

நமது சக்தியைக் குறை கூறுவதில் விரயமாகிச் செலவிடுவதை  நிறுத்திவிட்டு, பொறுப்பேற்கத் தொடங்குவது நல்லது. 

மற்றொரு சாக்குப் போக்கு, மன்னிப்பு கோருவது. அதனால் எதுவும் மாறாது. நாம் எடுக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கும் நாம் மட்டுமே பொறுப்பு.

3. மாற்றத்தைத் தவிர்க்க முயல்வதை நிறுத்த வேண்டும்.

(Quit trying to avoid change) 

மாற்றம் ஒன்றே மாறாதது. பூமி சுற்றவில்லை என்றால், மறுநாள் காலை சூரிய உதயம் இருக்காது. இந்த முழு பிரபஞ்சமும் நம்மைச் சுற்றி இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கிறது. 

இருந்தாலும், நம்மில் பெரும்பாலோர் மாற்றத்தை விரும்புவதில்லை. இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து வசதியாக வாழ விரும்புகிறோம்.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் இன்றியமையாதது. 

மாறும் போதுதான் வளர்கிறோம். அதுவரை நமக்கு அறிமுகமில்லாத ஒரு உலகத்தை அப்போது பார்க்கத் தொடங்குகிறோம்.

நல்லதோ அல்லது கெட்டதோ எல்லா சூழ்நிலைமையும் மாறும். எனவே மாற்றத்தைத் தழுவி முன்னேறிச் செல்லுவது சிறந்தது. 

4. கட்டுப்படுத்த முடியாதவற்றை, கட்டுப்படுத்த முயல்வதை நிறுத்த வேண்டும்.

(Quit trying to control the uncontrollable) 

நாம் எதிர் கொள்ளும் பல சூழல்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. 

ஆனால் அதை எப்படி எதிர் கொண்டு நடந்து கொள்கிறோம்  என்பது முக்கியமானது. கடினமாகச் சூழலிலும் அதற்கு எதிர்வினை ஆற்றுவது, எப்போதும் நமது கையில் தான் இருக்கிறது. 

நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை விட்டுவிட்டு, செயலாற்ற முடிந்த விஷயங்களில் ஆற்றலையும் கவனத்தையும்  முதலீடு செய்வதுதான் நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம்.

5. தன்னையே தாழ்த்தி பேசுவதை நிறுத்த வேண்டும் .

(Quit talking down to yourself) 

நாம் தோல்வியடைவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சந்தேகம் மற்றும் எதிர்மறையான பேச்சு. 

நம் மனதில் எழும்பும் எண்ண ஓட்டத்தைக் கூர்ந்து கவனிக்கப் பழக வேண்டும். எதிர்மறையாக எழும்பும் எண்ணங்களை, நேர்மறை எண்ணங்களாகத்  தொடர்ந்து பயிற்சி செய்வதால் மாற்ற முடியும். 

காலப்போக்கில் இது வாழ்க்கைப் பாதையைச் சரியான திசைக்கு மாற்றி, சிறந்த வாழ்க்கை வாழ வழி நடத்தும். 

6. மற்றவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.

(Quit criticizing others) 

மற்றவர்களைக் குறித்துப் பேசும்  எதிர்மறையான விமர்சனம் நமது சொந்த மகிழ்ச்சியை படிப்படியாக முடக்கிவிடும். 

எனவே ஒவ்வொருவரிடமும் காணும் குறைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, சுய முன்னேற்றம் அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நமது பொன்னான நேரத்தை மற்றவர்களை விமர்சிப்பதில் வீணடிக்காமல் சொந்த வாழ்க்கையில் நிலையான வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்குச் சுறுசுறுப்பாகச் செயல் புரிவது நல்லது. 

7. பிரச்சினைகள் மற்றும் அச்சங்களிலிருந்து ஓடுவதை நிறுத்த வேண்டும்.

(Quit running from your problems and fears) 

ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சனைகளை ஒரு குவியலாகக் குவித்து, நமது பார்வைக்காக வைத்தால், நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமில்லை எனப் புரியும். 

ஒரு சிக்கல் எவ்வளவு சமாளிக்க முடியாததாக, கடுமையாகத் தோன்றினாலும், அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்வதே சிறந்த அணுகுமுறை. 

ஏனெனில் பயம் முடிவுகளை எடுப்பதிலிருந்து நம்மைத் தடுக்கும். அதனால் சிறந்த வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்யும் போது அவற்றைச் சிறப்பாகச் செய்ய முடியும். அதனால் எந்த கடுமையான சூழலையும் எதிர் கொள்ள முடியும்.

8. வேறொரு காலத்திலும் இடத்திலும் வாழ்வதை நிறுத்த வேண்டும்.

(Quit living in another time and place) 

கடந்த கால இழப்புகளுக்கு எவ்வளவு நேரம் சிந்தித்துப் புலம்பினாலும், எதுவும் மாறப் போவது கிடையாது. 

கடந்த காலம் முடிந்து விட்டது. எதிர்காலம் இன்னும் வரவில்லை. நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம். வாழ்க்கை நமது செயல்களுக்கு அளிக்கும் பலன் மிக நுட்பமான  முறையில் மறைந்துள்ளது. 

இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது எதிர்காலத்தின் கதையைத் தீர்மானிக்கிறது. ஆகவே நமது நிகழ்கால செயல்களை மிகுந்த திறனுடன், அதீத கவனத்துடன் செய்ய வேண்டும். நிகழ்காலத்தில் வாழ வேண்டும். 

வேலையில் இருக்கும்போது விடுமுறையில் இருப்பதைப் பற்றி கற்பனை செய்வது வீண். அதுபோல விடுமுறையில் இருக்கும்போது மேசையில் வேலைகள் குவிந்து கிடப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

இந்த கணத்திற்காக வாழுங்கள். உங்களைச் சுற்றி அழகு வெளிப்படுவதைக் கவனியுங்கள்.

9. நீங்கள் இல்லாத ஒருவரைப் போல நடிக்க முயற்சி செய்வதை  நிறுத்த வேண்டும்.

(Quit trying to be someone you're not) 

நாம் நாமாகவே இருப்பது வாழ்வின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். இந்த உலகம் மற்றவர்களைப் போல் நம்மை உருவாக்க முயற்சிக்கும். 

ஒருவர் அழகாகவும், புத்திசாலியாகவும், நல்ல உடல் நலத்துடன், இளமையாக இருக்கலாம். அவர் புகழுடன் அனைவரும் விரும்பும் வகையில் வாழலாம். அதற்காக அவரைப் போல நடந்து கொள்ள முயல்வதால், நாம் ஒருபோதும் அவரைப் போல ஆக முடியாது.

நாம் எப்போதும் சொந்த இயல்புடன் வாழ வேண்டும். பிறரைக் கவர்வதற்காக நடிக்கத் தேவையில்லை. 

நாம் இருக்கும் வண்ணமாகவே நம்மை நேசிக்கும் சரியான நபர்கள் வாழ்க்கையில் சந்திப்போம். நாம் உண்மையான இயல்புடன் வாழ்ந்தால் நமக்கே நம்மை மிக அதிகமாகப் பிடிக்கும்.

10. நன்றி கெட்டவராக இருப்பதை நிறுத்த வேண்டும்.

(Quit being ungrateful) 

இந்த உண்மையை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் நடக்கும் பல விஷயங்கள் அவை ஏன் நிகழ்கிறது எனப் புரியாது. 

ஆனால், அனைத்து புதிர் பகுதிகளும் முதலில் ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தாதது போலத் தோன்றினாலும்,  காலப்போக்கில் அவை ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுவதைப் பார்ப்போம்.

ஆகையால், வாழ்வில் எதிர் கொள்ளும் கசப்பான விஷயங்களுக்கும் நன்றி சொல்லுங்கள். ஏனென்றால் அவை எதிர்காலத்தில் சந்திக்கக் கூடிய பொறுப்புகளுக்கு நம்மைத் தகுதிப்படுத்துகின்றன.

உங்களிடமிருந்து விலகிச் சென்றவர்களுக்கும் நன்றி சொல்லுங்கள். உண்மையில் அவர்கள் விருப்பம் இல்லாமல் தான் இவ்வளவு நாட்கள் பழகி வந்தார்கள். 

ஆகையால் நல்லது அல்லது கெட்டது, எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் நன்றியுடன் எழுந்திருங்கள். நன்றியுடன் முன்னேறுங்கள்.

Translation of the Article with thanks:

10 Habits You  Must QUIT to Be Happy" from the book of "1000+ Little Things Happy, Successful People Do Differently" by Mark & ANGEL CHERNOFF.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக