செய்வதை நேர்த்தியாகச் செய்.
Great works are performed not by the strength but by Perserverance - Samuel Johnson.
செய்வன திருந்தச் செய்: ஒரு செயலை செய்யும் போது அதைக் குற்றம் குறை ஏதும் இல்லாமல் முழுமையாகச் செய்து முடித்தல் வேண்டும்.
நாம் செய்யும் செயல்கள் நமது வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றது. உன்னதமான சாதனைகள் எனப் போற்றப்படுபவை அனைத்தும் ஓர் விதி முறை ஒழுங்குக்குக் கீழ்ப்படிந்து, அர்ப்பணிப்புடன் செய்த, சின்ன சின்ன செயல்களின் தொகுப்புகள் தான்.
ஒரு இசைக் கலைஞராக இருந்தாலும் சரி, விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரி, ஒரு ஒழுங்கு முறைமைக்குக் கீழ்ப்படிந்து, கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்யும் போது தான் அவர்களது படைப்பாற்றல் வெளிப்படுகிறது. எந்த அளவிற்கு அவர்கள் ஒப்புக் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு மேம்பட்டுப் பிரகாசிக்கின்றனர்.
எந்த ஒரு செயலையும் முறையாகத் தொடர்ந்து செய்யும் போது, அது நாளடைவில் இயல்பான பழக்கமாக மாறிவிடும். அந்த அனுபவத்தைக் கருத்துடன், மனமிசைந்து, உண்மையுடன் தொடர்ந்து செய்தால் அதில் நிபுணத்துவத்தை அடைய முடியும். பின்னர் அதுவே தனித் திறமையாகி நமது அடையாளமாக மிளிரும். இத்தகைய திறமை வாழ்க்கைக்கு உயர்வை, பாதுகாப்பை, தன்னம்பிக்கையை அளிக்கும்.
எந்த வேலையைச் செய்யும் போது நமக்கு நேரம் போவதே தெரியவில்லையோ அதுவே நமது இயல்பான வேட்கை (Passion). ஆனால் அந்த பணியின் மூலமாக நமக்கு வருமானம் வர வேண்டும். அந்த வேலையில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். அது சமூகத்திற்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துறையைத் தெரிவு செய்வது நல்லது.
அந்த துறை சார்ந்த கல்வியை முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல பயிற்சி பெறவேண்டும். அதில் ஒவ்வொரு செயலையும் திருத்தமாகச் செய்துவந்தால் அந்த செயல்களின் தொகுப்பு மொத்தமாகச் சேர்ந்து வாழ்நாள் சாதனையாக வளர்ந்து நிற்கும். அப்போது நாமும் சாதனையாளர் வரிசையில் இடம் பெறலாம். பொதுநல நோக்கோடு செயல் பட்டால் உலகமே நம் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடும்.
செயல்கள் செய்யப் பட வேண்டிய வழி வகைகள் குறித்து வள்ளுவர் ஒன்பது அதிகாரங்களில் குறிப்பிடுகிறார்.
1. தெரிந்து செயல்வகை
2. வலியறிதல்
3. காலம் அறிதல்
4. இடனறிதல்
5. தெரிந்து தெளிதல்
6. தெரிந்து வினையாடல்
7. வினைத் தூய்மை
8. வினைத் திட்பம்
9. வினைச் செயல் வகை.
1. தெரிந்து செயல்வகை:
எந்தச் செயலையும் ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். ஒருவருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும் கூட அவரவர் தரம் அறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும் என இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் முன்பாக நன்கு ஆராய்ந்து பார்த்துத் தொடங்க வேண்டும். அதைச் செய்யத் தொடங்கிய பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பது துயரத்தைத் தரும்.
2. வலியறிதல்:
தமது வலிமையின் அளவை அறியாமல் மன எழுச்சியால் உந்தப்பட்டு எந்தவொரு செயலையும் செய்தல் கூடாது என இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் "
மென்மையான மயில் தோகை ஏற்றப்பட்ட வண்டியும் கூட, அளவுக்கு அதிகமாக மயில் தோகையை ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.
3. காலம் அறிதல்:
ஒருவர் ஏற்ற காலமறிந்து செயலைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் காரியம் கைகூடும் என இந்த அதிகாரம் குறிப்பிடுகிறது.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்.
4. இடனறிதல்:
ஒருவர் தீர ஆராய்ந்து, தமக்கு ஏற்ற பொருத்தமான இடத்திலிருந்து மன உறுதியுடன் செயல்பட்டால் மட்டும் போதும், அவர்கள் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பார்கள். வேறு எந்த துணையும் முக்கியமில்லை என இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
அச்சம் அறியாததும், வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த தந்தங்களை உடைய யானை, கால் அழுந்தும் சேற்றில் சிக்கி விட்டால் அதனை அற்ப நரிகள் கூடக் கொன்று விடும்.
5. தெரிந்து தெளிதல்:
எவரையும் ஆராய்ந்து பார்க்காமல் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது. ஒருவரை ஆராயாமல் நம்புவதும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவரைச் சந்தேகப்படுவதும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.
அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
அறவழியில் உறுதியானவர், பொருளுக்கு ஆசைப்படாது உண்மையுள்ளவர், பாலியல் இன்பம் தேடி மயங்காதவர், தன்னுயிருக்கு அஞ்சாதவர் அப்படிப்பட்ட குணம் இருப்பவரையே ஆராய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
6. தெரிந்து வினையாடல்:
இவர் இந்த வேலைக்குத் தகுந்தவர் என ஆராய்ந்து, இடையூறுகளைத் தாங்கிச் செய்பவரிடம் பணியை ஒப்படைக்க வேண்டும். தெரிந்தவர் என்று யாருக்கும் வேலை தரக் கூடாது என இந்த அதிகாரம் குறிப்பிடுகிறது.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கு பண்புகளையும் நிலையாக உடையவரை, செயல்கள் ஆற்றுமாறு ஒப்படைக்கலாம்.
7. வினைத் தூய்மை:
வினைத் தூய்மை அதிகாரம் எந்த சூழ்நிலையிலும் இழிவான செயல்களைச் செய்யக் கூடாது என வலியுறுத்துகிறது. அறம் சார்ந்த நன்மை பயக்கும் செயலை செய்ய வேண்டும். அது புகழைத் தருவதாக இருக்க வேண்டும் என இந்த அதிகாரம் எடுத்துரைக்கிறது.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
ஒருவர் தான் பெற்ற தாய் பசியோடு இருப்பதைக் கண்டாலும், அறிவுடையோர் பழிக்கக் கூடிய தூய்மையற்ற செயல்களைச் செய்யக் கூடாது.
8. வினைத் திட்பம்:
வினைத் திட்பம் அதிகாரம் ஒரு திட்டத்தை முழுமையாகச் செய்து முடிக்க மன உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஒரு செயலை செய்யத் துவங்கும் முன்பாக இடையூறுகளை நீக்குதல், ஒரு வேளை தடைகள் ஏற்பட்டாலும் மனம் தளராது அதைச் செய்து முடித்தல் என்பதே சிறந்த கொள்கை வழி.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
9. வினைச் செயல் வகை:
ஒரு செயலைச் செய்ய முற்படும்போது, முயற்சியின் அளவு, இடையூறுகள், அதனால் வரும் பயன் இவற்றை நன்கு ஆராய்ந்து, பயன் பெரிதாயின் ஆச் செயலைச் செய்ய வேண்டும் என இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குறிப்புகளையும் கருத்தாக மனதில் பதிய வைப்போம். நமக்குக் கொடுக்கப் பட்ட பொறுப்புகளை செவ்வன செய்து முடிப்போம்.
படம். இணையத்திலிருந்து நன்றியுடன்..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக