கள்ளம் கபடின்றி வாழ்.
சூது என்றால் தீயது, வஞ்சனை எனப் பொருள்படும். பிறரின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய செயல் சூது. சூது என்பது சூதாட்டத்தையும் குறிக்கும்
சூது விரும்பேல் என ஔவை குறிப்பிடுவது, சூழ்ச்சி எண்ணத்துடன் செயல்புரிய விரும்பாதே.
பிறர் வாழ்வைச் சீர் குலைக்கும் சதி எண்ணங்கள் மனதில் எழுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
தகாத ஒன்றை விரும்புவது, அதை அடையத் தீர்மானிப்பது, அதற்காகத் தூர் ஆலோசனை செய்வது, திட்டம் தீட்டுவது, தீய வழியில் அதை அடைய முயல்வது இவை யாவும் சூது நிறைந்த மனதில் நிகழும் ஆசைகளின் (விருப்பங்கள்) விளைவுகள்.
இராவணன் சீதையை அடைய முயல்வது, துரியோதனன் நாட்டை அபகரிப்பது; சூதின் விளைவுகளைப் பற்றித் தான் இந்தியாவின் இரு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது.
தவறான விருப்பத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் அது ஆசைப்பட்டவரையே அழித்துவிடும்.
சுயநலன், காமம், பிறர் பொருள் மீது இச்சை, பெருமை, ஆணவம், அகங்காரம், பழி வாங்குதல் போன்ற தீய உணர்வுகள் மேலோங்கும் போது மனதில் சூது பிறக்கிறது. அது உட் புகுந்தவர் மனதை ஆட்டிப் படைக்கும்.
சூது மனதில் புகுந்தால்
1. பொய் பேசுவர் (அல்லது உண்மையை மறைப்பார்கள்).
2. ஏமாற்றுவது, நடிப்பது இயல்பான நடத்தையாக இருக்கும்.
3. மன சாட்சி செத்து விடும். (தர்மம், அதர்மம் எனப் பிரித்துப் பார்த்து செயல் புரியும் உணர்வு மழுங்கிவிடும். தீமை செய்கிறோம் எனும் குற்ற உணர்வு, பயம் இருக்காது.)
4. நல்லோர் நட்பு விலகிவிடும். தீயோர் உறவு உருவாகும்.
5. தான் செய்யும் தீயசெயல் குறித்த வெட்கம், கூச்சம், அவமானம் போன்ற உணர்வுகள் ஏற்படாது.
6. நல்லறிவு முற்றிலும் இயங்காது.
7. மிகுந்த சினம், தீய சொற்கள் பேசுவது, தீய நடத்தை இயல்பான வாழ்க்கை முறையாக இருக்கும்.
ஆகவே ஔவை அறிவுறுத்துகிறார் - சூது விரும்பேல்.
பிறன் மனைவியை (கணவரை), சொத்தை, நிலத்தை, உடைமைகளை, வெற்றியை, அதிகாரத்தை, .., சதி, சூழ்ச்சி செய்து எப்படியாவது குறுக்கு வழியில் அடைந்திட வேண்டும் என ஒரு போதும் விரும்பாதே.
''தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். எனினும் மீண்டும் தர்மம் வெல்லும்'' என்பது அறத்தின் வலிமையை உணர்த்திடும் அற்புத வைர வரிகள்.
உலக சரித்திரத்தின் பல பக்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பின்னப்பட்ட சதி வலைகளால் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கொடும் குற்றச் சம்பவங்களுக்குப் பின்பாகவும் ஒரு சூழ்ச்சி மறைந்துள்ளது.
எனினும், என்னதான் சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், இறுதியில் சதி செய்து அடைந்தவை அழ அழ வைத்து வேடிக்கை காட்டும் எனக் குறள் கூறுகிறது.
வறுமை தருவதொன்று இல்.
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்'' "சூதும் வாதும் வேதனை செய்யும்" என முதுமொழி பகிர்கிறது.
கால ஓட்டத்தில் தான் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். வாழ்க்கை மாறி மாறி நிகழ்கிறது. எனினும் தர்மம் எனும் நியதி என்றும் மாறாதது.
எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவராயினும், எந்த குலத்தில் பிறந்திருந்தாலும், எந்த மொழி பேசியவராயினும், எந்த நாட்டில் வசித்தவராயினும், எந்த சமய நம்பிக்கை பின்பற்றுபவராயினும் அறம் சார்ந்து வாழ்க்கை வாழ்ந்த மானுடமே கால வெளியைக் கடந்து நினைவு கூறப்படுகிறது. போற்றப்படுகிறது.
சூது என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அதன் உச்சக் கட்டத் தீமைகளை விளக்குகிறார்.
அடையாவாம் ஆயம் கொளின்
ஒருவன் சூது களத்தில் செயல்பட்டால் புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும். (ஆயம் என்பது உருளாயம் - சூதாடும் களம்).
கள்ளம் கபடற்ற குழந்தைகள் போல மனம் உடையவரே இறைவனுடைய அரசில் இடம் பெறுவர் என்பது இறை வாக்கு.
மனதில் மாசில்லாமல் இருப்பதே அறம் என்கிறது குறள்.
அக எல்லா விருப்பங்களையும் இறைவனிடம் ஒப்புவித்துவிட்டு, '' என் விருப்பமல்ல, உன் விருப்பம் எனது வாழ்வில் நடக்கட்டும். எது நல்லதோ அதை உணர்த்தும். அதை மட்டும் செய்யத் தேவையான சக்தி தா'' என்று சொல்லி இறைவனிடம் சரணடைவது உத்தமம். அப்போது இவ்வுலகில் நாம் செய்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளைச் செம்மையாகச் செய்து நிறைவேற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக