சிந்தித்துச் செயல்படு
(ஆத்திசூடி - ககரவர்க்கம்)
கைவினை கரவேல் : உனக்குத் தெரிந்த கைத் தொழிலை மறைக்காமல் செய் என்பது இதற்குத் தரப்படும் பொதுவான விளக்கம்.
"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற கவிமணியின் வாக்கியமும் நினைவுக்கு வருகிறது.
"கரவேல்" என்றால் மறைக்காதே அல்லது ஒளிக்காதே எனப் பொருள் படும்.
(கரவேல் = கரவு+ஏல்).
கரவு - என்றால் ஒளிவு / மறைவு.
"ஏல்" என ஒரு சொல் முடியும் போது அது எதிர்மறைப் பொருள் தரும். அவை கட்டளை வாக்கியமாக இருக்கும். கீழ்ப்படிந்து செய்ய வேண்டும். (ஏவல் வினை முற்று)
உதாரணமாக
விலக்கேல் = விலக்காதே.
இகழேல் = இகழாதே.
பேசேல் = பேசாதே.
கரவேல் = மறைக்காதே அல்லது யாரும் அறியாமல் செய்யாதே.
எனினும், நமது கையால் செய்யப்படும் செயல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் இந்த வாக்கியம் சிந்திக்க வைத்தது.
- உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை மறைத்து வெளியே இனிமையாகப் பேசுவதும் ஒரு வகையில் கரவு தான். (வஞ்சகம்).
- சுய நன்மைக்காக உண்மையை மறைத்து பிறரை ஏமாற்றிப் பேசுவதும் ஒரு வகையில் கரவு தான். (பொய்).
- பிறர் பொருளை அவர் அறியாமல் அபகரிப்பதும் ஒரு வகையில் கரவு தான். (திருடுதல்).
- மோக இச்சைக்கு ஆட்பட்டு பிறரது குடும்ப உறவுகளைச் சிதைப்பதும் ஒரு வகைகரவு தான். (தீய நடத்தை).
இப்படி பிறருக்குத் தெரிந்து விடக் கூடாது எனப் பயந்து ஒளித்து, பிறர் அறியாமல் மறைவாகச் செய்யப்படும் தீய செயல்களைச் செய்யாதே என்றும். இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
கைவினை கரவேல்: பிறர் பார்த்து விடக் கூடாது என மறைவாகச் செய்யப்படும் எந்த விதமான செயலையும் அந்தரங்கமாக ஒளித்துச் செய்யாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக