வியாழன், 29 செப்டம்பர், 2022

இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.

இந்த பூமியே பூவனம்.




வாஷிங்டன் DC: L'Enfant Plaza Metro Station, 12th Friday, January'2007- Morning 7:51. 

L'Enfant Plaza மெட்ரோ நிலையம், ஃபெடரல் வாஷிங்டனின் மையப் பகுதியில் உள்ளது. அது ஒரு குளிர்ந்த காலைப் பொழுது. மெட்ரோ நிலையத்தின் சுரங்கப்பாதை வாயிலில் நின்றபடி, ஒருவர் வயலினை இசைத்தார். சுமார் 43 நிமிடங்கள் ஆறு 'Bach Pieces' இசைக் குறிப்புகளை வாசித்தார். 

ஏறக்குறைய 1,100 பேர் சுரங்கப் பாதை வழியாகக் கடந்து செல்கின்றனர். பெரும்பாலோர் அவசரமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அநேகர் நடுத்தர அளவிலான நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள்.

மூன்று நிமிடங்கள் கடந்தது. ஒரு நடுத்தர வயது பயணி இசைப்பதைக் கவனித்தார். நடை வேகத்தைச் சற்று குறைத்து, நின்று சில நிமிடங்கள் கேட்டார். உடனே தமது வேலையைத் தொடரும்படி அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்தார். 

ஒரு நிமிடத்திற்குப் பிறகு, வயலின் கலைஞருக்கு முதல் டாலர் கிடைத்தது. ஒரு பெண்மணி பணத்தை எறிந்துவிட்டு நிற்காமல் தொடர்ந்து நடந்தாள்.

சில நிமிடங்கள் கடந்தது. யாரோ ஒருவர் அவரது இசையைச் சுவரில் சாய்ந்தபடி கேட்டார். சட்டெனத் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினார். அவர் நிச்சயமாக வேலைக்குத் தாமதமாகச் செல்வார்.

ஒரு 5 வயது சிறுவன் இசையைக் கேட்டவுடன் ஆசையுடன் நின்றான். அவனது தாய் அவசரமாக அவனைத் தள்ளிக் கொண்டு விரைந்து சென்றார். அந்தக் குழந்தையோ ஆர்வமாக வயலின் கலைஞரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு நகர மறுத்தான். அந்த தாய் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தார். ஆனாலும் அந்தக் குழந்தை தொடர்ந்து தலையைத் திருப்பிப் பார்த்த வண்ணம் சென்றான்.

ஆச்சரியமாக, பல குழந்தைகளும் இதே விதமாகவே நடந்து கொண்டனர். விதிவிலக்கு இல்லாமல் அனைத்துப் பெற்றோர்களும், குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்றனர்.

இசைக் கலைஞர் இசைத்த அந்த 43 நிமிடத்தில், வெறும் 7 பேர் மட்டும் சிறிது நேரம் நின்றார்கள். 27 பேர் அவருக்குப் பணம் கொடுத்தனர், ஆனால் குழந்தைகள் தவிர அனைவரும் தொடர்ந்து தங்கள் வழக்கமான வேகத்தில் கடந்து சென்றனர். அவருக்கு $32 கிடைத்தது.

அவர் இசைத்து முடித்ததும் அந்த இடத்தில் மௌனம் ஆட்கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. யாரும் கைதட்டவில்லை. எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

அந்த நாளில் அங்கு வாசித்தவர், உலகின் தலைசிறந்த வயலின் இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜோசுவா பெல் (Joshua Bell). அவரை கடந்து சென்ற ஒருவரும் அதை அறியவில்லை. இதுவரை எழுதப்பட்ட இசைக் குறிப்புகளில் மிகவும் சிக்கலான ஒரு சிறந்த பகுதியை அன்று வாசித்தார். அதன் மதிப்பு பல மில்லியன் டாலர்கள் ஆகும்.

சுரங்கப்பாதையில் இசைப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, பாஸ்டனில் உள்ள ஒரு அரங்கத்தில் ஜோசுவா பெல் அவர்களது இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இருக்கைக்கான நுழைவு சீட்டின்  சராசரி மதிப்பு $100.

இது சமூக பரிசோதனைக்காக நடத்தப்பட்ட ஒரு உண்மை நிகழ்ச்சி. 

மக்களின் அனுமானம் (Perception), விருப்பங்கள் (Desires/Taste) மற்றும் முன்னுரிமைகள் (Priorities) பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக Washington Post பத்திரிக்கை மூலமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சோதனையின் அவதானிப்புகள் (observations) பல கேள்விகளை எழுப்பியது. 

ஒவ்வொரு நாளும் நாமும் இதே விதமாகப் பயணிக்கிறோம். 

இது போல், ஒரு பொது இடத்தில், பொருத்தமற்ற நேரத்தில், நல்லதொரு இசையை இரசிக்க முடிகிறதா? 

அப்படி இரசிக்க முடிந்தால், அதை நின்று கவனித்துப் பாராட்ட முடிகிறதா? 

எதிர்பாராத சூழலில் வெளிப்படும் திறமையை  அங்கீகரிக்கிறோமா?

தெருக் கலைஞர்கள், பார்வையற்ற பாடகர்கள்  நிகழ்ச்சியை நின்று கேட்பது உண்டா? அல்லது வெட்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றின் கலவையான உணர்வுகளுடன் அவசரமாக ஒதுங்கிச் செல்கிறோமா? 

இயற்கை அழகை இரசிக்க நேரம் இருக்கிறதா?  அல்லது எது தடுக்கிறது? 

இது போன்ற தருணத்தில் நாம் செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு என்ன? 

பெரும்பாலோர் இது போன்ற நிகழ்வுகள் நேரத்தை வீணடிப்பதாக எரிச்சலாகின்றனர்.

சிலர் நாகரீகமாக இருப்பதாகக் கருதி பணத்தை வீசுகிறார்கள்.

முக்கியமாகப் பணம் சம்பாதிப்பதற்காக ஓடுவதால் அழகுணர்வு, இரசனை இவற்றை நாம் நிறைய இழந்து விட்டோம்.

இந்த சோதனையின் முடிவுகளிலிருந்து எழும் சாத்தியமான கேள்வி: 

உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவரது இசையை, இதுவரை எழுதப்பட்ட இசை குறிப்புகளில் மிகச் சிறந்த ஒரு நுட்பமான குறிப்பை, மிக அழகான இசைக்கருவிகளில் ஒன்றின் வழியாக இசைத்தாலும் நமக்கு நின்று பொறுமையுடன் அதை இரசிக்க ஒரு தருணம் இல்லையென்றால், 

விரைந்து செல்லும் வாழ்க்கையில் இன்னும் எத்தனை அழகிய விஷயங்களைப் பார்க்க, இரசிக்க, அனுபவிக்கத் தவற விட்டு இழந்து நிற்கிறோம்?

கவிஞர். வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. 

நிலா காய்கிறது,
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே..,
இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இதே கருத்தை வலியுறுத்தி, W.H. Daves அவர்களால் எழுதப்பட்ட சிறு கவிதை: "The Leisure அதன்  மையப் பொருள்:

What is this life if, full of care, 
We have no time to stand and stare.

உண்மையில் குழந்தைகள் இயற்கைக்கு மிக நெருக்கமானவர்கள். 

இயற்கை அழகை ரசிக்க, சிறந்த கலைகளை வியந்து பார்க்கக் குழந்தை மனம் வேண்டும்.

To read the full story with video:

https://www.washingtonpost.com/lifestyle/magazine/pearls-before-breakfast-can-one-of-the-nations-great-musicians-cut-through-the-fog-of-a-dc-rush-hour-lets-find-out/2014/09/23/8a6d46da-4331-11e4-b47c-f5889e061e5f_story.html

படம் இணையத்திலிருந்து நன்றியுடன்:

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உண்மை. ஆனால் பரபரப்பு மிக்க வாழ்க்கையிலும், இரசிக்கத் தக்க நிகழ்வு குறுக்கிட்டால் அதைச் சிறிது நேரம் ஒதுக்கி அனுபவிக்க முயல்வது நல்லது. நன்றி.

      நீக்கு