சனி, 5 நவம்பர், 2022

அம்மா..,

 நினைவஞ்சலி.



அம்மா ஆழ்வார்திருநர் அடுத்த மணல்குண்டு எனும் சிற்றூரில் 02.10.1942ம் ஆண்டு பிறந்தார். அம்மா ஒரே ஒரு செல்லப் பெண். உடன் பிறந்தவர்கள்  ஜந்து சகோதரர்கள். அம்மா மூத்த சகோதரி. அம்மாவின் அப்பா திரு. சீனிப் பாண்டியன். தாயார் திருமதி சீனித்தாய். இருவரும் ஆசிரியர்கள். 

அவர்கள் தாத்தா அதாவது எனது பாட்டனார் தெய்வத்திரு. ஞானக்கண் அவர்கள் காலத்தில் தொடங்கிய "ஞானக்கண் ஆரம்ப பள்ளி" நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றும் அந்த சிற்றூரில் இயங்கி வருகிறது. 

அம்மாவின் திருமணம் 1962ம் ஆண்டு. 1963ம் ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றத் துவங்கினார். அவர்களது பெரும் பகுதியான பணிக்காலம் விருத்தாச்சலம், பறங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) பகுதியில் அமைந்தது.  கடைசி 5 வருடங்களில் சொந்த கிராமத்தில் (வீராணம், தென்காசி) பணி புரிந்து ஓய்வு பெற்றார்கள். (ஆசிரியர் பணி 1963-2000).

அவர் ஒரு கடினமான உழைப்பாளி:                                           

அம்மாவை நினைவு கூறும்போது முதலில் தோன்றுவது அவர் ஒரு கடினமான உழைப்பாளி. அவர்கள் ஓய்வெடுத்துப் பார்ப்பது அரிது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருப்பார்கள். 

1970-80களில் ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசியை அரைத்துச் சேமித்து வைப்பது வீடுகளில் வழக்கம். பெரிய பெரிய பித்தளை அண்டாக்களில் நெல்லை ஊற வைத்து, வேக வைத்து, அரிசியாக அரைத்துக் கொண்டு வருவார்கள். அந்த கடும் பணியை வருடம் தவறாது செய்வார். அந்த புது அரிசி உலர வைக்க வீடு முழுவதும் பரப்பப்பட்டிருக்கும். அந்த புது அரிசியின்  மணம் இன்றும் நாசியில். 

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். அவர்களுக்குச் சுத்தமான பால் கொடுக்கப் பட வேண்டும் என வீட்டில் மாடு வளர்க்கப்பட்டது. தென்னம் துடைப்பம் முதல் தேங்காய் எண்ணெய் வரை பல பொருட்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

ஆசிரியைப் பணியை மிகுந்த கடமையுணர்வுடன் செயல் படுத்தினார்கள். பெத்தநாயக்கன்குப்பம் எனும் சிறு கிராமத்தில் பணிபுரிந்த போது அந்த சிற்றூரில் பேருந்துகள் நிற்காது. பல வருடங்கள் தினமும் ஜந்து கிலோமீட்டர் நடந்து சென்று வருவார்கள். 

அவர்களது உணவை அவர்களேச் சமைத்தார்கள். தாமே துணியைத் துவைத்தார்கள். பாத்திரங்களைக் கழுவுவது வரை வேறு ஒருவர் செய்வதை விரும்பவில்லை. இறுதி வரை உழைத்தார்.



அம்மாவின் உலகம் - குடும்பம்:

அம்மாவின் உலகம் மிகச் சிறியது. வேலை, குடும்பம், ஆலயம் அவ்வளவுதான்.

அம்மா குடும்பத்திற்காகவே வாழ்ந்தார். ஒவ்வொரு நாள் காலையில் எழுந்தவுடன் சில இறை பாடல்கள் பாடுவார். பின்பு வேதம் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஜெபம். அம்மாவின் கடைசி தினம் வரையில் இந்த ஒழுங்கு முறை தவறவே இல்லை. அது போல இரவு தூங்கச் செல்லும் முன்பாகவும் இதே ஒழுங்கு முறை தான். 

எனது சிறு வயதிலிருந்து யாரேனும் ஒரு உறவினர் எங்களோடு எப்போதும் வசித்தது உண்டு. ஒவ்வொரு உறவுகளும் எங்களுடன் சில காலம் தங்கிப் படித்து ஒரு வேலை பெற்றுக் கடந்து சென்றனர். உறவுகளைப் பேதமின்றி நேசித்தார். பல உறவுகளின் வாழ்க்கைக்கு எங்களது வீடு அடைக்கலம் தரும் புகலிடமாக இருந்தது.

அவர்கள் வாழ்ந்த  விதம் நம்ப முடியாததாக இருக்கும். ஆனால் அது உண்மை. அம்மாவிற்கு கேளிக்கை நிகழ்வுகளில் விருப்பம் கிடையாது. நாங்கள் குடும்பமாகப் பார்த்தது ஒரே ஒரு திரைப்படம் தான். வீட்டில் திரைப்படப் பாடல்கள் ஒலித்ததே கிடையாது. திருமண Functions, சுப நிகழ்வுகளில் கூட அதை அனுமதித்தது இல்லை. 

எனது +2 படிக்கும் போது தான் முதன் முதலாக குடும்பமாக ஹோட்டலில் சாப்பிட்டோம்.  எந்த சூழலிலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது அம்மாவின் வழக்கம். வெளிப் பிரயாணங்களிலும் சமைத்து எடுத்துச் செல்வார்கள். எளிமையான வாழ்க்கை.

எங்கள் குடும்பம்:

எங்கள் தந்தை உயர்திரு. சுப்பிரமணியம் அவர்கள் நெடுஞ்சாலைத் துறையில் மேலாளராக பணிபுரிந்து 1991ம் வருடம் ஓய்வு பெற்றார். இன்றும் எங்களை வழி நடத்துகின்றார்.

நாங்கள் மூன்று பேர். முதல் சகோதரி திருமதி. ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி. அவரது கணவர் திரு. ஹென்றி மோகன். சங்கர் சிமென்ட்ஸில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் எரிக் எட்வின்.அவரது துணைவியார் மகிபா பிரின்ஸி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ரெபேக்கா ஷரன் & ஜெஸிக்கா. பஹ்ரைனில் வசிக்கின்றனர்.

இரண்டாவது மகள் ஹெல்மினா நேச கமலா. அவரது கணவர் சாமுவேல் ஆண்டனி. அவர்களுக்கு ஒரு மகன் கெவின் ஹென்றி டேனியல். துபாயில் வசிக்கின்றனர்.

இரண்டாவது சகோதரி தெய்வத்திரு. ஸ்டெல்லா சாந்தி மேரி. அவரது கணவர் திரு. செல்வராஜ். NHAIல் Project Director ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போதும் NHAIல் Team leader ஆக பணி புரிகிறார். சாந்தி அக்கா 22.02.2007ம் ஆண்டு இறைவனது திருவடியை அடைந்தார்கள். 

இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். முதல் மகன் ரென்னி பிரபாகர், அவரது துணைவியார் கேத்தரீன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்  ஜான் & ஜெனி. சென்னையில் வசிக்கின்றனர். 

இரண்டாவது மகன் ரெமோ ஷரன். மதுரையில் சொந்தமாக தொழில் நடத்துகிறார். 

கடைசியாக நான் மற்றும் எனது துணைவியார் திருமதி. முத்து ஜெய லதா. எனது மகன் ரியோ சாம். மருமகள் கேத்தரீன் பிரியா. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மெரில் & மைக்கேல். மெல்பேர்னில் வசிக்கின்றனர்.

எங்களது மகள் ஏமி கேத்தரீன். மருமகன் மனோஜ் பால். இருவரும் பல் மருத்துவர்கள். மருமகன் கனடா தேசத்தில் பணி புரிகின்றார்.

அம்மாவின் ஜெபம் மற்றும் வழி காட்டுதல் எங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணம். அனுதினம் எங்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி ஜெபிப்பார்கள். எங்கள் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். எங்கள் உயர்வைப் பற்றிப் பேசி மகிழ்ந்தார்கள். நாங்கள் ஏதேனும் சிறு பொருளை அளித்தாலும் வருவோர் போவோரிடம் அதைப் பெரிதாகக் கூறி அக மகிழ்ந்தார்கள். 

எங்களை ஈன்றெடுத்து, வளர்த்து, கல்வியளித்து, திருமணம் செய்வித்து குடும்பமாக வாழ வைத்ததே அவர்களுடைய வாழ்க்கை.

அம்மா என்றால் சிக்கனம்:

அம்மா எதையும் நிதானமாக அணுகுபவர். பொருட்களை அளவுடன் பயன்படுத்துபவர். பல வருடங்கள் பழமையான பொருட்கள் கூட பத்திரமாக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இளமையில் மிக நெருக்கடியான பண சூழலில் வளர்ந்தவர். அதை  இறுதி வரை மறக்காது சிக்கனமாக வாழ்ந்தார்.

கடைசிவரை எதாவது ஓர் சிறு சேமிப்பில் இணைந்திருந்தார். பொருட்களைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்தாலும்  கூட அதை அளந்து தான் கொடுப்பார். ஒவ்வொரு வரவு செலவும் கடைசி வரை எழுதி வைத்திருந்தார். 

கொடுக்கும் கரங்கள்:

அம்மா இறுதி வரை கொடுக்கும் ஸ்தானத்தில் வாழ்ந்தார். பணத் தேவைகளுடன் வருபவர்களுக்கு தன்னால் இயன்ற அளவு மறுக்காமல் உதவினார். அவருக்கு உதவியவர்களுக்கு உடனடியாக பதிலுதவி செய்திடுவார். எதையும் பிறரிடமிருந்து இலவசமாகப் பெறுவதற்குப் பிடிக்காது. பிறர் பொருளுக்கு ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை. 

ஒவ்வொரு பேரன், பேத்தி, பூட்டன், பூட்டிக்கும் செய்ய வேண்டியவற்றை மகிழ்ச்சியோடு செய்து அழகு பார்த்தார்கள். 

கடைசி தினத்தன்று கூட இரண்டாவது சகோதரியின் மகன் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையுடன்  வந்திருந்தார். அந்தக் குழந்தையை மகிழ்ச்சியோடு ஏந்தினார். அவர்களுக்கு பிடித்தமான உணவைச் சமைத்தார். அவர்களைப் பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி. 

அம்மாவின் விருப்பங்கள்:

அம்மாவிற்கு இறைப்பணியில் தீராத வாஞ்சை. பல வருடங்களாக ஒவ்வோர் நாளும் மாலை ஆலயத்தில் ஜெபம் நடத்துவதை மிக மகிழ்ச்சியுடன் செய்தார்கள். ஞாயிறு ஆராதனைக்குக் குறித்த நேரத்தில் ஆலயத்தில் இருப்பார்கள். தாமதம் எனும் பேச்சிற்கே இடமில்லை. 

ஆலயத்தின் ஒவ்வொரு ஊழியங்களிலும் ஆவலுடன் பங்கு பெறுவார்கள். குறிப்பாகக் கிறிஸ்மஸ் பவனி ஒவ்வொரு வருடமும் எங்களது இல்லத்தில் சிறப்பாக நடைபெறும். அவர்களுக்கான உணவு தயாரிப்பதற்காக அவ்வளவு சிரத்தை எடுப்பார்கள். ஆலயத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்குக் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்கள் தெரிவு செய்ய அதிக உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

அவர்களது இறுதிக் காலத்தில் எங்களது வீட்டிற்கு வருகை தருவதில் உறவினர்களை விட ஊழியர்களே அதிகம் எனலாம். ஊழியர்களுடன் குழந்தையைப் போல உரையாடுவார். அவர்களை உபசரிப்பதில் அதிக மகிழ்ச்சியடைவார்கள். 

பார்வையற்றவர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஊழியங்கள், மிஷனரிப் பணிகள், பல சுதேச ஊழியங்களை அவர்கள் கிரமமாக ஆதரித்துத் தாங்கினார். வீராணம் CSI திருச்சபையின் பல வகையான ஊழியங்களிலும் இணைந்து செயல் பட்டார். திருச்சபையில் பல பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றினார்.

அம்மாவின் இறுதி நேரங்கள்:

23.10.2022 அன்று இரவு 9 மணியளவில் வழக்கம் போல என்னுடன் தொலைப்பேசியில் பேசினார். ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வது குறித்துப் பேசினார்.  

இரவு 10 மணி மாதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தார். வழக்கம் போல் இரவு ஜெபம் செய்தார். இரவு 10:30 மணியளவில் சற்று அசௌகரியமாக உணர்ந்தார். அப்பா மற்றும் உறவினர்கள் உதவி செய்தனர். 10:45க்கு நெஞ்சில் லேசான வலி. அடுத்த சில நிமிடங்களில் வலி தீவிரமாகி ''ஆண்டவரே'' என அழைத்தார். மயங்கி விழுந்தார். 10:50 மணியளவில் அவரது ஆன்மா இறைவனது பாதம் அடைந்தது.



அம்மாவின் இறுதி அடக்க ஆராதனையில் உறவுகள், சபை மக்கள், பல தேவ ஊழியர்கள் பங்கு பெற்றனர். நாங்கள் அறியாத பலர், குறிப்பாக சபை மக்கள் அம்மாவின் அன்பை கண்ணீரோடு பகிர்ந்தனர். அவர்கள் ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்து தமது ஓட்டத்தை கர்த்தருக்குள் நிறைவு செய்த்தை உணர்ந்தோம்.

இனி அனுதினம் இருமுறை அழைக்கும் அவரதுக் குரலைக் கேட்க முடியாது. அவர்களைப் பார்க்க முடியாது. ''எப்படா வருவ'' எனக் கேட்டுக் காத்திருக்கும் உயிர் இனி இல்லை. வாழ்வின் கடினமான நேரங்களில், மனம் சோர்ந்து துவளும் போது ஆற்றுப் படுத்தும் அந்த ஆறுதல் வார்த்தைகள் கிடைக்காது. வாழ்க்கைப் போராட்டத்தில் திறப்பின் வாசலில் நின்று போராடும் தாய் இனி இல்லை. அவர்களது அன்பு நிறை செயல்கள் மனதில் எழும்பும் போது விழியில் நீர் சுரக்கின்றது.




அவர்கள் உடல் திருச்சபைக் கல்லறைத் தோட்டத்தில் உறங்குகிறது. அவர்கள் ஆன்மா இறைவனது சமூகத்தில் இளைப்பாறுகிறது என விசுவாசிக்கிறோம். 

அம்மா..,  உயிர்த்தெழுதலின் நாளில் நாம் மீண்டும் சந்திப்போம்.


6 கருத்துகள்:

  1. அம்மாவிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை.. பிரிவால் வாடும் உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... ஈடு செய்யமுடியாத இழப்பு.. அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன்.. 🙏🏻🙏🏻🙏🏻

    பதிலளிநீக்கு
  2. Excellent write up mama..Pattiamma lived a prayerful life..I still remeber they use to hear the Vishwawavani message in thre early morning in Kurinjipadi and night time in prayers.

    பதிலளிநீக்கு
  3. அம்மாவிற்க்கு இணை அம்மாவே. அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆறுதல் வார்த்தைகள் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள் அன்புமிகு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. வருத்தம் அளிக்கும் செய்தி. நெகிழ்வான நினைவஞ்சலி. வணக்கத்துக்குரிய தங்கள் அம்மாவின் ஆன்ம சாந்திக்கும், தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கவும் என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு